அம்மாச்சி- சிறுகதை
---------------
'இன்னிக்கு சனிக்கிழமை . வீட்டிலே எண்ணெய் தேய்ச்சுக் குளிக்கணும் . கண்மாயில் பல்லு மட்டும் விளக்கிட்டு வந்திரு . சரியா . சாயந்திரம் சனீஸ்வரனுக்கு எள்ளு விளக்குப் போடணும் ..உனக்கு ஏழரை நாட்டுச் சனி இருக்கு .அதுக்கு வேண்டிக்கிட்டு இருக்கேன்.ஞாபகம் இருக்குல்லே '
' அது என்ன ஏழரை நாடு ' ன்னு கேட்க ஆசைதான். ஆனா அம்மாச்சி விளக்கம் சொல்ல ஆரம்பிச்சா வாசல்லே கண்மாய்க்கு சேர்ந்து போக காத்திருக்கிற சேது ராஜ் கோபிச்சுக்கிருவாப்பிலே .அப்புறம் கேட்டுக்கலாம். ' என்று கிளம்பி விட்டேன் .
எண்ணெய் தேய்ச்சு குளிக்கிற அன்னிக்கு எனக்கு தலைக்கு தேங்காய் எண்ணெய் தேய்ச்சு சீவ மாட்டாங்க . மத்த நாள் எல்லாம் கால் பாட்டில் கொழும்பு தேங்காய் எண்ணெய் தலையிலே கொட்டி தேய்ச்சு எண்ணெய் வழிகிற மூஞ்சியோட தான் பள்ளிக்கூடம் போகணும்.
'பசங்க கேலி பண்ணுறாங்க அம்மாச்சி ' ன்னு சொன்னா 'அவங்க கெடக்கிறாங்க விடு , அப்பத்தான், முடி கொட்டாம , ரெம்ப நாள் கருப்பா இருக்கும் ' பாங்க.
' ராத்திரி தாத்தாவுக்கு கட்டில்லே மெத்தை விரிச்சுப் போட்டு , தலைக்கு, காலுக்கு தலையணை எல்லாம் சரியா வச்சுட்டியா. வா, கதை சொல்றேன் '
ராத்திரி சொல்லுற கதை எல்லாம் ராமாயணம் , மஹாபாரதம் தான்.
'இம்புட்டு கதை இருக்கா அம்மாச்சி ' என்றால் 'இன்னும் இருக்குடா . எங்க அப்பா சொன்னதில் பாதி தான் உனக்கு சொல்லி இருக்கேன் ' .
அம்மாச்சியோட அப்பா தேவகோட்டையில் இருந்து வந்துட்டா, 'சுந்தர காண்டம் ' புத்தகம் எடுத்துக் கொடுத்து ' இதை படிச்சுக் காட்டு அப்பாவுக்கு பிடிக்கும் ' என்று சொல்வார். அதன்படி செய்தால் , மறுநாள், சிறப்பு ஆரஞ்சு மிட்டாய் எல்லாம் உண்டு .
மத்தபடி பூஜை அறையில் பிள்ளையார் சதுர்த்தி, சரஸ்வதி பூஜை , தீபாவளி போன்ற விஷேங்களுக்குச் செய்கின்ற சிறப்புப் பலகாரங்கள் முதல் தட்டு எனக்குத்தான்.
புதன் கிழமை தவிர மத்த நாள் எல்லாம் ஏதாவது விரதம். சாயந்திரம் சேர்ந்து கோயில் . ஞாயிற்றுக்கிழமை சூரியனுக்கு , திங்கட்கிழமை சிவன் , செவ்வாய்க்கிழமை முருகன், வியாழக் கிழமை குரு பகவான் , வெள்ளிக்கிழமை அம்மன் , சனிக்கிழமை சனி பகவான்.
புதன்கிழமையா பார்த்துதான் என்னோட அப்பா, கிராமத்திலிலிருந்து உத்தரகோசமங்கை வருவார். அன்னிக்குத்தான், மாமியார் வீட்டிலே , மட்டன் சாப்பாடு கிடைக்கும் என்று அவருக்குத் தெரியும்.
அம்மாச்சி சேலையில் எப்போதும் ஏதாவது முடிச்சு இருக்கும். அதற்குள் ஒரு ரூபாய் காசு இருக்கும்
'எதுக்கு அம்மாச்சி இது ' என்று கேட்டால்
' சாமிக்கு வேண்டிக்கிட்டது ' என்ற பதிலோடு ஒவ்வொரு முறையும் சேர்ந்து வரும் காரணங்கள் வேறு வேறு.
'உனக்கு அம்மை போட்டதுக்கு இது- நாக நாதருக்கு '
'உனக்கு சிரங்கு வந்ததுக்கு இது - சடச்சி அம்மனுக்கு '
உனக்கு காய்ச்சல் வந்ததுக்கு இது - மங்கலநாதருக்கு '
'ஒரு ரூபாய் போதுமா அம்மாச்சி, சாமிக்கு ' என்று புரியாமல் கேட்டால் சிரித்துக் கொண்டே சொல்வார்.
'சாமி கிட்டே இல்லாததா , நம்ம நம்பிக்கைடா ' என்பார்.
'எனக்கு முடியலேன்னா, நான் தானே சாமிக்கிட்டே வேண்டிக்கணும் . நீங்க ஏன் அம்மாச்சி ' என்றால்
' நீ என் ரத்தம்டா' என்று அணைத்துக் கொள்வார் .
ஆரம்பப் பள்ளி முடித்து , உயர் நிலைப் பள்ளி வரும்போது , அம்மாச்சியை விட்டு நண்பர்களிடம் நெருக்கம் அதிகம் ஆனபோது , அம்மாச்சி , வீட்டு பூஜை அறையில் தான் பெரும்பாலான நேரம் .
ஒரு முறை சேதுராஜோடு சேர்ந்து வீட்டில் சொல்லிக் கொள்ளாமல் குறுக்குப்பாதையில் சைக்கிளில் சேதுக்கரை சென்று கடலில் ஆட்டம் போட்டுக் குளித்துவிட்டு திரும்பி வந்தபோது கிடைத்தது, முதல் அறை கன்னத்தில், தாத்தாவிடம் இருந்து .
அடுத்த அறை விழாமல் தடுத்து அணைத்த அம்மாச்சியின் சேலை வாசம் நீண்ட நாட்களுக்குப் பிறகு . கன்னத்தைத் தடவி விட்டு , 'கடலிலே பாறை எல்லாம் கிடக்குமே. , ஒழுங்கா தள்ளிக் குளிச்சியாடா ,சொல்லாம போனதில் நாங்க எப்படி தவிச்சுப் போயிட்டோம் தெரியுமா. அதான் தாத்தா அடிச்சுட்டாரு ' .அந்த அடியின் வலி பறந்து போனது.
உயர்நிலைப் பள்ளி முடித்து , தொடர்ந்து சிவகங்கை கல்லூரி ஹாஸ்டலில் படித்துக் கொண்டு இருக்கும்போது வந்தது தந்தி .
வீட்டில் நுழைந்து தூங்குவது போல் இருந்த அம்மாச்சியைக் கட்டிப் பிடித்து அழுதபோது நெருடியது , அம்மாச்சி இடுப்பில் ஒரு முடிச்சு. ஒரு ரூபாய் முடிச்சு. இதுவும் எனக்காகத்தானே அம்மாச்சி . எதற்காக. கல்லூரிப் படிப்புக்கா . எந்தக் கோயிலுக்கு, எந்தச் சாமிக்கு, எந்த அம்மனுக்கு அம்மாச்சி .
------------------நாகேந்திர பாரதி
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக