புதன், 28 ஏப்ரல், 2010

கோட்டுப் போட்ட குரங்குகள்

கோட்டுப் போட்ட குரங்குகள்
--------------------------------------------------
பரிணாம வளர்ச்சி
பாதியிலே நின்றிருந்தால்
வேட்டி  பேண்டோடு
சில குரங்குகள்
சேலை சுரிதாரில்
சில குரங்குகள்
கோட்டு சூட்டோடு
சில குரங்குகள்
வாலை மட்டும்
வளைத்து ஒளித்துக் கொண்டு
----------------------------------------------------நாகேந்திர பாரதி

திங்கள், 19 ஏப்ரல், 2010

சொப்பன வீட்டில் மகிழ்ந்து

சொப்பன வீட்டில் மகிழ்ந்து
---------------------------------------
வீடு மேலே வீடு கட்டி
வீதி எல்லாம் நிறைஞ்சாச்சு
தனி வீடு வேணும்னா
தாம்பரத்தைத் தாண்டணும்
ஆபீஸ் வரணும்னா
அம்பதே கிலோ மீட்டர்
ஆஸ்பத்திரி பள்ளிக்கூடம்
அடுத்த மாவட்டம்
சொந்த ஊருக் காரை வீடு
சொப்பனத்தில் சொக்குது
------------------------------------------------நாகேந்திர பாரதி

வெள்ளி, 16 ஏப்ரல், 2010

மறக்க முடியுமா

மறக்க முடியுமா
----------------------------------
பார்த்த முகங்கள்
மறந்து போகுது
கேட்ட குரல்கள்
மறந்து போகுது
வாழ்ந்த ஊர்கள்
மறந்து போகுது
வளர்ந்த இடங்கள்
மறந்து போகுது
தொலைக்காட்சி  தொடர் மட்டும்
மறக்கலே கிழவிக்கு
------------------------------------------------நாகேந்திர பாரதி

கல்யாண மண்டபம்

கல்யாண மண்டபம்
------------------------------------------
மாப்பிள்ளை வீட்டுக்
கல்யாண அழைப்பு
பொண்ணு சொந்தமாய்ப்
போய் இருந்தாங்க
அலங்காரம், கூட்டம்
அட்ட காசம்
விருந்துச்   சாப்பாடு
வெகு ஜோர்
மண்டபம் மட்டும்தான்
மாறிப் போயிட்டாங்க 
----------------------------------------நாகேந்திர பாரதி

வியாழன், 15 ஏப்ரல், 2010

பாவ அழுக்கு

பாவ அழுக்கு
------------------------
ஒரு வருஷ விரதம்
ஒரு வேளைச் சாப்பாடு
செருப்பில்லாக் கால்கள்
ஜெபம் செய்யும் வாய்
நாலு முழ வேஷ்டி
நடந்தே எங்கேயும் 
கடலில் சென்று குளிக்க
காணாமல் போனது என்ன
பாவம் போனதோ என்னவோ
அழுக்கு போனது உண்மை
---------------------------------------------------------நாகேந்திர பாரதி

புதன், 14 ஏப்ரல், 2010

ஓட்டல் சாப்பாடு

ஓட்டல் சாப்பாடு
------------------------------
சோடா உப்பு போட்டதாலே
சோறு ரெம்ப இறங்கலே
காரம் அதிகம் ஆனதாலே
காய்கறிகள் முடியலே
மோரு எல்லாம் தண்ணியாகி
நீரு சாதம் குடிக்கலே
அவ்வளவு  பேர் சாப்பிட்டும்
அளவெதுவும் குறையலே
இருநூறு  ரூபாய்க்கு
எம்புட்டும் சாப்பிடலாமாம்
------------------------------------------நாகேந்திர பாரதி

செவ்வாய், 13 ஏப்ரல், 2010

விடுதியும் வீடும்

விடுதியும் வீடும்
----------------------------------
பத்துக்குப் பத்தில்
படுக்கை ஐவருக்கு
அலமாரிப் பொந்துகளும்
ஐந்தாகப் பங்கீடு
மொத்த விடுதிக்கும்
மூன்றே குளியலறை
பக்கத்துக் காடும்
கண்மாயும் கழிவறை
விடுதி விடுமுறையில் 
வீடு அரண்மனை
--------------------------------நாகேந்திர பாரதி

ஞாயிறு, 11 ஏப்ரல், 2010

போயே போச்சு

போயே  போச்சு
--------------------------
ஈயம் பித்தாளைக்கு
பேரீச்சம் பழம்
நெல்லைப் போட்டு
கீரைக் கட்டு
திண்ணை மேலே
தாயக் கட்டம்
சாயந்தரம் வரும்
மீன் சைக்கிள்
பெருசுக ளோடே
போயே போச்சு
--------------------------------------நாகேந்திர பாரதி

சொந்தக் காலம்

சொந்தக் காலம்
-------------------------------
ஒரு  துளி மழைக்கு
ஒதுங்குவோம் தெரு ஓரம்
மழைக்காலம் ரெம்ப மோசம்
ஒரு துளி வேர்வைக்கு
உஸ் என்று அயர்வோம்
வெயில் காலம் ரெம்ப மோசம்
மார்கழி காலையில்
போர்வையில் முடங்குவோம்
குளிர் காலம் ரெம்ப மோசம்
எந்தக் காலம் தான்
சொந்தக் காலம்
---------------------------------------------நாகேந்திர பாரதி

சனி, 10 ஏப்ரல், 2010

முற்பகல் செய்யின் ....

முற்பகல் செய்யின் ....
-------------------------------------
'செங்கல்பட்டு பக்கத்துலே
பங்களா வீடு வருது
ஆபீசும் அங்கே போறோம்
அப்பப்ப சென்னை வாறோம் '
முடிவெடுத்த பையனிடம்
அடிமனதைச் சொல்லவில்லை
இறந்து போன அப்பாவின்
மறந்து போன வாக்கியங்கள்
'எதிரெதிரே பாத்துக்கலாம்
மதுரை விட்டுப் போகணுமா'
----------------------------------------நாகேந்திர பாரதி

வெள்ளி, 9 ஏப்ரல், 2010

புழுதிப் பயணம்

புழுதிப்  பயணம்
-----------------------------
கால் தடத்தில் உருவான
ஒத்தையடிப் பாதையின்
ஓரத்தில் கருவ மரங்கள்
கான்கிரீட்டில் உருவான
மெட்ரோ ரோட்டோரம்
மெர்குரி கம்பங்கள்
கார் ஹாரனிலும்
மாட்டு வண்டியின்
மணியோசை கேட்கிறது
மறக்க முடியாத
மண் புழுதிப்   பயணங்கள்
---------------------------------------------நாகேந்திர பாரதி
ஆரம்பமும் முடிவும்
-----------------------------------------
ஆரம்ப காலத்தில்
அழுகையும் சிரிப்பும்தான்
அறிந்த தெல்லாமே
வலியும் அமைதியும்தான்
போகப் போகத்தான்
புதிது புதிதாக
புரியாத தெல்லாமே
புரிந்த பின்புதான்
புரிந்த தெல்லாமே
புரியாமல் போனது
----------------------------------------நாகேந்திர பாரதி

வியாழன், 8 ஏப்ரல், 2010

மரமும் மனிதனும்

மரமும் மனிதனும்
---------------------------------
மரமாக நிற்பதில்
மகிழ்ச்சி இருக்கிறது
பூத்துக் கொண்டு
காய்த்துக் கொண்டு
பழுத்துக் கொண்டு
குலுங்கிக் கொண்டு
ஒவ்வொரு பருவத்திலும்
ஒவ்வொரு விதமாக  
கோடரி விழாதவரை
கொம்பு சாயாதவரை
------------------------------------------நாகேந்திர பாரதி

புதன், 7 ஏப்ரல், 2010

உலக சுகாதாரம்

உலக சுகாதாரம்
----------------------------
சாக்கடையில் குளித்து
சொறி சிரங்கு
வேக்காட்டில் கிடந்து
காய்ச்சல் சூடு
பாடாவதி உணவால்
வாந்தி பேதி
காலாவதி மருந்தால்
காலன் வீடு
உலக சுகாதாரம்
ஓங்கி வளர்க
---------------------------------நாகேந்திர பாரதி

திங்கள், 5 ஏப்ரல், 2010

நீர்த்துப் போன நீர்

நீர்த்துப் போன நீர்
---------------------------------
மழையில் இருந்து
மணமாய், மலர்ச்சியாய்
போகும் வழியில்
புண்பட்டுப் போய்
சாக்கடைக் கழிவு
சாவின் அழிவு
கறுத்துப் போய்
கலங்கிப் போய்
கடலை நோக்கி
முடிவை நோக்கி
------------------------------------------நாகேந்திர பாரதி

சனி, 3 ஏப்ரல், 2010

சுற்றுப் பிரகாரம்

சுற்றுப்  பிரகாரம்
---------------------------------
சிற்பிக்குப் பிடித்துச்
செதுக்கிய சிலைகள்
இரண்டு தலைகள்
ஒரு உடம்பு
வாய்க்குள் உருளும்
வட்டக் கல்
அரிசிக் கல்லில்
அனுமான் உருவம்
பிரகார மூலையில்
பேசாமல் இருக்கும்
------------------------------------------நாகேந்திர பாரதி

வெள்ளி, 2 ஏப்ரல், 2010

அப்பத்தா

அப்பத்தா
-------------------
'பொய்யாட்டம் ஆடி
பசுவெல்லாம் அள்ளிட்டே'
'பொன்னியின் செல்வனை
வாசிச்சுக் காமிப்பா'
'துண்டைப் போடுப்பா  
நானே துவைச்சுறேன்'
'திரும்பி வர்றப்போ
இருப்பேனோ, மாட்டேனோ'
எரித்த இடத்தில்
எங்கேயோ அப்பத்தா
-----------------------------------------நாகேந்திர பாரதி

அப்பா

அப்பா
---------------
'கம்பரிச்ச நுங்கை
இன்னும் ரெண்டு குடி'
'செகண்ட் ஷோ சினிமா
சேந்து போகலாமா'
'உன் பழைய சட்டைய
நான் போட்டுக்கவா'
'சனியும் புதனும்
எண்ணை தேய்த்துக் குளி'
வார்த்தையில்லா  உதட்டின் மேல்
வாய்க்கரிசி
--------------------------------------------நாகேந்திர பாரதி

'

வியாழன், 1 ஏப்ரல், 2010

முட்டாள் தினங்கள்

முட்டாள் தினங்கள்
--------------------------------
புளியங்  கொட்டை சூடு
புற முதுகு இங்க்      
வலிய வந்த வாழ்த்து
வருந்த வைத்த விபத்து
ஒரு நாள் முட்டாளாகி
வழிந்தது அப்போது
போதையில் புதைந்து
புகையினில் எரிந்து
எப்போதும் முட்டாளாய்
இருப்பது  இப்போது
-------------------------------------------நாகேந்திர பாரதி