ஞாயிறு, 28 ஆகஸ்ட், 2011

வாழ்வின் நியதி

வாழ்வின் நியதி
---------------------------
விதையும் மண்ணும்
செடியும் மரமும்
பூக்கும் காய்க்கும்
கனியும் கருகும்
சாயும் ஓர்நாள்
வேகும் மறுநாள்
இயற்கை நீதி
இப்படி இருக்கும்
மனிதர் வாழ்வும்
மரத்தின் நியதி
------------------------------நாகேந்திர பாரதி

சனி, 27 ஆகஸ்ட், 2011

நண்பனும் பகைவனும்

நண்பனும் பகைவனும்
----------------------------------------
ஊழல் என்பவன்
ஒட்டிய நண்பன்
மேலும் கீழும்
இடமும் வலமும்
கிழக்கும் மேற்கும்
வடக்கும் தெற்கும்
ஒட்டிய நண்பனை
உடைப்பது கடினம்
ஊறப் போட்டால்
தூரப் போவான்
ஊறத் தண்ணீர்
உள்ளம் மாற்றம்
-------------------------------------நாகேந்திர பாரதி

சனி, 20 ஆகஸ்ட், 2011

தன்னிலை தெளிவு

தன்னிலை தெளிவு
-------------------------------------
நில்லாத இளமையை
நிலையென்று நினைத்து
வில்லாகி அம்பாகி
விடுபட்டுப் பாய்ந்து
பொல்லாத காதலில்
புதையுண்டு மூழ்கி
சொல்லாலும் செயலாலும்
சுவை கண்டு சோர்ந்து
தள்ளாத வயதினிலே
தன்னிலை தெளியும்
-----------------------------------------நாகேந்திர பாரதி

வெள்ளி, 19 ஆகஸ்ட், 2011

பித்தாக வைத்தவள்

பித்தாக வைத்தவள்
----------------------------------
பார்த்துப் பார்த்து
பார்க்க வைத்தாள்
சிரித்துச் சிரித்து
சிரிக்க வைத்தாள்
பேசிப் பேசி
பேச வைத்தாள்
அழுது அழுது
அழ வைத்தாள்
பிரிந்து மறந்து
பித்தாக வைத்தாள்
------------------------------------------நாகேந்திர பாரதி


வெள்ளி, 12 ஆகஸ்ட், 2011

அதே அவள்தான்

அதே அவள்தான்
---------------------------------
ஏற்றி விட்ட கண்ணாடியோடு
அதே கண்கள்தான்
இறங்கி விட்ட ஓரங்களோடு
அதே இதழ்கள்தான்
எட்டிப் பார்க்கும் நரம்புகளோடு
அதே கைகள்தான்
இளைத்துப் போன விரல்களோடு
அதே கால்கள்தான்
கூடுதலாய் ஒரு கம்பீரத்தோடு
அதே அவள்தான்
----------------------------------------------------------நாகேந்திர பாரதி

ஞாயிறு, 7 ஆகஸ்ட், 2011

இமைப் பொழுது

இமைப் பொழுது
-------------------------------
இமைக்கும் பொழுதே
இளமைப் பொழுது
திறந்து மூடும்
திரும்ப வராது
காதல், கல்யாணம்
குடும்பம், குழந்தை
உடலும் ஓடும்
உலகும் உருளும்
காலம் போகும்
கனவாய் ஆகும்
------------------------------------------------நாகேந்திர பாரதி

பயணத்தின் பாதை

பயணத்தின் பாதை
---------------------------------
எந்திரன் போலே
நடக்கும் பாப்பா
ரெண்டடி நடக்கும்
நிக்கும் பாக்கும்
மூணாம் அடிக்கு
முயற்சி செய்யும்
பச்சக்கென அமர்ந்து
பல்லைக் கடிக்கும்
மறுபடி எழுந்திடும்
முயற்சி தொடர்ந்திடும்
விழுவதும் எழுவதும்
பயணத்தின் பாதை
--------------------------------------------நாகேந்திர பாரதி

தடங்கள்

தடங்கள்
----------------------
கம்மாக்கரைக் களிமண்ணில்
காற்தடம் மாறவில்லை
தூக்கிவந்த நெல்மூட்டைக்
கைத்தடம் மாறவில்லை
முகம் துடைச்சுப் போட்ட
தண்ணித் தடம் மாறவில்லை
திண்ணையிலே உக்காந்த
வேர்வைத்தடம் மாறவில்லை
திடுமென்று சாஞ்ச அய்யா
மூச்சுத் தடம் மாறிப் போச்சே
------------------------------------------------------------நாகேந்திர பாரதி

கேள்வியும் பதிலும்

கேள்வியும் பதிலும்
-----------------------------------
யார் கேட்டது என்ன
என்ன நடந்தது எங்கே
எங்கே போனது எப்போது
எப்போது நடந்தது எவ்வாறு
எவ்வாறு கேட்டது ஏன்
ஏன் போனது யார்
கேள்வியின் கடலில்
மூழ்கும் அறிவு
பதிலின் பரப்பில்
பறக்கும் ஆத்மா
-------------------------------------------நாகேந்திர பாரதி

விந்தை மனிதர்கள்

விந்தை மனிதர்கள்
-------------------------------------
பாவோடும் நூலாக
பசியோடும் வயிறாக
நீரோடும் நிலமாக
வேரோடும் மண்ணாக
ஒலியோடும் காற்றாக
உயிரோடும் உடலாக
உள்ளுக்குள் வெளியாக
ஓடுகின்ற இறைவனை
வெளியிலே தேடுகின்ற
விந்தை மனிதர்கள்
-------------------------------------------நாகேந்திர பாரதி