திங்கள், 31 ஜனவரி, 2011

பாப்பாப் பாட்டு

பாப்பாப் பாட்டு
----------------------------------
யாரு வர்றாங்க
அம்மாச்சி வர்றாங்க
எப்ப வர்றாங்க
இப்ப வர்றாங்க
என்ன தர்றாங்க
ஆப்பிள் தர்றாங்க
அஞ்சு நிமிஷம்னு
அப்ப சொன்னாங்க
பத்து நிமிஷம்
பறந்து போச்சுங்க
பாப்பாக் குட்டி
தூங்கிப் போச்சுங்க
-----------------------------------------------------நாகேந்திர பாரதி


ஞாயிறு, 30 ஜனவரி, 2011

காதல் ஆறு

காதல் ஆறு
---------------------
மதுரையில் ஒரு
வைகை ஆறு
திருநெல் வேலியில்
தாமிர பரணி
கோவையில் ஒரு
சிறுவாணி ஆறு
சென்னையில் வங்கக்
கடலே ஆறு
இளமையூரில்  என்றும்
காதலே ஆறு
--------------------------------------------நாகேந்திர பாரதி

வெள்ளி, 28 ஜனவரி, 2011

கிராமக் காட்சி

கிராமக் காட்சி
--------------------------
எக்ககுடிக் கடையிலே
முடியை வெட்டிபுட்டு
நல்லாங்குடிக் கண்மாயிலே
முங்கிக் குளிச்சுப்புட்டு
புக்குளம் சடச்சிக்கு
பொங்கல் வச்சு கும்பிட்டு
உத்தர கோச மங்கை
ஊருக்குத் திரும்பையிலே
வழியெல்லாம் வயக்காடு
வயலெல்லாம் கருதறுப்பு
வைக்கோல்     படப்போடு 
வரப்பெல்லாம்   ஒப்படிநெல்
-------------------------------------------- நாகேந்திர பாரதி
 

கண்ணெல்லாம் திருவிழா

கண்ணெல்லாம் திருவிழா
--------------------------------------------
மாலங்குடி ஊரைவிட்டு
மாட்டு வண்டி பூட்டிக்கிட்டு
வைக்கோல்போர்    ஜமுக்காளம்
வழுக்கிறதை ரசிச்சுக்கிட்டு
மொச்சையும்   கடலையும்  
மொக்கித் தின்னுக்கிட்டு
உத்திர கோச மங்கை
மரகத நடராஜர்
மார்கழி உத்சவத்தை
பாத்துட்டு திரும்பையிலே
கண்ணெல்லாம் திருவிழா
கழுத்தெல்லாம் திருநீறு
--------------------------------------------------நாகேந்திர பாரதிவியாழன், 27 ஜனவரி, 2011

பரட்டை பாட்டு

பரட்டை பாட்டு
---------------------------------
ஏழரைக் கட்டையிலே
எடுத்து விட்டான்னா
பக்கத்தூரு கேக்கும்
பரட்டை பாட்டு
ராமாயணம் பாரதம்
ராத்திரிக்குச் சொன்னாக்க
ஊரே உறங்காது
உக்காந்து கேக்கும்
சம்சாரம் போனதும்
சாராயம் ஆயிட்டான்
நேத்துப் போயிட்டான்
காத்தும் போயாச்சு
-----------------------------------------------நாகேந்திர பாரதி

ஒச்சாயிக் கிழவி

ஒச்சாயிக் கிழவி
---------------------------------
கருக்கல்லே  எந்திரிச்சு
கடுங்காப்பி குடிச்சுட்டு
கருவ மரம் வெட்டி
கரியாக்கிக் காசாக்க
பழஞ்  சோத்துச்  சட்டியோடு
புறப்பட்டுப் போனாக்க
பொழுது சாயறப்போ
உடம்பும் கருத்திருக்கும்
புடிச்சு வந்த மீனோடு
புதுச் சோறு சாப்பிட்டு
படுத்துப் புரண்டாக்க
பாதித் தூக்கம் வரும்
புருஷனும் போயாச்சு
புள்ளையும் மறந்தாச்சு
வருஷம் ஒரு வாட்டி
வந்து போற பேரனுக்காய்
உசிரைப் புடிச்சிருப்பா
ஒச்சாயிக் கிழவி அங்கே
-------------------------------------------நாகேந்திர பாரதி

சினிமா அனுபவம்

சினிமா அனுபவம்
---------------------------------
தியேட்டர் வாசலில்
க்யூவில் நின்று
கவுண்டர் நெருங்க
இதயம் துடிக்க
டிக்கெட் கிடைத்து
சீட்டில் அமர்ந்து
நியூஸ் ரீல் முடிந்து
ஆரம்ப மாகும்
சினிமா அனுபவம்
புக்கிங் பண்ணி
பார்ப்பதில் காணோம்
---------------------------------------நாகேந்திர பாரதி

புதன், 26 ஜனவரி, 2011

'குடி'யரசுக் கொண்டாட்டம்

'குடி'யரசுக் கொண்டாட்டம்
---------------------------------------------------
கொடி ஏற்றிக் கும்பிட்டு
இனிப்பு வழங்கி ஆடிப் பாடி
சட்டையிலே கொடி குத்தி
கொண்டாடியது அந்தக் காலம்
குடி ஏற்றித் தடுமாறி
அசைவத்தைப் பிடி பிடித்து
தொலைக் காட்சிப்   படம் பார்த்துக்  
கொண்டாடுவது இந்தக் காலம்
'வந்தேமாதரமும்' 'ஜெய்ஹிந்தும் '   போச்சு
'டாஸ்மாக்கும்' 'சீரியலும்' ஆச்சு
-------------------------------------------------------நாகேந்திர பாரதிசெவ்வாய், 25 ஜனவரி, 2011

அடிமைப் பெண்கள்

அடிமைப் பெண்கள்
--------------------------------
தாலி கட்டும் வரை
தகப்பன் தயவு
புள்ளை வளரும் வரை
புருஷன் தயவு
போகும் காலம் வரை
புள்ளை தயவு
வேலைக்குப் போகும்
பெண்கள் வேறு
வீட்டில் இருக்கும்
அடிமைப் பெண்கள்
-----------------------------------------------------நாகேந்திர பாரதி

ஞாயிறு, 23 ஜனவரி, 2011

பாப்பாவும் பாட்டியும்

பாப்பாவும் பாட்டியும்
-------------------------------------
பொக்கை வாய்ச் சிரிப்பு
புரண்டு புரண்டு படுக்கறது
அடிக்கடி கூப்பிடறது
அப்பப்ப அழறது
பேசிக் கிட்டே இருக்கணும்னு
பிடிவாதம் பிடிக்கிறது
கூடவே இருக்கணும்னு
கோபமா முறைக்கிறது
பாப்பாவும் பாட்டியும்
பழக்கத்தில் ஒண்ணுதான்
--------------------------------------------------நாகேந்திர பாரதி

வெள்ளி, 21 ஜனவரி, 2011

புளிய மரப் பிசாசு

புளிய மரப் பிசாசு
---------------------------------
கிளையை உலுக்கி விட்டா
கீழே விழும் பழமும் காயும்
அடிச்சு தோலுரிச்சா
பச்சை கொடுகும், சிவப்பு புளிக்கும்
அடி மரத்து அய்யனாரு
கண்டுக்கவே மாட்டாரு
அடுத்தூருப்     பொண்ணு ஒண்ணு
நாண்டுக்கிட்டு நின்னப்புறம்
புளிய மரம் பிசாசாச்சு
போறதில்லே இப்போல்லாம்
---------------------------------------நாகேந்திர பாரதி

  

வியாழன், 20 ஜனவரி, 2011

வீட்டு சபை விரிவாக்கம்

வீட்டு சபை விரிவாக்கம்
--------------------------------------------
கடைக்குப் போய் வரும் பாட்டிக்கு
கூடுதலாக குளிப்பாட்டும் பொறுப்பு
பில்கள் கட்டி  வரும் தாத்தாவுக்கு
தூக்கி வைத்துக் கொள்ளும் பொறுப்பு
வேலை முடித்து வரும் அப்பாவுக்கு
சேர்ந்து விளையாடும் பொறுப்பு
அலுவலகம் விட்டு வரும் அம்மாவுக்கு
பால் ஊட்டும்  பொறுப்பு
பாப்பா பிறந்த வீட்டில்
பொறுப்புகளின் விரிவாக்கம்
-----------------------------------------------------நாகேந்திர பாரதிபுதன், 19 ஜனவரி, 2011

மேனேஜர் அவசரம்

மேனேஜர் அவசரம்
----------------------------------
இது கூடத் தெரியாம
என்னப்பா படிச்சீங்க
சீக்கிரம் முடியுங்க
ராத்திரியே அனுப்பணும்
கஸ்டமர் கத்துறாரு
கண்டிப்பா முடிக்கணும்
எனக்கு மீட்டிங்கு
இப்பவே கிளம்பறேன்
புறப்பட்டார் மேனேஜர்
புடவைக் கடைக்கு
-----------------------------------------------நாகேந்திர பாரதி

செவ்வாய், 18 ஜனவரி, 2011

ஐ.சி. வார்டு அய்யா

ஐ.சி. வார்டு அய்யா
---------------------------------
அய்யா பேசினா
அவர்தான் பேசணும்
இடையில் பேசினா
எதுத்துப் பேசினா
எரிச்சல் எகிறும்
கோபம் குதிக்கும்
ஐ.சி வார்டுலே
அஞ்சு நாள் இருந்தார்
இப்ப பேச்சு
இறங்கிப் போச்சு
-------------------------------------------நாகேந்திர பாரதி

திங்கள், 17 ஜனவரி, 2011

பீட்டர் பேர்வழிகள்

பீட்டர் பேர்வழிகள்
----------------------------------
வேலையும் தெரியாது
விபரமும் புரியாது
காலையில் லேட்டு
சாயந்திரம் சீக்கிரம்
சின்ன வேலையைப்
பெரிசா செய்றது
பெரிய வேலையோ
நைசா நழுவறது
பீட்டர் விட்டுக் கொண்டே
ஓட்டுவார் சில பேர்
-------------------------------------------நாகேந்திர பாரதி

ஞாயிறு, 16 ஜனவரி, 2011

நாளைக்கு வருவாளா

நாளைக்கு வருவாளா
----------------------------------
நாளைக்கு வருவேன்னு
நேத்தைக்கு சொன்னாள்
இன்னைக்கு வரலை
உடம்பு முழுக்க
சூடாய் ஆச்சு
உள்ளம் முழுக்க
சோர்வாய்ப்   போச்சு
நாளைக்கு வருவாளா
நம்பிக்கை தருவாளா
---------------------------------------------நாகேந்திர பாரதி

முந்தானை முடிச்சு

முந்தானை முடிச்சு
-----------------------------------
பாட்டி செத்துப் போயிட்டா
கடைசி நேரம் வரை
புலம்பிக் கிட்டு இருந்தா
பேரனுக்கு வேலை கிடைக்க
சமயபுரம் அம்மனுக்கு
நேந்துக்கிட்டு இருக்காளாம்
உசிரோடு இருக்கணுமாம்
சேலையை அவுக்குறப்ப
முடிச்சிலே இடிச்சுது
முழு ரூபாய்க் காசு
----------------------------------------------நாகேந்திர பாரதி

அன்றும் இன்றும்

அன்றும் இன்றும்
---------------------------------
இழுத்து 'தம்' பிடிச்சா
இரும்பாகும் உடம்பு
ஓங்கி அறைஞ்சா
உடம்பு கிழியும்
இருந்தது அப்போ
இல்லே இப்போ
மூச்சு முட்ட
நாக்கு தள்ள
முப்பது வயசை
நெனச்சு முனகும்
---------------------------------------நாகேந்திர பாரதி

சனி, 15 ஜனவரி, 2011

பிரிவின் ஓரங்கள்

பிரிவின் ஓரங்கள்
-------------------------------
ரெயில் கிளம்பும் போது
நிறையும் கண்ணீர்
மெயில் பார்க்கும் போது
மறைக்கும் பார்வை
போனில் பேசும் போது
அடைக்கும் தொண்டை
நேரில் நிற்கும் போது
நிறையும் நிம்மதி
பிரிவின் ஓரங்களில்
எத்தனை உணர்ச்சிகள்
----------------------------------------------நாகேந்திர பாரதி

போதுமடி எனக்கு

போதுமடி எனக்கு
---------------------------
அடி போடி நீ எனக்கு
போதுமடி   இந்த சோகம்
உன்னைப் பார்த்த ஞாபகம்
போதுமடி என் விழிகளுக்கு
உன்னைத் தொட்ட ஞாபகம்
போதுமடி என் விரல்களுக்கு
உன்னைப் பிரிந்த ஞாபகம்
போதுமடி என் கால்களுக்கு
உன்னை நினைக்கும் ஞாபகம்
போதுமடி என் நெஞ்சுக்கு
------------------------------------------------------------நாகேந்திர பாரதி

வெள்ளி, 14 ஜனவரி, 2011

செல்போன் டவர்

செல்போன் டவர்
-------------------------------
செல்போன் டவரில்
சிக்குண்டு போனவை
சிட்டுக் குருவிகள்
மட்டும் அல்ல
சினேக எழுத்துக்கள்
சிதறிய கார்டுகளும்
எஸ்டிடி பூத்தில்
ஏற்பட்ட உறவுகளும்
அவசரம் இல்லாத
அமைதி வாழ்க்கையும் தான்
-------------------------------------------------------நாகேந்திர பாரதி

வியாழன், 13 ஜனவரி, 2011

பொங்கலோ பொங்கல்

பொங்கலோ பொங்கல்
---------------------------------
உள்ளம் அமைதியில்
பொங்கி வழியட்டும்
உடல் ஆரோக்யத்தில்
பொங்கி வழியட்டும்
எண்ணம் கடமையில்
பொங்கி வழியட்டும்
இளமை காதலில்
பொங்கி வழியட்டும்
இன்பம் எங்கெங்கும்
பொங்கி வழியட்டும்
-----------------------------------------நாகேந்திர பாரதி

வியாழன், 6 ஜனவரி, 2011

மார்கழி மாதம்

மார்கழி மாதம்
---------------------------
அதிகாலை எழுந்து
அழகாகப் பெருக்கி
சாணிநீர் தெளித்து
சமபுள்ளி வைத்து
பூக்கோலம் போட்டு
பூசணிப்பூ நட்டு
மலர்கின்ற காலை
மார்கழியின் மாதப்
பாவைப் பாடலில்
பாவங்கள் ஓடும்
--------------------------------------------------நாகேந்திர பாரதி

புதன், 5 ஜனவரி, 2011

வாய் நிறைய வெக்கம்

வாய் நிறைய வெக்கம்
---------------------------------------
பெரியார் பஸ் ஸ்டாண்டில்
பிதுங்கும் பஸ்சுக்குள்
இடித்துப் பிடித்து ஏறி
இடம் பிடித்த பின்பு
மூணு முழு டிக்கெட்
அஞ்சு அரை டிக்கெட்
வாங்கும் போது மட்டும்
வாய் நிறைய வெக்கம்
வீட்டுக் கட்டில் மேல்
வெக்கம் இருந்த தில்லை
-----------------------------------------------------நாகேந்திர பாரதி

குரு வணக்கம்

குரு வணக்கம்
------------------------
கையில் பிரம்பில்லை
கடுகடு முகமில்லை
சொல்லில் சூடில்லை
சுட்டும் விரலில்லை
படிப்பும் பண்பும்
சேர்த்துக் குழைத்து 
சுவையைக் கூட்டிச்
சொல்லிக் கொடுத்ததால்
குருவை மிஞ்சிய
தெய்வம் இல்லை
------------------------------------------------நாகேந்திர பாரதி

திங்கள், 3 ஜனவரி, 2011

புத்தாண்டு புலர்ந்தது

புத்தாண்டு புலர்ந்தது
---------------------------------------
பொங்கும் மங்கலம்
எங்கும் தங்கிடும்
புத்தாண்டு  வந்தது
புது சுகம் தந்தது
இன்பம் விளைந்தது
துன்பம் தொலைந்தது
எங்கும் அமைதி
நின்று நிலைத்தது 
இரண்டா யிரத்து
பதினொன்று முளைத்தது
--------------------------------------------நாகேந்திர பாரதி

ஞாயிறு, 2 ஜனவரி, 2011

இதயக் களவாணி

இதயக் களவாணி
--------------------------------
காற்று வரத்
திறந்து வைத்த
சன்ன லுக்குள்
திருடன் நுழைந்தது போல்
இயற்கையை ரசிக்க
திறந்து வைத்த
கண்க ளுக்குள்
எவளோ நுழைந்து
இதயத் தைக் களவாடிச் 
சென்று விட்டாள்
-------------------------------------------நாகேந்திர பாரதி

சனி, 1 ஜனவரி, 2011

செருப்பும் செல்வமும்

செருப்பும் செல்வமும்
------------------------------------
புத்தாண்டு, பொங்கலில்
கூட்டமோ கூட்டம்
மற்ற பல நாட்களில்
அம்மன் சாமி மட்டும்
கூட்டத்தில் கோரிக்கை
வைத்தாலோ கோவிந்தா
தனியாகச் சொன்னாலோ
தாராளமாய்க் கிட்டும்
செல்வமும் புகழும்.
செருப்பும் தொலையாது
-------------------------------------------நாகேந்திர பாரதி