வியாழன், 28 ஏப்ரல், 2011

தாத்தாப் பாட்டு

தாத்தாப் பாட்டு
----------------------------
பாப்பாக் களுக்காகப்
படைக்கப் பட்டவர்கள்
தூக்கி வைத்து
தொட்டில் ஆனவர்கள்
தூங்க வைத்து
கட்டில் ஆனவர்கள்
மறந்து போய் விட்ட
மழலை வாழ்க்கையை
பேரன் பேத்தியின்  
பிறப்பில் பார்ப்பவர்கள்  
---------------------------------நாகேந்திர பாரதி

புதன், 27 ஏப்ரல், 2011

காதல் மனைவி

காதல் மனைவி
---------------------------
பூத்திருந்த போதெல்லாம்
புன்னகையை   வரவு வைத்தாள்
காத்திருந்த போதெல்லாம்
கண்ணீரைச்   செலவு வைத்தாள்
ஆர்த்திருந்த இளமையிலே
அச்சத்தை மூடி  வைத்தாள்
பார்த்திருந்த கண்களிலே
பண்பாட்டைப்    பாடி  வைத்தாள்
நேற்றிருந்த  காதலி
இன்றைக்கு மனைவி ஆவாள்
---------------------------------------நாகேந்திர பாரதி
அக்கினி நட்சத்திரம்

அக்கினி நட்சத்திரம் 
---------------------------------
வேர்வையைப் பெருக்கி
வெளியேத்தி வைக்கும்
பார்வையைச் சுருக்கி
பஞ்சடைக்க   வைக்கும்
மோரும் தண்ணியும்
மொண்டு குடிச்சாலும்
ஆறும் கடலும்
அமுங்கிக் குளிச்சாலும்
அதுவாத்தான்  போகணும்
அக்கினி நட்சத்திரம்
------------------------------------------நாகேந்திர பாரதி


பெருசுகள் பலவிதம்

பெருசுகள் பலவிதம்
-----------------------------------
கம்பை அழுத்தி ஊன்டி
கம்மாக் கரையிலே ஒரு பெருசு
விபூதியை அப்பிப் பூசி
வெளுத்த நெத்தியா   ஒரு பெருசு
அருவா மனையிலே மீனை
அழுத்தித் தேக்கிற ஒரு பெருசு
சுண்ணாம்பு வெத்திலை பாக்கை
சொதப்பித் துப்புற ஒரு பெருசு
வேட்டி துண்டோட
சேலை முந்தானையோட
பழைய பெருசுகள் போயாச்சு
பேன்ட் சட்டையோட
சுடிதார் முடிச்சோட
புதிய பெருசுகள் வந்தாச்சு
--------------------------------------நாகேந்திர பாரதி


செவ்வாய், 26 ஏப்ரல், 2011

ஓலை விசிறிகள்

ஓலை விசிறிகள்
--------------------------
பச்சை ஓலையிலே
பனைமட்டை விசிறி
கலர்க்   கலராய்க்  
கட்டி வச்ச விசிறி
காஞ்ச ஓலையிலே
தென்னை மட்டை விசிறி
பிஞ்சு விழுந்தா
பிரம்பாகும் விசிறி
கரண்ட்   போனாலும்
காத்து தரும் விசிறிகள் 
----------------------------நாகேந்திர பாரதி


திங்கள், 25 ஏப்ரல், 2011

கூட்டமோ கூட்டம்

கூட்டமோ கூட்டம்
-----------------------------
அண்ணா ஹசாரேக்கும்
கூட்டம் கூடுது
அடிதடி செய்யவும்
கூட்டம் கூடுது
சாமி பாக்கவும்
கூட்டம் கூடுது
சாராயக் கடையிலும்
கூட்டம் கூடுது
அட்சய திரிதிக்கும்
கூட்டம் கூடுது
ஓட்டுக் காசுக்கும்
கூட்டம் கூடுது
கூடிக் கலையும்
கூட்டமா இல்லை
தலைவன் இல்லாமல்  
அலையும்  கூட்டமா
-------------------------------நாகேந்திர பாரதி


ஞாயிறு, 24 ஏப்ரல், 2011

மின் சோரம் போனது

மின் சோரம் போனது
-----------------------------------
மரச் சட்டங்களும்
மகா சுவிட்சுகளும்
சிமெண்டுக்   கம்பங்களுமாய்   
சேர்ந்த மின்சாரம்
மெலிந்த சுவிட்சுகளும்
ஒளிந்த கம்பிகளுமாய்
பரிணாம வளர்ச்சியில்
பக்குவம் ஆனபின்
சோரம் போனது
சோகம் ஆனது
---------------------------நாகேந்திர பாரதி

சனி, 23 ஏப்ரல், 2011

பேஷன் ஜீன்ஸ்

பேஷன் ஜீன்ஸ்
-----------------------
கல்லில் அடித்துக்
கசக்கிப் பிழியக்
கிழிந்து போகும்
பழைய வேட்டி
சோப்பைப் போட்டு
அமுக்கித் தேய்க்கச்
சாயம் போகும்
புதிய பேண்ட்டு
சாயம் போய்
கிழிந்தே இருக்கும்
துவைக்கக் கூடாத
பேஷன் ஜீன்ஸ்
-------------------------------நாகேந்திர பாரதி

வியாழன், 21 ஏப்ரல், 2011

விடுமுறை விருப்பம்

விடுமுறை   விருப்பம் -  ( பாக்யா - மே 20-26 /2011)
--------------------------------
கிராமத்து அமைதிக்கு
நகரத்தில் ஆர்வம்
நகரத்து வேகத்தில்
கிராமத்தின் நாட்டம்
விடுமுறை நாளில்
விருப்பப் பயணம்
சொல்லாமல் போனதால்
சொந்தங்கள்   பார்த்தது
கிராமத்து, நகரத்து
வீட்டினில்  பூட்டு
----------------------------------நாகேந்திர பாரதி

புதன், 20 ஏப்ரல், 2011

எங்கிருந்தாலும் வாழ்க

எங்கிருந்தாலும் வாழ்க
-------------------------------------
எங்கிருந்தாலும் வாழ்க
என்று சொல்லி மீள்க
பார்த்ததும் சிரித்ததும்
தொட்டதும் துடித்ததும்
படிப்பை மறந்ததும்
வேலையைத் துறந்ததும்
பகலெல்லாம் அலைந்ததும்
இரவெல்லாம் தொலைந்ததும்
இதயத்தில் மூழ்க
எங்கிருந்தாலும் வாழ்க
-----------------------------------நாகேந்திர பாரதி

அன்றும் இன்றும்

அன்றும் இன்றும்
---------------------------------
'சில்' என்ற குரல்
சுசீலாவுக்கு அன்று
'கிண்' என்ற குரல்
டி  எம் எஸ்  க்கு அன்று
பழைய பாடகர்க்கு
பாராட்டு விழாவில்
பாடச் சொல்லிப்
படுத்து கிறார்கள்
அவர்களும் பாடி
அவஸ்தைப் படுகிறார்கள்
-------------------------------நாகேந்திர பாரதி


செவ்வாய், 19 ஏப்ரல், 2011

மழலை மந்திரம்

மழலை மந்திரம்
---------------------------
இறைவனை மறந்து
இருக்கும் மனிதர்க்கு
இயற்கை காட்டும்
இயக்கம் குழந்தை
மற்றவர்  மறந்து
மயங்கும் மனிதர்க்கு
மன்பதை   காட்டும்
மந்திரம் மழலை
மழலையில் மயங்குவோம்
மதலையைப் போற்றுவோம்
---------------------------------------நாகேந்திர பாரதி
உலக இன்பம்

உலக இன்பம்
---------------------
வெளிச் செயல்களை
இரவு நிறுத்தும்
உட் செயல்களை
துறவு நிறுத்தும்
வெளிச் செல்களில்
பரவு மனத்தை
உட் செல்களின்
உறவு ஆக்கினால்
உலக இன்பம்
வரவு ஆகும்
--------------------------------நாகேந்திர பாரதிமகசூல் வசூல்

மகசூல் வசூல்
-------------------------
வடக்கு மாசி
வீதியிலே ஒரு பாட்டு
தெக்கு மாசி
வீதியிலே ஒரு சண்டை
மேல மாசி
வீதியிலே ஒரு அழுகை
கீழ மாசி
வீதியிலே ஒரு சிரிப்பு
மதுரையைக் காட்டினால்
மகசூல் வசூல்
-----------------------------------நாகேந்திர பாரதி

திங்கள், 18 ஏப்ரல், 2011

நவீனக் கோயில்கள்

நவீனக் கோயில்கள்
----------------------------------
கல்லுத் தரையில்
கண்ட  அமைதி  
கிரானைட் தரையில்
கெட்டுப் போனது
எண்ணை விளக்கில்
இருந்த நிம்மதி
டியூப் லைட்டில்
தொலைந்து போனது
நவீனக் கோயில்கள்
நாகரிகக் கூடங்கள்
------------------------------நாகேந்திர பாரதி  


  

பழைய நினைவுகள்


பழைய நினைவுகள்

-----------------------------
கருவக் காட்டில்
நடந்தால் வருவது
கண்மாய்க்  கரையைக்
கடந்தால் வருவது
பச்சைப் புல்மேல்
குதித்தால் வருவது
பழைய சைக்கிளை
மிதித்தால் வருவது
பழைய நினைவினில்
பாலகன் ஆவது
------------------------------நாகேந்திர பாரதி


ஞாயிறு, 17 ஏப்ரல், 2011

காதல் அகராதி

காதல் அகராதி
--------------------------
தெரியாது என்ற சொல்லில்
தெரிந்து விடும் காதல்
நடக்காது என்ற சொல்லில்
நடந்து விடும் காதல்
முடியாது என்ற சொல்லில்
முடிந்து விடும் காதல்
மறக்காது என்ற சொல்லில்
மறந்து விடும் காதல்
பிரியாது என்ற சொல்லில்
பிரிந்து விடும் காதல்
---------------------------------------நாகேந்திர பாரதி

சனி, 16 ஏப்ரல், 2011

அடையாளச் சுவடுகள்

அடையாளச் சுவடுகள்
---------------------------------
அலையோ மழையோ
காற்றோ கால்களோ
அழித்துச் சென்றிருக்கலாம்
அந்தச் சுவடுகளை
கடற்கரை மணலில்
காலணியைக் கழற்றி விட்டு
பாதச் சுவடுகளைப்
பதித்துச் சென்றவளின்
காதல் சுவடுகள்
கண்களுக்குள் எப்போதும்
 ----------------------------------------நாகேந்திர பாரதி 

வெள்ளி, 15 ஏப்ரல், 2011

இயக்குநர் பார்வை

இயக்குநர்   பார்வை
----------------------------------
இயக்குநர் பார்வையில்
பொன்னியின் செல்வன்
வந்தியத் தேவனுக்கு
வசனம் கிடையாது
ஆழ்வார்க் கடியான்
அடி உதை வாங்கணும்
குந்தவை, நந்தினி
குளியல் காட்சிகள்  
கோடியில் செலவு
மூடியில் வரவு
--------------------------------நாகேந்திர பாரதிவியாழன், 14 ஏப்ரல், 2011

சித்திரைத் திருவிழா

சித்திரைத் திருவிழா
----------------------------------
முழுப் பரீட்சை முடிந்ததும்
மூணு மாசம் விடுமுறை
ராமநாத புரமிருந்து
ராமேஸ்வரம் ரயில் 
மானா மதுரை தாண்டியதும் 
மதுரை மண் மணக்கும்
கல்யாணம், தேரோட்டம்  
ஆற்றிலே அழகர்
சினிமா , சர்க்கஸ் என்று
சீக்கிரமே ஓடி விடும்
ஊருக்குத் திரும்புகையில்
ஒண்ணுமே பிடிக்காது
---------------------------------------------நாகேந்திர பாரதி


புதன், 13 ஏப்ரல், 2011

காற்றின் ஏக்கம்

காற்றின் ஏக்கம்
---------------------------
'என்னடி குருந்தாயி
தண்ணி எடுக்கப்   போறியாக்கும்'
'என்னடா பகடை
பதினி இறக்கப் போறியாக்கும்'
மண்ணுத் திண்ணையில் இருந்து
மானாவாரியாய்க்   கேள்வி கேட்ட
அப்பத்தா மூச்சு ஒரு நாள்
நின்று போனது
அந்த கனத்த குரலைத்   தேடி
காற்று அலைந்து கொண்டு இருக்கிறது
---------------------------------------------நாகேந்திர பாரதி

செவ்வாய், 12 ஏப்ரல், 2011

கோபுர வாசல்

கோபுர வாசல்
--------------------------
கோபுர வாசலே
குடியிருப்பு அவருக்கு
அலுமினியத் தட்டில்
அவ்வப்போது அன்னம் வரும்
பக்கத்தில் படுத்திருக்கும்
பசியோடு நாய் ஒன்று
ஆட்டோ ஒன்று வரும்
அவரை மட்டும் கூட்டிப் போக
அஞ்சு வருஷத்திற்கு
ஒரு முறை ஒரு நாள்
-------------------------------------நாகேந்திர பாரதி


திங்கள், 11 ஏப்ரல், 2011

மூணுஷா த்ரிஷா

மூணுஷா த்ரிஷா
--------------------------------
'பழகும் தமிழே'
வைஜயந்தி   மாலா
'தனிமையிலே இனிமை'
சரோஜா தேவி
'துயிலாத  பெண்'
நாட்டியப் பத்மினி
மூவரையும் முறியடித்த
மூணுஷா த்ரிஷா
'மன்னிப்பாயா மன்னிப்பாயா'
மலையாள த்ரிஷா
------------------------------------நாகேந்திர பாரதிநேற்று இன்று நாளை

நேற்று இன்று நாளை
---------------------------------
நேற்று என்பது
ஓடிப் போனது
இன்று என்பது
உட்கார்ந்து இருப்பது
நாளை என்பது
நடந்து வருவது
ஓடாமல் நடக்காமல்
உட்கார்ந்து யோசித்தால்
படுக்கும் நேரத்தில்
பயங்கள் வாராது
----------------------------------------நாகேந்திர பாரதி


சனி, 9 ஏப்ரல், 2011

பெண்ணின் வாட்டம்

பெண்ணின் வாட்டம்
------------------------------
காலை முதல் மாலை வரை
சமையலறை மூட்டம்
இரவு நேரம் வந்து விட்டால்
கணவனவன் ஆட்டம்
இடை வெளியில் பள்ளிக்கும்
கடைகளுக்கும் ஓட்டம்
இப்படியே உலர்ந்து விடும்
இளமையெனும் தோட்டம்
முதுமையிலே கவனிக்க
முகம் சுளிக்கும் கூட்டம்
-----------------------------------------நாகேந்திர பாரதி

வியாழன், 7 ஏப்ரல், 2011

கிட்டியும் கிரிக்கெட்டும்

கிட்டியும் கிரிக்கெட்டும்
-----------------------------------
கிட்டி விளையாட்டில்
ஜெயிச்ச பின்னாடி
தெருவு முழுக்க
திருவிழா ஆகும்
கிரிக்கெட் விளையாட்டில்
ஜெயிச்ச பின்னாடி
நாடு முழுக்க
நடனம் ஆடும்
கிட்டியும் கிரிக்கெட்டும்
ஒட்டிப் பிறந்த
ரெட்டை  மட்டைகள்  
-----------------------------------நாகேந்திர பாரதிசெவ்வாய், 5 ஏப்ரல், 2011

இயற்கைப் புதிர்

இயற்கைப் புதிர்
---------------------------
புளிய மரம் விழுந்து
போக்கு வரத்து நின்றது
மின் கம்பி அறுந்து
மின்சாரம் போனது
கண்மாய் உடைந்து
ஊருக்குள் நுழைந்தது
பயிர்கள் அழுகி
பாழாய்ப் போயின
வெயிலாய் அடித்து
வெக்கையாய் இருந்தது
மழையாய்க் காற்றாய்
மாறியது எப்படி
ஓசோன்     ஓட்டையால்
உண்டான மாற்றமா
----------------------------------நாகேந்திர பாரதி

திங்கள், 4 ஏப்ரல், 2011

எண்ணை ருசி

எண்ணை ருசி
--------------------
எண்ணையிலே முக்குளிச்சு
எந்திருக்கும் வடை
ஓரம் விட்ட எண்ணையிலே
உக்காரும் தோசை
கருவேப்பிலை கடுகோடு
கணகணக்கும் எண்ணை
வடிச்ச குழம்போட
வாசனையைத்   தூக்கும்
எண்ணை இல்லை என்றால்
மண்ணு ருசி எல்லாம்
-----------------------------------நாகேந்திர பாரதி


ஞாயிறு, 3 ஏப்ரல், 2011

காத்திருக்கும் காதல்

காத்திருக்கும் காதல்   (பாக்யா - ஏப்ரல் 29- மே 5-2011)
------------------------------
காத்துக் கிடப்பதுதான்
காதல் என்பதா
பார்த்துச் சிரித்துப்    
பேசிப் பழகி
நேற்று இன்று
நாளை ஆகி
வாரம் மாதம்
வருடம் ஓடி
காத்துக் கிடப்பதுதான்
காதல் என்பதா
---------------------------------------நாகேந்திர பாரதி


சனி, 2 ஏப்ரல், 2011

ஆறுதல் தேர்தல்

ஆறுதல் தேர்தல்
-------------------------------
ரோட்டைத் தோண்டி
பந்தல் இல்லை
மைக்கைப் போட்டு
அலறல் இல்லை
ஊர்ந்து போகும்
ஊர்வலம் இல்லை
ஆபாசப் பேச்சு
ஆட்கள் இல்லை
பிரியாணி, பீரும்
பணமும் இல்லை
அதிகாரி தேர்தல்
ஆறுதல் தேர்தல்
----------------------------------------நாகேந்திர பாரதி


சொன்னதும் சொல்லாததும்

சொன்னதும்  சொல்லாததும்
----------------------------------------
சொல்லிக் கொண்டே இருக்கும் போது
சொல்வதை நிறுத்தி விட்டு
சொன்னது புரியுதா  என்றால்
என்னவென்று  சொல்லுவது
சொல்லாததையும் சொல்லிவிட்டு
சொன்னதைக்  கேட்டிருந்தால்
சொன்னது புரியவில்லை  என்று
சொல்லி விட்டுப் போகலாம்
முன்னமே  சொல்லி    விட்டால்
முழுவதும்    சொல்ல மாட்டானே  
-----------------------------------நாகேந்திர பாரதி


வெள்ளி, 1 ஏப்ரல், 2011

முட்டாள் உலகம்

முட்டாள் உலகம்
------------------------------
சட்டையில் தெறித்த
இங்க்கைப்   பார்த்து
கையைச் சுட்ட
புளிக்கொட்டை பார்த்து
உள்ளூர் முட்டாளாய்
இருந்த காலம் போய்
டிவிட்டரில் பொய்கள்
படித்துப் பார்த்து
உலக முட்டாளாய்
ஆனோம் இப்போது
---------------------------------நாகேந்திர பாரதி


பிள்ளையார் பிடிக்க ..

பிள்ளையார்  பிடிக்க ..
------------------------------
உயரத்தில் ஏற
பயமாய் இருக்குமாம்
உச்சியில் நின்றால்
தலையைச் சுத்துமாம்
மாத்திரை ஒன்று
புதுசாய் வந்ததாம்
போட்டு ஏறுறப்போ
பயமே இல்லையாம்
இறங்கறப்போ ஏனோ
தலையைச் சுத்துதாம்
------------------------------------நாகேந்திர பாரதி
பொன்னியின் செல்வன்

பொன்னியின் செல்வன்
-----------------------------------
பொன்னியின் செல்வன்
திரைப் படம் ஆகுதாம்
வந்தியத் தேவனின்
வம்பு வருமா
குந்தவை நாச்சியாரின்
குறும்பு வருமா
அருண்மொழி வர்மரின்
அடக்கம் வருமா
வானதிப் பெண்ணின்
மயக்கம் வருமா
பெரிய பழுவேட்டரையரின்
கர்ஜனை வருமா
காலாந்தக கண்டரின்
வீரம் வருமா
ஆதித்த கரிகாலனின்
ஆணவம் வருமா
நந்தினி தேவியின்
பழிவெறி வருமா
அநிருத்த பிரம்மராயரின்
அமைச்சு வருமா
ஆழ்வார்க் கடியானின்
தந்திரம் வருமா
ரவி தாசனின்
சதிகள் வருமா
சோமன் சாம்பவனின்  
ஆட்டம் வருமா
சுந்தர சோழரின்
துக்கம் வருமா
மந்தா கினியின்
பாசம் வருமா
செம்பியன் மாதேவியின்
பக்தி வருமா
மலையமான் மகளின்
மௌனம் வருமா
குடந்தை ஜோதிடர்
வீடு வருமா
மது ராந்தகரின் 
வேஷம் வருமா
மணி மேகலையின் 
காதல் வருமா
பூங்கு ழலியின்
பாட்டு வருமா
சம்பு வரையரின்
சபதம் வருமா
சேந்தன் அமுதனின்
தியாகம் வருமா
காஞ்சியில் இருந்து
குதிரை வருமா
பல்லக்கும் படகும்
பவனி வருமா
பொம்மை முதலை
வேலும் வருமா
பெண்கள் கிண்டல்
பேச்சும் வருமா
குந்தவை நந்தினி
மோதல் வருமா
கூர்முனைப் பார்வை
பேச்சும் வருமா
வெண்ணா   ற்றில்
வெள்ளம் வருமா
நாகை கடலில்
புயலும் வருமா
புத்த விஹாரம்
அமைதி தருமா
இலங்கைப் போரின்
விளக்கம் வருமா
சோழ நாட்டின்
சரித்திரம் வருமா
காவிரித் தாயின்
கருணை வருமா
மாடப் பெண்ணின்
கூச்சல் வருமா
மன்னர் நோய்ப்
படுக்கை வருமா
நாயகர் துவந்த
யுத்தம் வருமா
நட்பும் கிண்டலும்
கலந்து வருமா
இருட்டு மண்டபக்
கொலையும் வருமா
எல்லோர் மேலும்
சந்தேகம் வருமா
ஆழக் கடலில்
முகமும் வருமா
பாதாளச் சிறையின்
விரல்கள் வருமா
கல்கி தொட்ட
கேள்விகள் வருமா
நந்திபுர நாயகி
விடைகள் வருமா
அஞ்சு பாகமும்
ஒழுங்காய் வருமா
படித்த அனுபவம்
படத்தில் வருமா
------------------------------------நாகேந்திர பாரதி