வியாழன், 27 நவம்பர், 2025

ஆடிய ஆட்டம் என்ன -சிறுகதை

 ஆடிய ஆட்டம் என்ன -சிறுகதை

---------------------

(அழகியசிங்கர் போட்ட படத்திற்குக் கேட்ட சிறுகதை)


முகம் முழுக்க அப்பியிருந்த வண்ணப்பூச்சை தண்ணீர் அடித்து அழுத்தித் தேய்த்தும் இன்னும் முழுதும் போகவில்லை. கண்மாயில் போய் முக்குளித்து எழுந்தால் தான் முழுதும் போகும். அந்தக் கிராமத்தின் தெருக்கூத்துக் கலைஞர்களில் முக்கியமான ராஜபார்ட் நடிகர் அவர். சுந்தரம். ' காயாத கானகத்தே ' என்று அவரின் கம்பீரக் குரல் எழும்பினால், பக்கத்துக் கிராமத்துக்கே கேட்கும். ஓடி வந்து விடுவார்கள். இரவு 11 மணிக்கு ஆரம்பிக்கும் நாடகம் காலை நாலு மணி வரை நடக்கும். அது அந்தக் காலம்.


விதைப்பு ஆரம்பிப்பதற்கு முன்பே மழையை வேண்டி நடக்கும் முளைக்கொட்டு உற்சவத்தில் வள்ளி திருமணம் நாடகத்தில் வேலன் , வேடன், விருத்தன் என்று மூன்று வேடத்தில் அவர் பாடிக் கலக்குவதை கேட்டு மயங்கிப் போய் அவரிடம் வந்து விழுந்த எந்தப் பெண்ணையும் அவர் விட்டதில்லை. ஊருக்கு ஒரு வப்பாட்டி என்று வைத்திருந்து வாழ்ந்த காலம் அது அவருக்கு.


வள்ளி வேடக்காரி ஒருத்தியையே மணந்து கொண்டு பேருக்கு குடும்பம் என்று ஒன்று இருந்தாலும் , பிள்ளை குட்டி கொடுக்காமல், அவளும் போன வருடம் தான் செத்துப் போனாள். இதோ அந்தக் கிராமக் கொட்டகையில் ஊர்ச் சனங்கள் கொண்டு வந்து ஊற்றும் கஞ்சியைக் குடித்துக் கொண்டு காலத்தைக் கழித்து வரும் அவருக்கு ஆடி மாதம் வந்து விட்டால் முருகன் வேடம் போட்டுக் கொண்டு உட்கார்ந்த இடத்திலேயே , பிசிறு தட்டிப் போன குரலில் அதே ' காயாத கானகத்தே ' . கேட்பார் தான் யாரும் இல்லை. .


சாயத்தைப் பூசுவதில் உள்ள வேகம், அதைக் கலைப்பதில் இருக்காது அவருக்கு. இன்றும் அதே போல் பாதி கலைந்து போன சாய முகத்தோடு, எண்ணங்களில் பின்னோக்கிப் போய். வள்ளி வேடத்தில் சேர்ந்து நடித்து அவரோடு சேர்ந்து வாழ்ந்து இருந்து, போன சுந்தரி நினைவு மட்டும் மனதில் அலைக்கழிக்க சோகம் ததும்பிய கண்களோடு உட்கார்ந்து இருந்தார்.


இப்போதெல்லாம், வயக்காட்டில் கம்பம் நட்டு, திரையை மாட்டி சினிமா தான் முளைக்கொட்டு உற்சவத்திற்கு . அங்கிருந்து பாட்டு சத்தம் கேட்டது ' ஆடிய ஆட்டமென்ன, கூடிய கூட்டம் என்ன , தேடிய செல்வம் என்ன, திரண்டதோர் சுற்றம் என்ன '


-------------------நாகேந்திர பாரதி


 My Poems in Tamil and English 


கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

ஆடிய ஆட்டம் என்ன -சிறுகதை

 ஆடிய ஆட்டம் என்ன -சிறுகதை --------------------- (அழகியசிங்கர் போட்ட படத்திற்குக் கேட்ட சிறுகதை) முகம் முழுக்க அப்பியிருந்த வண்ணப்பூச்சை தண்...