நாய் அம்மா - சிறுகதை
-------------
(அழகியசிங்கர் கதை புதிது குழுவில் போட்ட படத்திற்குக் கேட்ட சிறுகதை )
--------
ஒரு மணி நேரத்தில் எத்தனை மாற்றம் தங்கள் வாழ்வில் என்று நெகிழ்ந்து போய் இருந்தன அந்த நான்கு குட்டி நாய்களும் . கால் மடக்கி அமர்ந்திருக்கும் அவள் மடியில் , அவள் ஜீன்ஸில் அமர்ந்து ஒன்றை ஒன்று கொஞ்சும் காட்சியை ரசித்து , அவள் அவற்றைத் தடவி விட்டுக் கொண்டு இருந்தாள். அவர்கள் இருந்த அந்த மெர்சிடிஸ் பென்ஸ் கார் ஓசை இன்றி வீதியில் நாசுக்காக வழுக்கிக் கொண்டு போய்க் கொண்டு இருந்தது .
ஒரு மணி நேரம் முன்பு அவை இருந்த நிலை. தெருவோர நடைபாதையில் குளிரில் நடுங்கியபடி , பார்வையால் தங்கள் தாயைத் தேடியபடி, ஒன்றை ஒன்று பயத்தோடு அணைத்துக் கிடந்தன. பக்கத்துத் தெருவுக்குத் தானே போனாள் அம்மா . தங்கள் பசியாற ஏதேனும் எடுத்துவர. ஏதாவது வாகனத்தில் அடிபட்டு இறந்து விட்டாளா என்று எண்ணவே பயம் அவைகளுக்குள். 'வருவாள் அவள்' என்று தெருவோர முனையையே பயமும் பசியும் கலந்த கண்களால் பார்த்தபடி கிடந்தன.
அப்போது அங்கே நடந்து சென்ற இருவர் பேசிச் சென்ற வார்த்தைகள் அவைகளுக்குப் புரிந்திருக்க நியாயம் இல்லை.
'பாவம்டா , தெருநாய்கள். கம்பி வச்சு இழுத்துப் போட்டு லாரியில் ஏற்றிச் சென்றது பாக்கவே கஷ்டமா இருந்ததுடா . இந்தக் குட்டிகளோட அம்மாவும் அதிலே இருந்திருக்குமோ. '
'இன்னிக்கு ஹிந்து பேப்பரில் கூட தெரு நாய்கள் பற்றி ஒரு கட்டுரை வந்திருக்கு , அவற்றின் முரட்டுத்தனத்திற்குக் காரணம், பயமும், பசியும் என்று . அதையெல்லாம் புரிந்து நடந்துக்கிறவங்க இருக்காங்களா . '
'ஐயோ மழை வேற வரும் போலிருக்கு. குடை வேற இல்லை. நம்மளும் வீட்டுக்கு வெரசா போகணும் 'என்றபடி வேக நடை போட்டனர் அவர்கள். மனிதர்கள்.இரக்கம் வாயில் மட்டும் காட்டி விட்டு விரையும் மனிதர்கள்.
அவர்களின் பாஷை அந்த நாய்க்குட்டிகளுக்குப் புரியா விட்டாலும் . அவர்களின் சைகையில் மழை வருவதை புரிந்துகொண்டு பயந்து போய் குளிரில் வெடவெடத்தபடி தங்களின் மெல்லிய குரலில் கத்திக்கொண்டு கிடந்தன.
அப்போதுதான் அந்த இடத்தில் வழுக்கிய படி வந்து நின்றது அந்த மெர்சிடிஸ் பென்ஸ் . அதில் இருந்து இறங்கிய ஜீன்ஸ் அணிந்த அந்த இளம் பெண் அந்த நான்கு குட்டிகளையும் ' ஹேய் ,ஸ்வீட்டிஸ்' . என்றபடி அள்ளி அணைத்துக் கொண்டு காருக்குள் நுழைந்தாள்.
' தம்பி , மிருகங்கள் காப்பகம் போப்பா ' என்று சொல்லிவிட்டு , அந்தக் குட்டிகளைக் கொஞ்ச ஆரம்பித்தாள்.
இப்போது அவை அங்கே பார்த்தது தங்கள் நாயம்மாவை. தாயம்மாவை. அவளின் மடியின் கதகதப்பில் மயங்கிப் போய், பழைய உற்சாகமும். சிரிப்பும் திரும்ப வந்து விளையாட ஆரம்பித்தன.
----------------நாகேந்திர பாரதி
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக