வியாழன், 31 மார்ச், 2011

பார்முலா சினிமா

பார்முலா சினிமா
------------------------------
கையும் காலும்
ஆட்டினா டான்ஸ்
மூக்கும் வாயும்
முக்கினா பாட்டு
கடையும் காரும்
உடைஞ்சா சண்டை
திட்டி அடிச்சு
அழுதா சிரிப்பு 
பார்முலா சினிமா
பக்கா ஹிட்டு
 -------------------------------------------நாகேந்திர பாரதி


புதன், 30 மார்ச், 2011

டூரிங் டாக்கீஸ்

டூரிங் டாக்கீஸ்
---------------------------
வருஷா வருஷம் கொட்டகை
வயலு மாறிப் போயிருக்கும்
படம் போடும் அறிகுறியாம்
பாட்டு  என்றும்    மாறாது
மூணு இண்டர்வெல்லும்
முறுக்கும் மாறாது
பழுப்புத் திரையிலே
பல்லி ஓடப் பார்த்திருப்போம்
கம்முன்னு  இருட்டாகும்
கருப்பு வெள்ளைப் படம் ஓடும்
------------------------------------------------------நாகேந்திர பாரதி


பச்சையும் பழுப்பும்

பச்சையும் பழுப்பும்
---------------------------------
பச்சை இலைகளுக்கு
காற்று தாலாட்டு
பழுத்த இலைகளுக்கு
காற்று ஒப்பாரி
பச்சை இலைகளுக்கு
மழை தலை துவட்டல்
பழுத்த இலைகளுக்கு
மழை தலை முழுக்கு
பச்சைக்கும் பழுப்புக்கும்
இயற்கையின் கால நீதி
-----------------------------------------நாகேந்திர பாரதி

செவ்வாய், 29 மார்ச், 2011

எல்லாம் இனிமை

எல்லாம் இனிமை
--------------------------------
தோளைப் பிடித்து
தொங்குவது இனிமை
இதழில் சிரிப்பு
இழைவது இனிமை
மூக்கில் கோபம்
முட்டுவது இனிமை
கண்ணில் கண்ணீர்
காட்டுவது இனிமை
மடியில் படுத்து
மயங்குவது இனிமை
-----------------------------------------நாகேந்திர பாரதி

சென்னையும் மதுரையும்

சென்னையும் மதுரையும்
--------------------------------------
இன்னும் பல வருடம்
இருந்திருக்கலாம் சென்னை
விரல் பிடித்து பள்ளி செல்லும்
பெண்ணின் பாசத்தோடும்
கட்டிப் பிடித்து தூங்கும்
பையனின் பாசத்தோடும்
பையனோ நியூயார்க்கில்
மகனோடும் மனைவியோடும்
பெண்ணோ லண்டனில்
மகளோடும் கணவனோடும்
வருடத்திற்கு ஒருமுறை
வருகை மதுரைக்கு
------------------------------------------நாகேந்திர பாரதி


திங்கள், 28 மார்ச், 2011

காதல் பயணம்

காதல் பயணம்
-------------------------
பஸ்ஸின் படிக்கட்டில்
தொங்கு பயணம் ஆபத்து
ரயிலின் மேற்கூரையில்
தூங்கு பயணம் ஆபத்து
இருநூறு வேகத்தில்
கார் பயணம் ஆபத்து
கண்ணைக் கட்டி
நடைப் பயணம் ஆபத்து
பெண்ணைத் தொடரும்
காதல் பயணம் ஆபத்து
----------------------------------------------நாகேந்திர பாரதி

ஞாயிறு, 27 மார்ச், 2011

காலம் வென்ற காதல்

காலம் வென்ற காதல்
---------------------------------
எத்தனை காலம்
ஆனால் என்ன  
இளமைக் கோலம்
போனால் என்ன
முகத்தைப் பார்த்தால்
போதும் கண்ணுக்கு  
பேச்சைக் கேட்டால்
போதும் செவிக்கு
காதல் என்பது
காலம் வென்றது
------------------------------------நாகேந்திர பாரதி

சவுண்டு சந்தேகம்

சவுண்டு சந்தேகம்
-------------------------------
அடையாள அட்டை
கையிலே எடுத்தாச்சு
ஓட்டுப் போட
கியூவிலே நின்னாச்சு
விரல்லே மையும்
அழியாம வச்சாச்சு
உள்ளே போயி
அமுக்கிட்டு வந்தாச்சு
சவுண்டு கேட்டுச்சான்னு
சந்தேகம் வந்தாச்சு
-------------------------------------நாகேந்திர பாரதி

சனி, 26 மார்ச், 2011

இலவசக் கணக்கு

இலவசக் கணக்கு
----------------------------
காலை நேரத்திலே
காப்பி, இட்லி இலவசம்
மத்தியான நேரம்
பிரியாணி இலவசம்
ராத்திரி வந்தாக்க
தோசை, பால் இலவசம்
டாஸ்மாக்கிலே மட்டும்
இல்லை இலவசம்
இங்கே வந்தாத்தானே
அங்கே   வாரி விடலாம்
----------------------------------------நாகேந்திர பாரதி


வெள்ளி, 25 மார்ச், 2011

சினிமாப் பாட்டு

சினிமாப் பாட்டு
--------------------------
சினிமாவுக்குப் பாட்டெழுதக்
கூப்பிட் டார்களாம்
ஆயிரம் பேர்களை
அடிப்பானாம் நாயகன்  
அரை குறை ஆடையோடு
அலைவாளாம் நாயகி
கும்பலாய்க் கூடிக்
குதிக்குமாம் கூட்டம்
மெட்டு ரெடியாம்
பாட்டு பாக்கியாம்
---------------------------------நாகேந்திர பாரதிவியாழன், 24 மார்ச், 2011

இருட்டின் ரகசியம்

இருட்டின் ரகசியம்
----------------------------
இருட்டைப் பார்க்க
வெளிச்சம் வேண்டாம்
இமைகளை மூடினால்
தெரியும் இருட்டு
கருப்பு நிறமாய்
கவிதைத் திறமாய்
இருட்டின் ஆழத்தில்
கரைவது  இன்பம்
இருட்டில் தெரியும்
இறைவன் பிம்பம்
------------------------------------------நாகேந்திர பாரதிபுதன், 23 மார்ச், 2011

இயற்கையின் பசி

இயற்கையின் பசி
----------------------------------
சொல்லாமல் வந்தது
சுனாமிச் சூறாவளி 
காற்று வாங்கும் கடற்கரை  
காவு வாங்கிப் போனது  
உடலங்கள் சடலங்கள்
உருமாறி மிதந்தன
ஒப்பாரிக் கண்ணீரும்  
உப்பு நீரில் கலந்தது
இயற்கைக்குப்   பசி வந்தால்
இத்தனை உயிர்களா
---------------------------------நாகேந்திர பாரதி


திங்கள், 21 மார்ச், 2011

வயது வரம்பு


வயது வரம்பு
------------------------

பத்து வயதுக்குள்
வேண்டும் பாசம்
இருபது வயதுக்குள்
வேண்டும் காதல்
முப்பது வயதுக்குள்
வேண்டும் குடும்பம்
நாற்பது வயதுக்குள்
வேண்டும் செல்வம்
ஐம்பது வயதுக்குள்
வேண்டும் அமைதி
------------------------------------நாகேந்திர பாரதி


வெள்ளி, 18 மார்ச், 2011

வர்க்க பேதம்

வர்க்க பேதம்
----------------------
பேப்பரைப் படித்தபடி
காபிக்கு விரட்டுவது
படித்த வர்க்கம், பணக்கார வர்க்கம்
சாராயம் குடித்தபடி
சோத்துக்கு விரட்டுவது
படிக்காத வர்க்கம், ஏழை வர்க்கம்
மனைவியை விரட்டிடும்
திமிரினில் மட்டும்
வர்க்க பேதம்
வருவது இல்லை
---------------------------------------நாகேந்திர பாரதி


வியாழன், 17 மார்ச், 2011

உள்ளும் புறமும்

உள்ளும் புறமும்
--------------------------
பயில்வான் தோற்றம்
பயந்த மனசு
ஒல்லிப் பிச்சான்
உருக்கு மனசு
செவத்தப் பொண்ணு
செருக்கு மனசு
கருத்தப் பொண்ணு
கருணை மனசு
அகத்தின் அழகு
முகத்தில் தெரியாது
----------------------------------------------நாகேந்திர பாரதி

புதன், 16 மார்ச், 2011

மண் வாசனை

மண் வாசனை
---------------------------
மெயின் ரோட்டிலிருந்து
முக்கால் மணி நேரம்
குட்டைப் பனைகளும்  
கூரை வீடுகளும்
கருதறுத்த வயலும்
கண்மாய்மீன் குழம்பும்
பழைய சோறு வாசமுமாய்
பரவிக் கிடக்கும்
சாப்பாடும் தூக்கமும்
சாவுமாய்க் கிராமம்
---------------------------------------நாகேந்திர பாரதி

திங்கள், 14 மார்ச், 2011

தேர்தல் நேரம்

தேர்தல் நேரம்
------------------------
ஒவ்வொரு மதத்திற்கும்
ஒவ்வொரு சங்கம்
ஒவ்வொரு சாதிக்கும்
ஒவ்வொரு சங்கம்
ஒவ்வொரு சங்கத்திற்கும்
ஒவ்வொரு சீட்டு
ஒவ்வொரு சீட்டுக்கும்
ஒவ்வொரு பேரம்
படியும் பேரம்
முடியும் நேரம்
-------------------------------நாகேந்திர பாரதி

ஞாயிறு, 13 மார்ச், 2011

அன்றாட யோசனை

அன்றாட யோசனை
-------------------------------
இல்லத் தரசிக்கு-
இன்றென்ன சமைக்கணும்
அலுவலக அப்பாவுக்கு-
ஆபீசர் ஆகணும்  
கல்லூரிப் பையனுக்கு-
காதல்படம்  போகணும்
பள்ளிக்கூடப் பெண்ணுக்கு-
பாடம் உருப் போடணும்
அன்றாடம் எழுந்ததும்-
அவரவர் யோசனை
---------------------------------நாகேந்திர பாரதி
சனி, 12 மார்ச், 2011

ஒத்திப் போட்ட உணர்ச்சி

ஒத்திப் போட்ட உணர்ச்சி
--------------------------------------
இளைஞன் அவன் பின்னே
கால்கள் இழுப்பதேன்
ஓடிப் போவதற்கே
உணர்ச்சி தூண்டுவதேன்  
இளமையா காதலா
இரண்டும் கெட்டான் அவஸ்தையா
இருந்து விட்டுப் போகட்டுமே
இன்பமாய்த்தான்   இருக்கிறது
ஓடிப் போவதை மட்டும்
ஒத்திப் போட வேண்டும்
----------------------------------------------------நாகேந்திர பாரதி


வெள்ளி, 11 மார்ச், 2011

பத்தாவது கிரகம்

பத்தாவது கிரகம்
--------------------------
ஒன்பது கிரகமும்
ஒன்றான கிரகம்
பத்தாவது கிரகம்
கர்ப்பக் கிரகம்
நெய்யின் வாசமும்
சூடத்தின் மணமும்
மூச்சில் கலந்து
மோனத் தவத்தில்
சிவமும் சக்தியும்
சேரும் அனுபவம்
-----------------------------நாகேந்திர பாரதி


வியாழன், 10 மார்ச், 2011

இதயம் கீறிய பெயர்

இதயம் கீறிய பெயர்
--------------------------------
பள்ளிக்கூட மர பெஞ்சில்
காம்பஸால் கீறிய பெயர்
கத்தாழைச் செடியில்
முள்ளால் கீறிய பெயர்
கோவில் சுவற்றில்
சாக்பீஸால் கீறிய பெயர்
நோட்டுப் புத்தகத்தில்
பேனாவில் கீறிய பெயர்
இதயத்தில் என்றென்றும்
காதலால் கீறிய பெயர்
---------------------------------------------------நாகேந்திர பாரதி

புதன், 9 மார்ச், 2011

தோட்டம் துரவு

தோட்டம் துரவு
------------------------
வெளியெல்லாம் நிறைந்திருக்கும்
செடியும் கொடியும்
செடியெல்லாம் மறைந்திருக்கும்  
காயும் கனியும்
கொடியெல்லாம் ஒளிந்திருக்கும்  
பாம்பும் பூச்சியும்
வழியெல்லாம் முளைத்திருக்கும்
புல்லும் முள்ளும்
வாய்க்காலால்   வளர்ந்திருக்கும்
தோட்டம் துரவு
----------------------------------------------நாகேந்திர பாரதி

வெள்ளி, 4 மார்ச், 2011

தவிக்கும் குளம்

தவிக்கும் குளம்
----------------------------
எத்தனை மீன்கள்
துள்ளிய இடம்
எத்தனை மலர்கள்
பூத்த இடம்
எத்தனை மக்கள்
குளித்த குளம்
வெடித்துக் கிடக்கும்
வரி வரியாக
தவித்துக் கிடக்கும்
விசும்பின் துளிக்கு
----------------------------------------நாகேந்திர பாரதி

வியாழன், 3 மார்ச், 2011

பரீட்சை பயம்

பரீட்சை பயம்
--------------------------
எல்லாம் படித்திருந்தும்
எதுவும் நினைவில் இல்லை
கடைசி நிமிடங்களில்
புத்தகப் புரட்டல்கள்
தேர்வு மையத்தில்
திடீர்த் தலைவலி
கேள்வித்தாள் கிடைத்ததும்
அவசரப் பார்வை
எழுத எழுத
ஊறும் பதில்கள்
------------------------------------நாகேந்திர பாரதி


புதன், 2 மார்ச், 2011

இயற்கையிடம் சொல்லிவை

இயற்கையிடம் சொல்லிவை
-------------------------------------------
காலையிடம் சொல்லிவை
மலர்கள் மணக்கட்டும்
பாப்பா விழிக்கட்டும்
மாலையிடம் சொல்லிவை
இளவெயில் இனிக்கட்டும்  
பாப்பா ஆடட்டும்
இரவிடம் சொல்லிவை
தென்றல் வீசட்டும்
பாப்பா தூங்கட்டும்
இயற்கையிடம் சொல்லிவை
இது என்றும் நடக்கட்டும்
--------------------------------------------------நாகேந்திர பாரதி

செவ்வாய், 1 மார்ச், 2011

திருவிழாக் காசு

திருவிழாக் காசு
-----------------------------
திருவிழாக் காசுக்குத்  
தெருவோரத் தின்பண்டம்
சீனிச்சேவு காராச்சேவு
சிவப்புமிட்டாய்க்   கடிகாரம்
வாழைப்பழம் பொரிகடலை
வயிறார மொங்கிட்டு
விளையாண்டு முடிஞ்சாக்க
திருவிழா முடிஞ்சாச்சு
தெருவெல்லாம் காலியாச்சு
அடுத்த வருஷத்துக்கு
அரை ரூபாய் சேந்தாச்சு
-----------------------------------------நாகேந்திர பாரதி


பெயர் மாறியவர்கள்

பெயர் மாறியவர்கள்
----------------------------------------
'என்னங்க' என்றவுடன்
திரும்பிப் பார்க்கும் கணவன்மார்கள்
'என்னம்மா' என்றவுடன்
திரும்பிப் பார்க்கும் மனைவிமார்கள்
'ஏய் மீனு' என்றவுடன்
திரும்பிப் பார்க்கும் மீன்வண்டிக்காரர்
'கத்தரிக்காய்'   என்றவுடன்
திரும்பிப் பார்க்கும் காய்வண்டிக்காரர் 
ஆகுபெயர் ஆகிவிட்டு
பெயர் மாறிய பேர்வழிகள்
-------------------------------------------------------நாகேந்திர பாரதி