செவ்வாய், 30 ஜூன், 2009

மனிதனே இறைவன்

மனிதனே இறைவன்

------------------------

மனக் கிரகத்திற்கு

மதிப்பு கொடுங்கள்

வெளிக் கிரகத்தை

விட்டுத் தள்ளுங்கள்

உங்களுள் ஒளிரும்

கடவுளை உணருங்கள்

வெளிக் கடவுளுக்குள்

வெளிச்சம் தேடாதீர்

எல்லா மனிதரும்

இறைவனாய் உணருங்கள்

---------------------------------------நாகேந்திர பாரதி

-------------------------------------------------------------

ஞாயிறு, 28 ஜூன், 2009

தூக்க மருந்து

தூக்க மருந்து

-----------------

துக்கத்தை உறைய வைத்து

துயரத்தைக் குறைய வைக்கும்

துரோகத்தை மறக்க வைத்து

பழிப்படலம் முடித்து வைக்கும்

சித்தெறும்பு நேரத்தை

புலிப்பாய்ச்சல் பாய வைக்கும்

மருந்தாகத் தாயாக

மாறுகின்ற தூக்கத்தின்

துணை கொண்டு வாழ்ந்திருந்து

தொடங்கிடுக புது வாழ்வு

--------------------------------நாகேந்திர பாரதி

---------------------------------------------------------------------

அப்பாவி இரவு

அப்பாவி இரவு

-------------------

இரவின் குரல்

சில சமயம் அபாயமாய்

ரெயில்வே ஸ்டேஷனில் இருந்து

போலீஸ் ஸ்டேஷன் போய்

திரும்பி நடந்து

திகைத்து அடங்கி

பகலின் குரலுக்குள்

தொலைந்து போகும்

அப்பாவிக்குள் பாவியாய்

இரவின் குரல்

---------------------------நாகேந்திர பாரதி

------------------------------------------------

நீர்க் கம்பிகள்

நீர்க் கம்பிகள்
-------------------
சன்னல் கம்பிகளைச் சுற்றும்
நீர்க் கம்பிகள்
குளிரில் நடுங்கும் புறா ஒன்று
சன்னலோரம் ஒதுங்கும்
கார் தெறிக்கும் சேறு ஒட்ட
உதறும் சிறகை
சன்னல் வழி வடிந்து
வீட்டுக்குள் நுழையும் கம்பியாக
புது மழை மணத்தோடு
விட்டு வைப்பான் அப்படியே
----------------------------------நாகேந்திர பாரதி
--------------------------------------------------------------------

காதல் பிச்சை

காதல் பிச்சை
----------------
கோயில் வாசலில்
ஒரு பிச்சைக்காரன்
தாடியோடு, தட்டோடு, காரணத்தோடு
கோபுரத்தில் ஒளி வெள்ளம்
நாதசுர மேள ஓசை
அம்மன், சாமி புறப்பாடு
கூட வரும் ஜோடிகளில்
சிலர் போடும் சில்லறைகள்
எழுப்பும் சப்தத்தில் அடங்கும்
அவளின் விம்மல் ஒலி
-----------------------------------நாகேந்திர பாரதி
--------------------------------------------------------------------

செவ்வாய், 23 ஜூன், 2009

உணர்ச்சிக் கோலம்

உணர்ச்சிக் கோலம்

------------------------

அது ஒரு காலம்

அப்பாவின் விரலைப் பற்றிக்கொண்டு

படித்துக்கொண்டு

பாடிக் கொண்டுஇது ஒரு காலம்

இனிய இளைஞனோடு

காதலித்துக் கொண்டு

கல்யாணம் செய்து கொண்டுஒவ்வொரு காலமும் ஒரு

உணர்ச்சிக் கோலம்

---------------------------நாகேந்திர பாரதி

-----------------------------------------------------------

வியாழன், 18 ஜூன், 2009

போலி மனிதர்கள்

போலி மனிதர்கள்

--------------------------

சிரிப்புக்குள் விஷம் வைத்து செலவழிப்பார்

சில்லறைக்கு மட்டுமே வரவு வைப்பார்

கறுப்புக்குள் பணமாக குவித்து வைப்பார்

கடவுளுக்கும் கொஞ்சூண்டு கொடுத்து வைப்பார்

போகவர உறைத்தாலும் பொருட் படுத்தார்

போன்சாய் மரமாக வெட்டிக் கொள்வார்

பருப்புக்கும் அரிசிக்கும் அலைக் கழிவோர்

நெருப்புக்குள் சினமாக நிமிர்ந்து விட்டால்

அறுப்புக்குக் களையாக ஆய் விடுவார்

அங்கங்கே மிதிபட்டு அழிந்திடுவார்

--------------------------------நாகேந்திர பாரதி

செவ்வாய், 16 ஜூன், 2009

அறுபது வயதில் யோசனை

அறுபது வயதில் யோசனை
----------------------------------
அவரும் கட்டிலுமாய் அறுபது வயதில் யோசனை
மறுபடியும் முப்பது வயது வந்தால்
மகனின் பள்ளிப் பையைத் தூக்கிச் செல்ல வேண்டும்
மகளின் தலையில் பூ வைத்துப் பின்னி விட வேண்டும்
மறுபடியும் நாற்பது வயது வந்தால்
மகனின் இளமைக் கிளர்ச்சிகளைப் புரிந்து கொள்ள வேண்டும்
மகளின் கல்லூரித் தேர்வுக்கு கூடச் செல்ல வேண்டும்
மறுபடியும் அம்பது வயது வந்தால்
மனைவியின் முதுமையைப் புரிந்து நடக்க வேண்டும்
மக்களின் மனமறிந்து மணம் முடிக்க வேண்டும்
மறுபடியும் அறுபது வயது வரும்போது
அவரும் குடும்பமுமாய், கட்டில் மட்டும் தனியாக
--------------------------------------நாகேந்திர பாரதி
--------------------------------------------------------------------

வெள்ளி, 12 ஜூன், 2009

என்னமோ ஒழுங்கு

என்னமோ ஒழுங்கு

----------------------------

என்னமோ ஒழுங்கு இருக்குது இயற்கையிலே

பலா மரத்திலே பாகற்காய் காய்க்கிறதில்லே

முல்லைச் செடியிலே கள்ளிப்பூ பூப்பதில்லே

மனுசன்லே மட்டும் ஏன் இப்படி

ஒருநாள் முல்லைப் பூவாய்ச் சிரிப்பு

மறுநாள் பாகற்க் காய்க் கசப்பு

என்னமோ இம்சை இருக்குது மனுசன்லே

பூவும் இலையும் காயும் செடியும்

மனசு இல்லாம இருக்குமோ என்னமோ

மனுஷனுக்கு மட்டும் மனசு படுத்துது

----------------------------------------நாகேந்திர பாரதி

வியாழன், 11 ஜூன், 2009

ஒண்ணு கெடக்க ஒண்ணு

ஒண்ணு கெடக்க ஒண்ணு

------------------------------------------

ஒண்ணு கெடக்க ஒண்ணு நெனைக்காதீங்க

என்ன பெரிசா நமக்கு வந்துடுங்க

முன்ன பின்ன கொஞ்சம் யோசிச்சுக்குங்க

என்ன ஏது என்று கேட்டுக்குங்க

தின்னு கின்னு வயித்தைக் கெடுக்காதீங்க

கண்ணு காது மூக்கைக் கவனிச்சுக்குங்க

இன்னும் உடம்பும் மனசும் ஒண்ணாக்குங்க

சொன்ன சொல்லில் கவனம் வச்சுக்குங்க

எண்ண எண்ண எல்லாம் கூடிடுங்க

வண்ண வண்ண வாழ்க்கை வாழ்ந்திடுங்க

--------------------------------------------நாகேந்திர பாரதி

-------------------------------------------------------------

செவ்வாய், 9 ஜூன், 2009

நீங்களும் கவிஞர்தான்

நீங்களும் கவிஞர்தான்

--------------------------------

ஒண்ணும் பெரிசா இல்லை கவிதையில்

நின்னு யோசிச்சா நீங்களும் கவிஞர்தான்

எல்லா உயிரையும் ஒண்ணா நெனங்க

நல்லா பாருங்க நல்லா கேளுங்க

வயதான மேகமும் வானத்து நீலமும்

வயக்காட்டு வரப்பும் வரிசைப் பனையும்

கண்மாய்க் கரையும் கலங்கல் தண்ணியும்

பெண்மை அழகும் பிறப்பும் இறப்பும்

உங்களில் கவிஞனை உசுப்பித் தட்டிடும்

கண்ணுக்குள் நீரைக் கசக்கி விட்டிடும்

நின்னு யோசிச்சா நீங்களும் கவிஞர்தான்

---------------------------------------நாகேந்திர பாரதி

--------------------------------------------------------------------

திங்கள், 8 ஜூன், 2009

ஆல மரம் ஒன்று

ஆல மரம் ஒன்று

---------------------------

வேரைப் பூமிக்குள் விட்டுக் கொண்டு

விழுதால் தரையைத் தொட்டுக் கொண்டு

ஆகாயம் நோக்கி சிரித்துக் கொண்டு

அகலமாய்க் கிளைகளை விரித்துக் கொண்டு

இலைகளும் பூக்களும் தாங்கிக் கொண்டு

வெயிலையும் மழையையும் வாங்கிக் கொண்டு

வருவார் போவாரைப் பார்த்துக் கொண்டு

நிற்போரை நிழலால் போர்த்திக் கொண்டு

என்னமோ எண்ணம் ஒன்று கொண்டு

ஆலமரம் ஒன்று நின்று கொண்டு

-------------------------நாகேந்திர பாரதி

---------------------------------------------------------

செவ்வாய், 2 ஜூன், 2009

இரவுத் திருட்டு

இரவுத் திருட்டு
---------------------
கருப்பு மட்டும் அதன் நிறம் இல்லை
திருட்டும் கூட இரவின் நிறம்தான்
உலகைத் திருடி உருட்டிப் போடும்
ஒருபக்கம் மட்டும் சூரியனுக்கு விற்கும்
நிலவைத் திருடி எடுத்துக் கொள்ளும்
நட்சத் திரங்களையும் துணைக்குத் திருடும்
மனிதர் திருட்டுக்கு உடந்தை ஆகும்
மனத்தின் திருட்டுக்கும் காதல் சேர்க்கும்
கவலையைத் திருடி கழித்துப் போகும்
களைப்பைத் திருடி தூங்கச் செய்யும்
----------------------------------நாகேந்திர பாரதி

திங்கள், 1 ஜூன், 2009

வந்து விடு கண்ணே

வந்து விடு கண்ணே
-----------------------------
வந்து விடு கண்ணே வந்து விடு
இல்லை எனில் என்னை மறந்து விடு
பின் தொடர்ந்த நாட்கள் நடந்த பின்னே
பார்த்திருந்த நேரம் கடந்த பின்னே
பேசியதும் சிரித்ததும் முடிந்த பின்னே
இன்னுமென்ன வாழ்க்கை எனக்கு இங்கே
சொல்லு வதற்காகச் சொல்லி விட்டேன்
காலம் என்னைக் கடந்து சென்று விடும்
காதல் என்ற வார்த்தை மறந்து விடும்
என்னுயிரும் எங்கோ பறந்து விடும்
------------------------------------------நாகேந்திர பாரதி

அற்ப சந்தோஷம்

அற்ப சந்தோஷம்

------------------------

கோயிலைச் சுற்றி வரும் போது ஒரு குரல்

'ராமசாமியா, எப்பிடியிருக்கே'

இடுக்கிய கண்களுக்குள் இரண்டாய்த்

தெரிந்தவன் சுப்பிரமணி

கோலி விளையாட்டில் முக்குட்டைப் பெயர்த்தவன்

காதலித்த பெண்ணைத் தாலிகட்டிப் போனவன்

பதவி உயர்வினைத் தட்டிப் பறித்தவன்

வாயெல்லாம் பல்லோடு சிரித்த முகத்தவன்

இப்போது பொக்கை வாயாய்

எனக்கு இன்னமும் இரண்டு பல் இருக்கிறது

சந்தோஷத்தோடு 'வாடா' என்றேன்'

-------------------------------நாகேந்திர பாரதி

----------------------------------------------------------

போதையின் பாதை

போதையின் பாதை
----------------------------
போதையின் பாதையில் போகிற பேதை
கோதையின் நினைப்பினில் குழைகிற வாதை
கண்களின் கொக்கியில் மாட்டிய நேரம்
பெண்ணவள் பார்வையில் பிழிந்ததன் சாரம்
வார்த்தையே இன்றி வளர்ந்திட்ட தாகம்
போர்த்திய பார்வையில் பூத்திட்ட மோகம்
எதிரிலே இருந்தால் எண்ணமே இன்பம்
கதியெனக் கிடக்கும் காதலே துன்பம்
பிரிந்தனள் மறந்தனள் பெண்ணவள் துறந்தனள்
சரிந்தவன் மதுவினில் சகலமும் மறந்தனன்
-------------------------------------------நாகேந்திர பாரதி
--------------------------------------------------------------------------

சமையல் சந்தோஷம்

சமையல் சந்தோஷம்

---------------------------

பாத்திரம் கழுவ வேண்டாமென்றால்

சமையலும் கூட ஒரு சந்தோஷம்

காய்கறிக் கடைக்குத் துணையோடு
சேர்ந்து செல்வது சந்தோஷம்

ஒடித்தும் பிடித்தும் வளைத்தும்
வாங்கும் வாகும் சந்தோஷம்

காயை வெட்டிப் போடும்போது

கேட்கும் சப்தம் சந்தோஷம்

வறுவல் பொறியல் செய்யும்போது

வாயில் போடும் சந்தோஷம்

எண்ணை தாளித்து இறக்கும்போது

வாசம் பிடிக்கும் சந்தோஷம்

சோறும் குழம்பும் காய்கறியும்

கலக்கும் காலம் சந்தோஷம்

நன்றாய் இருக்கு நாவிற்கென்று

பிடித்தவர் சொன்னால் சந்தோஷம்

பழைய குழம்பைச் சுட வைத்து

மறுநாள் சாப்பிட சந்தோஷம்

சொந்த பந்தம் எல்லாமே

சேர்ந்து சுவைப்பது சந்தோஷம்

----------------------------------------------நாகேந்திர பாரதி

-----------------------------------------------------------------------------

அதனதன் போக்கு

அதனதன் போக்கு

------------------------

கண்மாய்க் கரைச் சகதியில்

தன் போக்கில் கொடி நீட்டி

மண்டிக் கிடக்கும் தாவரம்

ஊர்க் கோடிச் சாவடியில்

கழனித் தண்ணி குடித்து விட்டு

அசை போட்டுக் கிடக்கும் எருமை

காற்றுக்கு மட்டும் அசைந்து கொண்டு

பூப் பூத்து இலை உதிர்த்து

நெட்டையாய் நிற்கும் மரம்

சுற்றிக் கரை சூழ்ந்திருக்க

அடியில் மீன்கள் ஆடியிருக்க

தண்ணியும் தானுமாய்க் குளம்

மக்களும் ஊர்திகளும் மிதித்தோட

வளைந்து நெளிந்து நீண்டு

மல்லாந்து கிடக்கும் மண் வீதி

மண்ணும் செங்கல்லும் கலந்து கட்டி

மனிதர்களை உள்ளடக்கி

மூச்சும் பேச்சுமின்றி வீடுகள்

பிறந்து வளர்ந்து சிரித்து

இன்பம் துன்பம் பார்த்து

ஏதோ நினைப்பில் மக்கள்

-----------------------------------------நாகேந்திர பாரதி