செவ்வாய், 31 ஆகஸ்ட், 2010

சாலைப் பொழுது

சாலைப் பொழுது
--------------------------------
வாகனங்களும் மனிதர்களும்
வருவதால் போவதால் வரும்
வலிகளைப் பொறுத்துக் கொண்டு
வெயிலும் மழையும் விழுந்து
வாட்டுவதால் வரும்
இடைஞ்சல்களைத் தாங்கிக் கொண்டு
அந்த நீண்ட சாலை
ஆலமரத்தின் நிழல் தன் மேல்
சுருங்கியும் விரிந்தும் விழுவதை
வேடிக்கை பார்த்துக் கொண்டு
பொழுதைப்  போக்குகிறது
--------------------------------------------------------நாகேந்திர பாரதி

திங்கள், 30 ஆகஸ்ட், 2010

விட்டுச் சென்றாள்

விட்டுச் சென்றாள்
---------------------------------
சோலையிலே தன் சுகந்தத்தை
விட்டுச் சென்றாள்
கடற்கரையில் தன் காலடியை
விட்டுச் சென்றாள்
மேகத்தை தன் வீடாக
ஆக்கிச் சென்றாள்
மின்னலுக்குள் மின்னலாக
மறைந்து சென்றாள்
காதலனை ஏன் கண்ணீரில்
விட்டுச் சென்றாள்
---------------------------------------------------நாகேந்திர பாரதி

ஞாயிறு, 29 ஆகஸ்ட், 2010

குடும்ப விலக்கு

குடும்ப விலக்கு
---------------------------------
அனாதை ஆசிரமத்தில்
அரை மணி நேரம்
முதியோர் இல்லத்தில்
முக்கால் மணி நேரம்
விலங்கு நலக் கூட்டத்தில்
விரிவான பாடம்
புகைப்படமும் பேச்சும்
போகும் பத்திரிகைக்கு
குடும்பத்தை விலக்கிட்ட
குடும்ப விளக்குக்கு
விடியும் வரை காத்திருப்பார்
வீட்டிலே  பிள்ளைகள்
--------------------------------------------------நாகேந்திர பாரதி

சனி, 28 ஆகஸ்ட், 2010

வீட்டுச் சிறை

வீட்டுச் சிறை
-----------------------
இந்தப் பக்கத் தெருவிலே
இசக்கி அம்மன் தீமிதி
அந்தப் பக்கத் தெருவிலே
அரசியல் கட்சி  மேடை
எதிர்ப் பக்கத் தெருவிலே
ஈபீக்காக  குழி தோண்டி
அடுத்த தெரு நண்பனை
அர்ஜெண்டாய்ப் பார்க்கணும்
வீட்டுச் சிறை யிருந்து
விரயம் போன் பில்லு
--------------------------------------------------நாகேந்திர பாரதி

வலி போன வழி

வலி போன வழி
--------------------------------
தோள் வலி தாங்காமல்
டாக்டரிடம் போனால்
எக்ஸ்ரே ஸ்கேன்
எல்லாம் எடுத்து
கையில் கரண்ட் வைத்து
கழுத்தை இழுத்து விட்டு
அஞ்சே நாளில்
தெரியவில்லை தோள் வலி
கையிலும்  கழுத்திலும்
அதை விட அதிக வலி
-------------------------------------------நாகேந்திர பாரதி

வியாழன், 19 ஆகஸ்ட், 2010

கொண்டாட வேண்டியவர்கள்

கொண்டாட வேண்டியவர்கள்
-----------------------------------------------------
சாப்பாடு போட்டா
'சாமி' ன்னு கும்புடுறாங்க
படிக்க உதவினா
'பாரி'  ன்னு  புகழறாங்க
கோயிலுக்குக் கொடுத்தா
'கொடை வள்ளல்'ங்கிறாங்க
அரசாங்க வருமானத்திற்கு
அள்ளிக் கொடுக்கறோம்
'குடி'மக்களான எங்களை
கொண்டாட வேண்டாமா
----------------------------------------------------நாகேந்திர பாரதி

வெள்ளி, 13 ஆகஸ்ட், 2010

மழை மயக்கம்

மழை மயக்கம்
------------------------------
மரங்களுக்குத் தெரியும்
மேகத்தின் நேசம்
காற்றுக்குத் தெரியும்
மழையின் வாசம்
பூங்காவை விட்டு
நீங்குவதாய் இருந்தோம்
இயற்கையின் காதல்
இழுத்துப் போட்டது
மழையில் நனைந்து
மயங்கி நின்றோம்
---------------------------------------------நாகேந்திர பாரதி

மௌனப் பேச்சு

மௌனப் பேச்சு
------------------------
வண்டி காலியாக இருந்தது
இல்லை- முழுவதும் நிறைந்து
அவள் இல்லாத வெறுமை
பார்வை இல்லா வெறுமை
முறுவல் இல்லா வெறுமை
விடுப்பில் இருப்பாளோ
வந்து விடுவாள் நாளை
வரா விட்டால் ..
மௌனப் பேச்சு
ஏமாற்றி  விடாது
--------------------------------------நாகேந்திர பாரதி

இரக்கமில்லா இரவு

இரக்கமில்லா இரவு
------------------------------------
இருட்டாகவும் இருந்தது
இரைச்சலாகவும் இருந்தது
பறவை களும்
பாதி   பாதி தூக்கத்தில்
கனவுகளும் அரைகுறையாய்
கலைந்து போயின
நல்ல  தூக்கம் சொக்க
விடிந்து போனது
இன்னும் கொஞ்ச நேரம்
இருந்திருக் கலாம்
இரக்கமில்லா  இரவு
--------------------------------------------நாகேந்திர பாரதி

வியாழன், 12 ஆகஸ்ட், 2010

கால்பந்து ஓட்டம்

கால்பந்து ஓட்டம்
--------------------------------
அடித்து விரட்டி
ஓடும் பயணம்
தடுத்து வாங்கி
நெஞ்சில் நடனம் 
தலையில் துள்ளி
தாவும் நளினம்
இடித்து பிடித்து
வாங்கும் கடிதம்
கொடுத்து வாங்கி
போடும் கோல்கள்
--------------------------------------------நாகேந்திர பாரதி

புதன், 11 ஆகஸ்ட், 2010

காம்பஸ் காதல்

காம்பஸ் காதல்
-------------------------------------
பத்து வருடம் கழித்து
பள்ளிக் கூடத்துக்குள்
எட்டாவது வகுப்பின்
ஏழாவது பெஞ்சில்
காம்பஸால் கீறிய 
பெயரின் இடுக்கில்
சேர்ந்திருந்த அழுக்கை
துடைத்து விட்டுப் போனான்
அவளையே தொட்டதாய்
ஒரு நிமிடம் உணர்ந்து
-----------------------------------------------நாகேந்திர பாரதி

செவ்வாய், 10 ஆகஸ்ட், 2010

வாடகை சைக்கிள்

வாடகை   சைக்கிள்
--------------------------------------
முட்டுக் காலில்
தோல் பிய்யும்
சைக்கிள் செயின்
கழன்று   விழும்
நேரே ஓடி
கல்லில் முட்டும்
முள்ளுக் குத்தி
டயர் பஞ்சர்
முடிந்து போகும்
வாடகை நேரம்
-------------------------------------------நாகேந்திர பாரதி

வரவும் செலவும்

வரவும் செலவும்
--------------------------------
காலையில் கண்மாய்
பகலெல்லாம் வயல்
மாலையில் கள்ளு
இரவினில் மனைவி
வயதாகி வாந்தி
வாரத்துக்கு ஊசி 
திண்ணையில் படுக்கை
தினசரி புலம்பல்
மூச்சு நின்றதும்
மூங்கிலில்  பயணம்
--------------------------------------------நாகேந்திர பாரதி

ஞாயிறு, 8 ஆகஸ்ட், 2010

எந்திரக் காதல்

எந்திரக் காதல்
-------------------------
எண்ணை தேய்த்துக் குளிக்கச் சொன்ன
இன்லேன்ட் லெட்டர்கள்
கண்ணீரில் குளிப்பதாய்ச்  சொன்ன
கவர்க் காகிதங்கள்
வேதனையை வெளிப்படுத்திய 
வெறும் கார்டுகள்
கையெழுத்திலும் கடிதத்திலும்
கலந்திருந்த காதல்
எஸ்எம்எஸ்ஸிலும்  ஈமெயிலிலும்
எந்திரமாய்ப் போனது
-----------------------------------------------------------நாகேந்திர பாரதி

வியாழன், 5 ஆகஸ்ட், 2010

குடும்பத் தலைவி

குடும்பத் தலைவி
----------------------------------
வீட்டைப் பெருக்கி
துணிகள் துவைத்து
பூஜை முடித்து
சமையல் செய்து
குழந்தையைப் பேணி
கணவருக்கு உதவி
பெற்றோரைக் கவனித்து
வீட்டில் இருக்கும்
குடும்பத் தலைவி
'வேலை இல்லாதவள்'
------------------------------------------------------நாகேந்திர பாரதி
 

புதன், 4 ஆகஸ்ட், 2010

உயிர்த் தொண்டன்

உயிர்த் தொண்டன்
-----------------------------------
இடித்துப் பிடித்துக் கொண்டு
சிரித்துக் கொண்டு இருந்தார்கள்
இளைய தலைவர்களும்
மூத்த தலைவர்களும்
கட் அவுட் காகிதத்தில்
இரங்கல் கூட்டமாம்
உயிர்த் தொண்டனுக்கு
-----------------------------------------------நாகேந்திர பாரதி

கடந்த காலம்

கடந்த காலம்  - (தினத் தந்தி - குடும்ப மலர் - 22/08/2010)
-----------------------------
பள்ளிக்கூடம் போன பின்புதான்
விளையாட்டின் அருமை தெரிகிறது
கல்லூரி போன பின்புதான்
பள்ளிக்கூட அருமை தெரிகிறது
வேலைக்குப் போன பின்புதான்
படிப்பின் அருமை தெரிகிறது
ஓய்வு பெற்ற பின்புதான்
வேலையின் அருமை தெரிகிறது
மரணப் படுக்கை யில்தான்
வாழ்க்கையின் அருமை தெரிகிறது
-------------------------------------------------------------------நாகேந்திர பாரதி

செவ்வாய், 3 ஆகஸ்ட், 2010

இரவுப் பேருந்து

இரவுப் பேருந்து
------------------------------
பாதி இரவுப் பயணத்தில்
படம் முடிந்து போகும்
குத்துப் பாட்டு இசை வந்து
சத்தம் போட்டு நிறுத்தும்
காபிக்கும் கக்கூசுக்கும்
கால் மணி கிடைக்கும்
தொடரும் ஓட்டத்தில்
தலைகள் ஆடும்
வீடு வந்து சேர்ந்தாலும்
விடாது தூக்கம்
-----------------------------------------நாகேந்திர பாரதி

ஞாயிறு, 1 ஆகஸ்ட், 2010

எல்லாம் அவன் செயல்

எல்லாம் அவன் செயல்
------------------------------------------
சாமி நம்பிக்கையில் ஒரு
சவுகரியம் இருக்கிறது
வானம் பொய்த்தால் அவனை
வைது   தீர்க்கலாம்
நோயில் விழுந்தால் அவனை
நொந்து திட்டலாம்
பணம் பத்தாவிட்டால் அவனே
பார்த்துக் கொள்வான்
சரணா கதியில் ஒரு
சந்தோசம் இருக்கிறது
---------------------------------------------------நாகேந்திர பாரதி