புதன், 31 மார்ச், 2010

தின்பண்ட காலம்

தின்பண்ட காலம்
----------------------------
நுங்கும் கிழங்கும்
மொங்கிய காலம்
முறுக்கும் சீடையும்
நொறுக்கிய காலம்
பிஸ்கட்,  வடையைப்
பிய்த்த  காலம்
ஐஸ்கிரீம், சாக்லேட்
உருகிய காலம்
மருந்து,  மாத்திரை
ஆரம்ப காலம்
---------------------------------------நாகேந்திர பாரதி

இளமை நடிப்பு

இளமை நடிப்பு
-----------------------------
பார்க்கா விட்டால்
இமைகள் இடிக்கும்
கேட்கா விட்டால்
மடல்கள் மடிக்கும்
பேசா விட்டால்
இதழ்கள் துடிக்கும்
தொடா விட்டால்
விரல்கள் வெடிக்கும்
எத்தனை நாட்கள்
இளமை நடிக்கும்
--------------------------------------------நாகேந்திர பாரதி

செவ்வாய், 30 மார்ச், 2010

சொந்த பந்தம்

சொந்த பந்தம்
------------------------
பையன் அமெரிக்காவில்
ஐடியில் இருக்கானாம்
பொண்ணு அடையாறில்
டான்ஸ் போறாளாம்
புருஷன் அகாடமி
கச்சேரி செய்றாராம்
தானோ டிவியில்
சமையல் சொல்றாளாம்
சொந்தங்கள் கிராமத்தில்
சோத்துக்கு கஷ்டமாம்
---------------------------------------நாகேந்திர பாரதி

திங்கள், 29 மார்ச், 2010

இளமையும் முதுமையும்

இளமையும்  முதுமையும்
------------------------------------------
ஏதாவது ஒரு வேலை
இருந்தாலே இளமைதான்
சும்மாவே இருந்து
சுகம் கண்டால் முதுமைதான்
கூட்டமாய் இருந்து
குதூகலித்தால் இளமைதான்
தனிமையில் இருந்து
தவித்தாலோ முதுமைதான்
இளமையும் முதுமையும்
இருக்கின்ற இருப்பிலே  
------------------------------------------நாகேந்திர பாரதி

ஞாயிறு, 28 மார்ச், 2010

முப்பத்து மூன்று முடிச்சு

முப்பத்து மூன்று  முடிச்சு
-------------------------------------
கொளுத்தும் வெயிலில்
ஸ்கூட்டரில் அலைந்து
கடன் வசூல் செய்து
கம்பெனியில்   கட்டி
கமிஷன் பணத்தில்
காய்கறி வாங்கி
வீட்டுக்குள் நுழைய
வெறுப்பு நெருப்பு
'எங்கேடி சுத்தினே
ஏண்டி லேட்டு'
-------------------------------நாகேந்திர பாரதி

வியாழன், 25 மார்ச், 2010

சிட்டுக் குருவி

சிட்டுக் குருவி
--------------------------------
கூரை வீட்டுக் குள்ளே
கூடு கட்டும்
கோரைப்பாய் நெல்லைக்
கொத்தி ஓடும்
வீடு விட்டு வீடு
எட்டிப் பார்க்கும்
விட்டெறிந்த குழம்பைத்
தொட்டுப் போகும்
நாடு விட்டுப் போன
சிட்டுக் குருவி
--------------------------------------------நாகேந்திர பாரதி

உறவுகளும் உணர்வுகளும்

உறவுகளும் உணர்வுகளும்
-----------------------------------------
ஒட்டிப் பிறந்த
உறவுகள் சில
கட்டிக் கலந்த
உறவுகள் சில
எட்டிப் பிரிந்த
உறவுகள் சில
துட்டில் தொடர்ந்த
உறவுகள் சில
உறவுகள் சில
உணர்வுகள் பல
----------------------------நாகேந்திர பாரதி

புதன், 24 மார்ச், 2010

வெறும் கால்கள்

வெறும் கால்கள்
---------------------------------
நடை வண்டி ஓட்டி
சைக்கிளை மிதித்து
பஸ்ஸில் ஏறி
ரெயிலில் தொங்கி
பைக்கை உதைத்து
காரில் அமர்ந்து
விமானம் பறந்து
வேகம் கூடினும்  
வீட்டுக் குள்ளே
வெறும் கால்கள்தான்
-----------------------------------------------நாகேந்திர பாரதி

செவ்வாய், 23 மார்ச், 2010

காதல் வேண்டும்

காதல் வேண்டும்
-------------------------------
பார்த்துக் கொண்டே
இருக்க வேண்டும்
பழகிக் கொண்டே
இருக்க வேண்டும்
பேசிக்  கொண்டே
இருக்க வேண்டும்
நினைத்துக் கொண்டே
இருக்க வேண்டும்
காதல் ஒன்றே
உலகில் வேண்டும்
-----------------------------------------நாகேந்திர பாரதி

ஞாயிறு, 21 மார்ச், 2010

முதுமலைப் பயணம்

முதுமலைப் பயணம்
--------------------------------------
முதுமலைக் காட்டுக்குள்
மூடிய வேனுக்குள்
பாதுகாப்பாய் பயணம்
யானைகளின் கால் தடம்
புலிகளின் உறுமலென்று
பூச்சாண்டி காட்டியவர்
காட்டியது என்னவோ
இரண்டு மயில்கள்
மூன்று முயல்கள்  
நான்கு நாய்கள்
--------------------------------------- நாகேந்திர பாரதி

சனி, 20 மார்ச், 2010

பெரிய விஷயங்கள்

பெரிய விஷயங்கள்  
-------------------------------
ஓந்தியை        அடித்தால்
ஒரு ரூபாய் கிடைக்கும்
தட்டாம் பூச்சியை
சிறுகல் தூக்க வை
மயில் இறகு
குட்டி போடும்
காகிதக் கப்பல்
மழையில்  ஓடும்
பிள்ளைப் பிராய
பெரிய விஷயங்கள்
----------------------------------நாகேந்திர பாரதி

வெள்ளி, 19 மார்ச், 2010

வீட்டைத் தாண்டி வருவாயா

வீட்டைத் தாண்டி வருவாயா
============================
பார்வை எல்லாம்
காதல் பார்வை
பேச்சு எல்லாம்
காதல் பேச்சு
விரல்கள் எல்லாம்
காதல் விரல்கள்
விண்ணைத் தாண்டி
வருவது இருக்கட்டும்
வீட்டைத் தாண்டி
வருவாயா நீ
=============================நாகேந்திர பாரதி

வியாழன், 18 மார்ச், 2010

பள்ளிக்கூட நினைப்பு

பள்ளிக்கூட  நினைப்பு
--------------------------------------
காலையிலே எழுந்தாலும் 
பள்ளிக்கூட நினைப்புதான்
ராத்திரியில் படுத்தாலும்
பள்ளிக்கூட நினைப்புதான்
ஞாயிற்றுக் கிழமையிலும்
பள்ளிக்கூட நினைப்புதான்
விடுமுறை விட்டாலும்
பள்ளிக்கூட நினைப்புதான்
மத்தியான மணிக்காக
மதிய உணவுக்காக
--------------------------------------------நாகேந்திர பாரதி

செவ்வாய், 16 மார்ச், 2010

பள்ளி விளையாட்டு

பள்ளி விளையாட்டு
--------------------------------------
கொடுக்காப் புளி மரத்தடியில்
கோலிக் குண்டு விளையாட்டு
உச்சி வெயில் உறைக்காத  
கிட்டிப்  புள் விளையாட்டு
கோயில் வாகன இருட்டுக்குள்
ஒளிந்து கொண்டு விளையாட்டு
பள்ளிக்கூட மைதானத்தில்
ஓடிப் பிடித்து விளையாட்டு
விளையாட்டு இடைவெளியில்
படித்ததாகவும் ஞாபகம்
----------------------------------------------நாகேந்திர பாரதி

வியாழன், 11 மார்ச், 2010

டூரிங் டாக்கீஸ்

டூரிங் டாக்கீஸ்
----------------------------------
பழக்கமான கடைசி ரெகார்ட்
சினிமா போடப் போறாங்க
மண்ணைக் குவித்து உட்கார
விசிலும் படமும் ஆரம்பம்
திறந்த வெளிக் காற்றோடு
சுருட்டு வாசம் கூடவே
இரண்டு தடவை இடைவேளை
முறுக்கு கடலை மிட்டாய்
வணக்கம் பாத்து வெளியே வர
செகண்ட் ஷோவுக்கு பெரிய கியூ
--------------------------------------------------------------நாகேந்திர பாரதி

புதன், 10 மார்ச், 2010

சினிமா மொழி

சினிமா மொழி
-----------------------------
'மேயாத மான்- புள்ளி
மேவாத மான்'
'பொறுத்தது போதும்
பொங்கி எழு மனோகரா'
'ஆத்தா ஆடு வளத்தா
கோழி வளத்தா'
'யாரு, சூர்யா
ஏன், தேவா'
'ம்ம் , ம்ம்
ம்ம், ம்ம் '
---------------------------------நாகேந்திர பாரதி

செவ்வாய், 9 மார்ச், 2010

சிலிக்கான் வில்லை

சிலிக்கான் வில்லை
------------------------------------
ஆமாம் இல்லை
என்றொரு எல்லை
அதற்குள் இயங்கும்
சிலிக்கான் வில்லை
வல்லினம் மெல்லினம்
இடையில் கலந்து
வானம் வழியே
வழிந்து இறங்கும்
கணிணிக் கின்று
உலகம் ஒன்று
----------------------------------------நாகேந்திர பாரதி

உனக்குள் கவிதை

உனக்குள் கவிதை
----------------------------------
அந்தக் கால
வள்ளுவனைப் படி
இந்தக் கால
வைரமுத்துவைப் படி
வாழ்ந்த கால
வேகத்தை நினை
வீழ்ந்த கால
சோகத்தை நினை
உனக்குள் கவிதை
ஊன்றும்  விதை
----------------------------------- நாகேந்திர பாரதி

தெப்பக்குள நீச்சல்

தெப்பக்குள நீச்சல்
------------------------------------
தட்டவோட்டு மேலிருந்து
தொபுகடீர் தாவல்
அடிமண் தொட்டு
நொடியினில் மேலே
மூக்கிலும் வாயிலும்
சகதியின் வாசம்
சுருக்   கென்று இடுப்பினில்
கடித்திடும் மீன்கள்
தெப்பக்குள  நீச்சல்
தெனாவட்டு பாய்ச்சல்
----------------------------------------------------------நாகேந்திர பாரதி

திங்கள், 8 மார்ச், 2010

தலைமுறை ஓட்டம்

தலைமுறை ஓட்டம்
-------------------------------------
வெந்த சோறு சாப்பிட்டு
வெத்தலை  பாக்கு போட்டுட்டு
வெளித் திண்ணையிலே சாஞ்சிட்டு
வெட்டி அரட்டை அடிச்சிட்டு
சாயங்காலம் ஆயிட்டா 
சாவடிப் பக்கம் போயிட்டு
ராத்திரிக்குத் தூங்கிட்டு
காலையிலே எழுந்திட்டு
உப்புச் சப்பே இல்லாமே
ஒரு தலைமுறை ஓடிச்சு
-------------------------------------------------நாகேந்திர பாரதி

துயரத்தின் உயரம்

துயரத்தின் உயரம்
-------------------------------
சிலர்
வீட்டை விட்டு போகிறார்கள்
சிலர்
ஊரை விட்டு போகிறார்கள்
சிலர்
நாட்டை விட்டு போகிறார்கள்
ஏன்
போகிறார்கள் இவர்கள்
எங்கே
போகிறார்கள் இவர்கள்
---------------------------------------------------நாகேந்திர பாரதி

சில்லுக் கருப்பட்டி

சில்லுக் கருப்பட்டி
---------------------------------
கண்மாய்க் கரையிலே
பனையோலைக் கிடுக்கு
பதிநி காய்ச்சும்
இனிப்புச்  சூடு
மஞ்சளாய்ப் பழுப்பாய் 
மாறும் நிறங்கள்
உருண்டு இளகி
உறையும் பதிநி
உதிரும்  சில்லுக்
கருப்பட்டி ஸ்ஸ்ஸ்ஸ்
--------------------------------------------நாகேந்திர பாரதி

ஞாயிறு, 7 மார்ச், 2010

முதுமை மகளிர்

முதுமை மகளிர்
--------------------------
தொப்புளில் தொடங்கி
தொட்டிலில் உறங்கி
பாலில் வளர்ந்து
படித்து மணந்து
தாரம் உறவில்
பேரன் தந்து
வாரம் ஒருமுறை
வந்து போகும்
முகத்தைத் தேடும்
முதியோர் இல்லம்
-----------------------------------------நாகேந்திர பாரதி

சனி, 6 மார்ச், 2010

பரீட்சை சபதம்

பரீட்சை சபதம்
--------------------------
புரிந்த பாடத்தைப்
புரட்டுவதில் வேகம்
புரியாத பாடத்தை
உருப்போட்டே  ஆகும்
வாத்தியார் சொன்னதைக்
கேட்காத சோகம்
பரீட்சை   நேரத்தில்
பழகும் சபதம்
அன்னன்னக்கி பாடத்தை
அன்னன்னக்கே படிக்கணும்
-----------------------------------------நாகேந்திர பாரதி

வீடும் வெளியும்

வீடும் வெளியும்
-----------------------------
மீன்கள் கூட்டம்
கண்மாய் நீரில்
கோழிக் கூட்டம்
குப்பை மேட்டில்
முயல்கள் கூட்டம்
புஞ்சைப் பரப்பில்
ஆட்டுக் கூட்டம்
வயல் வெளியில்
விருந்தாளி வந்தால்
வேகும் வீட்டில்
----------------------------------நாகேந்திர பாரதி

வியாழன், 4 மார்ச், 2010

கூரை வீடு

கூரை வீடு
-------------------
கூரை வீட்டுக் குளிர்ச்சி
நாட்டு ஓட்டில் இல்லை
நாட்டு ஓட்டுக் குளிர்ச்சி
சீமை ஓட்டில் இல்லை
சீமை ஓட்டுக் குளிர்ச்சி
சிமெண்டு வீட்டில் இல்லை
குளிர்ச்சியோடு சேர்த்து
குறைந்து போனது
குடும்பப் பாசமும்
கூட்டுறவு நேசமும்
------------------------------------------நாகேந்திர பாரதி

செவ்வாய், 2 மார்ச், 2010

பெண் படும் பாடு

பெண் படும் பாடு
-------------------------------
அப்பனிடம் அடி வாங்கி
அழுத காலம்
அண்ணனிடம் திட்டு வாங்கி
திகைத்த காலம்
கணவனவன் கோபத்திற்கு
குனிந்த காலம்
பிள்ளையவன் பேச்சுக்கள்
பொறுக்கும் காலம்
பெண் பாடு படுகின்ற
ஆண்கள் காலம்
-------------------------------------நாகேந்திர பாரதி