செவ்வாய், 31 மே, 2011

புத்தக வாசம்

புத்தக வாசம்

-----------------------
புத்தம்புதுப் புத்தகங்களைப்
புரட்டும்போது ஒரு வாசம்
படிக்கும்போது ஒரு வாசம்
'சிவகாமியின் சபதத்தில்'
நாகநந்தி வரும்போது
விஷம் கலந்த வாசம்
'மிதிலா விலாசில்'
தேவகி வரும்போது
மாக்கோல வாசம்
'குறிஞ்சி மலரில்'
பூரணி வரும்போது
மல்லிகை வாசம்
'இதய வீணையில்'
சுந்தரம்  வரும்போது
சிகரெட் வாசம்
இப்போது   வருகிறது
காஞ்சு போயும்
தீஞ்சு போயும்
எப்போதாவது வருகிறது
நெய்யாய், மலராய்
----------------------------------------------நாகேந்திர பாரதி

தினம் புகையிலை தினம்

தினம் புகையிலை தினம்
-------------------------------------
மொட்டக் கோபுர
தட்ட ஓட்டில் பீடி
கல்லூரி விடுதி
காம்பவுண்டில் சிகரெட்
லண்டன் ஹோட்டல்
கான்பரன்ஸில் சுருட்டு
நேற்றைக்கு நெஞ்செரிச்சல்
இன்றைக்கு மயக்கம்
நாளைக்கு ஆபரேஷன்
நல்லதே நடக்கணும்
------------------------------------நாகேந்திர பாரதி


திங்கள், 30 மே, 2011

வானம் பார்த்த பூமி

வானம் பார்த்த பூமி
----------------------------------
வெதச்ச நெல்லு முளைக்கணும்
முளைச்ச நெல்லு பரியணும்
பரிஞ்ச நெல்லு பழுக்கணும்
பழுத்துக்   காஞ்சு  அறுக்கணும்
அறுத்துத்  தூத்தி
அடிச்சுப் பரப்பி
அரிசி ஆக்க
அன்னை வானம்
கொட்டுறப்போ கொட்டணும்
நிக்கறப்போ நிக்கணும்
----------------------------------------------நாகேந்திர பாரதி

விக்கிலீக்ஸ் ரகசியம்

விக்கிலீக்ஸ் ரகசியம்

-----------------------------------
" என் மாமியார் எமகாதகி"
சொன்னவள் ரோஜா (மருமகள்)
(111111: ரகசியம்)
" என் மருமகள் ராட்சசி"
சொன்னவர் அலமேலு (மாமியார்)
(222222: ரகசியம்)
" காலேஜுக்கு இல்லை, சினிமாவுக்கு போறேன்"
சொன்னவன் ரகு (மகன்)
(333333: ரகசியம் )
"பீச்சுக்கு இல்லை, டாஸ்மாக் போறேன்"
சொன்னவர் சோமு (அப்பா)
(444444: ரகசியம்)
வீக்லியில் வெளிவந்த
விக்கிலீக்ஸ் கேபிள்
----------------------------------------------------------நாகேந்திர பாரதி

ஞாயிறு, 29 மே, 2011

காதற் சுமை

காதற்  சுமை
--------------------- 
காதல் என்பது
அழுக்கு மூட்டையாம்
காதலிப் பவர்கள்
கழுதைக்   கூட்டமாம்
சொன்னவனும் ஒருநாள்
சுமக்க ஆரம்பித்தான்
வெயிலோ மழையோ
வேர்வையோ தண்ணீரோ
ஏற்றிக் கொண்டு
ஏங்கித் திரிகிறான்
---------------------------------நாகேந்திர பாரதி
மதுரைப் பிரியாணி

மதுரைப் பிரியாணி
----------------------------------
சின்னச் சின்னத் துண்டா
சிக்கிக்கிட்டுக் கிடந்தா
அம்சவல்லி பிரியாணி
மொக்க மொக்கத் துண்டா
முட்டிக்கிட்டுக் கிடந்தா
முனியாண்டி பிரியாணி
அரிசி ருசியும்
அரைச்ச ருசியும்
கலந்து மணக்கிற
மதுரை மண் வாசம்
----------------------------------------நாகேந்திர பாரதி

சனி, 28 மே, 2011

சினிமா கேள்விகள்

சினிமா கேள்விகள்
--------------------------------
அழும்போது எம் ஜி ஆர் ஏன்
முகத்தை மூடிக் கொள்கிறார்
சிரிக்கும்போது சிவாஜி ஏன்
கண்களை உருட்டித் தள்ளுகிறார்
பேசும்போது கமல் ஏன்
வார்த்தையைக் கடித்துத் துப்புகிறார்
அடிக்கும்போது ரஜினி ஏன்
வாயைத் திறந்து கொள்கிறார்
அத்தனை கேள்விக்கும் ஒரே பதில்
அவரவர் ஸ்டைல் அப்பூடி
-----------------------------------------நாகேந்திர பாரதி


வெள்ளி, 27 மே, 2011

படம் பார்க்கும் படலம்

படம் பார்க்கும் படலம்
------------------------------------
கியூவிலே நின்னு
டிக்கெட் எடுத்தாலும்
நெட்டிலே க்ளிக்கி
பிரிண்ட் எடுத்தாலும்
பாத்தவன் சொன்னதைக்
கேட்டுப் போனாலும்
பத்திரிகை எழுதினதைப்
படிச்சுப் போனாலும்
பாக்கற படமெல்லாம்
பாடாவதி படம்
பாக்காத படமெல்லாம்
பர்ஸ்ட் கிளாஸ் படம்
----------------------------------நாகேந்திர பாரதி

வியாழன், 26 மே, 2011

சாலை விபத்து

சாலை விபத்து
-------------------------
சாலை விபத்துக்கள்
ஜாஸ்தியாய்ப் போச்சு
உள்ளூர் ரோட்டிலே
உரசிட்டுப் போறாங்க
ஹைவே போனாலும்
கடாசிட்டுப் போறாங்க
கார் வாங்காத
காரணம் இதுதான்
காசு இல்லாத
காரணம் வேற
-----------------------நாகேந்திர பாரதி


புதன், 25 மே, 2011

சக்கரை உபதேசம்

சக்கரை உபதேசம்
----------------------------
வேப்பம்பூ மெல்லணுமாம்   
வெந்தயத்தை முழுங்கணுமாம்  
நாவப் பழக் கொட்டையாம்
பாவக் காய் நல்லதாம் 
அரிசியே  கூடாதாம்
அவ்வளவும்  சக்கரையாம்
சரமாரி உபதேசம்
சகட்டுக்கும் விடுவாங்க
சக்கரை வியாதி வந்தா
தெரியும் சேதி அப்போ
-----------------------------------------நாகேந்திர பாரதி

  

சத்திரத் திண்ணை

சத்திரத் திண்ணை
-----------------------------
இடுப்புக்குடம் இறக்கிவைத்து
இளைப்பாறும் இடம்
வாலிபர்கள் கூட்டம்
வம்பிழுக்கும் இடம்
காலாட்டிக் கொண்டு
கதை பேசும் இடம்
நீட்டிப் படுக்கின்ற
நிம்மதியின்    இடம்
சாமிக்கென நேர்ந்து விட்ட
சத்திரத்து இடம்
--------------------------------நாகேந்திர பாரதி


செவ்வாய், 24 மே, 2011

நாலு கரைக் கண்மாய்

நாலு கரைக் கண்மாய்
-------------------------------------
ஒரு துறைப்   பக்கம்
கால் கழுவ
ஒரு துறைப் பக்கம்
குடம் நிரப்ப
ஒரு துறைப் பக்கம்
பெண்கள் குளிக்க
ஒரு துறைப் பக்கம்
ஆண்கள் குளிக்க
நாலு கரைத் துறை
நல்ல கண்மாய்
-----------------------------------நாகேந்திர பாரதி

திங்கள், 23 மே, 2011

மலரும் மரக்கிளையும்

மலரும் மரக்கிளையும்
---------------------------------------
கருவ மரத் தேன்
அது ஒரு ருசி
வேப்ப மரத் தேன்
வேறு ஒரு ருசி
முருங்கை மரத் தேன்
மூணாவது ருசி
மாறும் ருசி
மலராலா   மரத்தாலா
மாறும் மனிதர்
வீட்டாலா நாட்டாலா
---------------------------------------------நாகேந்திர பாரதி

சினிமா ஜோடிகள்

சினிமா  ஜோடிகள்
------------------------------
பாகவதர், கிட்டப்பா
எம் ஜி ஆர், சிவாஜி
ஜெய்சங்கர், ரவிச்சந்திரன்
முத்துராமன், சிவகுமார்
ரஜினி, கமல்
விஜயகாந்த், சத்யராஜ்
பிரபு, கார்த்திக்
அஜித், விஜய்
சூர்யா, விக்ரம்
ஆர்யா, விஷால்
தனுஷ், சிம்பு
ஜீவா, பரத்  என்று
ரசிகர்கள் சேர்க்கும்
சினிமா ஜோடிகள்
-------------------------------நாகேந்திர பாரதி
ஞாயிறு, 22 மே, 2011

மீசை மேல் ஆசை

மீசை மேல் ஆசை
-------------------------------
அரும்பு மீசை
அய்யனார் மீசை
தாடி மீசை
தனியா மீசை
கருத்த மீசை
நரைத்த மீசை
இருபது வயசிலே
வைக்க ஆசை
அறுபது வயசிலே
எடுக்க ஆசை
-----------------------------நாகேந்திர பாரதி


வெள்ளி, 20 மே, 2011

மறைந்திருக்கும் சுவர்

மறைந்திருக்கும் சுவர்
---------------------------------------
சுவர் இருந்தால்தான்
சித்திரம் வரையலாமாம்
காகிதத்தில் கூட
கண்றாவியாய் வரையலாமே
கண்ணாடி, காற்றாடி
காலண்டர், போஸ்டர்
சுவிட்சு, லைட்டு
புகைப்படம் புண்ணாக்கென்று
மானாவாரி குப்பைக்குள்
மறைந்திருக்கும் சுவர்
--------------------------------------------------நாகேந்திர பாரதி


வியாழன், 19 மே, 2011

பெரிசுகளும் சிறுசுகளும்

பெரிசுகளும் சிறுசுகளும்
---------------------------------------
இந்தக் காலப் பெருசுகளும்
அந்தக் காலச் சிறுசுகள்தான்
அப்பா அம்மாக்களும்
தாத்தா பாட்டிகளும்
ஊட்டி வளர்த்த
ஒண்ணரைச்    சாண்கள்தான்
கூட்டிக் கழித்த
கால ஓட்டம்
கொண்டு போய்விட்ட
குட்டிக் குழந்தைகள் தான்
------------------------------------நாகேந்திர பாரதிசோம்பல் புரணி

சோம்பல் புரணி
--------------------------
நாதசுர ஓசையும்
மேளச் சத்தமும்
கோயில் மணியும்
குருக்கள் மந்திரமும்
கூடிக் கலந்த
குரலில் இறைவன்
கூப்பிட்டுப் பார்த்தும்
குறையவே குறையாது
சுற்றுப் பிரகார
சோம்பல் புரணி
------------------------------நாகேந்திர பாரதி

புதன், 18 மே, 2011

அரைக் கழுதை வயசு

அரைக் கழுதை வயசு
---------------------------------
முழுக் கழுதை வயசே
முப்பது தானாம்
அம்பது வயசு எப்படி
அரைக் கழுதை வயசாகும்
அலைச்சல், கழுதைக்கு
ஆகு பெயர் ஆயிருச்சா
அம்பதுக்கு மேலே
அலைச்சல் குறையணுமா
உதைக்கிற காலுக்கு
ஓய்வு கொடுக்கணுமா
------------------------------------நாகேந்திர பாரதி


சிக்காத மீன்கள்

சிக்காத மீன்கள்
------------------------
தூண்டிலில்   புழு வைத்து
சுண்டி இழுத்தாலும்
வேட்டியை விரித்து வைத்து
வீசி இழுத்தாலும்
முதுகிலே பை மாட்டி
முங்கி எழுந்தாலும்
படகிலே ஏறிப் போய்
வலையை விரித்தாலும்
சிக்குறது தான் சிக்கும்
சிக்காதது சிரிக்கும்
-------------------------------நாகேந்திர பாரதி
செவ்வாய், 17 மே, 2011

தேடும் உண்மை

தேடும் உண்மை
------------------------------
கனவில் கண்ட
காட்சிகள் எத்தனை
நனவில் கண்ட
நடப்புகள் எத்தனை
உணவும் காற்றும்
வளர்த்த உடலும்
உணர்வும் நினைவும்
வளர்த்த உயிரும்
ஒன்றாய்ச் சேர்ந்து
உண்மை தேடும்
---------------------------------------நாகேந்திர பாரதி

அன்பின் சுருதி

அன்பின் சுருதி
-------------------------
கணவனுக்கு மனைவியும்
மனைவிக்கு கணவனும்
உரிமை இணைப்பு
தாய்க்கு மகனும்
மகனுக்கு தாயும்
கடமை இணைப்பு
உறவுக்கு நட்பும்
நட்புக்கு உறவும்
உதவி இணைப்பு
இணைப்பின் உறுதி
அன்பின் சுருதி
---------------------------------நாகேந்திர பாரதி

சகவாச தோஷம்

சகவாச தோஷம்
---------------------------------
இட்டிலியும் தோசையும்
பீஸ்ஸா, நூடில்ஸ் ஆச்சு
காபி டீயும்
பீரும் ஒயினும் ஆச்சு
மோரும் இளநியும்
கோக், பெப்சி ஆச்சு
வாழையிலை சாப்பாடு
பஃபே    பிளேட்டு ஆச்சு
சகவாச தோஷத்தில்
சாப்பாடும் மாறியாச்சு
------------------------------------------நாகேந்திர பாரதி


திங்கள், 16 மே, 2011

அஞ்சு வருஷ ஆட்சி

அஞ்சு வருஷ ஆட்சி
----------------------------------
காடு மேடெல்லாம்
அலையிறவன் தான்
கண்ட தண்ணியெல்லாம்
குடிக்கிறவன் தான்
நாட்டு நடப்பு
அறிஞ்சவன் தான்
நல்லது கேட்டது
புரிஞ்சவன் தான்
அஞ்சு வருஷ ஆட்சி
அமைக்கிறவன்   தான்
-----------------------------------------நாகேந்திர பாரதி
ஞாயிறு, 15 மே, 2011

தமிழுக்கு வெற்றி

தமிழுக்கு வெற்றி
--------------------------
அரசியலில் தோற்றாலும்
தமிழுக்கு வெற்றி
குடும்பத்தை விட்டு விட்டு
குறளுக்கு வரட்டும்
பராசக்தி தமிழும்
மனோகரா தமிழும்
பட்டிமன்ற தமிழும்
கவியரங்க தமிழும்
மீண்டும் வரட்டும்
மீண்டு வரட்டும்
-------------------------------------------நாகேந்திர பாரதி


கிராம அத்தியாயம்

கிராம அத்தியாயம்
------------------------------
கருவக் காட்டிலே
காத்தாட இருந்திட்டு
கம்மாத்   தண்ணியிலே
கழுவிக்   குளிச்சுட்டு
குத்தாலத் துண்டைக்
கும்மித் துவட்டிட்டு
குளுந்த பழையதை
குடிச்சுப் போட்டுட்டு
வயக்   காட்டுலே
வளைஞ்சு ஒழச்சிட்டு
மிச்சப் பழையதும்
மிளகாயும் கடிச்சுட்டு
வெயிலும் வேலையும்
வேர்வை ஆக்கிட்டு
களப்புப் போக
குளிச்சு முடிச்சுட்டு
மனைவி மக்களை
கொஞ்சிக் கிடந்திட்டு
மீனும் சோறும்
மென்னு தின்னுட்டு
படுத்துப் புரண்டா
பட்டுன்னு தூக்கம்
-------------------------------------நாகேந்திர பாரதி

சனி, 14 மே, 2011

தங்கிலீஷ் ஆனா தமிழ்

தங்கிலீஷ் ஆன  தமிழ்
----------------------------------
கல்லுச் சிலேட்டு
பிளாஸ்டிக் சிலேட்டு ஆகி
கோடு போட்ட நோட்டு
அன்ரூல்டு நோட்டு ஆகி
இங்க்கு    பேனா 
பால் பாயிண்ட் பேனா ஆகி 
உபகரணம் எல்லாம்
உருமாறியது  போல
தமிழும் மாறி
தங்கிலீஷ் ஆனது
------------------------------------நாகேந்திர பாரதிவியாழன், 12 மே, 2011

நில வரம்

நில வரம்
------------------
தவழும் போது
பார்வையில் நிலம்
நடக்கும் போது
பக்கத்தில் நிலம்
வளரும் போது
வானத்தில் நிலம்
தளரும் போது
தாங்கிடும் நிலம்
முடியும் போது
மூடிடும் நிலம்
-----------------------------நாகேந்திர பாரதி


இளமைப் பருவம்

இளமைப் பருவம்
----------------------------
கள்ளூறும் இளமையின்
கல்லூரிப் பருவம்
உள்ளூறும் காதலை
உணர்கின்ற பருவம்
வில்லூறும் புருவத்தில்  
வேலூறும் விழிகளைச்  
சொல்லூறும்   கவிதையிலே
சுமக்கின்ற பருவம்
பொல்லாத பருவம்
போகின்ற   பருவம்  
-----------------------------------------நாகேந்திர பாரதி
நைட்டிங்கேல் பரம்பரை

நைட்டிங்கேல்   பரம்பரை
-----------------------------------
பிள்ளைகட்கு   மலம் நீரை
பிரியமாய் எடுத்திடுவார்
பெருசுகட்கு எச்சிலையும்
காய்வதற்கு விட்டிடுவார்
வீட்டுக்குள் நடக்கின்ற
வேதனையின் காட்சி இது
சொந்தமில்லை பந்தமில்லை
சம்பளமும் பத்தவில்லை
நைட்டிங்கேல்   வழி வந்த
நர்சுகளின் பரம்பரையோ
பிணிக்கு மருந்தாவார்
பணிக்கு அணியாவார்
-----------------------------------------நாகேந்திர பாரதி

புதன், 11 மே, 2011

மக்கள் எவ்வழி

மக்கள் எவ்வழி
-------------------------
தக்ளியில்   பஞ்சு வைத்து 
தடித் தடியாய் நூல் இழுத்தோம்
கால் பந்தும் கபடியும்
கண்மாயில் ஆடி வந்தோம்
ஊர் கூடி திருவிழாவில்
ஒற்றுமையாய் தேரிழுத்தோம்
காலமது கலைஞ்சாச்சு
கத்தியும் காசும் ஆச்சு
மக்களுக்கு ஏத்த படி
மன்னர்களும் மாறியாச்சு
-----------------------------------------நாகேந்திர பாரதிதேர்தல் முடிவு

தேர்தல் முடிவு
----------------------------
கலருப்   பெட்டியில் ஓட்டுப் போட்ட
காலம் போயாச்சு
அச்சுக் குத்தி மடிச்சுப் போட்ட
நாளும்  போயாச்சு
பட்டன் அமுக்கி சத்தம் கேட்ட
காலம் வந்தாச்சு
பாது காப்பு படையும் பலமும்
கூட வந்தாச்சு
வாரக் கணக்கு முடிவு மட்டும்
மாசக் கணக்காச்சு
---------------------------------------நாகேந்திர பாரதி

செவ்வாய், 10 மே, 2011

நிற பேதம்

நிற பேதம்
--------------------
பச்சை நிறத்தில்
விவசாயி வர்க்கம்
நீல நிறத்தில்
தொழிலாளி வர்க்கம்
வெள்ளை நிறத்தில்
முதலாளி வர்க்கம்
சிவப்பு நிறத்தில்
புரட்சி வர்க்கம்
கருப்பு நிறத்தில்
கண்ணீர் வர்க்கம்
------------------------------நாகேந்திர பாரதி

வெள்ளி, 6 மே, 2011

அக்கம் பக்கம்

அக்கம் பக்கம்
------------------------
அட்சய திரிதியைக்கு
அட்டிகை ஒரு பக்கம்
ஈயம் பித்தளைக்கு
பேரீச்சை மறு பக்கம்
எலெக்ட்ரிக் குக்கரில்
சோறு  ஒரு பக்கம்
மண்ணுச் சட்டியில்
களி மறு பக்கம்
பக்கம் பக்கமாய்
அக்கம் பக்கம்
--------------------------------நாகேந்திர பாரதி
வியாழன், 5 மே, 2011

இல்லாமல் இல்லை

இல்லாமல்   இல்லை
-----------------------------------
கண்ணீர் இல்லாமல்
காதல் இல்லை
காதல் இல்லாமல்
இளமை இல்லை
இளமை இல்லாமல்
வாழ்க்கை இல்லை
வாழ்க்கை இல்லாமல்
வளர்ச்சி இல்லை
வளர்ச்சி இல்லாமல்
வையம் இல்லை
--------------------------------------நாகேந்திர பாரதி

சேதி சொல்லும் செங்கல்

சேதி சொல்லும் செங்கல்
-------------------------------------
செங்கல்லும் மண்ணும்
சிமெண்டும்   கம்பியும்தான்
சேர்த்து வைத்திருக்கும்
சேதிகள் ஏராளம்
பாப்பாக்கள் பிறப்பு
பாட்டிகள் இறப்பு
அழுகை சிரிப்பு
அச்சம் வெறுப்பு
சுவருக்கும் காதுண்டு
சேமிக்க செங்கல்லுண்டு
-------------------------------------------நாகேந்திர பாரதி

புதன், 4 மே, 2011

நடுவிலே நாம்

நடுவிலே நாம்
--------------------------
எல்லாமே சுயநலம்தான்
இல்லாவிட்டால் இருள் நிலம்தான்
வாழ்க்கையின் நோக்கத்தை
பார்த்தும் பார்க்காமலும்
செய்தும் செய்யாமலும்
தெரிந்தும் தெரியாமலும்
நானும் நீயும் தான்
அவளும் அவனும் தான்
நடுவினில் நாம் நலம்
நாற்புறம் பிறர் நிலம்
-------------------------------நாகேந்திர பாரதி

இயற்கையின் ரகசியம்

இயற்கையின் ரகசியம்
-------------------------------------
மலையின் ரகசியம்
நதிக்குத் தெரியும்
நதியின் ரகசியம்
மண்ணுக்குத் தெரியும்
மண்ணின் ரகசியம்
விதைக்குத் தெரியும்
விதையின் ரகசியம்
விண்ணுக்குத் தெரியும்
விண்ணின் ரகசியம்
உள்ளுக்குள் தெரியும்
-----------------------------------நாகேந்திர பாரதி