சனி, 30 ஜூலை, 2011

காதலின் தாய்மை

காதலின் தாய்மை
------------------------------------
காதலின் கண்ணீரில்
கருணை கசியும்
காதலின் சிரிப்பில்
உரிமை ஒலிக்கும்
காதலின் பேச்சில்
கவர்ச்சி தெறிக்கும்
காதலின் கோபத்தில்
காரணம் இருக்கும்
காதலின் தூய்மையில்
தாய்மை விளங்கும்
--------------------------------------------நாகேந்திர பாரதி

ஞாயிறு, 24 ஜூலை, 2011

பூங்கா உலகம்

பூங்கா உலகம்
-------------------------------
ஊஞ்சலும் சறுக்குமாய்
உல்லாசம் ஒரு பக்கம்
பெஞ்சும் பேச்சுமாய்
பெருமூச்சு மறு பக்கம்
வாழ்க்கையின் தொடக்கத்தை
வரவேற்கும் ஆவல்
வாழ்க்கையின் முடிவினில்
வருந்திடும் கேவல்
புதுசும் பழசுமாய்
பூங்கா உலகம்
----------------------------------------------நாகேந்திர பாரதி

மரம் தின்னி மழை

மரம் தின்னி மழை
---------------------------------------
நிழலில் கடை விரித்து
தின்பண்டம் விற்பார்கள்
குச்சியை ஒடித்தெடுத்து
பல் துலக்கிப் போவார்கள்
விழுந்த பழம் திரட்டி
வேப்பெண்ணை எடுப்பார்கள்
வெளியூர் பஸ்களுக்கு
வழிகாட்டி மரமும் அது
அடித்த பேய் மழைக்கு
அதுவெல்லாம் தெரியாது
----------------------------------------------------நாகேந்திர பாரதி

ஞாயிறு, 17 ஜூலை, 2011

இரும்புக் கோடுகள்

இரும்புக் கோடுகள்
-------------------
பார்க்கும் சிரிக்கும்
படுத்துக் கிடக்கும்
பேசும் ஏசும்
பிரிந்தே இருக்கும்
காயும் தேயும்
கருக்கும் வெளுக்கும்
ஓயும் உறங்கும்
உடனே விழிக்கும்
இணைய முடியாத
இரும்புக் கோடுகள்
-------------------------------------------------நாகேந்திர பாரதி