செவ்வாய், 2 செப்டம்பர், 2025

சிறுகதை மதிப்புரை- கதை புதிது நிகழ்வு

 சிறுகதை மதிப்புரை- கதை புதிது நிகழ்வு 

-----------------------------


நன்றி அழகியசிங்கர் . வணக்கம் நண்பர்களே.

ஒவ்வொரு முறையும் அழகியசிங்கர் வித்தியாசமான இலக்கியப் படைப்புகளை நாம் படித்து விமர்சனம் செய்ய வாய்ப்பளித்து நமது இலக்கிய வாசக அறிவை விரிவுபடுத்த முயற்சிக்கிறார். அதற்கு அவருக்கு நன்றி .


அந்த வகையில் அவர் இன்று எனக்கு அளித்துள்ள ஐசக் பேசில் எமரால்ட் அவர்களின் 'கப்பல் ‘1073 ' ஒரு 'அற்புத யதார்த்தக்' கதையாகத் தோன்றுகிறது .

யதார்த்தமும் அற்புதமும் இணைந்து அதன் எல்லைக் கோடுகள்

மறைந்து நம்மை ஒரு மாய உலகிற்கு இட்டுச் செல்லும் கதை. ஒரு பாதிரியாரின் வாழ்க்கைப் பயணத்தின் பக்கங்கள் சில இந்தக் கதையில் என்று எனக்குத் தோன்றுகிறது


ஒரு தனி மனித உணர்வின் பரிமாணங்களை விரித்து நமக்கு ஒரு ஆழமான அனுபவத்தைக் கொடுக்கும் கதை.


'கனவில் வரும் கப்பல் ஒன்று கரைக்கு வரும் என்று கடலுக்குச் சென்று கனவிலேயே காத்திருக்கும் ஒருவனின் கதை' .இந்த வரியைப் படிக்கும்போதே உங்களுக்கு இது கனவா, நினைவா என்ற எண்ணம் எழுகிறது அல்லவா. அந்த எண்ணம் கதை முடியும் வரை நமக்கு இருக்கும்.. ஏன், கதை முடிந்த பின்னும் நமக்கு இருக்கும். அந்த அனுபவத்தைக் கொடுத்ததில்தான் இந்த எழுத்தின் வெற்றி அமைந்திருக்கிறது .


இடையில் நடக்கும் அற்புத நிகழ்வுகள் எல்லாம் நம்மைக் குழப்புவதற்கு அல்ல, சில சிந்தனைகளை நமக்குள் தூண்டவே என்ற நம்பிக்கையுடன் நாம் படித்தால், நமக்கு சில கருத்துக்கள் தோன்றும். அவை எழுத்தாளரின் கருத்தோடு ஒத்துப் போக வேண்டிய அவசியம் இல்லை.


ஒரு ஹாரி பாட்டர் படம் பார்க்கும் போது, அந்த மாய உலகை ரசிக்கும்போது நமக்கு ஒரு இன்பம் கிடைப்பது போல் , இந்தக் கதையின் மாய யதார்த்த உலகிற்குள் புகுந்து வரும் போது , ஒரு மனிதனின் வாழ்வின் நிகழ்வுகளில் புகுந்து அவன் இன்ப துன்பங்களில் கலந்து வந்த ஒரு உணர்வு கிடைக்கலாம். அது சிலருக்கு இன்ப உணர்வாய் இருக்கலாம். சிலருக்குத் துன்ப உணர்வாய் இருக்கலாம்..


அதை ஏற்படுத்திய ஆசிரியரின் வார்த்தை ஜாலங்களில் சிலவற்றை உங்களுடன் பகிர்ந்து கொள்கிறேன் . அதன் முழு உணர்வையையும் அனுபவிக்க, நீங்கள் கதை முழுவதும் படித்து நாயகனோடு சேர்ந்து அந்தக் கடலுக்குள் மீனின் வயிற்றுக்குள் சென்று அந்தக் கப்பல் 1073 ஐ கண்டடைய வேண்டும்.


முதலில் அந்த எண் ஏன்ஜெல் எண் 1073 . அதன் பொருள். ' உங்கள் எண்ணங்களை நம்புங்கள். அது உங்கள் எதிர்காலத்தை தீர்மானிக்கும்' . இந்தப் பொருளை மனதில் போட்டுக்கொண்டு இந்தக் கதையைப் படித்தால் அந்த நாயகனின் கப்பல் எண்ணம் , நிறைவேறிய இந்தக் கதை புரியலாம். இடையில் நடக்கும் போராட்டங்களும் புரியலாம்.


அவரை ஏமாற்றிய ஒரு பூச்சியின் பழைய கதை ஆரம்பத்தில் .

'ஒருநாள் நான் பிரார்த்தனையில் இருந்தபோது அந்தப் பூச்சி அறைக்குள் செல்போனில் ஓர் இளஞ் சூரியனுடன் மெய்நிகர் சல்லாபத்தில் முனகுவது கேட்டது. கதவைத் திறந்தபோது நான் கண்ட காட்சி. ஐயோ, எப்படி சொல்வேன்? முழங்காலில் நின்று அந்நியப் பாஷைகளில் கைகளைத் தூக்கி சத்தமாக மீண்டும் சபித்தேன். கொஞ்சம் கூட பொருட்படுத்தவில்லை. விழுந்துவிழுந்து சிரித்துக்கொண்டே லீலைகளை தொடர்ந்தார்கள். உறைந்து நின்றேன். தூக்கம் இல்லை, கனவுகள் மட்டும் தோன்றின.'

அவரை ஏமாற்றிய அந்தப் பூச்சியை நம் போக்கில் நாம் புரிந்து கொள்ளலாம்.


இப்போது அவரது தனிமை வீட்டுக்குள் உள்ளே நுழைந்த ஆமணக்குச் செடியின் வார்த்தைகளில் அவருக்கு அமைதி கிடைக்கிறது


' நீங்கள் சபித்த ஜீவனுடன் வாழ்க்கை என்றாகி விட்டது. பூச்சிக்கு முக்கியத்துவம் தராமல் பிரார்த்தனையே கதி என்று கிடந்தால் முனகல் சத்தம் கேட்கத்தானே செய்யும். சரி, காலம் கடந்துவிட்டது. இப்படி தனிமைச் சிறையில் அகப்பட்டு சுயதண்டனை அளிப்பது சரியா? இனி யார் உங்களை மீட்பது'

'இதற்கெல்லாம் யார் காரணம் ? உங்கள் பக்கமும் தவறு உண்டு. உங்கள் மனநிலை எனக்கு புரியாமல் இல்லை. கவலைப்படாதீர்கள், எல்லாம் சரியாகும். நீங்கள் செய்த புண்ணியங்கள் மீட்சி தரும். உங்கள் கால்கள் சரியில்லை. சிறுத்துப் போயுள்ளது. உங்கள் எடையை சுமப்பதற்கான வலுவில்லை. ”


இந்த ஆமணக்குச் செடியின் சமாதான வார்த்தைகளில் அவர் மனம் அமைதி அடைகிறது. அந்த 1073 ஏக்கம் தொடர்கிறது .


'இப்போது அவர் வீட்டுக்குள் மழை நீர் புகுந்து நிரம்ப ஒரு பெரிய மீன் ஒன்று வீட்டிற்குள் புகுந்தது. நீரைத் தொட்டு நக்கிப் பார்த்தார். உப்புக் கரித்தது. மீன் பேசுகிறது “இதென்ன கொடுமை! என்னை மறந்து விட்டீர்களா? ம்ம்.. எனக்கும்தான் உங்களைப் போன்று வயதாகி விட்டது.”


அவரது பதில் . “இல்லை.. உன்னை எப்படி மறக்க முடியும்? சமீபத்தில் கூட நினைத்துப் பார்த்தேன். என் வாழ்வில் சொர்க்கமாய் உணர்ந்த மூன்று தினங்கள் உன் வயிற்றில் இருந்த நாட்கள்தான். அன்று வயிற்றில் அகப்படுவதற்கு சில காரணங்கள் இருந்தன. சரியாக நினைவில்லை, எனது பயணம் தடைப்பட்டதாக கூட உணர்ந்திருப்பேன். கடவுள் மீது கூட கோபப்பட்டேன். அது போகட்டும், இந்த சந்திப்பை கொஞ்சம் கூட எதிர்பார்க்கவில்லை” என்றார். '


தனி மனிதனாக அவர் பட்ட கஷ்டங்கள், தொடர்ந்து மகிழ்ச்சியாய் இருந்த சில நாட்களின் நினைவை அந்த மீன் கிளப்பி விடுகிறது . பஞ்ச தந்திரக் கதைகளின் பரீட்சயம் இருந்தால், இந்த மீனின் வரவும் நமக்கு மகிழ்ச்சியே அளிக்கும் .


அந்த மீனின் முதல் அறிமுகம் எப்போது. இதோ பதில் .

'முன்பு ஒருநாள் ஒரு கப்பலில் ஒரு தேசத்திற்காக ஆன்மீகப் பயணம் மேற்கொண்டவர் அவர். அதற்கான பயணக்கூலியை அந்தக் கப்பல் மாலுமிகள் பெற்றுக்கொண்டாலும் . இரண்டாம் நாள் பெரும் புயல் தாக்கியது. கொஞ்சம் தாமதித்திருந்தால் கூட கப்பல் உடைந்து எல்லாரும் கடலுக்குள் சென்றிருப்பார். . அது மிகவும் ஆபத்தான உயிர்க்கொல்லி மீன்கள் நிறைந்த இடம். கடல் சீற்றத்திற்கு காரணம் இவர்தான் என்று நம்பி இவரைக் கடலில் தூக்கிப்போட்ட அடுத்த நிமிடம் சீற்றம் தணிந்தது. '. அப்போது அவரை விழுங்கி கரையில் வந்து துப்பிய அதே கடல் மீன் தான் இது .


இப்போது அவரின் நோக்கம் நிறைவேற மறுபடியும் வந்திருக்கிறது .

'வீட்டுக்குள் நிரம்பிய கடல் நீருக்குள். நீந்திச்சென்று அவரை விழுங்கத் தொடங்கியது. உண்மையில் பெரிய மீன் தான். இன்னும் இரண்டு பெரிய மனிதர்களைக் கூட துணைக்கு விழுங்கலாம். பல வருடங்களாக தேங்கிக் கிடந்த குப்பைகளுடன் இரு ஆமணக்கு இலைகளும் நீரில் வெளியேறின.

கப்பலைத் தேடிச் செல்லும் பயணம் தொடங்கியது. கடந்த முறை இருந்தது போல் அல்ல. வயிற்றினுள் பெரும் நிசப்தம்.'


தொடர்கிறது கடலுக்குள் மீனின் வயிற்றுக்குள் அவரது பயணம். நமக்கும் பழைய பஞ்ச தந்திரக் கதை படிக்கும் திருப்தி .


'பெரிய விடுதலை. அசைவு மட்டும் இருந்தது. எப்போதாவது எதிரில் வரும் மீன்களால் நீரின் சலசலப்பு. இருட்டில் உணரும் அசைவு நிகழ்காலத்தை மட்டும் உணர செய்தது. சில நேரங்களில் நீரோட்டத்தையும். கடந்தமுறை அலைகளின் அழுத்தம் தெரிந்தது. இம்முறை இல்லை. கண்களை மூடுகையில் வெளிச்சம். திறந்தால் இருட்டு. மீண்டும் மூடினால் ஆழியின் கடற்பாசி. பச்சை அடர்ந்து வெளிச்சமாகி வெள்ளியாகி இருட்டானது.

மூன்று நாட்களுக்கு பின் கப்பல் வருவது தெரிந்தது. கப்பல் வரும் திசையில் மீனின் பயணம். '


அந்த அற்புதக் காட்சியில் அந்த நாயகனின் யதார்த்த ஆசை பூர்த்தி அடையப் போகிறது. 1073 அதோ. நம்பிக்கை நிறைவேறும் தருணம். இங்கே கப்பல் வடிவத்தில் .இது மாயமும் யதார்த்தமும் தனி மனித நோக்கில் சங்கமிக்கும் சந்தர்ப்பம்.


மீனின் உதவியால், இப்போது அந்தக் கப்பலுக்குள் அவர்.

' ஒருநாள் எங்கள் கப்பலில் ஒரு தேசத்திற்காக ஆன்மீகப் பயணம் மேற்கொண்டீர்கள் அல்லவா ' அந்தப் பழைய மாலுமியின் குரல் ஒலிக்கிறது .


'எங்களைக் காப்பாற்ற உங்கள் உயிரை பணையம் வைத்தீர்கள் அன்று . குற்றவுணர்வில் இருந்தோம்' மாலுமியின் குரலில் மன்னிப்பு வேண்டும் பாவம்.


அந்தக் கப்பலில் ஒலிக்கும் குரலில் இவரின் நோக்கம் புரிகிறது . ஏற்கனவே ஆரம்பத்தில் வந்த ஆமணக்குச் செடியின் வார்த்தைகளும், நமக்கு இணைத்துப் பார்க்கத் தோன்றுகிறது .


இது போன்ற கதைகளை முன்னிருந்து ஒரு முறையும் பின்னிருந்து ஒரு முறையும் படித்துப் புரிந்து கொள்ள வேண்டும் என்ற பால பாடம் நமக்கு ஞாபகம் இருக்கிறது . முன் வந்த அந்த வசனம் .

'உயிரைக் கூட பொருட்படுத்தாமல் பாலை நிலத்தில் குடிசைப் போட்டு மக்களை ஆன்மீக நெறிப்படுத்த கிளம்பிய நீங்களா இப்படி?' என்ற ஆமணக்குச் செடியின் பேச்சு .


ஆம் . அந்த நோக்கம்தான் ,அவரின் ஆன்மீக நோக்கம்தான். மக்களை ஆன்மிக நெறிப்படுத்தும் அந்த நோக்கம்தான். அதுதான் இந்தக் கப்பல் 1073 .


வாழ்வின் ஏமாற்றம் பூச்சி வடிவில் தாக்கி , துரோகம் மாலுமி வடிவில் தாக்கி, உதவி ஆமணக்கு வடிவிலும் , மீன் வடிவிலும் வந்து இதோ அவர் கனவில் கண்ட கப்பலை கனவிலேயே கண்டு அடைந்து விட்டார்.


கதையின் கடைசி வரிகள் .


'நித்திரை அறையின் நடுவே ஒரு பலகை வைக்கப்பட்டிருந்தது. அதன் நடுவில் உருகிக் கொண்டிருக்கும் மெழுகுவர்த்தி எரிந்துக் கொண்டிருந்தது. அங்கிருந்த நாற்காலியில்முன் அமர்ந்தார். மெழுகுவர்த்தியில் இருந்து அவர் பக்கமாக ஒரு பரிசுத்த வேதாகமம் திறந்திருந்தது. எதிர்பக்கம் தலை வெட்டப்பட்ட நிலையில் ஆமணக்குச் செடியை அரித்த பூச்சி. தலையில் கண்கள் திறந்திருந்தது. ஒரு சொட்டு கண்ணீர் பரிசுத்த வேதாகமப் பக்க எண்ணின் மீது விழுந்தது. ஆசிரியர் சொல்லவில்லை. அந்த எண் என்னவென்று


எனக்கும் தெரியாது . அதுவும் 1073 தானோ. அந்த எண்ணை ஒரு கணம் பார்த்தபின், மூடி வைத்தார். தலையைக் கவிழ்த்து அமர்ந்திருந்தார். மேகம் எங்கே போனது என சூரியன் தவித்துக்கொண்டிருந்தது.'


அங்கே அவர் அனைவரையும் மன்னித்துவிட்டார். இங்கே மழை ஓய்ந்து விட்டது. அவரது அறையில் அவரது கனவில் , நிம்மதியாய் அவரது 1073 ஐ அடைந்து விட்ட நிறைவில் அவர் தூங்குகிறார்.


ஒவ்வொரு கதைக்கும் படைத்தவர் பார்வை, படித்தவர் பார்வை என்று இரண்டு பார்வைகள் உண்டு என்று சொல்வார்கள். இது படித்த எனது பார்வை. மாயமும், யதார்த்தமும், ஒரு தனி மனித வாழ்வில் இரண்டறக் கலந்து துடிக்கும் காட்சிகளாய் ஆமணக்குச் செடியாக, பூச்சியாக, மீனாக, கடலாக, கரையாக, கப்பலாக , நாயகனாக கிடைத்ததைப் பகிர்ந்து கொண்டேன், அந்த நாயகனின் ஆன்மீக நோக்கம் நிறைவேறிய திருப்தியை உணர்ந்து . . வாய்ப்புக்கு நன்றி


-------------------நாகேந்திர பாரதி


My Poems in Tamil and English 


கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

அசோகமித்திரன் பரிசுக் கதைகள் மதிப்புரை - நவீன விருட்சம் நிகழ்வு

 அசோகமித்திரன் பரிசுக் கதைகள் மதிப்புரை - நவீன விருட்சம் நிகழ்வு  --------------------  நன்றி அழகியசிங்கர். வணக்கம் நண்பர்களே .  ஒரு   நாள் ...