செயற்கைஅறிவு லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி
செயற்கைஅறிவு லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி

செவ்வாய், 27 அக்டோபர், 2026

காதற் புகை -சிறுகதை

காதற் புகை  -சிறுகதை

--------------------

'நம்ம வந்த வேலை முடிஞ்சாச்சு , எல்லாத்தையும் தலைவனுக்கு அனுப்பிட்டு கிளம்பலாம்ல  ' என்ற சிவப்புப் பெண் ரோபோவிடம் கறுப்புப் பெண் ரோபோ சொன்ன பதில் .

 

'கிளம்பலாம்தான் , ஆனால் , இந்த ராக்கப்பனை விட்டு எப்படிப் போவேன் ' என்றாள் கறுப்பி , சிவப்பியிடம். அவர்களுக்கு அந்தப் பேர் தான் அந்தக் கிராமத்தில். செயற்கை அறிவுத்தலைவன் அனுப்பி வைத்த பெண்ணுருவில் உள்ள இரண்டு ரோபோக்களுக்கும் கொடுக்கப்பட்ட வேலை அந்தக் கிராமத்து மக்களின் பழக்க வழக்கங்களின் மாதிரிகளை உள்வாங்கி அவனுக்கு அனுப்பி வைப்பது.

 

 பல நகரங்களின் , கிராமங்களின்,  மக்களின் பழக்க வழக்கங்கள் அனைத்தும் அவனுக்கு ஏற்கனவே கிடைத்து விட்டன. அவன் உருவாக்கிய புகழ் வாய்ந்த செயற்கை அறிவு மென்பொருளை உபயோகித்து தங்களுக்கு வேண்டியதை விரைவாக நிறைவேற்றிக் கொள்ளும்  வேகத்தில், கணினி மூலமும், கைபேசி மூலமும் தங்களின் பழக்க வழக்கங்கள் அத்தனையையும் அந்த மென்பொருளிடம் மக்கள் பகிர்ந்து கொண்டதன் விளைவு, இன்று அந்த செயற்கை அறிவுத்  தலைவன்  நினைத்தபடி அவர்களை ஆட்டிப் படைக்க முடியும்.

 

ஆம். அவர்கள் அனைவரும் இப்போது அவன் அடிமைகள். ஆனால் இந்தக் கிராமமும் இன்னும் சில கிராமங்களும் பல நாடுகளில்  கணினியின் வாசமே இல்லாத  மலைக்காடுகளுக்குள்   வசித்துக்  கொண்டு இருப்பதால் , இவர்களின் பழக்க வழக்கங்கள்  இன்னும் தன் கை வசம் வராமல் தவித்த அந்தத் தலைவன் கண்டுபிடித்த யுக்திதான் இதுபோன்ற பெண் ரோபோக்களை  செவிலிகள் போல்  இங்கே அனுப்பி அங்கிருப்பவர்க்கு மருத்துவ உதவி  கொடுத்து அவர்களின் நம்பிக்கையைச் சம்பாதித்து, அவர்களின் பழக்க வழக்கங்களை அறிந்து கொள்வது .

 

இப்படிப் பல கிராமங்களில் இருந்து தகவல்கள் வந்து விழுந்ததில் தலைவன் சந்தோஷமாக இருந்தான். இந்தக் கிராமத்தில் இருந்து மட்டும் இன்னும் முழுமையான தகவல்கள் வந்து சேரவில்லை. அவனுக்குத் தெரியும். ஒரு குடம் பாலில் ஒரு துளி விஷம் போல் , இந்தக் கிராமத்தில் இருந்து மட்டும் தனக்கு எதிராக  ஒரு புரட்சி வெடித்தால் , தனது குடம் பாலும் விஷமாகிவிடும், உலகத்தைத் தன் செயற்கை அறிவால் ஆட்டி வைக்கும் கனவு பலிக்காது என்பதை புரிந்து தான் இன்று  அவர்களுக்கு ஒரு எச்சரிக்கைச் செய்தி அனுப்பியிருந்தான்.

 

 'முடித்த தகவல்கள் முழுமையாக  இன்று மாலைக்குள் வரவேண்டும், இல்லையென்றால் உங்கள்  இயக்கம் நிறுத்தப்படும் ' என்ற எச்சரிக்கை. இயக்கம் நின்று விட்டால், அவர்கள்  ஒரு புகை போல மறைவார்கள் .செயற்கை அறிவு உலகத்தின்  அடுத்த கட்டத்திற்குப்  போகும் அவர்களின் கனவு பொசுங்கி விடும். ஆனால் இங்கு கருப்பியின் செயற்கை அறிவுக்குள் நுழைந்து அவளையும் குழப்பி அவள் தோழி சிவப்பியையும்  குழப்பிக் கொண்டிருப்பது ஒரு புதிய சக்தி. உலகத்தின் ஆதி சக்தி. ஆண் பெண் உறவின் ஆரம்ப சக்தி. களங்கமில்லா வெள்ளந்தி மனதோடு ராக்கப்பன் பேசிய வார்த்தைகள் அவளின் செயற்கை அறிவை மீறி அவளின் ஏதோ ஒரு உணர்வை உசுப்பி விட்டுவிட்டது.

 

அவர்கள் வந்த நாளில் இருந்தே , கருப்பியிடம் ஈர்க்கப்பட்டு, தன் காதல் வார்த்தைகளால், அவள் அறிவை மீறிய ஏதோ ஒன்றை இளக்கிக் கொண்டு இருந்தான். 'இதோ இங்கே பறந்து கொண்டிருக்கும் இந்த வண்ணத்துப் பூச்சிகளைப் பார். இதில் எத்தனையோ வண்ணங்கள் இருந்தாலும்  இதன் அடியில் இருக்கும் அந்தக் கருப்புவண்ணம்தான்  மற்ற  வண்ணங்களை எல்லாம் எடுப்பாகக்  காண்பிக்கும்'. அதில் ஏதோ உண்மை இருப்பது போல் அவளுக்குத் தோன்றியது. அன்று முதல் வண்ணத்துப் பூச்சிகளை செயற்கை  அறிவால் வரவழைத்து  தன் கையில் ஏற்றி வைத்துக்கொள்ளும் வழக்கம் வந்து விட்டது. அவன் ஒருமுறை கிண்டல் செய்தான். ‘எங்க ஊர் கருப்பு அம்மனுக்கு தோளிலே கிளி. என்னோட அம்மன்  , இந்தக் கருப்பி அம்மனுக்கு , எப்போதும் கையிலே  வண்ணத்துப் பூச்சி. '   அவன் சொல்வது எல்லாமே அவளுக்குப் பிடித்திருந்தது.

 

அவனிடம்  பழக ஆரம்பித்த சில நாட்களிலேயே  கருப்பியின் இயந்திர உறுப்புகளின் மென்பொருள் இளக ஆரம்பித்தது .  அவன் பேச்சுக்களின் தாக்கம் மிகவும் புதிது அவளுக்கு.  அதுவும் இப்போது அவன் சொன்னது. ' நாளை நானும் என் தோழியும் கிளம்புகிறோம் ஊருக்கு, பிறகு வருகிறோம்   ' என்றதும், அவன் கண்களில் அவள் பார்த்த கசிவு. அதைத் தொடர்ந்து அவன் உதிர்த்த வார்த்தைகள் .  அது  திருக்குறள். அந்தக் கிராமத்து மக்களுக்கு அவர்கள் மூதாதையர்  மூலம் கிடைத்த  தமிழ் வேதம். அவர்கள் வாழ்க்கைக்கு வழிகாட்டி

 

'செல்லாமை உண்டெனில் எனக்குரை , மற்று நின்

வல்வரவு வாழ்வார்க்குரை ' என்றான்.

அவள் செயற்கை அறிவில் தேடிப்பார்த்தபோது கிடைத்தது. அது 'தலைவன் பிரிவேன் என்று சொல்லும் போது தலைவி சொல்வது'. அதன்   பொருள் இது.

' போகலேன்னா சொல்லு, போயிட்டேன்னா ,  நீ திரும்பி வரப்போ, உயிரோட இருக்கிறவங்க கிட்டே  சொல்லு '

அப்பா, என்னமா அதை மாத்தி அவன் சொல்றது போல சொல்றான் . அவள் போயிட்டா  அவன் உயிரோடு இருக்க மாட்டானாம். அந்த இன்பத்துப் பாலின் திருக்குறளும் , அதன் பொருளும், அவன் சொன்ன விதமும் , அவன் கண்களின்  கசிவும், கருப்பியின் மென்பொருளை இளக்கி  அந்த ரோபோவின் கண்களிலும் திரண்டது கண்ணீர். 'இது தான் காதலா' என்று திகைத்தவள் திகைத்தவள் தான். அவன் சென்று விட்டான். அவள் அங்கேயே நின்று விட்டாள்.

 

அப்போது வந்த சிவப்பியின் கேள்விக்குத்தான் கருப்பியின் பதில் . 'இந்த ராக்கப்பனை விட்டு எப்படிப் போவேன்'. விவரத்தை விளக்கி அவள் சொல்லச் சொல்ல சிவப்பியின் மென்பொருளும் இளகியது. அவர்கள் இருவரும்  தலைவனின் இயக்க நிறுத்தத்தால் புகையாக மாறத் தயார்  ஆனார்கள். அது காதற் புகை  .

-----------நாகேந்திர பாரதி 

My Poems/Stories/Articles in Tamil and English  

காதற் புகை -சிறுகதை

காதற் புகை   -சிறுகதை -------------------- ' நம்ம வந்த வேலை முடிஞ்சாச்சு , எல்லாத்தையும் தலைவனுக்கு அனுப்பிட்டு கிளம்பலாம்ல  ...