ஞாயிறு, 26 ஜூன், 2011

மழலை மொழி

மழலை   மொழி
---------------------------
'உம்' என்ற சொல்லில்
ஓராயிரம் அர்த்தங்கள்
அழுத்திச் சொன்னால்
அந்தப் பொருள் வேண்டுமாம்
மெதுவாகச் சொன்னால்
தூக்கமாய்   வருகிறதாம்
அழுது சொன்னால்
தூக்கிக் கொள்ள வேண்டுமாம்
சிரித்துச் சொன்னால்
விளையாட்டில் திருப்தியாம்
மழலை மொழியில்
ஆரம்பம் 'உம்' ஒலி
-----------------------------------நாகேந்திர பாரதி


வியாழன், 23 ஜூன், 2011

நூலாம் படையெடுப்பு

நூலாம் படையெடுப்பு
----------------------------------
தரைப் படை கடற் படை
விமானப் படை போலே
வீட்டுக் குள்ளேயும் ஒரு
விநோதப் படையெடுப்பு
கவனிக்காமல் விட்டுவிட்டால்
கண்டவுடன் விரட்டாவிட்டால்
சிலந்திப் பகைவர்கள்
நூலாம் படையெடுப்பார்
வீட்டுக்கு விளக்குமாறு
நாட்டுக்கு வீரப் போரு
-----------------------------------நாகேந்திர பாரதிசெவ்வாய், 21 ஜூன், 2011

நிலத்தியல் மாந்தர்

நிலத்தியல் மாந்தர்
------------------------------
குறிஞ்சி நிலத்தில்
கூடி இருந்து
முல்லை நிலத்தில்
பொறுத்து இருந்து
மருத நிலத்தில்
ஊடி இருந்து
நெய்தல் நிலத்தில்
வருந்தி இருந்து
பாலை நிலத்தில்
பிரிந்து இருந்து
எல்லா நிலத்திலும்
ஏழையாய் இருப்பர்
நிலம் பெயராத
நிலத்தியல்   மாந்தர்
----------------------------------நாகேந்திர பாரதிதிங்கள், 20 ஜூன், 2011

ராகம் தாளம் பாடல்

ராகம் தாளம் பாடல்
-------------------------------
தாம் தூம் என்பது
தந்தையர் தான்
சரி சரி என்பது
தாய்க் குலம் தான்
ஓங்கித் தட்டித்
தவறும் தாளம்
உரத்து எழும்பி
உளறும் ராகம்
பாதிக்கப் படுவது
பாடல்கள் தான்
---------------------------------நாகேந்திர பாரதி


ஞாயிறு, 19 ஜூன், 2011

கருப்பும் வெளுப்பும்

கருப்பும் வெளுப்பும்
-----------------------------
கருப்பு துக்கமென்றும்
வெளுப்பு தூய்மையென்றும்  
வெள்ளைத் தோல்காரன்
விளக்கம் எழுதி வைத்தான்
ஊழல் வாதிகளின்
வெள்ளை வேட்டிகளும்
உண்மை வாதிகளின்
கருப்பு வேட்டிகளும்
அந்த நிறங்களின்
அர்த்தம் மாற்றி வைக்கும்
----------------------------------------நாகேந்திர பாரதி


பதைப்பும் தவிப்பும்

பதைப்பும் தவிப்பும்
-------------------------------
அடுத்த வினாடி
உயிர் இருக்குமா
தவழும் பிள்ளை
வளர்ந்து வாழுமா
அடுத்த வேளைச்
சோறு கிடைக்குமா
மலம் நீர் கழிய
மறைவிடம் கிடைக்குமா
பட்டால் தெரியும்
பதைப்பும் தவிப்பும்
------------------------------------நாகேந்திர பாரதிசனி, 18 ஜூன், 2011

ரெயில் நிறுத்தம்

ரெயில் நிறுத்தம்
---------------------------
தண்டவாளத் தகராறால்
நடு வழியில் ரெயில் நிறுத்தம்
வேர்க்கடலை, வெள்ளரிக்காய்
காப்பி டீ வியாபாரம்
பக்கத்தூருப் பசங்களுக்கு
விளையாட்டு வேடிக்கை
எல்லாம் சரியாகி
ரெயிலு கிளம்பையிலே
இன்னும் கொஞ்ச நேரம்
இருக்க ஏக்கம் வரும்
அடுத்த முறை தாண்டும் போது
அங்கேயும் மனசு நிக்கும்
----------------------------------------நாகேந்திர பாரதி


வெள்ளி, 17 ஜூன், 2011

பஞ்சாயத்துப் பள்ளிக்கூடம்

பஞ்சாயத்துப் பள்ளிக்கூடம்
-------------------------------------------
பஞ்சாயத்துப் பள்ளியிலே
படிக்கப் போறோம்
காசுபணம் கடன் வாங்கும்
கஷ்டம் வேணாம்
கண்டதையும் படிச்சுப்புட்டு
காய்ச்சல் வேணாம்
தேவையான பாடங்களைத்
தெரிந்து எடுப்போம்
நன்றாகப் படிச்சுப்புட்டு
நம் ஊர் வளர்ப்போம்
-----------------------------------------நாகேந்திர பாரதி

வியாழன், 16 ஜூன், 2011

சமச்சீர் பாடம்

சமச்சீர் பாடம்
--------------------------
பாடத்திட்டம் தெரியாம
பள்ளிக்கூடம் திறந்தாச்சு
பொது அறிவுக்   கேள்விகளும்
புது இடங்கள் சுற்றுலாவும்
இலக்கணப் பாடங்களும்
எண்கணித வாய்ப்பாடும்
இடைப்பட்ட காலத்திற்கு
ஏற்பாடாய்     ஆயிப் போச்சு
எப்பவுமே வச்சுக்கலாம்
இதுவே   சமச்சீர்தான்
------------------------------------நாகேந்திர பாரதிபுதன், 15 ஜூன், 2011

கிராமக் காட்சி

கிராமக் காட்சி
------------------------
கண்மாய்த் தண்ணி
அள்ளும் போதும்
கஞ்சிக் கலயம்
சுமக்கும் போதும்
நாத்தங் காலில்
குனியும் போதும்
கண்ணுக் குள்ளே
வட்டம் போடும்
இலவச டிவி
விளம்பரப் படங்கள்
---------------------------------------நாகேந்திர பாரதி

செவ்வாய், 14 ஜூன், 2011

தலைப்புச் செய்திகள்

தலைப்புச் செய்திகள்
-----------------------------------
ஆஸ்பத்திரியில் சேர்ந்தா
தலைப்புச் செய்தி  
வீட்டுக்குத் திரும்பினா 
ஓரச் செய்தி
உண்ணாவிரதம் இருந்தா
தலைப்புச் செய்தி
பழரசம் அருந்தினா
ஓரச் செய்தி
கெட்டதெல்லாம் கொட்டை எழுத்து   
மத்ததெல்லாம் குட்டி எழுத்து
---------------------------------------------------நாகேந்திர பாரதி


திங்கள், 13 ஜூன், 2011

ஆகாயக் கூரை

ஆகாயக் கூரை --- (கணையாழி -ஆகஸ்ட் - 2011)
--------------------------------------------------------------------
வானப் பரப்பில்
மின்னல் விரிசல்
விரிசல் சத்தம்
இடியாய் ஒலிக்கும்
மேகம் கூடிப்
பூசிப் பார்த்தும்
ஒழுகி வழியும்
மழையின் அருவி
வீட்டுக் கூரை
ஓட்டை வழியே
இறங்கிப்   பானையில்
இசையாய் மாறும்
--------------------------------நாகேந்திர பாரதி


ஞாயிறு, 12 ஜூன், 2011

படிப்பும் ஒரு வேலை

படிப்பும் ஒரு வேலை
--------------------------------------
மூணு மணிக்கே எந்திரிக்கணும்
பத்து வீட்டுக்கு
பால் பாக்கெட்டு போடணும்
முறை வாசல் செய்யணும்
பாத்திரம் தேய்க்கணும்
துணி துவைக்கணும்
ரேஷன் கடை போகணும்
ரெயில் டிக்கெட்டு வாங்கணும்
பள்ளிக் கூடமும் போகணும்
படிப்பு வேலையும் பாக்கணும்
---------------------------------------------------நாகேந்திர பாரதி

சனி, 11 ஜூன், 2011

காதல் மேனன்

காதல் மேனன்
------------------------
கவுதம் மேனன் ஒரு
காதல் மேனன்
'பார்த்த முதல்
நாளில்' மேனன்
'ஒன்றா இரண்டா
ஆசைகள்' மேனன்
'கொல்லாமல் கொன்று
புதைத்த'  மேனன்
கவுதம் மேனன் ஒரு
காதல் மேனன்
-------------------------------------நாகேந்திர பாரதி

மதுரைப் பட்டணம்

மதுரைப் பட்டணம்
--------------------------------
மாட்டுத் தாவணி
தவிட்டுச் சந்தை
யானைக் கல்லு
சிம்மக் கல்லு
சித்திரை, ஆடி
ஆவணி, மாசி
சந்திரா, தினமணி
தேவி, சிந்தாமணி
சொன்னா போதும்
மல்லிகை மணக்கும்
---------------------------------------------நாகேந்திர பாரதி


வியாழன், 9 ஜூன், 2011

ஆசையும் பூஜையும்

ஆசையும் பூஜையும்
--------------------------------
ஆலிலைக் கண்ணன்
கால் விரல் சப்புவான்
மலையைத் தூக்கியே
அனுமார் பறப்பார்
சிவனும் விஷ்ணுவும்
முருகனும் சிரிப்பர்
அவரவர் சாமியிடம்
அவரவர் ஆசைகள்
பூஜையும் முடியும்
பொங்கலும் கிடைக்கும்
------------------------------------நாகேந்திர பாரதிபுதன், 8 ஜூன், 2011

எல்லைக் கோடு

எல்லைக் கோடு
----------------------------
காட்டுக்குள் புகுந்து
கரடி புலியை எல்லாம் 
வேட்டையாடிச் செல்லும்
விஷமத் தனத்தாலே
வெஞ்சினம் கொண்ட
விலங்குக் கூட்டம்
நாட்டுக்குள் புகுந்து
நடமாடத் தொடங்கும்
எல்லையைத் தாண்டினால் 
தொல்லை தானே
------------------------------------------------நாகேந்திர பாரதிசெவ்வாய், 7 ஜூன், 2011

ஓசையும் உள்ளமும்

ஓசையும் உள்ளமும்
-----------------------------------
அகன்று உயர்ந்த
கோபுரம் ஆயினும்
உருண்டு உயர்ந்த
மசூதி ஆயினும்
நீண்டு உயர்ந்த
சர்ச் ஆயினும்
'ஆமென்'னும் 'ஓம்' மும் 
'அல்லாஹ்' ஆயினும்
ஓசையும் ஒன்றே
உள்ளமும் ஒன்றே
-------------------------------------நாகேந்திர பாரதி


திங்கள், 6 ஜூன், 2011

அருவாயிப் போயிரிச்சு

அருவாயிப் போயிரிச்சு

-----------------------------------
பல்லாங்குழி ஆட்டத்தில்
பசுவை அள்ளியதும்
தாயக் கட்டத்தில்
காயைக் குத்தியதும்
பரமபத் ஏணியில்
பாய்ந்து ஏறியதும்
கேரம் போர்டில்
சிகப்பைத் தள்ளியதும்
அப்பத்தா வோட
அருவாயிப் போயிரிச்சு
-------------------------------------------நாகேந்திர பாரதி

வல்லரசு நல்லரசு

வல்லரசு நல்லரசு

-------------------------------
குமரி முதல் இமயம் வரை
எத்தனை நிலங்கள்
வைகை முதல் கங்கை வரை
எத்தனை நதிகள்
தமிழ் முதல் இந்தி வரை
எத்தனை மொழிகள்
இந்து முதல் முஸ்லிம் வரை
எத்தனை மதங்கள்
நிலமும் நதியும்
மொழியும் மதமும்
ஒருமைப்பட்டால் இந்தியா 
வல்லரசு நல்லரசு
---------------------------------------நாகேந்திர பாரதி

ஞாயிறு, 5 ஜூன், 2011

காதல் தொல்லை

காதல் தொல்லை
----------------------------
பார்த்தால் போதுமென்ற
பரிதவிப்பு இருக்கும்

பார்த்த பின்பு
பேசினால் போதுமென்ற
பேதலிப்பு இருக்கும்

பேசிய பின்பு
தொட்டால் போதுமென்ற
துடிப்பு இருக்கும்

தொடரும் எல்லை
காதல் தொல்லை

-------------------------------------நாகேந்திர பாரதி

சனி, 4 ஜூன், 2011

காத்திருந்த காலம்

காத்திருந்த காலம்
---------------------------------
ஊராட்சி வானொலியில்
ஒலிச்சித்திரம்   கேட்பதற்கு
ஊரே திரண்டிருக்கும்
அடுத்த ஊர் டாக்கீஸில்
ஆறு மணிக் காட்சிக்கு
அல்லோல கல்லோலம்
வீடெல்லாம்  டி  வி யாச்சு
சினிமாக்கள் சி டி யாச்சு
காத்திருந்து அனுபவிச்ச
சந்தோஷம் கழிஞ்சாச்சு
------------------------------------------------நாகேந்திர பாரதி
வெள்ளி, 3 ஜூன், 2011

தண்ணீர் வரிசை

தண்ணீர் வரிசை

-----------------------------
குற்றாலம் அருவியிலும்
திற்பரப்பு அருவியிலும்
வரிசையில் நின்று
குளித்து வந்தோம்
கொட்டுற தண்ணியில்

ஊருக்கு வந்ததும் 
ஆளுக்கொரு    குடத்தோடு
வரிசையில் நின்று
பிடித்து  வந்தோம்
குழாய்த்  தண்ணீரை 
--------------------------------------நாகேந்திர  பாரதி 


எப் எம் அலறல்கள்

எப் எம் அலறல்கள்
-----------------------------
எப் எம் சேனலில் 
ஏராள விளம்பரங்கள்
கொடைக்கானல் ஊட்டிக்கு
பிரயாண சலுகையாம்
ஏ சி யூனிட்டுகள்
தள்ளுபடி விலையிலாம்
கோடைக்கு ஏற்ற 
குளிரான அலறல்கள்
குடிசைக்குள் இருந்து
குழந்தையும் அலறும்
------------------------------------ நாகேந்திர பாரதி
காதல் செலவு

காதல் செலவு
--------------------------------
பீச்சு செலவு
என்னோட செலவு
சினிமா செலவு
உன்னோட செலவு
பார்க் செலவு
என்னோட செலவு
பார்ட்டி செலவு
உன்னோட செலவு
என்னோட கல்யாணத்துக்கு
உன்னோட பரிசு செலவு
உன்னோட கல்யாணத்துக்கு
என்னோட பரிசு செலவு
காலம் மாறிப் போச்சு
காதல் செலவாய் ஆச்சு
----------------------------------------நாகேந்திர பாரதிவியாழன், 2 ஜூன், 2011

அம்மாவும் அப்பாவும்

அம்மாவும்  அப்பாவும்  
--------------------------------------------
அம்மா  வாழ்வது
பெண்ணுக்கும் பிள்ளைக்கும்
அப்பா போனபின்பும்
அம்மாவுக்கு   வாழ்வுண்டு
அப்பா  வாழ்வது
உறவுக்கும்  நட்புக்கும்
அம்மா  போனபின்பு
அப்பாவுக்கு  வாழ்வில்லை
அம்மாவே அப்பாவுக்கு
அப்பாவும் அம்மாவுக்கு
---------------------------------------------------நாகேந்திர பாரதி

புதன், 1 ஜூன், 2011

மதராஸ் மழை

மதராஸ் மழை
--------------------------
புருபுரு வென்ற
இடிச் சத்தத்தோடு
பொலுபொலு வென்று
கொட்டும் மழை
மதராசில் மழையென்றால்
மரங்களுக்கும் ஆச்சரியம்
இலைகளையும் பூக்களையும்
விரித்து வைத்துக் கொண்டு
ஒரு சொட்டு விடாமல்
உறிஞ்சிக் குடிக்கின்றன
-----------------------------------------நாகேந்திர பாரதிமூக்குச்சளி முந்தானை

மூக்குச்சளி முந்தானை
--------------------------------------
கருவ மரமும்
புளிய மரமும்
காத்தவ  ராயனும்
காமாட்சி அம்மனும்
ஊருணித்  தண்ணியும்
உடைஞ்ச பானையும்
கொண்டு போகும்
குழந்தைப் பிராயத்து
மூக்குச்சளி துடைத்த
முந்தானை அப்பத்தாவிடம்
-------------------------------------நாகேந்திர பாரதிசொன்னதும் சொல்லாததும்

சொன்னதும் சொல்லாததும்
-------------------------------------------
சொன்ன சொல்லைச்
சொல்லச் சொல்லி
சொன்ன பேச்சைக்
கேக்கச் சொல்லி
சொன்ன வேலை
பாக்கச் சொல்லி
சொன்ன பெண்ணை
மணக்கச் சொல்லி
சொன்ன முதியோர் விடுதிக்கு
சொல்லாமல்  போய்ச் சேர்ந்தார்
----------------------------------------நாகேந்திர பாரதி