வியாழன், 30 ஏப்ரல், 2009

திரும்பிய உயிர்

திரும்பிய உயிர்

-------------------

இடிச் சத்தம்

காதைப் பிளந்தது

தலை எங்கோ

போய் இடித்தது

வாயில் ஊறிய

எச்சில் கசந்தது

இருட்டு ரோட்டில்

எங்கோ பயணம்

திடீர் வெளிச்சம்

தின்று முடித்தது

அதல பாதாளத்தில்

விழுந்த அதிர்ச்சி

கருப்பு நிசப்தத்தில்

கரைவது போல

எங்கோ ஒரு

மின்மினிப் பூச்சி

கசகச வென்று

கண்கள் சுரந்தன

லேசான ஒளியில்

மனைவியின் முகம்

-------------------------------------நாகேந்திர பாரதி

------------------------------------------------------------------------------

புதன், 29 ஏப்ரல், 2009

காதல் இதயம்

காதல் இதயம்

------------------

அடிக்கடி மூச்சு

வாங்குகிறதா

அலைஅலையாய்

உள்ளே ஓடுகிறதா

மேல்கீழ் ஏறி

இறங்குகிறதா

மேனியில் வேர்வை

ஊறுகிறதா

பஞ்சாய் கண்கள்
அடைக்கிறதா

பயமும் பொங்கி
வருகிறதா

இரத்த வெப்பம்
உணர்கிறதா

ஏதோ மாதிரி

இருக்கிறதா

வயதில் வந்தால்

காதல் நோய்

வயதாகி வந்தால்

இதய நோய்

---------------------------நாகேந்திர பாரதி

--------------------------------------------------------------------------------

நல்ல நேரம்

நல்ல நேரம்
---------------
விரலைப் பற்றிக் கொண்டு
வருபவள்
விரலில் நிச்சய மோதிர
நேரம்
பாடம் படித்துக் கொண்டு
இருப்பவள்
பாடம் மாறப் போகும்
நேரம்
வேலை பார்த்துக் கொண்டு
இருப்பவள்
வேளை கூடப் போகும்
நேரம்
ஒருத்தி உலகம் என்று
இருப்பவள்
ஒருத்தி ஒருவன் ஆகும்
நேரம்
தாயின் மடியில் மகிழ்ந்து
இருப்பவள்
தாயாய்த் தானும் ஆகும்
நேரம்
-------------------------------------நாகேந்திர பாரதி
----------------------------------------------------------------------

செவ்வாய், 28 ஏப்ரல், 2009

கருவாயன் கல்யாணம்

கருவாயன் கல்யாணம்
-----------------------------
கண்மாயின் மீன் குஞ்சு
காலிடுக்கைக் கடிக்கும்
கருவமரத் தேன்கூடு
இனிப்போடு கொட்டும்
புளியமரம் பார்த்தாலே
நாக்கு பொத்துப் போகும்
பொங்கலிடும் போதெல்லாம்
புகை மூட்டம் மூடும்
பஞ்சாயத்து ரேடியோ
பகலெல்லாம் பாடும்
பருவத்துக் கிளர்ச்சிகளை
சினிமாவும் கூட்டும்
ஊர்கூடி குலவையிட
நாதசுரம் ஊதும்
உன்மத்த இளவட்டம்
கம்பெடுத்து சுத்தும்
கருவாடும் கறிமீனும்
கார சார மாகும்
கருவாயன் கருவாச்சி
கல்யாணம் கூடும்
-------------------------------நாகேந்திர பாரதி
---------------------------------------------------------------------------------

ஞாயிறு, 26 ஏப்ரல், 2009

கூலி விரல்கள்

கூலி விரல்கள்
---------------------
தீக்குச்சிகளாய்
சில விரல்கள்
பீச்சு சுண்டலாய்
சில விரல்கள்
பால் பாக்கெட்டாய்
சில விரல்கள்
காபி டீயாய்
சில விரல்கள்
கடைப் பொட்டலமாய்
சில விரல்கள்
சேற்று வயலாய்
சில விரல்கள்
சேலை மடிப்பாய்
சில விரல்கள்
பேப்பர் பத்திரிக்கையாய்
சில விரல்கள்
பிச்சைப் பாத்திரமாய்
சில விரல்கள்
கூலி விரல்கள்
குழந்தை விரல்கள்
---------------------------நாகேந்திர பாரதி
-------------------------------------------------------

சனி, 25 ஏப்ரல், 2009

தனித் தனிப் பருவம்

தனித் தனிப் பருவம்
------------------------
தான் படித்தது
முதல் பருவம்
பிள்ளைகள் படித்தது
அடுத்த பருவம்
தான் வேலை செய்தது
முதல் பருவம்
பிள்ளைகள் வேலை செய்தது
அடுத்த பருவம்
தனக்கு குடும்பமானது
முதல் பருவம்
பிள்ளைகளுக்கு குடும்பமானது
அடுத்த பருவம்
தான் தளர்ந்தது
முதல் பருவம்
பிள்ளைகள் தளர்ந்தது
அடுத்த பருவம்
தண்ட வாளங்கள்
சேருவ தில்லை
விட்டுக் கொடுத்து
விரும்புதல் நன்று
---------------------------------------நாகேந்திர பாரதி
----------------------------------------------------------------------

வெள்ளி, 24 ஏப்ரல், 2009

பசியும் ருசியும்

பசியும் ருசியும்

------------------

ருசியில் சில பேர்

பசியில் பல பேர்

சாம்பார் ரசம்

சாதத்தில் மணம்

பழைய சோறின்

புளிப்பு வாசம்

காயும் கிழங்கும்

வறுவல் பொரியல்

ஊறுகாய் பார்த்தால்

ஊறும் எச்சில்

பழங்களின் சாறைப்

பருகித் திளைக்கும்

தண்ணீர் குடித்து

தாகம் தணிக்கும்

சில்வர் பிளேட்டில்

அறுசுவை உணவு

உள்ளங் கையில்

ஒருசுவைச் சோறு

உண்ண சில பேர்

உழைக்க பல பேர்

------------------------- நாகேந்திர பாரதி

-------------------------------------------------------------------

-------------------------------------------------------------------------

வியாழன், 23 ஏப்ரல், 2009

உங்கள் மதிப்பு

உங்கள் மதிப்பு
-----------------
உங்கள் மதிப்பை
உறைத்துப் பார்க்க
உறவினர் நண்பரிடம்
கடன் கேளுங்கள்
இந்த மாதம்
மருத்துவச் செலவு
திடீர் என்று
திருவிழாச் செலவு
கல்லூரி பீசுக்கு
கடைசித் தேதி
இன்னும் ஒருவருக்கு
இப்பத்தான் கொடுத்தேன்
போன மாதம்
வந்து இருக்கலாம்
அடுத்த மாதம்
முயற்சி செய்கிறேன்
கடனை மறுக்கும்
சாக்குப் போக்கில்
உங்கள் மதிப்பின்
உண்மை புரியும்
----------------------- நாகேந்திர பாரதி
----------------------------------------------------------------------------------

புதன், 22 ஏப்ரல், 2009

வீட்டின் ஓசை

வீட்டின் ஓசை

----------------

ஒவ்வொரு வீட்டிற்கும்

ஒரு ஓசை உண்டு

படுக்கையை சுருட்டும் போதும்

பாத்திரம் கழுவும் போதும்

கும்மித் துவைக்கும் போதும்

குளித்து முடிக்கும் போதும்

சட்டினி அரைக்கும் போதும்

இட்டிலி வேகும் போதும்

கார் கிளம்பும் போதும்

கதவைச் சாத்தும் போதும்

டிவி அலறும் போதும்

குழந்தை அழும் போதும்

பிரார்த்தனை செய்யும் போதும்

பெரியவர் பாடும் போதும்

இரவுச் சிரிப்பின் போதும்

இன்பப் பேச்சின் போதும்

உள் வாங்கிய சத்தத்தை

ஒத்திகை பார்த்திருக்கும்

ஒவ்வொரு வீட்டிற்கும்

ஒரு ஓசை உண்டு

------------------------- நாகேந்திர பாரதி

--------------------------------------------------------------------

திங்கள், 20 ஏப்ரல், 2009

இன்பப் பயணம்

இன்பப் பயணம்

---------------------

ஒவ்வொரு பயணத்திலும்

ஏதோ ஒரு நோக்கம்

ஆபீஸ் பயணத்தில்

அட்டவணை வேலைகள்

கோயில் பயணத்தில்

கோரிக்கைப் பட்டியல்

திருவிழாப் பயணத்தில்

தேரடித் தரிசனம்

சுற்றுலாப் பயணத்தில்

சுற்றுப் புறங்கள்

ஊஞ்சல் பயணத்தில்

உல்லாசத் தலைசுற்றல்

வண்டிப் பயணத்தில்

வைக்கோலின் உரசல்

ரெயில் பயணத்தில்

உட்கார ஓரசீட்டு

விமானப் பயணத்தில்

வெண்மேக வேடிக்கை

இறுதிப் பயணத்தில்

எண்ணங்களே இல்லாமல்

-------------- நாகேந்திர பாரதி

-------------------------------------------------------

சனி, 18 ஏப்ரல், 2009

கிராமத்துக் கிளிஞ்சல்கள்

கிராமத்துக் கிளிஞ்சல்கள்
---------------------------------
கண்மாய் அழிந்த போது
பிடித்த கலர் மீன்கள்
தோலூதித் தங்கம் மின்ன
துடித்த நெருப்புப் பொறிகள்
தோளில் தொங்கிக் கிடந்த
பச்சைக் குத்தாலத் துண்டுகள்
கோயில் கோபுர மாடத்தில்
குடியிருந்த புறாச் சப்தங்கள்
வாசல் சாண மணத்தோடு
வழி அடைத்த கோலங்கள்
மழைக் காலத்தில் பறித்த
கோலி விளையாட்டுச் சிறு குழிகள்
பள்ளி தொடங்கும் நேரம்
பாடிய பக்திப் பாடல்கள்
வெயிலும் மழையும் உறைக்காத
விளையாட்டுப் பருவங்கள்
பஸ்ஸிலும் ரயிலிலும் ஏறி
பராக்குப் பார்த்த பயணங்கள்
கிராமத்துக் கிளிஞ்சல்களாய்
உள்ளே தூங்கும் முத்துக்கள்
-------------------------- நாகேந்திர பாரதி
-----------------------------------------------------------------------------


வியாழன், 16 ஏப்ரல், 2009

உட் சூடு

உட் சூடு

----------

வெளிச் சூட்டை விட

உட் சூட்டில்

அபாயம் அதிகம்

ஜாதிச் சூட்டில்

தேர்தலில் அபாயம்

மதச் சூட்டில்

கலவர அபாயம்

காமச் சூட்டில்

கற்பில் அபாயம்

கோபச் சூட்டில்

வார்த்தை அபாயம்

இளமைச் சூட்டில்

ஏளன அபாயம்

முதுமைச் சூட்டில்

எரிச்சல் அபாயம்

செயற்கைக் குளிரில்

வெளிச்சூடு விரட்டுவோர்

இயற்கைப் பண்பால்

உட் சூட்டை விரட்டினால்

கோடை மாறும்

குற்றாலம் ஆகும்

------------------------------- நாகேந்திர பாரதி

-----------------------------------------------------------------------------------------

புதன், 15 ஏப்ரல், 2009

என்னதான் பேசினோம்

என்னதான் பேசினோம்
--------------------------------
விடுதி அறைக்குள்ளே
அடித்த அரட்டை
எட்டு மணி வரை
இருந்தபடி பேச்சு
பன்னிரண்டு மணி வரை
படுத்தபடி பேச்சு
காலை குளியலில்
கண்மாயில் பேச்சு
இட்லி வாயோடு
மெஸ்ஸிலே பேச்சு
கையில் நோட்டோடு
கல்லூரிப் பேச்சு
மதிய இடைவேளை
மரத்தடிப் பேச்சு
சாயந்தரம் ஆனாலே
சாலையோரப் பேச்சு
என்னென்ன பேச்சு
ஏதேதோ பேச்சு
எவ்வளவோ பேசினோம்
என்னதான் பேசினோம்
----------------------- நாகேந்திர பாரதி
---------------------------------------------------------------------------------

செவ்வாய், 14 ஏப்ரல், 2009

பாவமாக இருக்கிறது

பாவமாக இருக்கிறது

--------------------------

அப்பாவை பார்க்கும்போது

பாவமாக இருக்கிறது

பாசமாக இல்லை

பள்ளிக்கூடம் போகும்போது

கூட வந்திருக்கலாம்

சினிமாவுக்குப் போகும்போது

கூட வந்திருக்கலாம்

விளையாடப் போகும்போது

கூட வந்திருக்கலாம்

பரீட்சையில் தோற்றபோது

ஆறுதல் சொல்லியிருக்கலாம்

காய்ச்சலில் கிடந்தபோது

ஆறுதல் சொல்லியிருக்கலாம்

காதலில் தோற்றபோது

ஆறுதல் சொல்லியிருக்கலாம்

ஆபீஸ் ஆபீஸ் என்று

அலைந்து திரிந்து விட்டு

காசு பணம் மட்டும்

வீட்டுக்குக் கொடுத்துவிட்டு

அறுபது வயதாகி

வீட்டில் படுத்திருக்கும்

அப்பாவை பார்க்கும்போது
பாவமாக இருக்கிறது
பாசமாக இல்லை

------------------------ நாகேந்திர பாரதி

-------------------------------------------------------------------------------

திங்கள், 13 ஏப்ரல், 2009

பொழுது போகிறது

பொழுது போகிறது
-----------------------
ஒவ்வொரு பருவத்திலும் பொழுது
எப்படியோ போகிறது
கடலை மிட்டாய் வாங்க
கடைக்குப் போன பொழுது
பரீட்சைக்கு படித்துக்கொண்டு
பயந்து இருந்த பொழுது
எவளையோ நினைத்துக் கொண்டு
ஏங்கிக் கிடந்த பொழுது
வேலை பார்க்கப் போய்
கற்றுக் கொண்ட பொழுது
விளையாட்டு அரட்டை என்று
நண்பருடன் திரிந்த பொழுது
குடும்பம் குழந்தை என்று
கூடி வாழ்ந்த பொழுது
ரத்தம் வற்றிப் போய்
மருந்தில் வாழும் பொழுது
போனதை நினைத்துப் பார்த்து
புலம்பிக் கிடக்கும் பொழுது
பொழுது போதாது மாறி
பொழுது போகாத பொழுது
-------------------- நாகேந்திர பாரதி
-----------------------------------------------------------------------------------

ஞாயிறு, 12 ஏப்ரல், 2009

பொறுக்காத சூடுபொறுக்காத சூடு
- ( கல்கி - 8-8-2004)
--------------------------------------------------
அதிகாலைக் குளியலுக்கு
சுடுதண்ணீர் கேட்டவளே


புதிதான சீர்உடையை
தேய் சூட்டில் போட்டவளே

கொதிக்கின்ற இட்டிலியை
விரல் வேகப் பிட்டவளே


ஆடிவெள்ளி அம்மனுக்கு
சூடத்தீ தொட்டவளே

பொறுக்கின்ற சூடெல்லாம்
சுகமென்று சொல்லிட்டாய்


கன்னத்தில் முத்தமிட்டு
கண்ணடித்து கையசைத்தாய்


காத்திருக்கும் சூடொன்று
தெரியாமல் புறப்பட்டாய்


விறகுக் கட்டையாக
வீடு வந்து சேர்ந்திட்டாய்

ஆவி போகையிலே
அம்மாவை அழைத்தாயா

கூவிக் குரல் கொடுத்து
கூப்பிட்டுக் களைத்தாயா

பாவி என் மேலே

பாழ் நெருப்பு பாயாதாதாவி மேல் வந்து
தங்கத்தை பார்ப்பேனா

---------------- நாகேந்திர பாரதி
--------------------------------------------------------------------------------------------


வேம்பின் கசப்பு

வேம்பின் கசப்பு (பாக்யா - ஜூலை 2 -2004)
------------------------------------------------------
ஆட்டுக்காலால் நசுங்கவிருந்த
என்னைக் காப்பாற்றினாய்
மண்ணை குழைத்துப் பிடித்து
என்னை நிமிர்த்தி விட்டாய்
வீட்டுப் பாத்திரம் கழுவிய நீரை
எனக்குப் பாய்ச்சச் சொன்னாய்
இளந்தளிராய் முளைத்து வந்த
என் பச்சை இலைகளைப் பார்த்து பரவசப்பட்டாய்
என் குழந்தை பருவம்
அத்தோடு முடிந்தது
நான் வளர வளர
என் குச்சிகளை ஒடித்து பல் துலக்கினாய்
பசுந்தளிரைப் பறித்து
ஆட்டுக்குட்டிக்குக் கொடுத்தாய்
அம்மை போட்ட உன் பிள்ளைக்கு
என் இலையால் உயிர் கொடுத்தாய்
ஒரு நாள் என் நிழலில் நாற்காலி போட்டு
என்னை விலை பேசினாய்
இன்று என் கிளைகளில்
கோடரி விழுவதை பார்த்துக் கொண்டு
நிற்கிறாய் மரமாக
--------------------- நாகேந்திர பாரதி -
----------------------------------------------------------------------------------------

விழாப் பசி

விழாப் பசி
--------------
பாய்ந்து பாய்ந்து
கால் மடக்கி
கை சுழற்றும் சிலம்ப மகன்

மாற்றி மாற்றி
மான் கொம்பின்
விரல் வீச்சில் வேக மகள்

துள்ளித் துள்ளி
ஆடும் கரகம்
தலை நழுவாக் கலைத் தாய்

அடித்து அடித்து
தாரை அதிர
தப்பாட்டத் தந்தை

வருடா வருடம்
வருமானம் வந்தும்
வயிறு பசிப்பது தினசரி
---------------------------- நாகேந்திர பாரதி
------------------------------------------------------------------------------

இளமைத் தொல்லை

இளமைத் தொல்லை
-------------------------
காத்துக் காத்துக்
கனத்த கண்கள்
பார்த்துப் பார்த்துப்
பரவச மாகும்

கோர்த்துக் கோர்த்துக்
குமுறிய இதழ்கள்
பூத்துப் பூத்துப்
புன்னகை விரியும்

மதியம் மாலை
மறுநாள் காலை
பதியம் போட்டுப்
பரவும் கொள்ளை

எதுதான் எல்லை
இளமை தொல்லை
அதுதான் அன்பின்
இன்ப முல்லை

உள்ளம் ரெண்டும்
உணரும் வேலை
கள்ளம் இல்லாக்
காதல் சோலை

-------------- நாகேந்திர பாரதி
-----------------------------------------------------------------------------------

அவ்வளவு தானா

அவ்வளவு தானா
---------------------
வட்ட எருவை
வைக்கும் முன்பு
கிட்டப் பார்க்கக்
கிளரும் எண்ணம்

இந்த முகத்திற்கு
இறுதி நாளா
சொந்த உறவைச்
சுடும் நேரமா

தூக்கித் திரிந்த
தோள்கள் தொலைந்ததா
ஆக்கிக் கொடுத்த
கைகள் அவிந்ததா

பாக்கி இல்லையா
பாசம் இல்லையா
தேக்கித் தந்த
தென்றல் இல்லையா

அவ்வளவு தானா
அணைந்து போனதா
இவ்வளவு தானா
இழப்பே வாழ்வா

----------------- நாகேந்திர பாரதி
=================================