செவ்வாய், 2 செப்டம்பர், 2025

சிறுகதை மதிப்புரை - கதை புதிது நிகழ்வு

 சிறுகதை மதிப்புரை - கதை புதிது நிகழ்வு 

-----------------------------------------------------

நன்றி அழகியசிங்கர் .வணக்கம் நண்பர்களே  பிரபல கேரள எழுத்தாளர் பால் ஜக்கரியா அவர்களின் ' செய்தித்தாள் ' சிறுகதை சொல்லும் உளவியல்  செய்திகள் வித்தியாசமானவை .

பிச்சைக்காரர்கள் வாழ்க்கை பற்றிய வித்தியாசமான கோணம். மற்றொரு ஆணுடன் மனைவிக்குத் தொடர்பு இருப்பதைக் கண்டு கொண்ட கணவன் ஒருவன் வீட்டை விட்டு வேறு ஒரு ஊர் வந்து அங்கிருக்கும் பிச்சைக்காரர்களுக்கு செய்தித்தாள் வாசித்து மரணம், திருமணம் பற்றிய செய்திகளை வாசித்துக் கொண்டு பொழுதைக் கழித்து வருகிறான். 


சிறுகதையின் ஆரம்பமே அட்டகாசம். எத்தனை விதமான பிச்சைக்காரர்கள் என்று எழுத்தாளர் வருணிக்கும் விதத்தில் அத்தனை பிச்சைக்காரர்களும் நம் கண் முன் வந்து கதைக்குள் நம்மை இழுத்துக் கொண்டு போய் விடுகிறார்கள். 


வயதானவர்களும், மத்திய வயதினரும், இளைஞர்களும் இருந்தனர். குண்டானவர்களும், ஒல்லியானவர்களும், கறுப்பானவர்களும், மாநிறம் உள்ளவர்களும், நிறமுள்ளவர்களும் இருந்தனர். குள்ளமானவர்களும் நடுத்தர உயர மானவர்களும் இருந்தனர்.. சிலர் வேட்டியும் துண்டும், சிலர் சட்டையும் அணிந்திருந்தனர். செருப்பு போட்டவர்கள் சிலர் இருந்தனர். நாலைந்து பேர் பீடி புகைத்துக் கொண்டிருந்தனர். இந்தக் கூட்டத்தில் பெண்கள் யாரும் இருக்கவில்லை. எல்லோருடைய முகங்களும் மகிழ்ச்சி இழந்திருந்தன. வாழ்க்கை மீதிருந்த வெறுப்பு எல்லோருடைய முகங்களிலும் பிரதிபலித்தது.


இப்பொழுது நாயகன் அவர்களுடன் அறிமுகம் ஆன விதம் பற்றிய விபரம் .

'சந்திரன் என்ற பெயருடைய அவன் கடைத் திண்ணையில் உறங்குவதும், பத்திரப்படுத்தி வைத்திருந்த பணத்திலிருந்து சிறிது சிறிதாக செலவு செய்து சாப்பிட்டுக் கொள்வதும் மீனச்சல் ஆற்றில் குளித்து, துவைப்பதுமாக காலத்தைக் கழித்தான். அப்படித்தான் பிச்சைக் காரர்களின் குழுவோடு பழக்கமானதும், அவர்களுக்குப் பத்திரிகை வாசிக்கும் வேலையை ஏற்றுக் கொண்டதும்..


கடைத் திண்ணையில் அமர்ந்து ஒரு பழைய செய்தித்தாளைப் படித்துக் கொண்டிருந்த சந்திரனை அவர்கள் அணுகி தங்களின் விருப்பத்தைச் சொன்னவுடன்தான் அவன் அவர்களின் செய்தி வாசிப்பவன் ஆனான். அவனை ஒரு பிச்சைக்காரனாகத் தான் நினைத் திருந்தனர். ஆனால் அவனுக்கும் தங்களுக்குமிடையே ஒரு அடிப்படை வித்தியாசம் இருந்ததை அவர்கள் அறியவில்லை பர்சும் அதில் கொஞ்சம் பணமும்.'


படிப்படியாக நம்மை கதைக்குள் இழுத்துச் சென்று விடுகிறார். இதன் பின் வரும் விபரங்களில் அந்தப் பிச்சைக்காரர்களின் உளவியலும் அந்த நாயகனின்  உளவியலும் உரசிக் கிடக்கின்றன. 


அந்தச் செய்தித்தாள் வாங்கும் செலவை அந்தப் பிச்சைக்காரர்கள் பகிர்ந்து கொள்கிறார்கள். அவனும் அதில் வரும் மணம் , மரணம் இடங்களில் எங்கு பிச்சை அதிகம் கிடைக்கும் என்ற விபரங்களை அவர்களுடன் பகிர்ந்து அவர்களுக்கு உதவி செய்கிறான். தன்னிடம் இருக்கும் பணத்தைச் சிக்கனமாக ஒரு வேளை உணவுக்கு மட்டும் செலவு செய்து வரும் அவனுக்கு அவ்வப்போது , தானும் சில நாட்களில் அந்தப் பிச்சைக்காரர்களில் ஒருவனாக மாறும் நாள் வெகு தொலைவில் இல்லை என்ற எண்ணமும் அடிக்கடி வருகிறது . 


'அவன் வீட்டை விட்டு வெளியேறிய நாலாவது வாரத்தில் பிச்சைக்காரக் கும்பலுக்காக பத்திரிகை படிக்கும்போது, ஒரு விளம்பரத் தில் அவனுடைய கண்கள் நிலைத்தன. அது அவனுடைய மனைவி யின் விளம்பரம், ‘சந்திரண்ணா மன்னிடுச்சிடுங்க. திரும்பி வாங்க.நானும் ரமேஷும் மல்லிகாவும் காத்திருக்கோம்’ உயரமான ஓரிடத்தி லிருந்து கீழே வீழ்வது போன்ற ஒரு பயத்தை அவன் உணர்ந்தான்; மூச்சு முட்டியது. ஒரு மாய உலகத்தைப் பார்ப்பது போல அந்த விளம்பரத்தை உற்றுப் பார்த்தான். அவன் கண்களில் நீர் நிரம்பியது. பட்டெனக் கண்ணீரைத் துடைத்தபடி வாசிப்பைத் தொடர்ந்தான்.'


இருந்தாலும் வீட்டுக்குப் போக விருப்பம் இல்லை அவனுக்கு . அந்த இடத்திற்கு வந்தவுடன் பார்த்த குழந்தை ஏசுவின் சிலை ஏற்படுத்திய பாச உணர்வையும் கட்டுப்படுத்திக்கொண்டு வேறு இடத்திற்குச் சென்று இருக்கிறான் அவன். அவனுக்குள்  நிகழும்  மனப் போராட்டத்தை இங்கே விவரிக்கிறார் ஆசிரியர். மனைவியின் துரோகத்திற்கும்,  மகன் மகளின்  பாசத்திற்கும் இடையே கிடந்து தவிக்கும் அவனுக்கு அந்தப் பிச்சைக்காரர்கள் தான் ஒரு வடிகால். 


அந்தப் பிச்சைக்காரர்களின் மனநிலை பற்றி ஆசிரியர் விவரிக்கும் விபரங்களில் வாழ்க்கை மேல் அவர்களுக்கு இருக்கும் வினோதமான ஆர்வங்கள் தெரிய வருகின்றன. உதாரணத்திற்கு ஒன்றிரெண்டு . 


ஒரு குழந்தையின் மாணத்தைப் பற்றி அவர்கள் அதிக செய்திகளை அறிய விரும்புவர். குடும்பத்தின் ஒட்டுமொத்தத் தற்கொலை, சாலை விபத்தில் ஒரே குடும்பத்தினரின் மரணம் என்று இப்படிப்பட்ட துயரங்களைப் பற்றி அறிவதற்கு அவர்கள் மிக விருப்பத்தோடு இருந்தனர். சில நேரம் ஒருவன், ‘காசும், பணமும், காரும் எல்லாம் இருந்தென்ன பயன்? ஒரு நிமிசத்தில் எல்லாம் போயிடுச்சே?’ என்பான். 


ஒருநாள் ஒரு  திருமண  விளம்பரத்தைப் பார்த்த ஒருவன் சிறிது நேரத்திற்குப் பின் தாழ்ந்த குரலில் ‘அது என் மகள்’ என்றான். மற்ற பிச்சைக்காரர்கள் பரிகாசத் தோடு அவனைப் பார்த்து சிரித்தார்கள். யாராலும் நம்ப முடியாத பொய்யைச் சொன்னதற்கு அவனை அனுதாபத்தோடு பார்த்தனர். ஆனால் அவன் பொய் சொன்னதாகச் சந்திரனுக்குத் தோன்றவில்லை.


தன் குழந்தைகள் பள்ளிக்குப் போகும் போது ஒளிந்து நின்று பார்த்ததைப் பற்றிய ஞாபகம் வந்தது சந்திரனுக்கு. அவன் துயரத்தோடு அந்தத் தனிமைப்படுத்தப்பட்ட பிச்சைக் காரனைப் பார்த்தான். அவன் தன் சிந்தனையில் முழுகி தொலைவில் பார்வை பதித்து மௌனமாக இருந்தான்.


இப்படி அவர்களின் உணர்வுகளுக்குள் தன்னையும் பொருத்திக் கொண்டு தவிக்கும் அவனுக்கு ஒருநாள் ஒரு மகிழ்ச்சிச் செய்தி. மனைவியின் காதலன் இறந்து போனது பற்றிய செய்தி , செய்தித்தாளில் . 

உடனே வீட்டுக்குத் திரும்ப முடிவு எடுக்கிறான். பிச்சைக்காரர்கள் தடுக்கிறார்கள். அதற்கு அவர்கள் சொல்லும் காரணங்கள் எல்லாம் அவர்களின் வாழ்க்கை அனுபவங்கள் 


 ‘அப்ப நாங்க என்னாகறது?’ என்றான் ஒருவன். அதற்கும் அவன் பதில் சொல்லவில்லை. அவன் தூரத்திலும் அவர்கள் அவனையும் மௌனமாகப் பார்த்துக் கொண்டிருந்தனர்.. ‘என்னால் போகாமல் இருக்க முடியாது. என் மனைவி மன்னிப்பு கேட்ட ஒரு விளம்பரம் முன்பே வந்திருந்தது’ என்றான் சந்திரன். ‘எங்களோட பிரச்சினை யெல்லாம் தீர்ந்து கொண்டே இருந்தது’ ஒரு பிச்சைக்காரன் ஆதங்கத்தோடு சொன்னான்.


‘என்னால் போகாமல் இருக்க முடியாது’ திரும்பவும் சொன்னான். ‘எங்களோட பத்திரிகையைப் படிக்காமலிருந்தா இவன் என்ன செஞ்சிருப்பான்?’ ஒரு பிச்சைக்காரன் முணுமுணுத்தான். சந்திரன் செய்தித்தாளைக் கையிலெடுத்து மீண்டும் தன் மனைவியின் காதலனின் மரண அறிவிப்பைப் பார்த்தான். 

பின்னர் முகத்தைத் திடப்படுத்திக் கொண்டு எழுந்து நின்றான். சந்திரன் கீழே வைத்த செய்தித்தாளை ஒரு பிச்சைக்காரன் எடுத்துப் பரிசோதித்தான். ஒன்றும் புரியாமல் அவன் அதைக் கையில் வைத்துக் கொண்டிருந்தான். ‘அப்படீன்னா நாளைக்கி பேப்பர் வாங்க வேண்டாமா?’ என்றான் ஒருவன். ‘வாங்கு நான் படிக்கிறேன்’ என்றான் இன்னொருவன். மற்றவர்கள் அவனைத் துச்சமாகப் பார்த்தார்கள். அவன் ஒரு மடையன் என்பதை அவர்கள் அறிந்திருந்தனர். ‘ஏங்க, நாங்க சொல்றதக் கேளுங்க. எங்களின் வருமானத்தின் நான்கில் ஒரு பகுதியை நாங்கள் உங்களுக்குத் தருகிறோம். உங்களால் நாங்கள் நிறைய பலனடைந்தோம். இருவர் ஒரே குரலில் சொன்னார்கள்.


ஒருவன் அவனை தன் விரலால் தொட்டபடி, ‘எல்லோருக்கும் தானே மனைவியும் குழந்தையும் இருக்காங்க. உங்களுக்கு மட்டு மென்ன ரொம்ப ஸ்பெஷல்? நீங்க ஓடிப் போய் என்ன செய்யப் போறீங்க?’ சந்திரன் முன்னால் நடந்தான். பின்னால் திரும்பி கை அசைத்தபடியே, ‘பிறகு பார்க்கலாம்’ என்றான். முதலில் கோபம் கொண்ட பிச்சைக்காரர்கள் அவனைப் பார்த்து முணுமுணுத்தனர். ‘என்ன பார்க்கலாம்? வெட்கமில்லாதவன், திருடன், எப்பவும் பாக்க வேண்டாம்.’ மற்றொருவன் ‘காதலன் இறந்து போனதால் மனைவி இவனை ஏற்றுக் கொள்வாள் என்பதற்கு என்ன உத்திரவாதமிருக்கு ? எல்லாம் வெறும் ஆசை’ என்றான்.


சந்திரனின் பயணத்தை அவர்கள் வெறுப்போடு பார்த்துக் கொண்டிருந்தனர். ‘இவன் போறதுக்குள்ள அந்தப் பொம்பள தற்கொலை செஞ்சுக்கிட்டிருப்பா. இவன் சும்மா போறான்’ ஒரு பிச்சைக்காரன் சொன்னான். ஓரிருவர் தலையாட்டினர். ‘ஒரு வேளை அவன் அவளைக் கொல்லத் தான் போவான். அந்தக் காதலன்தான் செத்தாச்சில்ல’ என்றான் ஒருவன். வேறொருவன் ‘எதுவும் சரிப்பட்டு வரலன்னா அவன் இங்கேயே திரும்பி வருவான்’ என்றான்.


அவன் திரும்பவில்லை. பஸ்ஸில் ஏறி செல்கிறான்.  அவர்கள் எரிச்சலோடு நிற்கிறார்கள்.  அங்கே   குழந்தை யேசுவின் சிலையைச் சுற்றி மின்சார ஒளி பரவியது. அவர்களில் ஒருவன் சங்கடத்தோடு தலை யாட்டியபடியே, ‘எல்லாம் வெறும் ஆசை’ என்றான். முடிகிறது கதை. 


கதையைப் படிக்கும் நமக்கு அவனின் பாசமும் ,மனைவியின் காதலன் மேல் உள்ள கோபமும் புரிகிறது. மனைவியின் காதலன் இறக்கக்  காத்திருந்த அந்தக் கணவனின்  இயலாமையும் புரிகிறது.  அந்தப் பிச்சைக்காரர்களின் மன உணர்வுகளும் புரிகிறது  . அவர்களும் ஏதோ ஒரு பிரச்னையில் மாட்டிக்கொண்டு பிச்சைக்காரர்களாய் ஆனவர்கள் தான் என்று தோன்றுகிறது. இனி தெருவில் பார்க்கும் பிச்சைக்காரர்களை நாம் அலட்சியப்படுத்த  மாட்டோம். கொஞ்சம் ஆராயத் தோணலாம். 


வாழ்க்கை என்பது எல்லாம் கலந்த ஒரு குழப்பமான அனுபவம் தான். செய்தித்தாளில் வரும் செய்திகள் போல .அதில் தவிப்பவர்களும்  உண்டு. தாண்டியவர்களும் உண்டு என்ற எண்ணத்தை  வாசகர்களுக்கு உண்டாக்கும்  சிறந்த உளவியல் கதை. ஆசிரியருக்கு வாழ்த்துகள். அழகியசிங்கருக்கு நன்றிகள் .வணக்கம். 


- நாகேந்திர பாரதி


My Poems in Tamil and English 







 


கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

அசோகமித்திரன் பரிசுக் கதைகள் மதிப்புரை - நவீன விருட்சம் நிகழ்வு

 அசோகமித்திரன் பரிசுக் கதைகள் மதிப்புரை - நவீன விருட்சம் நிகழ்வு  --------------------  நன்றி அழகியசிங்கர். வணக்கம் நண்பர்களே .  ஒரு   நாள் ...