ஞாயிறு, 31 ஜனவரி, 2010

குந்தவைக் காதல்

குந்தவைக் காதல்

---------------------------------
குடந்தை சோதிடர் வீட்டில்
குறும்பு விழிகள்
முதலைப் பொம்மை வேல்
மோகனப் புன்னகை
பாதாளச் சிறைச்  சாலையில் 
பட்ட   விரல் துடிப்பு 
கடலில்  மூச்சு  முட்ட
கற்பனையில்   வந்த  முகம்
வந்தியத்  தேவனின்
குந்தவைக் காதல்
-----------------------------------நாகேந்திர  பாரதி  

வழி அனுப்பும் வலி

வழி  அனுப்பும்  வலி
------------------------------------
ஆட்டோவோ பஸ்ஸோ  பிடித்து
ரயிலடிக்கு ஓடுவோம்
இட்லியோ தோசையோ அடித்து
பெட்டிக்குள் ஏறுவோம்
பாட்டோ  பேச்சோ முடித்து
படுத்தவுடன் தூங்குவோம்
வழியனுப்பி விட்டுச் செல்லும்
வயதான பெற்றோரின்
வீட்டிலும் மனத்திலும்  
வெறுமை ஏங்குமாம்      
-----------------------------------------------நாகேந்திர பாரதி

சனி, 30 ஜனவரி, 2010

வசதியான பிச்சைக்காரர்கள்

வசதியான  பிச்சைக்காரர்கள்
---------------------------------------------
பிச்சைக்  காரர்களுக்கு
எத்தனை வசதி
ஏதாவது ஒரு இடம்
ஏதாவது ஒரு நேரம்
ஏதாவது ஒரு உணவு
ஏதாவது ஒரு தண்ணி
ஏதாவது ஒரு நோட்டு
ஏதாவது ஒரு பாட்டு
எப்போதாவது அழுவது
எதற்காக  இருக்கும்
------------------------------------நாகேந்திர பாரதி

வெள்ளி, 29 ஜனவரி, 2010

முடிவின் ஆரம்பம்

முடிவின் ஆரம்பம்
-------------------------------------
சாக்கடை ஓரம்
ரயிலடி சத்தம்
ஒழுகிடும் கூரை
பசியின் கூச்சல்
தெருவே பாடம்
வெறுப்பே கூடும்
வயதும் ஏறும்
வாழ்க்கை இடிக்கும்
வன்முறை, தற்கொலை
வழியாய் மாறும்
----------------------------------நாகேந்திர பாரதி

வசதியும் வறுமையும்

வசதியும் வறுமையும்
---------------------------------------
காரில் உட்கார்ந்து போய் விட்டு
பஸ்ஸில் தொங்கிக் கொண்டு போவது
கஷ்டம் தான்
ஏசி    ரூமில்  படுத்து தூங்கி  விட்டு
சன்னல் அனல் காற்றில் தூங்குவது
கஷ்டம் தான்
ஹோட்டல் விருந்து சாப்பிட்டு விட்டு
வீட்டு பழைய சோறு மிளகாய்
கஷ்டம் தான்
வாழ்க்கைச் சக்கர ஓட்டத்தை
உணர்த்தி விளையாடுவது இறைவன்
இஷ்டம் தான்
----------------------------------------------------நாகேந்திர பாரதி

வியாழன், 28 ஜனவரி, 2010

கடலும் கரையும்

கடலும்  கரையும்
---------------------------------
கடலுக்குள் பறக்கின்ற
தண்ணீரின் அலைகள்
கடற்கரையில் இறக்கின்ற
காய்ந்து போன நுரைகள்
கடலுக்குள் துள்ளுகின்ற 
மீன்கூட்டப் புதையல்
கடற்கரையில் அள்ளுகின்ற  
கருவாட்டுப் படையல்
ஓட்டமாய் கடல் வெளி
வாட்டமாய்க் கடற்கரை
---------------------------------------------நாகேந்திர பாரதி

புதன், 27 ஜனவரி, 2010

குழம்பு வாசம்

குழம்பு  வாசம்
-----------------------
கத்தரிக்காய்ச் சாம்பார்
கருவாட்டுக்   குழம்பு
மிளகுக் குழம்பு
மீன் குழம்பு
மோர்க் குழம்பு
மோர், ரசம்
இன்னும் எத்தனை
வாசம்  இங்கே 
ஆராய்ச்சி  ஆரம்பம்
ஆனது   இங்கே
---------------------------நாகேந்திர பாரதி

செவ்வாய், 26 ஜனவரி, 2010

சுதந்திர இந்தியா

சுதந்திர  இந்தியா
--------------------------------
அப்போது
சுதந்திரத்தை விற்றோம்
இப்போது
சுய பண்பாட்டை விற்கிறோம்
அப்போது
பெண்ணுரிமை கேட்டோம்
இப்போது
இட ஒதுக்கீடு கேட்கிறோம்
அப்போது
மதச் சண்டை வளர்த்தோம்
இப்போது
இனச் சண்டை வளர்க்கிறோம்
அப்போது
சாதிச் சண்டை வெளிப்படை
இப்போது
சாதிச் சண்டை உட்கிடை
அப்போது
ஆங்கிலேயர்களுக்கு அடிமை
இப்போது
நமக்கு நாமே அடிமை
------------------------------------------நாகேந்திர பாரதி

திங்கள், 25 ஜனவரி, 2010

கிராமத்தில் உலகம்

கிராமத்தில்  உலகம்
---------------------------------
வளு வளு அட்டையும்
வாசமும் ஆக
புதுப் புத்தகங்கள்
நூலகம் இறங்கும்
அட்டவணைப் படுத்த
அவருடன் சேர்ந்து
முதன் முதல்  தொட்டு
புரட்டிப் பார்ப்போம்
விரிந்த உலகம்
கிராமத்தில் நுழையும்
----------------------------------------நாகேந்திர பாரதி

ஞாயிறு, 24 ஜனவரி, 2010

பறவைகள் பலவிதம்

பறவைகள்  பலவிதம்
---------------------------------------
கண்மாய்த் தண்ணீரில்
காத்திருக்கும் கொக்கு
கோபுர மாடத்தில்
கூடு    கட்டும் புறா
வேப்பமரக்  கிளைக்குள்
விசிலடிக்கும் குயில்
கொட்டி வைத்த நெல்லைக்
கொத்த வரும் குருவி
ஒவ்வொரு பறவைக்கும்
ஏதோ ஒரு வேலை
---------------------------------------------நாகேந்திர பாரதி

மது மயக்கம்

மது  மயக்கம்
---------------------
கை உதறும்
கால் பதறும்
வாய் குளறும்
வாசம் வரும்
ஆசை வரும்
அழுகை வரும்
தூக்கம்   வரும்
துக்கம் வரும்
நாளை வரும்
நாணம் வரும்
-----------------------------------நாகேந்திர பாரதி

ஆசையும் மோகமும்

ஆசையும்  மோகமும்
---------------------------------
ஆசை அறுபது நாளாம்
மோகம் முப்பது நாளாம்
உயிரிலே அன்பு கலந்து
உணர்விலே பண்பு கலந்து
மனத்திலே காதல் கலந்து
மகிழ்ச்சியை வீட்டில் கலந்து
உன்னிடம் சேர்ந்தவளிடம்
உன்னையே நினைப்பவளிடம்
ஆசை, ஆயுள் மட்டும்
மோகம் , முடியும் மட்டும்
--------------------------------------நாகேந்திர பாரதி

சனி, 23 ஜனவரி, 2010

நகை முகம்

நகை  முகம்
--------------------
காதுக்கு  மூக்குக்கு 
கழுத்துக்கு  கைக்கு  நகை
அவசரத் தேவைகட்கு
அடமானம் அந்த நகை
அடுத்த வாரிசுக்கு
அழிச்சுச் செய்ய நகை
கல்யாணம் விசேஷங்கள்
காண்பிக்க     பெருமை நகை
பொன்னகை மயக்கத்தில்
போனது புன்னகை
-----------------------------------------------நாகேந்திர பாரதி

வெள்ளி, 22 ஜனவரி, 2010

குடும்ப வாழ்க்கை

குடும்ப  வாழ்க்கை
---------------------------
கூலி வேலை பாத்து
குறைச்ச சம்பளம் வாங்கி
ரேஷன் கடை நின்னு
அரிசி பருப்பு வாங்கி
சோறு குழம்பு ஆக்கி
காத்துக் கிடந்து    அழுது
குடிச்சிப் புட்டு வர்ற
புருஷனுக்குப் போட்டு
தூங்கப் போற நேரம்
தொட்டிப் புள்ளை அழுது
---------------------------நாகேந்திர பாரதி

கவிதை பிறக்கும்

கவிதை  பிறக்கும்
----------------------------------
பி. சுசீலா சோகப் பாட்டு கேட்டால்
கவிதை பிறக்கும்
ஆட்டுக் குட்டி பஞ்சு உடல் தொட்டால்
கவிதை பிறக்கும்
மண் சட்டி குழம்பு வாசனை வந்தால்
கவிதை பிறக்கும்
ஊருணி மலர் மொட்டைப் பார்த்தால்
கவிதை பிறக்கும்
அவள் பேரை உச்சரித்தாலோ 
ஆயிரம் கவிதை பிறக்கும்
--------------------------------------நாகேந்திர பாரதி
 

சோம்பேறிப் பட்டம்

சோம்பேறிப்  பட்டம்
-----------------------------------
காலை பஜனையும்
கோயில் மணியும்
உசுப்பி விட்டாலும்
உள்ளுக்குள் தூக்கம்
காலோடு தலை வரை
கதகதப்புப் போர்வை
வெயில் வந்தபின்தான்
வெளியேற ஆசை
வீட்டு மனிதரிடம்
சோம்பேறிப் பட்டம்
-------------------------------------நாகேந்திர பாரதி

வியாழன், 21 ஜனவரி, 2010

காதல் உலகம்

காதல் உலகம்
------------------------
அது ஒரு
தனி இலக்கு
அது ஒரு
தனி இயல்பு
அது ஒரு
தனி மொழி
அது ஒரு
தனி உலகம்
அதன் பேர்
காதல்- என்பார்
-------------------------நாகேந்திர பாரதி

புதன், 20 ஜனவரி, 2010

கல்லூரிக் காலம்

கல்லூரிக் காலம்
------------------------------
ஊர்   சுற்றி அலைந்து
சினிமாக்கள் பார்த்து
அரட்டையை அடித்து
அடிதடியில் கலந்து
வீடாறு விடுதியாறு
மாதமாய்க் கழிந்து
ஸ்டடி  லீவில் மட்டும்
பாடங்கள் படித்து
கல்லூரி கடந்தது
கண்மூடி திறப்பதற்குள்
--------------------------------------------------நாகேந்திர பாரதி

செவ்வாய், 19 ஜனவரி, 2010

பட்டம் , பதவி

பட்டம் , பதவி
---------------------------
உங்கள் பெயரே
உங்கள் பட்டம்
உங்கள் பண்பே
உங்கள் பதவி
படித்த பட்டமும்
பார்த்த பதவியும்
கூடவே வராது
கூட்டம் தங்காது
பெயரும் பண்புமே
பெருமை என்றுமே
--------------------------------நாகேந்திர பாரதி

திங்கள், 18 ஜனவரி, 2010

காணும் பொங்கல்

காணும்  பொங்கல்
 ---------------------------
எல்லோருடனும் சேர்ந்து
இருப்பதுதான் இயல்பு
எண்ணங்களும் ஆசைகளும்
இடைவெளியின் முரண்கள்  
வருடத்திற்கு ஒருநாள்
வாய்க்கும் பொங்கல்
கண்டு கேட்டு மகிழ்ந்து
குழந்தையாய் மாறும் நாள்
தொடருமா தொப்புள் கொடி
மலருமா இன்பச் செடி
---------------------------------------நாகேந்திர பாரதி

ஞாயிறு, 17 ஜனவரி, 2010

பசிப் பிணி

பசிப் பிணி
-------------
பசிப் பணியில் கிடந்து
பார்த்தால் தெரியும்
காதல் மறக்கும்
கடமை துறக்கும்
கோபம் பறக்கும்
கொடுஞ்சொல் திறக்கும்
உண்ணக் கிடைத்து
தண்ணீர் குடித்து
தணியும் போது
மனிதம் பிறக்கும்
-----------------------------நாகேந்திர பாரதி

சனி, 16 ஜனவரி, 2010

உலகத் தாய் மொழி

உலகத் தாய் மொழி

-----------------------------

'அம்மா' வென்று ஆரம்பித்து

'அய்யோ' என்று போகும்வரை

உயிர் மெய் மொழியாகி

உணர்வின் வழியாகி

அய்யாயிரம் ஆண்டுகளாய்

ஆளும் மொழி

உலகின் முதல் மொழி

செம்மொழி தமிழென்று

மரபணு ஆய்வின்

மகிழ்ச்சிச் செய்தி

----------------------------நாகேந்திர பாரதி

அவள் வருவாளா?

அவள் வருவாளா?
---------------------
மின்னல் போல்
மின்னி மறைந்தாள்
மெழுகு போல்
உருகி கரைந்தாள்
நண்ப னாய்
வாழ்ந்து முடிந்தாள்
மழை கொட்டுமா
இருள் மட்டுமா
அன்பு கிட்டுமா
அவள் வருவாளா?
----------------------------------நாகேந்திர பாரதி

வெள்ளி, 15 ஜனவரி, 2010

ஆதாரம் அவளே

ஆதாரம் அவளே
---------------------
பகல் வரும் போகும்
இரவு வரும் போகும்
அவள் முகம் என்றும் மனத்தில்
அவள் குரல் என்றும் ஒலியில்
அவள் அன்பு என்றும் அகத்தில்
அவள் வாழ்வு என்றும் உயிரில்
அவள் கண்ணீர் மனிதனாய் ஆக்க
அவள் புன்னகை அமைதியைப் பூக்க
அவள் என்றும் வாழ்வாள் இங்கு
ஆதார சுருதியாய் நின்று
---------------------------------------நாகேந்திர பாரதி

வியாழன், 14 ஜனவரி, 2010

பொங்கலோ பொங்கல்

பொங்கலோ பொங்கல்----------------------------------உறுப் பிழந்த


உடலோடு சில பேர்உணர் விழந்தஉயிரோடு சில பேர்உற விழந்தஉள்ளோடு சில பேர்இவர் களுக்குள்ஏங்குவது என்னஇவர் இனிக்கபொங்குவதே பொங்கல்--------------------------------------நாகேந்திர பாரதி

புதன், 13 ஜனவரி, 2010

கிராமத்துக் காய்ச்சல்

கிராமத்துக் காய்ச்சல்

-------------------------

ரசஞ் சாதம் சாப்பிட்டு

ராப்பகலை ஓட்டணும்

ஓமியோபதி உருண்டை

ஒண்ணு ரெண்டு சாப்பிடணும்

தானாத் தணியணும்

தண்ணி ஊத்தணும்

போனது சிலது

பொழச்சது சிலது

கிராமத்துக் காய்ச்சல்

கிளப்புது சூட்டை

---------------------------------------------------நாகேந்திர பாரதி

செவ்வாய், 12 ஜனவரி, 2010

உணவும் உயிரும்

உணவும் உயிரும்
---------------------
மட்டன் குழம்பு
மணக்கும் சிக்கன்
வாளைமீன் வறுவல்
வஞ்சிரம் பொரியல்
தளதள சாதம்
தயிரும் வடையும்
பாத்துட்டுப் போவோம்
பசியாறிப் போகும்
காய்கறி பழத்தோடு
காப்போம் உயிரை
---------------------------------நாகேந்திர பாரதி

திங்கள், 11 ஜனவரி, 2010

நகரத்தில் கிராமம்

நகரத்தில் கிராமம்

--------------------------

கம்பங் கஞ்சி குடிக்குது

கருப்பட்டி கடிக்குது

கோலாட்டம் பாக்குது

கரகாட்டம் ரசிக்குது

கிராமத்தைப் பாத்திட்டு

'பிளாட்'டுக்குத் திரும்புது

டிவியைப் போடுது

டிஸ்கோவை ஆடுது

சிகரெட்டை முடிச்சுட்டு

'சியர்ஸ்'ஸோடு தூங்குது

---------------------------நாகேந்திர பாரதி

வியாழன், 7 ஜனவரி, 2010

பசியும் ருசியும்

பசியும் ருசியும்
-----------------------
கம்பங் களியும்
கருப்பட்டியும்
களத்து மேட்டில்
சாப்பிடும் ருசி
சிக்கன் பர்கரும்
சிப்ஸ் கோக்கும்
ஸ்டார் ஹோட்டலில்
சாப்பிடும் ருசி
போக்கிடும் பசியில்
மாற்றம் உண்டா?
-----------------------------நாகேந்திர பாரதி

செவ்வாய், 5 ஜனவரி, 2010

திரும்பி ஓடும் நினைவுகள்

திரும்பி ஓடும் நினைவுகள்
----------------------------------
சில அறிவிப்புகளில்
சில நினைவுகள்
'இன்று இப்படம் கடைசி'
'கல்லூரி கால வரையறையின்றி
மூடப்பட்டது'
'வரி விளம்பரங்களைப் படியுங்கள்
அவற்றில் நல்ல செய்திகள்
அடங்கியுள்ளன'
திரைப்படம், கல்லூரி, தினத்தந்தி என
திரும்பி ஓடும் நினைவுகள்
--------------------------------------நாகேந்திர பாரதி

சனி, 2 ஜனவரி, 2010

இசைப் பயணம்

இசைப் பயணம்

-------------------------

தாலாட்டு இசையைக்

கேட்டுப் பிறந்து

கோயில்மணி இசையைக்

கேட்டு வளர்ந்து

திரைப்பட இசையைக்

கேட்டு சலித்து

வசவோசை இசையில்

வயதாகி மயங்கி

ஒப்பாரி இசையைக்

கேட்காமல் போவார்

--------------------------------நாகேந்திர பாரதி

வெள்ளி, 1 ஜனவரி, 2010

அனாதையின் சொந்தம்

அனாதையின் சொந்தம்
----------------------------
அவர்களுக்கு இல்லை
அம்மாவும் அப்பாவும்
அவர்களுக்கு இல்லை
அண்ணனும் தங்கையும்
அவர்களுக்கு இல்லை
அத்தையும் மாமாவும்
அவர்களுக்கு உண்டு
நாளையும் வாழ்வும்
அவர்களுக்கு உண்டு
நானும் நீயும்
--------------------------------நாகேந்திர பாரதி