வியாழன், 31 டிசம்பர், 2009

நம்ம விதி இப்படி

நம்ம விதி இப்படி

---------------------------

நம்ம போகும்போது தான்

சிவப்பு சிக்னல் விழுது

நம்ம சாப்பிடும்போது தான்

அரிசிக் கல்லு மாட்டுது

நம்ம படிக்கிறப்போ தான்

நல்லா தூக்கம் வருது

நம்ம பரீட்சையப்போ தான்

எல்லாக் கேள்வியும் கஷ்டம்

அது என்னமோ தெரியலை

நம்ம விதி இப்படி

------------------------------நாகேந்திர பாரதி

புதன், 30 டிசம்பர், 2009

கொத்துப் புரோட்டா

கொத்துப் புரோட்டா
--------------------------
சுழற்றி வீசும் சத்தம்
கும்மி அடிக்கும் சத்தம்
கொத்தி கிளறும் சத்தம்
காதுக்கு சுவை சேர்க்கும்
மணக்கும் புரோட்டா, கறி
இலையிலே வந்தமர
நாசிக்கும் நாவுக்கும்
நல்ல சுவை சேர்க்கும்
கொத்து புரோட்டா ஒரு
பத்து உள்ளே போகும்
---------------------------------நாகேந்திர பாரதி

திங்கள், 28 டிசம்பர், 2009

இப்படியும் ஒரு பெண்

இப்படியும் ஒரு பெண்

-------------------------------

கோயிலுக்குப் போக வேண்டும்

கோலம் போடத் தெரிய வேண்டும்

ராமஜெயம் எழுத வேண்டும்

ராகத்தோடு பாட வேண்டும்

பட்டுச் சேலை உடுத்த வேண்டும்

படிப்பறிவு இருக்க வேண்டும்

மென்மையாகப் பேச வேண்டும்

பெண்மையாக நளினம் வேண்டும்

இப்படியொரு பெண் இருக்கிறார்

எங்க வீட்டு பாட்டி

ஞாயிறு, 27 டிசம்பர், 2009

சிங்கப்பூர் பையன்

சிங்கப்பூர் பையன்
--------------------------
பனியன் ஜட்டி கிடக்கட்டும்
நான் துவச்சிப் போடறேன்
சாப்பிட்ட பிறகு கொஞ்சம்
தூங்கிட்டுப போப்பா
என்னடா தம்பி இப்படி
இளைச்சிப் போயிட்டே
பிரியத்துக்கு மறுபேராய்
இருந்த பெரியம்மா
செத்துப் போனப்ப பையன்
சிங்கப்பூரில் இருந்தான்
-------------------------நாகேந்திர பாரதி

இப்படி, அப்படி

இப்படி, அப்படி
--------------------------
சிலருக்கு வயதான பின்
தேஜஸ் சேர்கிறது
சிலருக்கு வயதான பின்
நரைதிரை ஆகிறது
சிலர் பேச்சில்
அமைதி கூடுகிறது
சிலர் பேச்சில்
ஆணவம் ஆடுகிறது
சிலர் இப்படி
சிலர் அப்படி
-----------------------நாகேந்திர பாரதி

தெரு நாய்கள்

தெரு நாய்கள்
----------------------------

எத்தனை நாய்களைப்

பார்த்திருக்கிறோம்

சில நாய்கள் ஒல்லியாய்

சில நாய்கள் குண்டாய்

சிலவற்றைப் பார்த்து பயந்து

சிலவற்றை அடித்து விரட்டி

சிலதிடம் கடி வாங்கி

சிலதிடம் கல் ஓங்கி

சிலவற்றைக் காணோம்

சிலது திரியுது தெருவில்

-----------------------நாகேந்திர பாரதி

சனி, 26 டிசம்பர், 2009

ராக ஆலாபனை

ராக ஆலாபனை

---------------------------

கல்யாணி ராகம்

சுதா பாடிக் கேக்கணும்

பைரவி ராகம்

சௌம்யா பாடிக் கேக்கணும்

ஏன் ஓய் மத்தவங்க

பாடினா கேக்க முடியாதா

பத்திரிகையிலே படிச்சதை

சொல்றே னய்யா

எந்த ராகமும் யாரும் பாடி

நான் கேட்டதில்லே

---------------------------------நாகேந்திர பாரதி

வெள்ளி, 25 டிசம்பர், 2009

இன்று போய் நாளை வா

இன்று போய் நாளை வா
----------------------------
மாத்திரைச் சீட்டைப் பார்த்த
மருந்துக் கடைக்காரர் சொன்னார்
ம்ம் சுகர் இருக்கு போலிருக்கு
பலே பிபியும் இருக்கு
கொலஸ்ட்ராலும் இருக்கே
ரொம்ப மோசமா இருக்கு
கவனமா இருங்க சார்
இந்த மாத்திரை எல்லாம்
இப்போ ஸ்டாக் இல்லை
நாளைக்கு வாங்க
-------------------------------நாகேந்திர பாரதி

வியாழன், 24 டிசம்பர், 2009

வாராந்தர மீட்டிங்

வாராந்தர மீட்டிங்

---------------------------

குறைகளை எல்லாம்

அரைகுறையாய்க் கேட்டு விட்டு

சுய புராணம் பாடிவிட்டு

வேலை செய்யச் சொல்லிவிட்டு

காப்பி சாப்பிட்டு விட்டு

கெண்டகி சிக்கனை

மனைவிக்கு வாங்க

அவசரமாய்ப் புறப்படுவார்

ஆபீஸ் மேனேஜர்

அஞ்சு மணிக்கே

----------------------------நாகேந்திர பாரதிபுதன், 23 டிசம்பர், 2009

மார்கழியின் காலை

மார்கழியின் காலை
--------------------------
தெருவெங்கும் பஜனை வரும்
திருப்பாவைப் பாட்டு வரும்
வாசலிலே கோலம் வரும்
பூசணிப்பூ நடுவில் வரும்
இளையோர்க்குக் காதல் வரும்
முதியோர்க்கும் இளமை வரும்
குளிருக்கு வேளை வரும்
கோயிலுக்குக் கூட்டம் வரும்
மார்கழியின் காலை வரும்
மனமெங்கும் சோலை வரும்
----------------------------------------நாகேந்திர பாரதி

செவ்வாய், 22 டிசம்பர், 2009

கண்ணீர்க் காதல்

கண்ணீர்க் காதல்
----------------------
வருஷம் ஓடுது
வயசும் கூடுது
கல்யாணம் ஆகுது
கடமை ஏறுது
பணமும் சேருது
பாதை தேறுது
புகழும் கூடுது
கூட்டம் சேருது
கண்ணீர் ஊறுது
காதல் வாழுது
-------------------------------------நாகேந்திர பாரதி

ஞாயிறு, 20 டிசம்பர், 2009

காணாமல் போன காலம்

காணாமல் போன காலம்
---------------------------
வருஷா வருஷம்
வந்து போறாங்கதான்
சிரிச்சிப் பேசி
இருந்து போறாங்கதான்
பணமும் உதவியும்
பண்ணிப் போறாங்கதான்
என்னதான் இருந்தாலும்
என்னமோ ஏங்குது
கதை சொன்ன காலம்
காணாமல் போயிருச்சே
---------------------------------------நாகேந்திர பாரதி

சனி, 19 டிசம்பர், 2009

குடி கெடுக்கும்

குடி கெடுக்கும்
------------------
போதையை ஏற்றி வைக்கும்
பாதையை மாற்றி வைக்கும்
மனைவியை அடிக்க வைக்கும்
மக்களைத் துடிக்க வைக்கும்
பணத்தைப் பறக்க வைக்கும்
குணத்தை மறக்க வைக்கும்
ரத்தத்தை மாற்றி வைக்கும்
பித்தத்தை ஏற்றி வைக்கும்
குடியைச் சிறுக்க வைக்கும்
குடும்பத்தை வெறுக்க வைக்கும்
--------------------------------------------நாகேந்திர பாரதி

வெள்ளி, 18 டிசம்பர், 2009

விடலைப் பருவம்

விடலைப் பருவம்
-----------------------
படுத்தவுடன் தூங்கும்
அடித்தவுடன் எழும்
பசியாக எடுக்கும்
பாடாகப் படுத்தும்
வெயிலிலே ஓடும்
மழையிலே ஆடும்
கலையார்வம் பிடிக்கும்
காதலிக்கத் துடிக்கும்
விடலைப் பருவம்
விறுவிறு பருவம்
-------------------------------நாகேந்திர பாரதி

வியாழன், 17 டிசம்பர், 2009

கண்மாய்க் குளியல்

கண்மாய்க் குளியல்
-------------------------
கனமழைக்கு மறுநாள்
கண்மாய்க் குளியல்
பச்சைக் குட்டை
பால்வெள்ளை ஆயிடுச்சு
ஆற அமர
அழுக்குத் தேச்சு
துவச்சி முடிச்சு
துணியைக் கட்டி
எழுந்து போறச்ச
'எம்புட்டுத் தண்ணீ''
-------------------------------நாகேந்திர பாரதி

திங்கள், 14 டிசம்பர், 2009

ஓர சீட்டு ஆசை

ஓர சீட்டு ஆசை
----------------------
தொங்கிக் கொண்டு போகும்போது
உள்ளே போக ஆசை
உள்ளே போன பின்பு
உரசாமல் நிற்க ஆசை
உரசாமல் நின்ற பின்பு
உட்கார்ந்து போக ஆசை
உட்கார்ந்து போகும் போது
ஓர சீட்டு ஆசை
ஓர சீட்டு கிடைத்த பின்பு
வாந்தி வரும் ஓசை
------------------------------------நாகேந்திர பாரதி

சனி, 12 டிசம்பர், 2009

அது காதல்

அது காதல்
----------------
அவன் கால் இடித்து
தோல் பிய்ய
அவள் கண் இடுக்கில்
நீர் கொள்வாள்
அவள் காய்ச்சலினால்
சோர் வடைய
அவன் மாத்திரையை
ஊட்டி டுவான்
துன்பத்தில் துணை இருக்கும்
தூய்மைக்குப் பேர் காதல்
---------------------------------------- நாகேந்திர பாரதி

வியாழன், 10 டிசம்பர், 2009

ரெண்டும் கெட்டான்

ரெண்டும் கெட்டான்

-----------------------

பார்வையில் பிரியம்

பேச்சில் விஷமம்

வராவிட்டால் விசாரிப்பு

வந்தால் புறக்கணிப்பு

கூட்டத்தில் அரட்டை

தனியாக மௌனம்

இங்கிட்டும் போகாம

அங்கிட்டும் போகாம

ரெண்டும் கெட்டானாய்

என்னடி பாசாங்கு

---------------------------------------------நாகேந்திர பாரதி

புதன், 9 டிசம்பர், 2009

கிராம நெனைப்பு

கிராம நெனைப்பு
--------------------
கண்மாய் மேட்டு
களிமண் சறுக்கு
வைக்கோல் படப்பில்
படுத்த அரிப்பு
கழலும் சைக்கிள்
செயினின் பிசுக்கு
ஊறப் போட்ட
மிளகா உறைப்பு
கிண்டிப் பாக்க
கிராம நெனைப்பு
-----------------------------------நாகேந்திர பாரதி

செவ்வாய், 8 டிசம்பர், 2009

மீன் குழம்பு

மீன் குழம்பு
--------------
வெங்காயம் புளியோடு
வெந்தயம் மிளகோடு
மசாலா மணத்தோடு
வாளைமீன் கொதிக்க
பக்கத்தில் வஞ்சிரம்
எண்ணையில் மிதக்க
சோற்றோடு சேர்த்து
சுவைக்க சொர்க்கம்
மறுநாள் தோசைக்கும்
மண்டிக் குழம்பு
-------------------------------நாகேந்திர பாரதி

ஞாயிறு, 6 டிசம்பர், 2009

கோபுரக் காதல்

கோபுரக் காதல்
--------------------
கோபுர இருட்டு
படிக் கட்டுக்கள்
முதல் இரண்டில்
வௌவால் புழுக்கை
அடுத்த இரண்டில்
கரிக் கீறல்கள்
கடைசி மூன்றில்
காதல் கதைகள்
கடவுள் தான்
காப்பாற்ற வேண்டும்
-----------------------------------நாகேந்திர பாரதி

வெள்ளி, 4 டிசம்பர், 2009

காத்துக் கிடக்கும்

காத்துக் கிடக்கும்

--------------------------

சில பொருட்கள்

சில இடங்களில்

சில நினைவுகளோடு

அப்பத்தா காது குடைந்த

கோழி இறகு

கூரை இடுக்கில்

தாத்தா போட்ட

பொடி டப்பா

மாடக் குழியில்

காத்துக் கிடக்கும்

-----------------------------நாகேந்திர பாரதி

வியாழன், 3 டிசம்பர், 2009

மழைக் காலம்

மழைக் காலம்
----------------------

கொட்டும் மழையில்

குளித்துக் கொண்டே

கிராம கிரிக்கெட்

கிட்டி விளையாட்டு

தியேட்டர் வாசல்

வரிசைப் பயணம்

படியில் தொங்கி

பஸ்ஸில் கல்லூரி

காய்ச்சலும் இல்லை

தும்மலும் இல்லை

--------------------------------------நாகேந்திர பாரதி

செவ்வாய், 1 டிசம்பர், 2009

கனவு முகங்கள்

கனவு முகங்கள்
----------------------
எங்கோ பிறந்து
எங்கோ வளர்ந்து
எங்கோ முடியும்
வழியில் யார் யாரோ
சுற்றமும் நட்பும்
தொடர்ந்து வந்தாலும்
நடுவில் பிரிந்தவை
எத்தனை முகங்கள்
கனவில் வரும்
சில முகங்கள்
--------------------------------------நாகேந்திர பாரதி

கடற்கரைக் கண்ணீர்

கடற்கரைக் கண்ணீர்
-----------------------------
சமாதியும் உண்டு- இறைவன்
சந்நிதியும் உண்டு
சுத்தக் காற்றும் உண்டு- காதல்
ஜோடிகளும் உண்டு
பஜ்ஜி வடைகள் உண்டு - பட்டம்
பறக்கும் வானம் உண்டு
குதிரை ஓட்டம் உண்டு - குழந்தை
ஆடும் ஆட்டம் உண்டு
என்ன உண்டு என்ன - சுனாமி
இழைத்த கண்ணீர் உண்டு
--------------------------------------நாகேந்திர பாரதி