கை ஓட்டம் - சிறுகதை
-----------------
அழகியசிங்கர் கதை புதிது குழுவில் போட்ட படத்திற்குக் கேட்ட சிறுகதை
-----------------
'ஐயா ஓவியத் திலகமே , இந்தப் பெண்ணுக்குப் பத்துக் கைகள் போட்டு ஒவ்வொரு கையிலும் பெண்களின் ஒவ்வொரு வேலைப் பளுவைப் போட்டு , இதிலே முக்கியமான ஒண்ணை விட்டுட்டீங்களே ' என்று கொஞ்சியபடி கேட்ட சுந்தரியை இழுத்து அணைத்தபடி , 'என்னடி கண்ணு , சொல்லேன் ' என்றவனை. விலக்கி விட்டுச் சொன்னாள் . 'பிஸ்டல் ' .
அதிர்ந்த போன சேகர் 'என்ன சொல்றே ' என்றதும்
' நீங்க இந்தக் காலத்திலே தானே இருக்கிறீங்க . பேப்பர் படிக்கிறதில்லையா . பெண்களுக்கு எதிரே எத்தனை வன்முறைகள். சமீபத்தில் கூட கோயம்பத்தூரிலே ' .
'இதுக்கு அவள் கையிலே ஒரு ஆயுதம் , இந்தக் காலத்திற்கு ஏற்றபடி துப்பாக்கி இருக்க வேண்டாமா. அந்தக் காலத்திலேயே நம்ம கிராமத்து
அம்மனுக்கு எல்லாம் எதுக்கு வேலும் அரிவாளும் கொடுத்து வச்சாங்க . பெண்கள் பாதுகாப்புக்குத் தேவைன்னு தானே . நிலைமை இன்னமும் மாறலை தானே.'
' பெரிய ஓவியர். இன்னமும் கரண்டியும் , கைக்குழந்தையுமா
போட்டுக்கிட்டு இருக்கீங்க. பொண்ணுங்களுக்கு . இப்ப நம்ம வீட்டிலே எப்படி இருக்கு . சமையலும் நீங்கதான். மத்த வேலைகளைப் பார்த்துக்கிறதும் நீங்கதான் . நான் பாட்டுக்கு கம்ப்யூட்டரில் வேலை பார்த்துக்கிட்டு இருக்கேன். '
' ஆண்கள் எல்லோரும் எல்லாரும் என்னை மாதிரி ஏமாளிகளா இருப்பாங்களா ' என்று நமுட்டுச் சிரிப்போடு பார்த்தவனை ஒரு முறை முறைத்தாள் .
'ஏய் நீ கோபத்தில் கூட எவ்வளவு அழகா இருக்கே தெரியுமா, அதுவும், அந்த நுனி மூக்கு லேசா சிவக்கிறது ஒரு அழகு ' என்றவன் வார்த்தை களைக் கேட்டுக் கொஞ்சம் வெட்கம் வந்தது அவளுக்கு
'என்னோட கோப மூடை மாத்தாதீங்க. அதாவது நான் சொல்ல வந்தது என்னைத் தொந்தரவே செய்யறதே இல்லை நீங்க. நீங்க பாட்டுக்கு உங்க ஓவியமும் நீங்களுமா உட்கார்ந்திருக்கீங்க ன்னு சொல்ல வந்தேன் . புரியுதா, மர மண்டைக்கு, ' என்று அவன் தலையில் செல்லமாகத் தட்டினாள்
'ஏய் நைசா நான் வேலைக்குப் போகாம இருக்கிறதை குத்திக் காமிக்கிறே இல்லே '
'ஐயோ ராசாவே , அப்படி சொல்வேனா , ஒரு கலைஞனா என்னையும் எப்படி ரசிக்கிறீங்க . அது வேணுமே எனக்கு '
'அது ' என்றபடி அவன் அவளைப் பார்த்த பார்வை.
'ஐயோ, வேணாம் சாமி , இந்தப் பார்வை எல்லாம் இப்ப, வேலை இருக்கு ' என்று விலகிப் போனவள் முதலில் சொன்ன அந்த வார்த்தை 'பிஸ்டல் ' அவன் மனதில் .
இப்போது அந்தப் பெண்ணின் ஒரு கையின் சமையல் பாத்திரத்தை எடுத்து விட்டு அந்த இடத்தில் இடம் பிடித்தது பிஸ்டல்.
திடீரென்று யோசித்து 'பாவம் , பத்துக் கைகள் எதற்கு அவர்களுக்கு. அதுவும் சுமைதானே. இருக்கின்ற இரண்டே கைகள் போதும். ஒன்றில் புத்தகம் , மற்றொன்றில் பிஸ்டல். மனதின் பாதுகாப்புக்கு ஒன்று , உடலின் பாதுகாப்புக்கு ஒன்று , போதுமே' .
'மற்றவை எல்லாம் , வீட்டு வேலையும், வெளி வேலையும் ஆண் , பெண் இருவருக்கும் பொதுவாக இருக்கட்டும் 'என்று ஓவியத்தை மாற்றும் வேலையில் ஈடுபட்டு இருந்தவன் கை ஓட்டத்தை ரசித்தபடி இருந்தாள், கம்பியூட்டரில் ஒரு கண்ணும், கணவன் மேல் ஒரு கண்ணுமாக சுந்தரி .
------------நாகேந்திர பாரதி
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக