ஞாயிறு, 28 பிப்ரவரி, 2010

சாப்பாடு தயார்

சாப்பாடு தயார்
--------------------------
அரிசியும் பருப்பும்
அடிப்படைத் தேவைகள்
வெங்காயம், தக்காளி
வேண்டிய மட்டும்
எண்ணை, மிளகாய்
ஏதோ ஒரு காய்
சாதம், சாம்பார்
சாப்பாடு தயார்
பசியில் துடிப்போர்க்கு
பரிமாறி மகிழ்வோம்
--------------------------------------------நாகேந்திர பாரதி

விடாது காதல்

விடாது காதல்
----------------------
பிரிந்தும் கூட- அவளை
வெறுக்கக்   கூடாது
மறந்தும் கூட - அவளை
நினைக்கக் கூடாது
உறங்கும் போதும் - கனவில்
வரவே கூடாது
குடிக்கும் போதும் - பெயர்
குழறக் கூடாது
இறக்கும் போதும் - சோகம்
இருக்கக் கூடாது
-----------------------------------நாகேந்திர பாரதி

வயத்துப் பொழைப்பு

வயத்துப் பொழைப்பு
------------------------------------
கம்மாய்க் கரையிலே
கால்  கொப்புளிக்கும்
வயலுப் பரப்பிலே
வலிக்கு ஒத்தடம்
வேப்ப மரத்தடி 
வெக்கைக்கு சுகம்
மானம் கருக்குமா
மழை சுரக்குமா
வானம் பாத்தபடி
வயத்துப் பொழைப்பு
------------------------------------------நாகேந்திர பாரதி

போகிறது பொழுது

போகிறது பொழுது
----------------------------------------
எல்லோருமாய்ச் சேர்ந்து
பள்ளிக்கூடம் போனது
சினிமாவுக்குப் போனது
ஹோட்டலுக்குப் போனது
ரெயிலில் போனது
பஸ்ஸில் போனது
இப்போது-
ஒருவர் ஒருவராய்
எங்கேயோ போன பின்பு
அவனும் அவளுமாய்ப்
போகிறது பொழுது
-----------------------------------நாகேந்திர பாரதி

வியாழன், 25 பிப்ரவரி, 2010

வாக்கிங் வகைகள்

வாக்கிங்  வகைகள்
--------------------------------
குதித்துக் குதித்தாடி
குதூகலமாய் போகிறவர்
சொங்கித் தனமாக
சொக்கிப் போகிறவர்
ஏதோ சிந்தனையில்
எரிச்சலாய்ப் போகிறவர்
புரியாத பாட்டுக்குப்
புன்னகைத்துப் போகிறவர்
வாக்கிங் போறவரில்
வகைகள் பல உண்டு
-------------------------------------நாகேந்திர பாரதி

புதன், 24 பிப்ரவரி, 2010

எல்லாம் இன்ப மயம்

எல்லாம் இன்ப மயம்
---------------------------------
வறுமை இன்பம்
வாழ்க்கை புரியும்
நோயும் இன்பம்
ஓய்வு தெரியும்
தோல்வி இன்பம்
முயற்சி அறியும்
தனிமை இன்பம்
இறையும் விரியும்
முதுமை இன்பம்
முடிவு சுவர்க்கம்
-----------------------------------நாகேந்திர பாரதி 

செவ்வாய், 23 பிப்ரவரி, 2010

இளமையும் முதுமையும்

இளமையும்  முதுமையும்
-----------------------------------------------
போதையில் ஊறி
பாதையில் மாறி
காமத்தில் கிடந்து
சாமத்தில் நடந்து
உடலும் கரைந்து
உள்ளம் மறைந்து
இளமை கலைந்து
இனிமை குலைந்து
முதுமை வந்தது
மரணம் தந்தது
-------------------------------------------------நாகேந்திர பாரதி

திங்கள், 22 பிப்ரவரி, 2010

கிராமத் திருவிழா

கிராமத் திருவிழா
----------------------------------
சிவப்பு காராச் சேவு
சீனிச் சேவு குவியல்
சவ்வு மிட்டாய்க் கடிகாரம்
ஜாக்கெட் பீஸ் கடைகள்
தும்பிக்கை மணியோசை
தூசி பறக்கும் பூமி
எழுந்தருளும் அம்மன் சாமி
ஏகப்பட்ட ஹரிக்கேன்
கூட்டத்தில் கரைகின்ற
குதூகலத் திருவிழா
--------------------------------------------------நாகேந்திர பாரதி

ஞாயிறு, 21 பிப்ரவரி, 2010

வீட்டுப் பாடம்

வீட்டுப் பாடம்
-------------------------
பித்தளைத் தூக்கில்
பழைய சோறு, ஊறுகாய்
செருப்பில்லாக்  கால் நடை
பக்கத்தூரு பள்ளிக்கூடம்
படிப்பு, சாப்பாடு
விளையாட்டு, சண்டை
காலி தூக்கோடு
மறுபடி புறப்பாடு
வீட்டுப் பாடம் எழுத
விட்டுப் போகும் தினசரி
----------------------------------நாகேந்திர பாரதி

சனி, 20 பிப்ரவரி, 2010

தபால் தம்பி

தபால் தம்பி
---------------------------
தபால் தம்பியின்
சைக்கிள் சத்தம்
சின்னக் கார்டில்
வெளியூர் விரியும்
கையெழுத்துக் குள்ளே
முகமே தெரியும் 
விசாரிப்பு அன்பில்
வேதனை தூங்கும்
மறுநாளும் மணி ஒலிக்கு
மனது ஏங்கும்
'செல்'லு செல்லாத
சில கிராமங்கள்
-------------------------------------------------நாகேந்திர பாரதி

வெள்ளி, 19 பிப்ரவரி, 2010

சைக்கிள் பயணம்

சைக்கிள் பயணம்
---------------------------------------
முன்னாலே கால் தூக்கி
பின்னாலே கால் தூக்கி
எப்படிப் போட்டாலும்
முட்டுக்கால் காயம்
செயின் அவிழ்வதும்
டயர் பஞ்சரும்
ஆரம்ப காலத்து
அநியாய இம்சைகள்
சைக்கிள் பழகி
சாகசப் பயணம்
--------------------------------------------------நாகேந்திர பாரதி

வியாழன், 18 பிப்ரவரி, 2010

ஒரு தலைக் காதல்

ஒரு தலைக் காதல்
--------------------------------------
ஒரு தலைக் காதலில்
உள்ளமே முக்கியம்
உருவத்தை நினைத்தால்
உண்டாகும் காமமே
அவளை நினைத்து
அழுவது அன்பு
அவளுக் காக
வாழ்வது பண்பு
ஒருதலைக் காதலே
உச்சக் காதல்
-----------------------------நாகேந்திர பாரதி

புதன், 17 பிப்ரவரி, 2010

தாம்பரம் டு பீச்

தாம்பரம் டு பீச்
----------------------------
தாம்பரத்தில் சீட்டுப் போட்டு
பல்லாவரத்தில் கூட்டுச் சேர்த்து
பழவந்தாங்கலில் ஆரம்பிக்கும் பாட்டு
பாதி வழியில் நிற்பதே  இல்லை
வாயேதான் வாத்தியக் கருவி
விரலேதான் மத்தளச் சத்தம்
பெண் பாட்டுக்கும் ஒருவர்   உண்டு
பின் பாட்டுக்கும் ஒருவர் உண்டு
ஓசியிலே கச்சேரி கேட்க
ஒரு நொடியில் பீச்சு வரும்
--------------------------------------------------------நாகேந்திர பாரதி

செவ்வாய், 16 பிப்ரவரி, 2010

காலாகாலக் காய்ச்சல்

காலாகாலக் காய்ச்சல்
----------------------------------------
ஓமியோபதி உருண்டைகளை
ஒரு வாரம் சாப்பிட்டு
ஓய்வெடுத்து இருந்திட்டு
ஓமத்தண்ணி குளிச்சிட்டு
காணாமல் போன
காய்ச்சல் அந்தக் காலம்
மாத்திரைகள் போட்டு
மறுநாளே அமுக்கிட்டு
மக்கா நாள் தலை தூக்கும்
காய்ச்சல் இந்தக் காலம்
--------------------------------------------நாகேந்திர பாரதி

திங்கள், 15 பிப்ரவரி, 2010

குழந்தைக் கனவுகள்

குழந்தைக் கனவுகள்
-----------------------------------
ஓவியம் வரையும்
ஓடும், ஆடும்
பொம்மைக் கார் ஓட்டும்
புதிதாகப் பாடும்
குழந்தைக் கனவுகள்
கோடி கோடி
பெரிதாய் வளரும்
பெற்றோர் விருப்பம்
முழுதாய் முடிக்க
முறியும் கனவு
------------------------------------நாகேந்திர பாரதி

ஞாயிறு, 14 பிப்ரவரி, 2010

பூக்களைப் பறிக்காதீர்கள்

பூக்களைப்  பறிக்காதீர்கள்
-----------------------------------------
அது பூக்களின் உலகம்
புன்னகை உலகம்
அங்கு வாசம் உண்டு
வண்ணம் உண்டு
செடியில் சிரிக்கும் போது தான்
அவை உயிர்ப் பூக்கள்
பிரிக்கும் போது
அந்த அழுகை கேட்கவில்லையா
அவை தானாக விழுந்து
தாவரமாய் மாறட்டுமே
தயவு செய்து
பூக்களைப் பறிக்காதீர்கள்
-----------------------------------------நாகேந்திர பாரதி

சனி, 13 பிப்ரவரி, 2010

காதலர் தினம்

காதலர் தினம்
-----------------------------
ஒரு நாள் மட்டுமே
காதலர் தினம் என்றால்
மற்ற நாட்கள் எல்லாம்
மோதலர் தினங்களா
பார்த்து கேட்டு
ரசித்து பழகி
காதலிக்கும் நாளெல்லாம்
காதலர் தினமே
எல்லா நாட்களும்
இன்பக் காதலே
-------------------------------------------நாகேந்திர பாரதி

வெள்ளி, 12 பிப்ரவரி, 2010

சிக்குன் குனியா நோய்

சிக்குன்  குனியா நோய்
----------------------------------------
சந்திரனுக்கும் போறமாம்
சாட்டிலைட் அனுப்பறமாம்  
வல்லரசாய் ஆறமாம்
வாய் கிழியப் பேசறோம்
சிக்குன் குனியாவைக்
சீக்கிரமாய்க் குனிய வைக்க
மருந்தைக் காணோமாம்
மாசத்துக்கும் உடல்வலியாம்
என்னமோ விஞ்ஞானம்    
என்னமோ   வெங்காயம்
--------------------------------------------நாகேந்திர பாரதி

வியாழன், 11 பிப்ரவரி, 2010

மண்ணெண்ணெய் அடுப்பு

மண்ணெண்ணெய் அடுப்பு
--------------------------------------------
மக்கிப் போன அரிசியை
மண் பானையிலே போட்டு
கம்மாய்த் தண்ணியிலே
காய்ச்சி வடிக்க
மண்ணெண்ணெய் அடுப்போ
வெறகு அடுப்போ
மண்ணெண்ணெய் வெலையும்
மரத்திலே ஏறினா
காட்டுக்  கருவ  வெட்டி
காஞ்சு கெடப்போம்
---------------------------------------------நாகேந்திர பாரதி

புதன், 10 பிப்ரவரி, 2010

மரபணு கத்தரிக்காய்

மரபணு  கத்தரிக்காய்
-----------------------------------------
விளைச்சலுக்கும் வியாபாரத்துக்கும்
விஞ்ஞான விளையாட்டுக்கள்
அந்தக் கால கத்தரிக்காய்
அம்புட்டு ருசி
எண்ணைக் கத்தரிக்காய்
எச்சில் ஊறும்
பொரிச்ச கத்தரிக்காய்
போறதே தெரியாது
புதுசாம் பெரிசாம்
பொல்லாத கத்தரிக்காய்
----------------------------------------நாகேந்திர பாரதி

செவ்வாய், 9 பிப்ரவரி, 2010

சவடால் பேர்வழிகள்

சவடால் பேர்வழிகள்
------------------------------------
மழைக் காலத்தில் மழை பெய்தால்
இவர்கள்தான் காரணமாம்
வெயில் காலத்தில் வெயில் அடித்தால்
இவர்கள்தான் காரணமாம்
இறைவனுக்கும் இவர்களுக்கும்
இடைவெளி கம்மி
வார்த்தை ஜாலத்தில்
வாழும் வஸ்துக்கள்
சமுதாயச் சந்தையிலே
சவடால் பேர்வழிகள்
-------------------------------------------------நாகேந்திர பாரதி

கொசுவின் காதல்

கொசுவின் காதல்
------------------------------
எங்க வீட்டு கொசுவிற்கு
ஏகப்பட்ட  காதல்
கொசு வலை போட்டாலும்
கொசு வத்தி வச்சாலும்
கொசுத் தட்டி அடிச்சாலும்
குனிஞ்சு வந்து முத்தம்
வெளியூரு  போய் வந்தால்
வேகத்தோடு கடிக்கும்
அன்பிற்கும் உண்டோ 
அடைக்கும் தாழ் 
-------------------------------நாகேந்திர பாரதி

ரெயில் பயணங்களில்

ரெயில்  பயணங்களில்
---------------------------------------
எந்த சீட்டு கிடைத்தாலும்
எல்லாமே இம்சை
சன்னலோரம் அமர்ந்தாலோ
காப்பி டீ அபிஷேகம்
நடு சீட்டில் இடம் பிடிக்க
இரண்டு பக்கமும் இடுக்கிப்  பிடி
ஓர சீட்டில் உட்கார்ந்தால்
அரை சீட்டு அவஸ்தை
ஒரு 'வலி'யாய்      முடியும்
உல்லாசப் பயணம்
------------------------------------நாகேந்திர பாரதி

ஞாயிறு, 7 பிப்ரவரி, 2010

திரைப்படமும் தெருப்படமும்

திரைப்படமும் தெருப்படமும்
--------------------------------------------------
ஏழைத் துன்பத்திற்கு
இடைவேளை சினிமா
அடித்து நொறுக்கி
அழுது சிரித்து 
பாடி பேசி
பயந்து முறைத்து
ஊரெல்லாம் சுற்றி
உள்ளூர் திரும்பி
திரைப்படம் முடிய
தெருப்படம் தொடரும்
---------------------------------------நாகேந்திர பாரதி
 

புதன், 3 பிப்ரவரி, 2010

காதல் வலி

காதல் வலி
-------------------
குண்டு மல்லிச் செடி
மறக்க வில்லை
கொய்யா  மரம்
மறக்க வில்லை
கோயில் மண்டபம்
மறக்க வில்லை
கும்பிட்ட சாமியும்
மறக்க வில்லை
நீ மட்டும்
எப்படி மறந்தாய்
--------------------------நாகேந்திர பாரதி

குடியும் தியானமும்

குடியும்  தியானமும்
--------------------------------------
குடியும் தியானமும்
கொடுப்பது என்ன
குடியில் இன்பம்
கொஞ்ச நேரம்
தியான இன்பம்
தெவிட்டாக் காலம்
குடியை மறந்து
தியானத்தில் திளைத்து
உயிரை ரசிப்போம்
உணர்வில் மகிழ்வோம்
--------------------------------------------நாகேந்திர பாரதி

செவ்வாய், 2 பிப்ரவரி, 2010

விளையாட்டு வெக்கை

விளையாட்டு  வெக்கை - நன்றி குங்குமம் 27/06/2016
-------------------------------------
கொடுக்காப் புளி மர நிழலில்
கோலிக் குண்டு விளையாட்டு
வேப்ப மர நிழலில்
வெட்டுக் கிட்டி விளையாட்டு
அரச மர நிழலில்
ஆடு புலி விளையாட்டு
எல்லா மரங்களும்
எரிபொருளாய் ஆனபின்
இப்போது  கிராமத்தில்
எப்போதும்  வெக்கை
------------------------------------நாகேந்திர  பாரதி  

திங்கள், 1 பிப்ரவரி, 2010

காட்டு வழி

காட்டு வழி
---------------------
முரட்டு  வேர்கள்  
முண்டித்   தெறிக்கும்
கல்லும்  முள்ளும்
கலந்த  பூமி
இலைகளின்  கூரையால்
பகலில்  இருட்டு
பாம்பும்  விலங்கும்
படுத்துக்  கிடக்கும்
காட்டில்  கலந்து
காணாமல்  போகலாம்
-------------------------------------------------நாகேந்திர  பாரதி