புதன், 30 ஜூன், 2010

காதல் மேகம்

காதல் மேகம்
---------------------------
வேதனை விம்மலில்
வெடித்துச் சிதறிய
காதல் தோல்வியின்
கண்ணீர்க் கூட்டமா
வெள்ளை உடையில்
எல்லாம் மறைத்து
குளிரும் போது
கொட்டித் தீர்க்குமா
மேகக் கூட்டமா
காதல் மூட்டமா
-------------------------------------நாகேந்திர பாரதி

திங்கள், 28 ஜூன், 2010

உதிரும் மண்

உதிரும் மண்
------------------------------
மராமத்து பார்க்கும்
மண்ணு வீட்டின்
மரச் சட்டத்தில்
மறைந்து இருந்தன
காது குடையும்
கோழி இறகு
வாரு பிஞ்ச
ரப்பர் செருப்பு
பாட்டி நினைப்பை
உதிர்த்துக் கொண்டு
--------------------------------------------நாகேந்திர பாரதி

ஞாயிறு, 27 ஜூன், 2010

செம்மொழி மாநாடு

செம்மொழி மாநாடு
-------------------------------
இருபதாயிரம் ஆண்டா
எம்மொழிக்கும் தாயா
இயல் இசை நாடகமா 
இலக்கணமும் இலக்கியமுமா  
பழமையும் புதுமையுமா
பண்பாட்டின் ஆரம்பமா
பகலும் இரவுமா
பாசமும் காதலுமா
உணரவைத்த தமிழே
உன் புகழ்   ஓங்குக
-------------------------------------------நாகேந்திர பாரதி

வியாழன், 24 ஜூன், 2010

கண்மாய்க்கரைக் கதை

கண்மாய்க்கரைக்  கதை
--------------------------------------
நடுவிலே தண்ணீர் வைத்து
நாலு புறம் காத்து நிற்கும் 
சகதியாய் வழுக்கி விட்டு
சமத்தாக சிரித்து வைக்கும்
தண்ணீரும் வற்றிப் போனால்
தனியாக வாடி நிற்கும்
கல்லாய் மண்ணாய் மாறி
காலிலே குத்தி வைக்கும்
இருந்தால்தான் சிரிப்பெல்லாம்
இல்லையென்றால் வெறுப்புத்தான்
------------------------------------------------------------------நாகேந்திர பாரதி

புதன், 23 ஜூன், 2010

வானம் பார்த்த வயிறு

வானம் பார்த்த வயிறு
-------------------------------------------
விதையை முளைக்க   விடாம
காஞ்சு கெடுக்கும்
களையை எடுக்க விடாம
பேஞ்சு கெடுக்கும்
காயைப் பழுக்க விடாம
காஞ்சு கெடுக்கும்
கதிரை அறுக்க விடாம
பேஞ்சு கெடுக்கும்
வானம் பாத்த வயிற்றோடு
வறுமையிலே விவசாயி
-----------------------------------------------------நாகேந்திர பாரதி

செவ்வாய், 22 ஜூன், 2010

உயர் தனிச் செம்மொழி

உயர் தனிச் செம்மொழி
----------------------------------------------
புறத்திற்கும் அகத்திற்கும்
இலக்கியம் கண்டு
பொருளுக்கும் புதிதாக
இலக்கணம் கண்டு
புதுமைக்கும் பழமைக்கும்
பாலம் கண்டு
உயர் தனிச் செம்மொழியாய் 
உயரம் கண்டு
வாழ்கின்ற தமிழ்த்தாயே
வணக்கம் வணக்கம்
-----------------------------------------------நாகேந்திர பாரதி

நன்றிக் கடன்

நன்றிக் கடன்
-----------------------
அம்மாக்கள் வளர்த்த உடல்
அப்பாக்கள் வளர்த்த உயிர்
காதலிகள் வளர்த்த மனம்
குழந்தைகள் வளர்த்த ஆத்மா
நண்பர்கள் வளர்த்த வாழ்க்கை
நமக்கென்று என்ன இங்கே
-------------------------------------------------நாகேந்திர பாரதி

சனி, 19 ஜூன், 2010

கோயில் சுற்றுலா

கோயில் சுற்றுலா -       நன்றி - தேவி (18/08/2010)
-----------------------------------------------------------------------
ஒவ்வொரு சன்னிதியிலும்
ஒரு நிமிடம் நின்று
பழமும் காயும்
சாமிக்குப் படைத்து
விபூதி குங்குமம்
விரலாலே இட்டு
வேண்டிய தற்கெல்லாம்
விண்ணப்பம் வைத்து
கும்பிட்டு முடிந்தது
கோயில் சுற்றுலா
-----------------------------------------நாகேந்திர பாரதி

வியாழன், 17 ஜூன், 2010

திறப்பு விழா

திறப்பு விழா
-----------------------
வத்தல் நோட்டு
வளுவளு அட்டை
தொங்கு பயணம்
துடிக்கும் ரத்தம்
கதவோர பெஞ்சு
காணாம 'கட்' டு   
மரத்தடி ஓரம்
மன்மத நேரம்
காலேஜ் திறந்தாச்சு
வீட்டை மறந்தாச்சு
-------------------------------------------நாகேந்திர பாரதி

ஞாயிறு, 13 ஜூன், 2010

ஒரு நாள் பசி

ஒரு நாள் பசி
--------------------------
குழந்தைத் தொழிலாளர்
எதிர்ப்பு நாளன்று
உண்ணா விரதம்
இருந்து முடித்த
இளைஞர் கூட்டத்தின்
இரவுச் சாப்பாட்டுக்கு
இட்டிலி,  வடை
சாம்பார்ப் பொட்டலங்களைக்
கட்டிக் கொண்டிருந்தார்கள்
எட்டு வயது சிறுவர்கள்
----------------------------------------------நாகேந்திர பாரதி

சனி, 12 ஜூன், 2010

கடற் பறவை

கடற்  பறவை
-------------------------
கிழக்கில் இருந்து
மேற்கு நோக்கி
சிறகில் வேகம்
சிந்தையில் சோகம்
கறுப்புக் கடலின்
அமில எண்ணையில்
துடித்துக் கிடக்கும்
துணையைத் தேடி
தூரப் பறக்கும்
ஈரப் பறவை
--------------------------

என்னமோ மாதிரி

என்னமோ மாதிரி
--------------------------------
வெயில்லே வெளையாடி
மழையிலே நனைஞ்சு
கண்டதையும் தின்னு
காடு மேடு அலைஞ்சு
காதல்லே தோத்து
வேலை பல பாத்து
புள்ளை குட்டி பெத்து
'பெரிசு'ன்னு ஆனப்பறம்
உக்காந்து யோசிச்சா
ஒரு மாதிரிதான் இருக்கும்
----------------------------------------------------நாகேந்திர பாரதி

வியாழன், 10 ஜூன், 2010

உயிரின் விலை

உயிரின் விலை
----------------------------
இருபத்து நாலு  ஆண்டு
ஆனால் என்ன
இருபது ஆயிரம்  உயிர்
போனால் என்ன
உயிரின் விலையை
உரசிப் பார்க்கும்
சாவுக்குப் பொறுப்பை
விட்டுப் பிடிக்கும் 
சட்டம் தன
கடமையைச் செய்யும்
----------------------------------------------- நாகேந்திர பாரதி

புதன், 9 ஜூன், 2010

வலி வரும் வழி

வலி   வரும் வழி
--------------------------
வயித்து  வலி வர்றப்போ
முதுகு வலியே பரவாயில்லை
முதுகு வலி வர்றப்போ
தலை வலியே பரவாயில்லை
தலை  வலி வர்றப்போ
கால் வலியே பரவாயில்லை
கால் வலி வர்றப்போ
கை வலியே பரவாயில்லை
ஒரு வலியும் இல்லாதப்போ
ஏன் வலியே வரலை
----------------------------------------நாகேந்திர பாரதி

சனி, 5 ஜூன், 2010

சுதந்திரப் பறவைகள்

சுதந்திரப் பறவைகள்
---------------------------------------
எங்க ஊரு கண்மாயிலே
ஏகப்பட்ட பறவைக் கூட்டம்
நாடு விட்டு நாடு வந்து
நம்ம வீட்டு நண்டைத் திங்க
சிறுசும் பெருசுமா
சிவப்பும் வெளுப்புமா
கழுத்து நீண்டதும்
காலு நீண்டதும்
போட்டாக்காரன் இல்லாத
சந்தோசம் பொறுக்கலே
---------------------------------------------- நாகேந்திர பாரதி

வெள்ளி, 4 ஜூன், 2010

மண் வாசம்

மண் வாசம்
----------------------------
அம்பது வருஷத்துக்கு
முந்தின வாசம்
பூப்போல மண்ணு
காத்திலே பறக்கும்
சிறுசுக கால் எத்தி
சிரிச்சு விளையாடும்
மாட்டுக் குளம்பும்
வண்டித் தடமுமாய்
இருந்த காலம் போய்
எரியுது தார் ரோடு
-----------------------------------------நாகேந்திர பாரதி

வியாழன், 3 ஜூன், 2010

விடுமுறைக் காய்ச்சல்

விடுமுறைக்  காய்ச்சல்
---------------------------------------
வெளியூர் எல்லாம்
சுத்தி யாச்சு
வேணுங்கிற சினிமா
பாத் தாச்சு
விதவித சாப்பாடு
சாப்பிட் டாச்சு
விளையாட் டெல்லாம்
ஆடி யாச்சு
விடுமுறை முடிஞ்சுது
காய்ச்சல் ஆச்சு
------------------------------------------நாகேந்திர பாரதி

புதன், 2 ஜூன், 2010

மக்கள் கணக்கு

மக்கள் கணக்கு
----------------------------
அம்மா, அப்பா
அப்பத்தா, தாத்தா
பேத்தி, பாட்டி
பேரன் ரெண்டு
தம்பி, தங்கை
தானும் மனைவியும்
கணக்கு எல்லாம்
கரெக்டாக் கொடுத்தாச்சு
இலவசமா ஏதாச்சும்
எறக்கப்  போறாங்களா
---------------------------------------------------நாகேந்திர பாரதி