வெள்ளி, 31 டிசம்பர், 2010

காதலுக்கு பலியானால்..

காதலுக்கு பலியானால்..   (தினத்தந்தி - 20/02/2011)
-------------------------------------------
சுண்டு விரல் பட்டாலே
சுகம் ஒன்று உண்டாகும்
மந்திரத்தில் கட்டுண்டு
மனம் ஒன்று திண்டாடும்
பார்த்தாலும் சிரித்தாலும்
பைத்தியமாய் ஆகி விடும்
பகலுக்கும் இரவுக்கும்
வித்தியாசம் தெரியாது
பாவம் தான் காதலுக்கு
பலியானால் இப்படித்தான்
----------------------------------------------------------நாகேந்திர பாரதி

சுனாமிச் சுழல்

சுனாமிச்   சுழல்
-------------------------
காலை நேரம்
கடலின் ஓரம்
எங்கும் இரைச்சல்
எவரும் ஓட்டம்
திரும்பு வதற்குள்
திணறும் மூச்சு
குளிரும் நீரும்
தலையைக் குடையும்
இழுத்துச் செல்லும்
இருட்டுக் குகைக்குள்
-----------------------------------நாகேந்திர பாரதி

வியாழன், 30 டிசம்பர், 2010

காதல் வளர்ச்சி

காதல் வளர்ச்சி
------------------------------
பொன்னியின் செல்வனையும்
மிதிலா விலாசையும்
படித்து வளர்ந்த
பழைய காதல்
எம்ஜியார் சினிமாவையும்
ஜெமினி சினிமாவையும்
பார்த்து வளர்ந்த
அடுத்த காதல்
இன்டெர் நெட்டையும்
டிவி சீரியலையும்
மேய்ந்து வளரும்
இன்றைய காதல்
----------------------------------------நாகேந்திர பாரதி

புதன், 29 டிசம்பர், 2010

வாசமும் வேஷமும்

வாசமும்  வேஷமும்
--------------------------------------
தாங்கத்தான் செய்றாங்க
பேரனும் பேத்தியும்
காய்கறி   வாங்கியார
கடைக்குப் போறேன்
குழந்தையைக் கூட்டியார
ஸ்கூலுக்குப்       போறேன்
வெளியே போனாக்க
வீட்டுக்குக் காவல்
விழுந்தேன்னா தெரியும்
வாசமும்   வேஷமும்
---------------------------------------------------நாகேந்திர பாரதி

செவ்வாய், 28 டிசம்பர், 2010

சிரிப்பை விற்றவன்

சிரிப்பை விற்றவன்
------------------------------------
வேர்க் கடலையோடு சேர்த்து
சிரிப்பையும் விற்பவன்
கால் மணி நேரம்
கலகலப் பாக்கி விட்டு
ஓடும் வண்டியில் இருந்து
குதித்து ஓடுவான்
ஒரு வாரமாகக்
காண முடியவில்லை
மறுபடியும் வந்தான்
வேர்க் கடலை மட்டும் விற்க
---------------------------------------------------நாகேந்திர பாரதி

திங்கள், 27 டிசம்பர், 2010

பரட்டைக் கிழவி

பரட்டைக் கிழவி
---------------------------
கஞ்சிக்   கலயம்
தலையில் சுமந்து
பச்சப் புள்ள
இடுப்பில் சுமந்து
களை எடுக்கவும்
கதிர் அறுக்கவும்
கருக்கலில் கிளம்பி
கருத்தபின் திரும்பி
காலம் கழிந்து
கயித்துக் கட்டிலில்
படுத்துக் கிடக்கும்
பரட்டைக் கிழவி
பாக்காமப் போகும்
படிச்ச புள்ள
-----------------------------------------------------நாகேந்திர பாரதி

ஞாயிறு, 26 டிசம்பர், 2010

ஒத்தையடிப் பாதை

ஒத்தையடிப் பாதை
--------------------------------------
பனை மரங்களைப் பார்த்தபடி
அய்யனாரைக் கும்பிட்டபடி
ஓணான்களை விரட்டியபடி
வாய்க்கால்களைத் தாண்டியபடி
மைனாக்களைக் கேட்டபடி
ரெயில்வே ஸ்டேஷனில் இருந்து
ஒத்தையடிப் பாதை வழி
ஒரு மணி நேரத்தில் ஊர்
இப்போதெல்லாம் பஸ்ஸில் ஏறி
கால் மணி நேரத்தில் ஊர்
கனவில் மட்டும் ஒத்தையடிப் பாதை
----------------------------------------------------------------------நாகேந்திர பாரதி

சனி, 25 டிசம்பர், 2010

இரண்டாயிரத்து பதினொன்று

இரண்டாயிரத்து பதினொன்று
------------------------------------------------
ஊழல் இல்லா அரசியல்
உறவு இல்லா துறவு
வன்முறை இல்லா வாலிபம்
வழக்கு இல்லா நீதிமன்றம்
கடமை தவறா அதிகாரம்
கடன் வாங்கா நிர்வாகம்
இடைஞ்சல் இல்லா இயற்கை
என்றும் துணையாய் இறைமை
இத்தனை இன்பம் நன்று
இரண்டாயிரத்து பதினொன்று
------------------------------------------------------நாகேந்திர பாரதி

வெள்ளி, 24 டிசம்பர், 2010

போதைப் பொறி

போதைப் பொறி
---------------------------------
கட்டிங் அடித்து
கண்கள்  கலங்கி
குவார்டர் அடித்து
வாய் குழறி
ஆப் அடித்து
காது ஆப் ஆகி
புல் அடித்து
மூச்சு நின்றது
போதைப்   பொறியில்
மெய் பொய்யானது
-------------------------------------------நாகேந்திர பாரதி

வியாழன், 23 டிசம்பர், 2010

விவசாயி அசதி

விவசாயி அசதி
----------------------------
வாய்க்கால் தண்ணியிலே
காலைக் கழுவிக் கொண்டு
வரப்பு மேட்டிலே
வழுக்காம நடந்து கொண்டு
கூதல் காத்துக்கு
காதைப் பொத்திக் கொண்டு
சாணி மெழுகின
மண்ணுக்   குடிசையிலே
ஓலைப் பாயிலே
உருண்டா தெரியும்
கிராமத்து   வசதி
விவசாயி அசதி
-----------------------------------------------நாகேந்திர பாரதி

காதல் என்பது

காதல் என்பது
--------------------------
ஹார்மோன்கள் செய்வது
யார் சொல்லும் கேட்காது
சொந்த பந்தம் பிடிக்காது
சோறு தண்ணி செல்லாது
பசியும் தூக்கம் பாக்காது
பாடம் எல்லாம் பிடிக்காது
பகல் இரவு தெரியாது
பாதை பாத்து நடக்காது
பட்ட பின்பு தெளிவது
பாதி வயது தொலைப்பது
-----------------------------------------------------நாகேந்திர பாரதி

புதன், 22 டிசம்பர், 2010

புகை வண்டி நிலையம்

புகை வண்டி நிலையம்
-------------------------------------------
பள்ளிக் கூட்டத்திற்கு
சித்திரக்கதை, ஐஸ்க்ரீம்
கல்லூரிக் கூட்டத்திற்கு
காதல் கதை, கூல் டிரிங்
குடும்பக் கூட்டத்திற்கு
வார இதழ், வடைகாபி
வயதான கூட்டத்திற்கு
தினசரியும் மாத்திரையும்
எல்லாப் பருவத்திற்கும்
ஏற்றபடி கொடுத்து விட்டு
எப்போதும் புகைத்தபடி
புகை வண்டி நிலையம்
----------------------------------------------நாகேந்திர பாரதி

 

செவ்வாய், 21 டிசம்பர், 2010

வெங்காயப் பெருங்காயம்

வெங்காயப் பெருங்காயம்
-----------------------------------------------
'என்ன பெரிய வெங்காயம்'
என்ற பெரியார் வெங்காயம்
ஏற்படுத்தும் பெருங்காயம்
அடுப்படியில் வலிக்கிறது
வரும்படியைக் கழிக்கிறது
உரிக்கும்போது மட்டும் அல்ல
உச்சரிக்கும் போது கூட
உச்சத்தில் விலையோடு
கண்ணீரை வரவழைக்கும் 
வெங்காயப் பெருங்காயம்
---------------------------------------------------நாகேந்திர பாரதி

திங்கள், 20 டிசம்பர், 2010

படையெடுப்பு

படையெடுப்பு
--------------------------
வெயில் காலத்தில்
வீட்டை விட்டுப் போனவர்கள்
குளிரிலும் மழையிலும்
கூட்டமாய்    வருவார்கள்
பகலில் ஒளிந்திருந்து
இரவினில் படையெடுப்பு
அடித்தாலும் ரத்தம்
கடித்தாலும் ரத்தம்
கொசுவுக்குக் கொடுத்து விட்டு
கோடைக்குக் காத்திருப்போம்
-----------------------------------------------------நாகேந்திர பாரதி

ஞாயிறு, 19 டிசம்பர், 2010

பழைய சோறு

பழைய சோறு
-----------------------------
காட்டில் கிடைக்கும்
கோவக்காய் வதக்கி
ஊறப் போட்ட
மிளகாயைப் பிதுக்கி
நேத்து வடிச்ச
பழைய சோற்றோடு
சட்டிக் கலயத்தில்
விட்டுக் குடிக்க
பசிக்கு விருந்து
நோய்க்கு மருந்து
________________________________நாகேந்திர பாரதி

சனி, 18 டிசம்பர், 2010

போக்கு வரத்து

போக்கு வரத்து
---------------------------
பொருளாதார நிபுணர்கள்
ஐந்து பேர் மேடையில்
கலந்துரை யாடிட
ஐம்பது பேர் அரங்கில்
சாலைகளின் சீரமைப்பு
போக்குவரத்து பிரச்னை
அலசி ஆராய்ந்திட்டு
அவரவர் கார்களில்
சாலைகளை அடைத்து
போக்குவரத்தைத் தடுத்து
-----------------------------------------------நாகேந்திர பாரதி

சேமிப்புச் சிந்தனை

சேமிப்புச் சிந்தனை
-----------------------------------
செலவைக் குறையுங்கள்
சேமிப்பை வளருங்கள்
ஒரு ரூபாய் சேர்ந்து
ஒரு கோடி ஆகும்
நாட்டுக்கும் வீட்டுக்கும்
நன்மைகள் சேரும்
சேமிப்புச் சிந்தனை
மாநாடு முடிந்தது
மொத்தச் செலவு
பத்தே லட்சம்
---------------------------------------------------நாகேந்திர பாரதி

கோயில் திருவிழா

கோயில் திருவிழா
--------------------------------
சவ்வு மிட்டாய்க் கடிகாரம்
கட்டிக் கொண்டு
பொட்டிக் கடை வளையல்
போட்டுக் கொண்டு
சீனிச்சேவு காராச்சேவு
தின்று கொண்டு
யானை போட்ட சாணியை
மிதித்துக் கொண்டு
ஓடிப்போகும் ஒரே நாளில்
கோயில் திருவிழா
----------------------------------நாகேந்திர பாரதி

வியாழன், 16 டிசம்பர், 2010

அபிநய தேவி

அபிநய தேவி
--------------------------
'இதய வீணை தூங்கும் போது'
எரிச்சல் காட்டும் இதழ்கள்
'காவேரி ஓரம் கதை' க்கு
கலங்கி வாடும் கண்கள்
'காதல் சிறகை காற்றினில் விரிக்கும்'
கருப்பு மேகக் கூந்தல்
'தனிமையிலே இனிமை காண'
முடியாத முக பாவம்
அந்தக் கால அபிநய தேவிக்கு
இந்தக் காலத்திலும் ரசிகர்கள்
---------------------------------------------------------நாகேந்திர பாரதி

இசைஸ்ரீ ஜெயஸ்ரீ

இசைஸ்ரீ  ஜெயஸ்ரீ
--------------------------------
சரிகம பதநி
சரணம் இவரிடம்
ஆரோஹணம் அவரோஹணம்
அடங்கும் இவரிடம்
குரலில் குயில்
குழைவில்  இளமை
எந்த  ஸ்தாயி யிலும்
ஏராள இனிமை   
எம் எஸ் எஸ்ஸின்
பக்தி  வாரிசு
இனி இந்த இசைஸ்ரீ
சென்னை ஜெயஸ்ரீ
------------------------------------------நாகேந்திர பாரதி

அவரவர் நிறம்

அவரவர் நிறம்
-----------------------------
காய்ச்சலா இருந்துச்சு
கருப்பு மாத்திரை சாப்பிட்டேன்
தலை சுத்தா இருந்துச்சு
வெள்ளை மாத்திரை சாப்பிட்டேன்
உடம்பு வலியா இருந்துச்சு
சிவப்பு மாத்திரை சாப்பிட்டேன்
ஒண்ணுமே சரியாகலை
உங்க கிட்டே வந்துட்டேன்
வேறு கலர் தர்றேன்
எடு முதல்லே பீஸை
--------------------------------------------------------நாகேந்திர பாரதி

புதன், 15 டிசம்பர், 2010

மழைக் கோலம்

மழைக் கோலம்
-------------------------
மழைக் காலம் வந்துட்டா
மனுஷர் சமத்து
சகதி அடிக்காத
செருப்பு போட்டுக்குவார்
மடக்கு குடையை
மறக்காம எடுத்துக்குவார்
திரும்பி வருவார்
தொப்பலா , திட்டா
செருப்பு வாரு
அறுந்து போச்சாம்
குடைக் கம்பி
வளைஞ்சி போச்சாம்
--------------------------------------------நாகேந்திர பாரதி

பெரியவர் சாப்பாடு

பெரியவர் சாப்பாடு
------------------------------------
பன்னிரண்டு மணிக்கே
பசிக்க ஆரம்பித்து விடும்
பெரியவர் அவருக்கு
ஒரு மணி வரை
மனைவியும்   மருமகளும்
தொலைக் காட்சி சீரியலில்
இரண்டு மணிக்கு
ஏனோ தானோ
சமையல் முடியும்
'சாப்பிட வாங்க'
குரலுக்கு ஓடுவார்
-----------------------------------------------------நாகேந்திர பாரதி

செவ்வாய், 14 டிசம்பர், 2010

குட்டிச் சுவர்

குட்டிச் சுவர்
----------------------------
ஒரு காலத்தில்
ஏதோ ஒரு வீட்டின்
ஒரு பக்கச் சுவராக
இருந்த போது
பட்ட எண்ணைக் கறைகளையும்
கீறிய சித்திரங்களையும்
பத்திரமாய்க் காத்துக்கொண்டு
மழைக்குப் பயந்து கொண்டு
தனியாக நிற்கிறது
அந்த குட்டிச் சுவர்
----------------------------------------நாகேந்திர பாரதி

திங்கள், 13 டிசம்பர், 2010

துரோகச் செயல்

துரோகச் செயல்
------------------------
வளர்த்த கடா
காதிலே முட்டியது
பேட்டரி போடுவது நாம்
முள்ளைத் திருப்புவது நாம்
கீயைக் கொடுப்பது நாம்
இருந்தும் காலையிலே
கிர்ரென்று அடித்து
காதைத் துளைக்கிறதே
தலையில்   தட்டுவதைத்   தவிர
வேறு வழி தெரியவில்லை
-------------------------------------------நாகேந்திர பாரதி

சனி, 11 டிசம்பர், 2010

நீர்ச் சலனம்

நீர்ச் சலனம்
----------------------
கண்மாய்நீர்   மேற்பரப்பில்
சுழற்றிவிட்ட சில்லுக் கல்
உருவாக்கும் வட்டங்கள்
வளர்ந்து விரிந்து
கரைந்து மறைவது போல்
பள்ளிப் பருவமும்
கல்லூரிப் பருவமும்
கல்யாணப் பருவமும்
கடந்து முடிந்து
முதுமைப் பருவத்தில்
நின்று போன நீர்ச் சலனம்
---------------------------------------------நாகேந்திர பாரதி

வெள்ளி, 10 டிசம்பர், 2010

கல்லூரி விடுமுறை

கல்லூரி விடுமுறை
---------------------------------
பஸ் நகரும் போது
கண்கள் மல்க
டாட்டா காண்பிக்கும் அம்மா
கொஞ்ச தூரம் ஓடி வந்து
டாட்டா சொல்லும் தங்கை
வேகம் பிடிக்கும் பஸ்ஸோடு
பின்னே ஓடும் மரங்கள் போலே
பின்னால் ஓட மாட்டோமா
 என்று ஏங்கும் மனது
இனி அடுத்து எப்போது வரும்
கல்லூரி விடுமுறை
--------------------------------------------நாகேந்திர பாரதி

வியாழன், 9 டிசம்பர், 2010

கரிசல் கவலை

கரிசல் கவலை
--------------------------------
காஞ்சும்   கெடுக்குது
பேஞ்சும் கெடுக்குது
ஒரு தண்ணி பத்தாமே
சாவியாப்   போகுது
மழைத்தண்ணி   வெள்ளமாய்
வெள்ளாமை சாகுது
மானம் பாத்த
கரிசல் காட்டில்
காலம் பூரா
கவலையில் விவசாயி
--------------------------------------------நாகேந்திர பாரதி

புதன், 8 டிசம்பர், 2010

இனிக்கும் கண்ணீர்

இனிக்கும்   கண்ணீர்
-------------------------------------
காம்ப்ளெக்ஸ் தியேட்டர் இன்டர்வெல்லில்
கோன் ஐஸும் பாப் கார்னும்
பையனுக்கு வாங்கும் போது
டூரிங் டாக்கீஸ் இடைவேளையில்
முறுக்கும் கடலை மிட்டாயும்
வாங்கித் தந்த அப்பாவும்
கடித்துத் தந்த அண்ணனும்
கண்களில் நிறைந்து
இனிப்பாக வடிவார்கள்
-------------------------------------------------நாகேந்திர பாரதி

செவ்வாய், 7 டிசம்பர், 2010

வீட்டுக் கோலம்

வீட்டுக் கோலம்
--------------------------------
இருபத்தோரு புள்ளி வைத்து
இழுத்து விட்ட கோலங்களில்
கிளி வந்து கீச்சிடும்
முயல் வந்து விளையாடும்
மீன் குஞ்சு நீந்தும்
அன்னமும் நடை போடும்
போட்டு விட்டுப் போனவளின்
வீட்டுக்குள் குடி மகனோ
புலியாக உறுமுவான்
சிங்கமாகச் சீறுவான்
--------------------------------------------------------நாகேந்திர பாரதி

திங்கள், 6 டிசம்பர், 2010

சந்தேக ஞாபகங்கள்

சந்தேக ஞாபகங்கள்
------------------------------------
சாமி கும்பிடும் போது
செருப்பு ஞாபகம்
பஸ்சில் போகும் போது
சில்லறை ஞாபகம்
வெளியூர் போகும் போது
பூட்டு ஞாபகம்
கண்மாய்க் குளியலின் போது
வேட்டி ஞாபகம்
படுக்கப் போகும் போது
சைக்கிள் ஞாபகம்
------------------------------------------நாகேந்திர பாரதி

ஞாயிறு, 5 டிசம்பர், 2010

ஊருணி உடைப்பு

ஊருணி உடைப்பு
-----------------------------------
ஊருணி உடைப்பெடுத்து
ஊரெல்லாம் வெள்ளம்
பாத்திர பண்டமெல்லாம்
தண்ணி வந்து அள்ளும்
மச்சு வீட்டுத் தட்டோட்டில்
மக்களெல்லாம் தஞ்சம்
சாதி இல்லை மதம் இல்லை
சமபந்திச் சாப்பாடு
தண்ணீர் வடிந்த பின்னே
தன் சாதி தன் மதம்
----------------------------------------------நாகேந்திர பாரதி

வியாழன், 2 டிசம்பர், 2010

பாப்பா உலகம்

பாப்பா உலகம்
---------------------------
விளையாட்டு, தூக்கம்
விரலைச் சூம்பல்
பசித்து அழுகை
பாலைப் பருகல்
சிரித்துக் குலுங்கல்
சிணுங்கி உதைத்தல்
குப்பாறப் பார்த்தல்
மல்லாந்து அழுதல்
பாப்பா உலகில்
தொடரும் வேலைகள்
-------------------------------------------------------நாகேந்திர பாரதி

தொடர்வதில் துன்பம்

தொடர்வதில் துன்பம்
-----------------------------------------
அவள் என்ன
செய்வாள் பாவம்
பார்த்தது பிடித்ததால்
பேச விட்டாள்
பேசுவது பிடித்ததால்
தொடவும் விட்டாள்
தொடுவது பிடித்ததால்
தொடர விட்டாள்
தொடர்வது துன்பமாய்
தூரம் விட்டாள்
---------------------------------------நாகேந்திர பாரதி

கண்ணோடு சேர்ந்த காதல்

கண்ணோடு சேர்ந்த காதல்
-----------------------------------------------
பூவோடு சேர்ந்த
நார் ஆக்கினாள்
கூந்தலோடு சேர்த்து
நேர் ஆக்கினாள்
கையோடு சேர்ந்த
வளை ஆக்கினாள்
காலோடு சேர்ந்த
கொலுசு ஆக்கினாள்
கண்ணோடு சேர்த்து
காதல் ஆக்கினாள்
-----------------------------------------------நாகேந்திர பாரதி

காதல் ஒரு தொடர்கதை

காதல் ஒரு தொடர்கதை
----------------------------------------------
முகத்தில் ஒரு
முன்னுரை உண்டு
சிரித்தால் அதில்
சேதி உண்டு
பேசினால் ஒரு
பின்னுரை உண்டு
தொட்டால் அது
தொடர்வது உண்டு
தொடர்ந்தால் அதில்
காதல் உண்டு
-------------------------------------நாகேந்திர பாரதி

கொடுத்து வைத்தவர்கள்

கொடுத்து   வைத்தவர்கள்
-------------------------------------------
காதலிப்பவர்கள் கொடுத்து வைத்தவர்கள்
அவர்களுக்கு
சிரிக்கவும் தெரிகிறது
அழவும் தெரிகிறது
சேரவும் தெரிகிறது
பிரியவும் தெரிகிறது
மலரவும் தெரிகிறது
உலரவும் தெரிகிறது
இருக்கவும் தெரிகிறது
இறக்கவும் தெரிகிறது
காதலிப்பவர்கள் கொடுத்து வைத்தவர்கள்
------------------------------------------------------------------------நாகேந்திர பாரதி