சனி, 31 ஜூலை, 2010

தண்ணீர் வலி

தண்ணீர் வலி
---------------------------
ஊருணியில்  இருந்து சுமந்து வர
அரை மணி ஆனது
அடுத்த  தெரு அடிபைப்பில்  அடித்து வர
கால் மணி ஆனது
வீடெதிரே வந்த குழாயில் பிடித்து வர
அஞ்சு நிமிஷம் ஆனது
இப்போது சமையல் கட்டுக்குள்ளேயே
திறந்தவுடன் தண்ணீர்
மற்ற வேலைகளில் மூழ்கி விடுவதால்
ஊருணிக்  குடம் ஒன்று நிரம்பி வழியும்
அரை மணி நேரமாய்
----------------------------------------------------------- நாகேந்திர பாரதி

வெள்ளி, 30 ஜூலை, 2010

கலையும் கலையும்

கலையும் கலையும்
-----------------------------------
தெரு ஓவியத்தின் மீது
வீசப்படும் காசுகளால்
உருக் குலையும்
ஓவியத்தின் அழகு
முச்சந்தி சிலையின் மீது
உட்காரும் காகத்தால்
எச்சில் படும்
சிலையின் அழகு
வரையாமல் செதுக்காமல்
இருந்திருக் கலாம்
பசி மட்டும் இல்லையென்றால்
------------------------------------------------------நாகேந்திர பாரதி

வியாழன், 29 ஜூலை, 2010

சாதி வேலி

சாதி வேலி
---------------------
இரவு அவளின் முக வெளிச்சத்திற்கு
ஏங்கிக் கிடக்கிறது
ஆறு அவள் ஆதரவுப் பார்வையில்
அடங்கி ஓடுகிறது
பறவைகள் அவள் உள்ள அழகைப்
பாடித் திரிகின்றன
மரங்கள் அவளைப் பார்த்த மகிழ்ச்சியில்
ஆடித் தீர்க்கின்றன
அவளோ பயத்தோடு சாதி வேலியைத்
தாண்டி ஓடிக் கொண்டு
----------------------------------------------------------------நாகேந்திர பாரதி

வைகைப் பாலங்கள்

வைகைப் பாலங்கள்
--------------------------------------
அந்தக் காலக் கீழ்ப்பாலம்
அமுங்கியிருக்கும் தண்ணீரில்
பழுப்பு மண்டபமும்
பாதி மூழ்கியிருக்கும்
புதிய பாலம் வந்து
பழைய மேம்பாலத்தின்
பவிசைக் குறைத்திருக்கும்
வைகையும் சற்றே
வாடிக் கிடக்கிறது
பாலத்தில் புரண்ட
காலம் போய் விட்டதே
----------------------------------------------------நாகேந்திர பாரதி

செவ்வாய், 27 ஜூலை, 2010

பயிருக்குப் பணமென்று பேர்

பயிருக்குப் பணமென்று பேர்
-------------------------------------------------
நெளிகின்ற நெற் கதிரும்
நிமிர்கின்ற கம்பங் கதிரும்
குழைகின்ற கேப்பைக் கதிரும்
குத்துகின்ற சோளக் கதிரும்
முளைக்கின்ற காலத்தில்
மூணு தண்ணீ பார்த்திருக்கும்
விளைகின்ற காலத்தில்
வெயில் வந்து காத்திருக்கும்
உழைக்கின்ற உழவனுக்கு
ஊதியமும் ஒளிந்திருக்கும்
--------------------------------------------------நாகேந்திர பாரதி

திங்கள், 26 ஜூலை, 2010

கடியோ கடி

கடியோ கடி
----------------------
காலை நேரத்தில்
மனைவி கடி வாங்கி
அலுவலக நேரத்தில்
அதிகாரி கடி வாங்கி
மாலை நேரத்தில்
நண்பர் கடி வாங்கி 
கடின வாழ்வில்
களைத்துப் படுக்க
இரவு நேரத்தில்
கொசுவின் கடி
----------------------------------------நாகேந்திர பாரதி

ஞாயிறு, 25 ஜூலை, 2010

என்ன தெரியும்

என்ன தெரியும்
-------------------------------
என்ன வென்று தெரியும்
ஏன் என்று தெரியும்
எப்படி என்று தெரியும்
யார் என்று தெரியும்
எல்லாம் தெரிந்ததனால்
பேசவும் தெரியும்
பேசாமல் இருந்திருந்தால்
என்னென்ன தெரியும்
பேசாவிட்டால் தெரியும்
பேசாததும் தெரியும்
-------------------------------------------------------நாகேந்திர பாரதி

ஏய்க்கும் பேர்

ஏய்க்கும் பேர்
-----------------------------
நாலு பக்கம் கடைத் தெரு
நடுவினில் மணிக் கூண்டு
பக்கத்தில் தெப்பக் குளம்
படியெல்லாம் பாசிகள்
சோப்புப் போடக் கூடாது
கோயில் குளம் அது
உயர உயரப் படிகள்
ஏறி வந்து பார்த்தால்
எந்த ஊர்  இது
பேர் மட்டும் ஏய்க்கிறது
---------------------------------------------------நாகேந்திர பாரதி

எங்கே போனார்கள்

எங்கே போனார்கள்
----------------------------------------
இங்கே தானே இருந்தார்கள்
அரிசியில் கல் எடுத்துக் கொண்டு
பல்லாங்குழி ஆடிக் கொண்டு
திண்ணையில் உட்கார்ந்து கொண்டு
தொடர்ந்து பேசிக் கொண்டு
அவ்வப்போது அழுது கொண்டு
அடுப்படியில் இருந்து கொண்டு
கொல்லைக்குப் போய்க் கொண்டு
எங்கே போனார்கள்
இறந்து போனவர்கள்
----------------------------------------------நாகேந்திர பாரதி

சனி, 24 ஜூலை, 2010

பார்த்த ஞாபகம் இல்லையோ

பார்த்த ஞாபகம் இல்லையோ
---------------------------------------------------
பழைய படத்தைப் பார்க்க
பழைய ஊருக்குப் போகணும்
திருட்டு விசிடி விட்டுட்டு
தியேட்டர் போயிப் பாக்கணும்
அழுக்குச் சீட்டுலே உட்கார்ந்து 
மூட்டைக்  கடி வாங்கணும்
பழுப்புக் கலர்த் திரையிலே
கருப்பு வெள்ளை ஓடணும்
காத்து வாங்கிப் பாக்கணும்
கண்ணு கலங்கிப் பாக்கணும்
-------------------------------------------------------நாகேந்திர பாரதி

வெள்ளி, 23 ஜூலை, 2010

காதல் கவிதை

காதல் கவிதை
------------------------------
கண்களால் தொழுவது
காதல் பல்லவி
கைகளால் தொடுவது
காதல் அனுபல்லவி
கால்களில் விழுவது
காதல் சரணம்
உடலால் இணைவது
காதல் பாடல்
உள்ளத்தால் உருகுவது
காதல் கவிதை
----------------------------நாகேந்திர பாரதி

வியாழன், 22 ஜூலை, 2010

ரெயில் பயணங்களில்

ரெயில் பயணங்களில் - (தேவி - 8/9/2010)
--------------------------------------------
காத்திருப்புப் பட்டியலில் இருந்து
இருக்கைப் பட்டியலுக்கு மாறி
இருக்கைப் பட்டியலில் இருந்து
படுக்கைப் பட்டியலுக்கு மாறியபின்
ஓரத்தில் மேலே
ஒட்டிய படுக்கையில்
கோபத்தோடு ஏறி
சோகத்தோடு படுத்தான்
இருக்கையாவது கிடைக்காதா என்று
ஏங்கிக் கிடந்தவன்
--------------------------------------------- நாகேந்திர பாரதி

புதன், 21 ஜூலை, 2010

நாதஸ்வரக் காதல்

நாதஸ்வரக் காதல்
------------------------------
படபடப் பேச்சில்
பாதி மயங்கி
பண்பு நடத்தையில்
மீதி மயங்கி
பொறுப்பு வலியைப்
பகிரத் துடிக்கும்
புதுமைப் பெண்ணின்
காதல் வாழ்க
நாதமும் ஸ்வரமும்
சீக்கிரம் சேர்க
----------------------------------------------நாகேந்திர பாரதி

செவ்வாய், 20 ஜூலை, 2010

ஒரு நல்லவனின் வருத்தம்

ஒரு நல்லவனின் வருத்தம்
----------------------------------------------------
குமார் ரெம்ப நல்லவன். இதை அவனே பல முறை சொல்லியிருக்கிறான்.
தினசரி கோவிலுக்குப் போவான். அவன் போகிற நேரம் பிரசாதம் கொடுப்பார்கள். அதற்காக சுண்டலுக்காகத் தான் அவன் கோவிலுக்குப் போகிறான் என்று சொல்ல முடியாது.

அலுவலகத்தில் கடைசியாகக் கிளம்புவது அவன்தான். வேலையில் ரெம்ப சோம்பேறி என்று சிலர் சொல்வதையும் நம்பக் கூடாது. அவனது நேரம் பாரா உழைப்பைப் பாராட்ட வேண்டும் என்று அவன் விரும்புகிறான்.

விளையாட்டில் மிகவும் ஆர்வம் உள்ளவன். தொலைக் காட்சியில் விளையாட்டு நிகழ்ச்சிகளை விரும்பிப் பார்க்கிறானே  , அழுகை சீரியல்களின் இடைவேளைகளில்.

மனைவி சொல்லை மீறுவதே கிடையாது. அவள் பேசிக் கொண்டு இருக்கும் போதே நழுவி விடுவான். கேட்டால்தானே மீறுவதற்கு.

குழந்தைகளிடம் பாசம் அதிகம். வாங்கி வரும் நொறுக்குத் தீனிகளை அவர்களிடம் அப்படியே கொடுத்து விடுவான். எல்லோரும் சேர்ந்து சாப்பிடும் போது அவனது கை அளவுக்கும் வேகத்திற்கும் முக்கால் வாசி பலகாரம் அவன் வாய்க்குள் போவதை எப்படி தவிர்க்க முடியும்.

நண்பர்களுக்காக உயிரையும் கொடுப்பான். அவன் உயிர் மேல் அவர்களுக்கு விருப்பம் இல்லாததால் கொடுப்பதில்லை.  மற்றபடி அவர்களிடம் வாங்கிய கடனையும் திருப்பிக் கொடுப்பதில்லை. நண்பர்கள் அவனை மறக்காமல் இருக்கவேண்டும் என்பதற்காக.

ஊருக்கு நல்லது செய்வதில் முதல் ஆள் அவன்தான். ஒருமுறை அவன் காலில் குத்திய முள்ளைப் பிடுங்கி தூரத்தில் எறிந்தவன், ரோட்டில் கிடந்த முள்ளை மக்கள் நலத்திற்காக எடுத்து வீசியதை அடிக்கடி சொல்லி பெருமைப் பட்டுக் கொள்வான்  .

மொத்தத்தில் குமார் ஒரு முழுமையான நல்லவன். இது உங்களுக்குப் புரிகிறது. எல்லோருக்கும் ஏன் தெரிய வில்லை என்பதுதான் அவன் வருத்தம்.
--------------------------------------------------------------------------------------------------------நாகேந்திர பாரதி

கிராமத் திணை

கிராமத் திணை
---------------------------
புளிய மரப் பிசாசு
பயத்தைக் கொடுக்கும்
ஆல மர ஆடு புலி
பணத்தைக் கொடுக்கும்
வேப்ப மர அம்மன்
வினையைத் தீர்க்கும்
அரச மரப் பிள்ளையார்
வாரிசு கொடுக்கும்
மரமும் மரத்தோடு
இயைந்த கிராமமும்
------------------------------------------நாகேந்திர பாரதி

ஞாயிறு, 18 ஜூலை, 2010

தண்ணி கருத்திருச்சு

தண்ணி கருத்திருச்சு
--------------------------------------------
தூரத்துக் கண்மாயில் 
தோண்டிய  கிணற்றில்
வாளி போட்டு
காத்துக் கிடந்து
சொட்டுச் சொட்டாய்
ஊறின   நீரை
மொண்டு வர்றப்போ
இருட்டிப் போகும்
வானம் பூமி
வீடு எல்லாம்
-----------------------------------------------நாகேந்திர பாரதி

புதர்க் கருவை

புதர்க் கருவை
------------------------------
கொஞ்சம் தண்ணீரில்
கொழுத்து வளரும்
பக்கத்துக்கு நஞ்சையைப்
பாழாக்கும்   புஞ்சையாய்
தொட்டால் குத்தும்
வெட்டினால் வளரும்
கரியாக்கிப் பொசுக்கி
நசுக்கினால் போகும்
புதர்க் கருவையும்
பொருந்தா உறவும்
-----------------------------------------நாகேந்திர பாரதி

வெள்ளி, 16 ஜூலை, 2010

ஏட்டுச் சுரைக்காய்

ஏட்டுச் சுரைக்காய்
--------------------------------------
புரிந்த பாடத்தை
புரட்டிப் படிக்கும்
புரியாத பாடத்தை
உருப்போட்டு  அமுக்கும்
பரீட்சைக்கு போகையிலே
பயம் வந்து நடுக்கும்
படித்த பாடமெல்லாம்
மறந்தார்ப்  போல் இருக்கும்
கேள்வித்தாள் கிடைத்தவுடன்
கிடுகிடுன்னு கக்கும்
-----------------------------------------------நாகேந்திர பாரதி

குறள் கவிஞர் கூட்டம்

குறள் கவிஞர் கூட்டம்
--------------------------------------
ஒண்ணே முக்கால் அடிக்குள்ளே
சொன்ன கருத்தெல்லாம்
அறம் பொருள் இன்பமென்று
அடக்கி வைத்த தெல்லாம்
அப்பொழுதும் இப்பொழுதும்
எப்பொழுதும் நிற்கும்
திருக் குறள்   பூக்களையே
திரும்பவுமே விரிக்கும்
கவிஞர்கள் கூட்டத்தின்
கடைக் கோடி நீளும்
--------------------------------------------நாகேந்திர பாரதி

வியாழன், 15 ஜூலை, 2010

திண்ணை வீடு

திண்ணை வீடு
------------------------------
அந்த வீட்டுக்கு அடையாளமே அந்த திண்ணைதான். 'திண்ணை வீடு' என்றுதான் அந்த வீட்டுக்கே பேர்.
ஓரமாக உசந்த வேப்ப மரம் குளிர் காற்றை வீச , போக வரும் எல்லோரும் அந்த திண்ணையில் இளைப்பாறிச் செல்வது வழக்கம்.
கீரைக் காரியும், கருவாட்டுக் கூடைக் காரனும் அவ்வப்போது இறக்கி வைத்த காய்கறி, கவிச்சி நாத்தம் அங்கேயே ஒட்டிக் கொண்டு உட்கார்பவர்களின் பசியைக் கொஞ்சம் ஏற்றி விடும்.
மத்தியான நேரத்தில் வந்து படுக்கும் பாட்டிக்கு சுகமான தூக்கம் வரும். ராத்திரியில்    வீட்டுக்குள் கிடைக்காத தூக்கத்தை சரி செய்து கொள்வாள் அங்கே.
எப்போதாவது டவுனில் இருந்து வரும் பேரன் பேத்தியோடு விளையாட ஆடு புலி ஆட்டம் வரைந்த சாக்பீஸ் அடையாளமும் அழியாமல் இருக்கிறது.
மாசம்  ஒரு முறை சாணி போட்டு மொழுகும் போதுதான் அது போகும்  .
அந்த பச்சைச் சாணி மணம் பாட்டிக்கு ரெம்பவே பிடிக்கும்  .
பாட்டன் காலத்து பசுமை நினைவுகள் அந்த பச்சை மணத்தோடு ஒட்டி வருகின்றதோ என்னவோ.
ஒரு நாள் இப்படியே இருந்த பாட்டி இறந்து போனாள். அந்த திண்ணையில்  படுத்தபடியே.
இப்போது பெரும்பாலும் அந்த திண்ணையில் யாரும் உட்கார்வதோ படுப்பதோ  இல்லை.
'பெருசு அங்கேயே இருக்குது' என்ற ஒரு பீதியை யாரோ கிளப்பி விட்டு விட்டார்கள்.
வேப்ப மரம் மட்டும் அதன் குளிர்ந்த காற்றை திண்ணைக்கும், பாட்டிக்கும் வீசிக் கொண்டு இருக்கிறது.
---------------------------------------------------------------நாகேந்திர பாரதி

சுதந்திரக் கோலம்

சுதந்திரக் கோலம்
------------------------------------
தேசீயக் கொடி ஏற்றியதும்
தெரு முழுக்கப் பாடியதும்
பள்ளிக்  கூடம் ஓடியதும்
பளிங்கு மிட்டாய் கடித்ததும்
ஆகஸ்ட் பதினைந்தின்
அடையாளம் அப்போது
புதுப் படப் போட்டிகளும்
புண்ணாக்குப் பாட்டுக்களும்
நடிப்பவர் பேட்டிகளும்
நாள் முழுக்க இப்போது
----------------------------------------------நாகேந்திர பாரதி

புதன், 14 ஜூலை, 2010

பொதுச் சொத்து

பொதுச் சொத்து
-------------------------------
வானம் உண்டு
பூமி உண்டு
வண்ணம் உண்டு
வாசம் உண்டு
கடலும் உண்டு
ஆறும் உண்டு
காற்று உண்டு
மூச்சு உண்டு
இன்னும் என்ன
வேண்டும் இங்கே
---------------------------------------நாகேந்திர பாரதி

செவ்வாய், 13 ஜூலை, 2010

மேகக் கோபம்

மேகக் கோபம்
--------------------------
ஊத்தி  அடிச்ச மழையிலே
உடைஞ்சு போச்சு கண்மாய்
மண்ணு வெட்டிக் கொடுக்க
பொண்டு கூட்டம் சுமக்க
போட்டு அமுக்கி ஏத்தி
கரையை உசத்தி ஆச்சு
மனுசச் சண்டை பாத்து
மேகக் கூட்டம் துப்ப
ஒடிச்சுக் கிடந்த ஊரு
ஒண்ணா கூடிப் போச்சு
--------------------------------------------------------நாகேந்திர பாரதி

திங்கள், 12 ஜூலை, 2010

காதல் தீ

காதல் தீ
------------------
காதலுக்கு மறுபெயர்  
கண்ணீரா - இங்கே
காத்திருக்கும் ஏக்கத்தில்
வெந்நீரா - இது
பேதலிக்கும் மனத்தின்
பெரும் சுமையா - அதை
ஆதரிக்கத் தேடுகின்ற
அருகாமையா - அந்த
அணைப்புக்கு ஏங்குகின்ற
அடிமைத் தீயா
-------------------------------------நாகேந்திர பாரதி

அம்மா நாட்கள்

அம்மா நாட்கள்
----------------------------
முட்டிய நாளும்
பிறந்த நாளும்
குப்பாந்த நாளும்
தவழ்ந்த நாளும்
நடந்த நாளும்
ஓடிய நாளும்
பேசிய நாளும்
பிரிந்த நாளும்
அம்மாவுக்கு மட்டும்
எப்போதும் மறக்காது
--------------------------------------------நாகேந்திர பாரதி

ஞாயிறு, 11 ஜூலை, 2010

ஆசையும் பாசமும்

ஆசையும் பாசமும்
----------------------------------
ஓடிப் பிடித்ததும்
ஒளிந்து பிடித்ததும்
அடித்து அழுததும்
அன்பில் அழுததும்
படித்து முடித்ததும்
பணத்தைப் பார்த்ததும்
கணவன் மனைவி
காதல் சேர்ந்ததும்
பாசம் போனது
ஆசை ஆனது
-------------------------------------நாகேந்திர பாரதி

சனி, 10 ஜூலை, 2010

காணாமல் போன கடைகள்

காணாமல் போன கடைகள்
------------------------------------------------
அங்கங்கே டப்பாக்கள்
சாக்குப்பை திறக்கப்பட்டு
உள்ளிருந்து எடுத்திட்ட
உளுந்து, புளி, மிளகாயை
உருண்டாயும் கூம்பாயும்
உருவாக்கும் பேப்பரிலே
தொங்கும் சணல் பந்தின்
நூலுருவிக் கட்டுகின்ற
காட்சி போனதிப்போ
கண்காட்சி ஆனதிப்போ
-----------------------------------------------நாகேந்திர பாரதி

வெள்ளி, 9 ஜூலை, 2010

ஞாயிற்றுக் கிழமைகள்

ஞாயிற்றுக்   கிழமைகள்
-----------------------------------------
ஞாயிற்றுக்  கிழமைகள்
சிலருக்கு
அதிகம் உண்பதற்கும்
அதிகம் உறங்குவதற்கும்  
சிலருக்கு
சினிமா  போவதற்கும்
வெளியே  சுற்றுவதற்கும்
சிலருக்கு
கோயிலுக்கு  , சர்ச்சுக்கு
மசூதிக்கு  செல்வதற்கு  
சிலருக்கு
எப்போதும்  போலவே
நொந்து  கிடப்பதற்கு
நோயிலோ , பசியிலோ
காதலிலோ
-------------------------------------நாகேந்திர  பாரதி

வியாழன், 8 ஜூலை, 2010

வேலை வரும் வேளை

வேலை வரும் வேளை
--------------------------------------
படித்ததற்கு  வேலையென்றால்
வேலை இல்லை
வேலைக்காகப் படித்திருந்தால்
வேலை உண்டு
ஒரே வேலை என்றிருந்தால்
வேலை இல்லை
வேறு வேலை கற்றிருந்தால்
வேலை உண்டு
வேலை வரக் காத்திருந்தால்
 வேலை இல்லை
வேலை  ஒன்றைச்  செய்திருந்தால் 
வேலை உண்டு
--------------------------------------------------- நாகேந்திர பாரதி

புதன், 7 ஜூலை, 2010

கரைந்து போன வருடங்கள்

கரைந்து போன வருடங்கள்
--------------------------------------------
பத்தடிக்கு பத்தடி அறையில்
பத்துப் பேர்  படுத்திருந்த விடுதி
புதனும் சனியும் கறிச் சோறுக்கு  
புரட்டி எடுத்த பசி வயிறு
ஞாயிறு மாலை தியேட்டருக்கு
நடந்து போன ஞாபகங்கள்
பரீட்சை விடுப்பில் மட்டுமே
பாடப் புத்தகத்துக்கு  பயந்தது
கால ஓட்டத்தில் வேகமாய்
கரைந்து போன வருடங்கள்
-------------------------------------------------------நாகேந்திர பாரதி

செவ்வாய், 6 ஜூலை, 2010

பூவுக்குள் பூகம்பம்

பூவுக்குள் பூகம்பம்
-----------------------------------
'அப்பா அது வேணும்' என்று கெஞ்சும் பிள்ளையிடம்
முறைப்புப் பார்வை வைக்கும் அப்பாக்கள்
'அம்மா வலிக்குது' என்று அழும் குழந்தையின்
கையிழுத்து  விரைகின்ற அம்மாக்கள்
வீட்டுப் பாடம் எழுதாத காரணத்தைக் கேட்காமல்
விரல் நோக அடிக்கின்ற ஆசிரியர்கள்
சிறுபிள்ளை என்றெல்லாம் சிந்தித்துப் பார்க்காமல்
பெரும் வேலை வாங்குகின்ற வியாபாரிகள்
பூவுக்குள் புதைந்துள்ள பூகம்பம் வளர்ந்து
வயதாகி வெடிக்கையிலே வன்முறைகள்
------------------------------------------------------------------------------நாகேந்திர பாரதி

ஞாயிறு, 4 ஜூலை, 2010

ஆசைக்கு அன்பில்லை

ஆசைக்கு அன்பில்லை
------------------------------------
கலசத்துள் தங்கமாம்
கைப்பறிக்கக் கூட்டமாம்
கர்ப்பக் கிரகத்தில்
கடவுள் தனிமையிலாம்
கல்லுக்குள்  பிளாட்டினமாம்
கடப்பாரை மனிதர்களாம் 
காலத்தில் விதையின்றி
பூமித்தாய் கலங்குவதாம்
ஆசைக்கு அலைவதனால்
அன்புக்கு இடமில்லையாம்
-------------------------------------------------------நாகேந்திர பாரதி

சனி, 3 ஜூலை, 2010

நேரமும் பாரமும்

நேரமும் பாரமும்
----------------------------------
ஓடிக் கொண்டிருக்கும் போது
உள்ளே ஒதுங்கும்
நிற்கும்  போது
நினைவைத் தட்டும்
உட்காரும் போது
உள்ளே குத்தும்
படுக்கும் போது
பாடாய்ப் படுத்தும்
மறுபடி ஓடும்   போது
மறக்கப்  பார்க்கும் 
--------------------------------------நாகேந்திர பாரதி

வெள்ளி, 2 ஜூலை, 2010

வாசல் மணி

வாசல் மணி
-------------------------------
சாதிக்கும் மதத்துக்கும்
சண்டையெல்லாம் நின்னாச்சு
வரப்புக்கும் வாய்க்காலுக்கும்
வரிஞ்சதெல்லாம் ஓய்ஞ்சாச்சு     
தண்ணிக்கும் குடத்துக்கும்
தகராறு முடிஞ்சாச்சு 
அரிசிக்கும் பருப்புக்கும்
அலைஞ்சதெல்லாம் தொலைஞ்சாச்சு  
வாசல் மணி அடிச்சவுடன்
வந்த கனா போயாச்சு
--------------------------------------------------நாகேந்திர பாரதி

வியாழன், 1 ஜூலை, 2010

கரி அடுப்பு

கரி அடுப்பு
----------------
ஓலையும் விறகும்    வெச்சு
ஊதி ஊதி அடுப்பெரியும் 
சதுர அடுப்பு பக்கம்
சக்களத்தி வட்டடுப்பு 
இட்டிலியும் சோறும்
இங்கே வேகையிலே
பழைய கொழம்பு
பக்கத்தில் சூடாகும்
கரியும் புகையும்
கலந்தா தனி ருசி தான்
-------------------------------------------------------------நாகேந்திர பாரதி