வெள்ளி, 29 மே, 2009

மண்டபத்தின் அழுகை

மண்டபத்தின் அழுகை
-----------------------------
இந்த மண்டபத்திற்கும் ஒரு இறந்த காலம் உண்டு
அப்போது கரிக் கிறுக்கல்களும் சாணிச் சறுக்கல்களும் இல்லை
சுத்தமான சுவர்கள் சுற்றிலும் பூக்கூட்டம்
வந்து போனவர்களில் ஒரு காதல் ஜோடியும் உண்டு
அவர்களின் வாடிக்கை நேரம் அதிகாலை ஐந்து மணி
ஊர் விடிவதற்கு ஒரு மணி முன்பு
அவர்கள் பேசியதை விட அழுததே அதிகம்
காதலர்கள் ஜெயிப்பது கதைகளில் தானோ
வழக்கமான பிரிவுதான் வாலிபமும் கடந்தது
மறுபடியும் வந்தார்கள் சடலங்களாய் சாணி நடுவே
மண்டபம் மட்டும் தெரிந்து அழுகிறது
------------------------------------நாகேந்திர பாரதி
---------------------------------------------------------------

எப்படியாவது சண்டை

எப்படியாவது சண்டை

-------------------------------

எப்படியாவது சண்டை போட வேண்டும் எங்களுக்கு

மதங்களுக்கு இடையே சண்டை

ஒரே மதமென்றால் உட்சாதிகளுக்கு இடையே சண்டை

ஒரே சாதியென்றால் ஊர்களுக்கு இடையே சண்டை

ஒரே ஊரென்றால் தெருக்களுக்கு இடையே சண்டை

ஒரே தெருவென்றால் வீடுகளுக்கு இடையே சண்டை

ஒரே வீடென்றால் உறவுகளுக்கு இடையே சண்டை

மதக் கலவரத்தில் தொடங்கி

மாமிமருமகள் நிலவரம் வரை

எப்படியாவது சண்டை போட வேண்டும் எங்களுக்கு

---------------------------------------------------நாகேந்திர பாரதி

----------------------------------------------------------------------

பழக் கடை அம்மா

பழக் கடை அம்மா
-----------------------
அந்தப் பழக் கடைக்கே அடையாளம் அந்த அம்மாதான்
வெட்டி வைத்த பழத்திற்கு ஈ மொய்க்கா ஈர வலை
தர்பூசணி ஆகட்டும் பப்பாளி ஆகட்டும்
தட்டிப் பார்த்தே தரத்தை சொல்லி விடும்
கையாலே எடை போட்டு காசைக் கேட்டு விடும்
தூக்க மாட்டாமல் உடம்பைத் தூக்கி வரும்
சிரிப்பும் பொட்டும் எப்பவும் பெரிசு
நேத்து போஸ்டரிலும் பொட்டும் சிரிப்புமாய்
முந்தா நாளு முடிஞ்சு போச்சாம்
எந்தப் பழமுமே இனிப்பதில்லை இப்போது
--------------------------------------நாகேந்திர பாரதி
-----------------------------------------------------------------------

புதன், 27 மே, 2009

சொல்லும் பொருளும்

சொல்லும் பொருளும்
--------------------------------------
சொல் புதிது பொருள் புதிது சொல்லிவிட்டுப் போனார்
சொல்லில் மட்டும் தங்கிலிஷ் தங்கியது
பொருளில் ஒன்றும் புதிதாகக் காணோம்
அந்தக் காலக் குதிரை ஆட்டோவை முந்தி விடும்
ஜெட் ஏர்வேய்ஸ்தான் புஷ்பக விமானம்
கிங் பிஷெரும் 'கள்'ளாக இருந்தது
சின்ன வீடும் 'அகத்'துத் துறைதான்
கடாரம் கொண்டவன் கண்டமும் கொள்வான்
காதலில் தோற்றவர் அன்றும் இன்றும்
கம்ப்யூட்டர் பெண்கள் குந்தவையின் மறுபக்கம்
வந்தியத் தேவன்தான் வரக் காணாம்
-------------------------நாகேந்திர பாரதி
---------------------------------------------------------------------------------

இருந்து என்ன சாதிச்சே

இருந்து என்ன சாதிச்சே

---------------------------------

வேலையிலே ஒழைச்சியா வேர்வையை வெதச்சியா

பார்வையிலே கனிஞ்சியா பண்போடு நடந்தியா

மனைவிக்கு சமைச்சியா மகனுக்கு துவச்சியா

நட்புக்கு மதிச்சியா நாளுக்கும் மகிழ்ச்சியா

இயற்கையை ரசிச்சியா இன்பத்தை புரிஞ்சியா

கர்வத்தைக் கலைஞ்சியா கண்ணீரைச் சொரிஞ்சியா

பெருசுகளைப் பாத்தியா பேசிச் சிரிச்சியா

எசைபாட்டு எடுத்தியா இரங்கற்பா தொடுத்தியா

கூடிப்பேசி வாழ்ந்தியா கூட்டுறவாய் இருந்தியா

இதக் கூடச் செய்யாம இருந்து என்ன சாதிச்சே

-----------------------------------நாகேந்திர பாரதி

------------------------------------------------------------------------

திங்கள், 25 மே, 2009

ஆசை வட்டம்

ஆசை வட்டம்
------------------
நடந்து போகும் போது சைக்கிளில் போக ஆசை
சைக்கிளில் போகும் போது ஸ்கூட்டரில் போக ஆசை
ஸ்கூட்டரில் போகும் போது பைக்கில் போக ஆசை
பைக்கில் போகும் போது காரில் போக ஆசை
காரில் போகும் போது லிமோவில் போக ஆசை
லிமோவில் போகும் போது ஹெலிகாப்டரில் போக ஆசை
ஹெலிகாப்டரில் போகும் போது சார்ட்டரில் போக ஆசை
சார்ட்டரில்போகும் போது விண்ணில் பறக்க ஆசை
விண்ணில் பறக்கும் போது மண்ணில் நடக்க ஆசை
நடந்து போகும் போது சைக்கிளில் போக ஆசை
----------------------------------------------நாகேந்திர பாரதி
------------------------------------------------------------------------------

சனி, 23 மே, 2009

சேலை எடுக்கும் வேலை

சேலை எடுக்கும் வேலை

------------------------------------

சேலை எடுக்கச் சேர்ந்து போனவர்களுக்குத் தெரியும்

சொன்ன கடைக்குப் போகாமல் சென்னைக் கடையெல்லாம் சுற்றுவார்கள்

ஒரு சேலை எடுக்கப்போய் ஒன்பது சேலை எடுப்பார்கள்

சொந்தக்காரர்களுக்கு எடுக்கப் போய் சொந்தமாகவும் எடுப்பார்கள்

ஒரு மணி நேரத்தில் முடிக்கப் போய் ஒரு நாளாய் ஆக்குவார்கள்

ஆயிரம் ரூபாய்க்கு எடுக்கப் போய் ஐயாயிரம் ரூபாய்க்கு தூக்குவார்கள்

அடுத்தவர் எடுக்கும் சேலையை ஆசைப் பார்வை பார்ப்பார்கள்

எல்லாச் சேலையும் எடுத்த பின்பு எதுவும் சரியில்லை என்பார்கள்

வீட்டுக்கு வந்து சேர்ந்த பின்பு மறுநாள் மாற்றப் போவார்கள்

சேலை எடுக்கச் சோர்ந்து போனவர்களுக்குப் புரியும்

----------------------------------------------நாகேந்திர பாரதி

---------------------------------------------------------------------------------

வெள்ளி, 22 மே, 2009

சும்மா இருப்பது எப்படி

சும்மா இருப்பது எப்படி
--------------------------------
சும்மா இருப்பது சுகமென்று சொன்னார்கள்
சும்மா இருந்து பார்த்தால் தெரியும்
சும்மா இருந்தால் சாப்பிடுவது எப்படி
சும்மா இருந்தால் தண்ணியும் கிடையாது
சும்மா இருந்தால் நடப்பதும் கூடாது
சும்மா எப்படி பேசாமல் இருப்பது
சும்மா சிரித்தால் பைத்தியம் என்பார்கள்
சும்மா எங்காவது போவது எதற்கு
சும்மா ஏதாவது சொல்லி விட்டார்கள்
சும்மா இருந்து பார்த்தால் தெரியும்
--------------------------------------நாகேந்திர பாரதி
-------------------------------------------------------------------------------------

வியாழன், 21 மே, 2009

கூடு விட்டுக் கூடு

கூடு விட்டுக் கூடு
----------------------
வாடகை வீடு மாறுவது கூடு விட்டுக் கூடு
பரணைக் காலி செய்ய பெருச்சாளி முறைக்கும்
பழைய தொலைந்த புத்தகம் கிழிந்த முகம் காட்டும்
எத்தனை பல்பு முதலில் இருந்ததென்ற எண்ணிக்கை
அடித்த ஆணிகளை எடுப்பதா விடுப்பதா
ரேஷன் கார்டுக்கு சரண்டர் சர்டிபிகேட்
கட்டவேண்டிய பில்கள் பாக்கி உள்ளதா
கொடுத்த அட்வான்ஸ் உடனே கிடைக்குமா
சொல்ல வேண்டியது யார் யாருக்கு
புது வீட்டு ஓனருக்கு புன்னகை முகம்
-------------------------- நாகேந்திர பாரதி
---------------------------------------------------

புதன், 20 மே, 2009

நடக்கும்போது நடக்கிறது

நடக்கும்போது நடக்கிறது

-------------------------------------

நடந்து போகையிலே என்னென்னமோ நடக்கிறது

செருப்பு போடாவிட்டால் தரை சுடுகிறது

புதுச் செருப்பு போடும்போது விரலைக் கடிக்கிறது

மழைக் காலத்தில் சகதி அடிக்கிறது

வேக வண்டிகளால் தண்ணீ அபிஷேகம்

ஓரமாகப் போனால் கல்லும் மண்ணும்

நடுவே போனால் தார்க்கல் ஒட்டுகிறது

அவசரமாக ஓடும்போது செருப்பு பிய்கிறது

நிதானமாகப் போனாலும் யாரோ திட்டுகிறார்கள்

கார் ஒன்று வாங்கி விடலாம் பணம்தான் வேண்டும்

--------------------------------------நாகேந்திர பாரதி

------------------------------------------------------------------------------

செவ்வாய், 19 மே, 2009

போரடிக்காத போரடிப்பு

போரடிக்காத போரடிப்பு
-------------------------------
ஒப்படி முடிந்தவுடன் தலைச் சுமையாய் நெற் கதிர்கள்
ஓடிவந்து இறக்கியதும் கட்டாகச் சேர்ந்து விடும்
ஓங்கி அடிக்கையிலே உதிரும் நெல் மணிகள்
கும்பலாகக் கூடும்போது கூடி வரும் பறவையெல்லாம்
வைக்கோல் போரெல்லாம் தனியாக மேடையாகும்
தானிய பண்ட மாற்றி நிலக்கடலை மொச்சை வரும்
கொறித்தபடி வைக்கோலில் சாயும்போது உடல் அரிக்கும்
இருந்தாலும் மேலேறி உட்கார்ந்தால் சுகமேதான்
பறக்கின்ற நெற் தூசி முகமெல்லாம் படர்ந்து விடும்
போரடிக்கா போரடித்து நெல் மூடை சேர்ந்து விடும்
--------------------------------------------- நாகேந்திர பாரதி
--------------------------------------------------------------------------

திங்கள், 18 மே, 2009

உயிரின் தரிசனம்

உயிரின் தரிசனம்
--------------------------
மெல்ல மெல்ல மேலே போ
மனிதர்கள் வீடுகள் சுருங்கி புள்ளிகளாய்
இன்னும் மேலே நகரமே கொடி
அதற்கும் மேலே அருகே மேகங்கள்
கீழே நிறங்களாய் நீரோட்டமும் நிலங்களும்
கண்டங்கள் சேர்ந்த காட்சி அருமை
இது என்ன பந்துகள் பூமியா சந்திரனா
எத்தனை கோலங்கள் இன்னும் மேலே
விண்ணே வெளிச்சம் வெளிச்சம் வெளிச்சம்
உள்ளே உள்ளே உயிரின் தரிசனம்
-----------------------------------------நாகேந்திர பாரதி
---------------------------------------------------------------------------------

சனி, 16 மே, 2009

ஓர சீட்டு உல்லாசம்

ஓர சீட்டு உல்லாசம்

-------------------------

ஓர சீட்டில் உட்கார

இடம் கிடைத்தால்

இன்பமும் உண்டு

துன்பமும் உண்டு

பச்சை மரங்களின்

ஓரமும் உண்டு

எச்சில் காகத்தின்

ஈரமும் உண்டு

வேகக் காற்றின்

'பளிச்'சும் உண்டு

வெத்திலைச் சீவலின்

'புளிச்'சும் உண்டு

சாரல் தூறலின்

சுகமும் உண்டு

வீறும் மழையின்

வேகமும் உண்டு

ஓரத்தை பிடிக்க

ஓடிப் போகாமல்

இருந்த இடத்தில்

இருந்தால் சுகமே

-----------------------------நாகேந்திர பாரதி

-------------------------------------------------------------------

வெள்ளி, 15 மே, 2009

சொக்க வைத்த சுசீலா

சொக்க வைத்த சுசீலா

----------------------------

உச்சரித்த 'கள்' ளினிலே

உள்ளிருக்கும் கள்ளின் போதை

வாயசைக்கும் நடிகை உன்

வார்த்தையினால் அழகாவாள்

தாய்மொழியாய் இல்லெனினும்

தமிழுக்குள் பால் குடித்தாய்

கண்ணதாசன் வாலியின்

கவிதைக்குத் தேன் கொடுத்தாய்

வானொலியின் வாய் அருகே

காதுகளைக் கட்டி வைத்தாய்

தேன் குரலைக் கேட்கையிலே

பசி தாகம் ஓட்டி வைத்தாய்

தனியாகப் பாடுகையில்

தாய்மைக் குரல் கொடுத்தாய்
சேர்ந்து பாடுகையில்
செல்லக் குரல் தொடுத்தாய்

உன் குரலைக் கேட்டு

வளர்ந்ததனால் தானோ

இன்னமும் காதல்

செய்து கொண்டு இருக்கின்றோம்

--------------------------------நாகேந்திர பாரதி

------------------------------------------------------------------

செவ்வாய், 12 மே, 2009

கோபுர தரிசனம்

கோபுர தரிசனம்
------------------
வவ்வால் புழுக்கை
மெத்தைப் படிக்கட்டு
இருட்டு ஏற்றத்தில்
இடிக்கும் கற்கள்
ஒவ்வொரு நிலையிலும்
கரிக்கட்டிக் காவியங்கள்
ஏழாம் நிலையிலே
ஏறினால் உச்சி
பக்கத்தில் அடிக்கும்
படபட புறாக்கள்
உத்தர கோசமங்கை
ஊரின் தரிசனம்
கண்மாய் கருவை
காரை வீடுகள்
கோபுர உச்சியில்
மனிதன் எறும்பு
குவலய உச்சியில்
இன்னமும் சிறிசு
இறங்கிய பின்னே
ஏற்றத் தாழ்வு
---------------------------------நாகேந்திர பாரதி
--------------------------------------------------------------------------------

சனி, 9 மே, 2009

பாதகத் தீ

பாதகத் தீ
---------------
சிரிச்சு சிரிச்சு
சொக்க வெச்சே
பாத்து பாத்து
பதற வெச்சே
தொட்டு தொட்டு
துடிக்க வச்சே
தூரப் போனா
துவள வெச்சே
கோயில் சினிமா
கூட வந்தே
தேரு திருவிழா
தேடி வந்தே
கடலை பொரியும்
வாங்கி வந்தே
குழம்பும் சோறும்
ஊட்டி விட்டே
படிப்பும் பணமும்
பாத்த பின்னே
பறந்து போனே
பாதகத் தீ
--------------------------நாகேந்திர பாரதி
----------------------------------------------------------------------

வெள்ளி, 8 மே, 2009

கிராம நாட்கள்

கிராம நாட்கள்

-----------------

வாசல் திண்ணை

வெயில் நேரத் தூக்கத்திற்கும்

இரவு நேரத்து புரணிக்கும்
ஏற்ற மேடை

ஓரமாய் நிற்கும்

வேப்ப மரத்தடியில்

எப்போதும் ஒரு நாய்

ஏக்கத்தோடு பார்க்கும்

கூரையும் ஓடுமான வீட்டுக்குள்

நுழைந்து திரும்பினால்

சட்டி பானைகளுக்குநடுவில்
சாணி மெழுகிய தரை

ஓரமாய் நிமிர்த்து வைத்திருக்கும்

ஈசிச் சேரை இழுத்துப் போட்டு

கட்டையைச் சொருகிச் சாய்ந்தால்

காலிடுக்கில் இடிக்கும்

சுவரைப் பிளந்த

களிமண் சன்னலின் வெளியே

வயலும் பனை மரமும்

ஓவியமாய்த் தெரியும்

காலை நேர பழைய சோறும்

மாலை நேர மீன் குழம்பும்

இடையே வயக்காட்டு வேலையுமாய்

கிராமம் ஒரு சுவர்க்கம்

--------------------------------------நாகேந்திர பாரதி

----------------------------------------------------------------------------

செவ்வாய், 5 மே, 2009

ஆகாயமும் அவனும்

ஆகாயமும் அவனும்


------------------------


மேகங்கள் எங்கோ

போகின்றன

பறவைகள் எங்கோ

பறக்கின்றன

சில நேரம் மழை

கொட்டுகிறது

சில நேரம் வெயில்

வாட்டுகிறது

பகலில் சூரியன்

இரவில் சந்திரன்

வெளிச்சம் வருகிறது

இருட்டும் வருகிறது

கண் சிமிட்டும்

பல நட்சத்திரங்கள்

ஏதாவது நிகழ்ச்சிகள்

அரங்கேற்றம் அங்கே

ஆகாயம் பாட்டுக்கு

இயங்கிக் கொண்டு மேலே

அவன் பாட்டுக்கு

பிச்சை எடுத்துக் கொண்டு கீழே

-------------------------------நாகேந்திர பாரதி


------------------------------------------------------------------

திங்கள், 4 மே, 2009

ஞாபகம்

ஞாபகம்
--------------
மீனோடு சேர்த்து
கண்மாய் ஞாபகம்
பூவோடு சேர்த்து
குளம் ஞாபகம்
பிரம்போடு சேர்த்து
வாத்தியார் ஞாபகம்
உணவோடு சேர்த்து
அம்மாச்சி ஞாபகம்
கல்லூரியோடு சேர்த்து
தாத்தா ஞாபகம்
காப்பியோடு சேர்த்து
நண்பன் ஞாபகம்
இரவோடு சேர்த்து
உறக்கம் ஞாபகம்
இளமையோடு சேர்த்து
காதல் ஞாபகம்
காதலோடு சேர்த்து
உன் ஞாபகம்
உன்னோடு சேர்த்து
என் ஞாபகம்
----------------------நாகேந்திர பாரதி
----------------------------------------------------------------

ஞாயிறு, 3 மே, 2009

போக வேண்டும்

போக வேண்டும்
---------------------
அம்மா காய்கறி வாங்கி
வரச் சொன்னாள்
எனக்கு காதலியைப் பார்க்கப்
போக வேண்டும்
அப்பா வேலை தேடித்
பார்க்கச் சொன்னார்
எனக்கு அவளைத் தேடிச்
செல்ல வேண்டும்
தங்கை புத்தகம் வாங்கி
வரச் சொன்னாள்
எனக்கு பாடம் படிக்கப்
போக வேண்டும்
தம்பி கடலைமிட்டாய் வாங்கி
வரச் சொன்னான்
எனக்கு காதல்மிட்டாய் சாப்பிடப்
போக வேண்டும்
எல்லோரும் ஏதேதோ வாங்கி
வரச் சொல்கிறார்கள்
எனக்கு வாங்க வேண்டியதை
வாங்க போக வேண்டும்
-------------------------------------நாகேந்திர பாரதி
---------------------------------------------------------------------------

சனி, 2 மே, 2009

மதுரை மணம்

மதுரை மணம்

----------------

ஆடி சித்திரை மாசி

ஆவணி வெளி வீதிகள்

மாரட் வடம் போக்கி

மஹால் மஞ்சனத் தெருக்கள்

கோயிலைச் சுற்றி வீதிகள்

குறுக்கும் நெடுக்கும் தெருக்கள்

மார்கெட் சகதி வழுக்கும்

மல்லிகைப் பூவு மணக்கும்

ஆரிய பவனும் உண்டு

அசைவ விலாஸும் உண்டு

இட்டிலி சட்டினி ஏழு

கொத்துப் புரோட்டா கறி

கோயில் விழாவும் உண்டு

கொட்டகை சினிமாவும் உண்டு

எம்ஜியார் வெறியரும் உண்டு

சிவாஜி ரசிகரும் உண்டு

வேர்வை உழைப்பும் உண்டு

வெட்டி பந்தாவும் உண்டு

கோபக் கிறுக்கும் உண்டு

கும்பிடும் குணமும் உண்டு

----------------------------நாகேந்திர பாரதி

---------------------------------------------------------------------------

வெள்ளி, 1 மே, 2009

மறுபடி எப்போது

மறுபடி எப்போது
--------------------
சைக்கிள் சீட்டில்
உட்கார வைத்து
லேசாகப் பிடித்தபடி
கூடவே ஓடி வந்தவன்
குளத்துப் படியில்
குப்புறப் படுத்து
நீச்சல் அடிக்க
கால்களை தாங்கிப் பிடித்தவன்
சொரசொர மரத்தின்
கிளைகளில் ஏறி
கவட்டையில் அமர
பாதத்தை உந்தி விட்டவன்
பாடம் மறந்து
பரிதவித்த போது
வாய்ப்பாட்டை எல்லாம்
ஒப்பிக்கச் சொல்லி கேட்டவன்
அதோ போகிறான்
மூங்கிலில் படுத்து
மறுபடி நாங்கள்
பிறக்கப் போவது எப்போது
------------------------------நாகேந்திர பாரதி
-------------------------------------------------------------------------------