புத்தக நோய் -சிறுகதை
----------------
(அழகியசிங்கர் கதை புதிது குழுவில் போட்ட படத்திற்குக் கேட்ட சிறுகதை )
சுந்தரின் இந்தப் பழக்கம் ' நல்ல பழக்கம் ' என்று அவன் நினைக்கிறான். ஆனால் அவன் நண்பன் சேகர் இது ' கெட்ட பழக்கம் ' என்று உறுதியாக நம்புகிறான். ஆமாம். இந்த புத்தகம் வாங்குகிற பழக்கம்தாங்க.
அடிக்கடி புத்தகக் கடைகளுக்குச் சென்று புத்தகங்கள் வாங்கிக் குவிப்பது சுந்தரின் பழக்கம். அதுவும் புத்தகக் கண்காட்சி நடந்தால் அங்கு சென்று குறைந்தது ஐம்பது புத்தகங்களாவது வாங்கி வந்து விடுவான். சமீபத்தில் புதிதாக ஒரு பழக்கம். வெளியூர்களில் நடக்கும் புத்தகக் கண்காட்சிகளுக்கும் சென்று புத்தகங்கள் வாங்கி வருகிறான் .
அவன் நண்பன் சேகரின் கவலை இதுதான். 'சரி, புத்தகம் வாங்கலாம். அதை எதற்கு வாங்குகிறோம். படிக்கத்தானே. அந்தப் பழக்கம் தான் சுந்தரிடம் இல்லை. பிறகு எதற்கு வாங்கிக் குவிக்க வேண்டும்.' அதுவும் ஒரு அரசாங்க அலுவலகத்தில் கிம்பளம் வாங்காமல் சம்பளம் மட்டும் கிடைக்கும் வேலை. முக்கால் வாசி சம்பளம் புத்தகத்தில் போய் விடுகிறது. அப்பா வீடு வைத்துப் போய் விட்டதால் இருப்பிடக் கவலை இல்லை. இவனைப் பற்றி பலருக்கும் தெரிந்ததால்,இவனுக்குப் பெண் கொடுப்பாரும் யாரும் இல்லை.
'சரி, இவன்தான் படிப்பது இல்லை, படிக்க ஆர்வமாகக் கேட்பவர்க்கும் கொடுக்க மாட்டான். இரவல் கொடுப்பது தவறு' என்று உறுதியாக மறுத்து விடுவான். நண்பர்களும் குறைவு. சேகர் மட்டும் சிறு பிள்ளையிலேயே சேர்ந்து படித்த பள்ளி நண்பன் என்பதால் இவனிடம் அவ்வப்போது வந்து போய் அறிவுரைகள் கூறிக் கொண்டு இருக்கிறான்.
சேகர் ஒருமுறை தனது ஐந்து வயது மகனுடன் வந்திருந்தவன் திடீர் என்ற அவனைக் காணோம் என்று பதறிப் போய்த் தேடிக் கடைசியில் கண்டுபிடித்தான். அந்த புத்தக அறையில் ஒரு அலமாரியின் ஓரத்தில் ஒளிந்திருந்தவன். சிறிது நேரம் கழித்து வெளி வந்தவன், 'அப்பா, நீ தோத்துப் போயிட்டே, மாமா வீட்டுக்கு தினசரி வந்து இது மாதிரி ஒளிந்து பிடித்து விளையாடலாம், நல்ல இடம் ' என்று சிரித்தவனை என்ன சொல்வது . ' டேய் சுந்தர், உன் புத்தக அறை இதுக்காவது உபயோகப்படும் ' என்று சொல்லிச் சென்றான்.
சுந்தர் அவசரமாக உள்ளே சென்று சேகரின் பையன் தள்ளி விட்டு இருந்த புத்தகங்களை எல்லாம் ஒழுங்காக அடுக்கி வைத்து விட்டு வந்தான் ' புத்தகத்தின் அருமை தெரியாதவன் ' என்று முணுமுணுத்தபடி. இவன் ஏதோ புத்தக அருமை தெரிந்து எல்லாவற்றையும் படித்த அறிஞன் மாதிரி.
சேகர் கண்டுபிடித்து விட்டான். இது ஒரு விதமான நோய் ' புத்தக நோய் ' என்பதை. நண்பன் மேல் உள்ள அனுதாபத்தில், ஒரு மனோ தத்துவ நிபுணரை இவன் வீட்டிற்கு அழைத்து வந்தான் . 'தனது நண்பன் , புத்தகப் பிரியன் ' என்று பொய் சொல்லி.
வழக்கம் போல் சுந்தர் ஆர்வத்துடன் , அந்த மருத்துவரை உள்ளே அழைத்துச் சென்று தனது புத்தக அடுக்குகளை ஆர்வத்தோடு காண்பித்தான்.ஆயிரக் கணக்கில் புத்தகங்கள் . ' இந்த அடுக்கு, கதைகள், அது கவிதைகள். இது கட்டுரைகள் , பகுதி வாரியாகப் பிரித்து உள்ளேன். செயற்கை அறிவுப் பிரிவு கூட உள்ளது. உங்களுக்கு எதில் ஆர்வம் ' என்றான்.
'எனக்குப் பிடித்தது மருத்துவப் பகுதி' என்றார் அவர். அவன் அழைத்துச் சென்ற அந்த இடத்தில் அடுக்கி வைத்திருந்த புத்தகங்கள் அவரை ஆச்சரியத்தில் ஆழ்த்தின. புத்தகங்களில் நம்பர் ஒட்டி , பக்கத்தில் , விபர அட்டவணை நோட்டு ஒன்றும் இருந்தது. அதைப் புரட்டிய அவர் அசந்து போனார்.
அவர் நீண்ட நாட்களாகத் தேடிக் கொண்டு இருந்த ' மூளையின் நரம்பு நுணுக்கங்கள் ' பற்றிய ஆஸ்திரேலியா டாக்டர் ஒருவரின் ஆங்கிலப் புத்தகம் அது. அழகிய அட்டையோடு உயர்தரப் பேப்பரில் அச்சடிக்கப் பட்டு இருந்த அதை ஆர்வத்துடன் தேடி எடுத்துக்
கேட்டார். ' இதை நான் எடுத்துக் கொள்ளலாமா , விலைக்கோ, வாடகைக்கோ ' .
வெடுக்கென்று அதை அவர் கையில் இருந்து பறித்த அவன் சொன்னான் ' 'சேகர் சொல்லவில்லையா உங்களிடம். இந்தப் புத்தகங்களை யாருக்கும் கொடுப்பது இல்லை ' என்றான் .
அந்தப் புத்தகத்தில் தான் அவனின் இந்த வினோத புத்தக நோய் பற்றிய விளக்கங்களும் தீர்வுகளும் அடங்கி இருந்தன.
------------------நாகேந்திர பாரதி
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக