அதே கண்கள் - சிறுகதை
-----------------------
அவளின் செதுக்கிய மூக்கும் , செப்பு இதழ்களும் அவனைக் கவரவில்லை. , அந்தச் சிந்தனைக் கண்கள். அன்பும், அழகும் , அறிவும் ததும்பும் அந்தக் கண்களைப் பார்த்தபின் வேறு சிந்தனை இல்லாமல் மயங்கிக் கிடந்தான் மாலன். சுந்தர் எவ்வளவோ சொல்லிப் பார்த்தான்.
'உன் நோக்கம் வேறு மாலன் , காதல் வாழ்க்கையையோ, மண வாழ்க்கையையோ நினைத்துப் பார்ப்பதே தவறு அல்லவா ' என்று நினைவு படுத்தினான்.
'உண்மைதான் சுந்தர் . உலகப் போர்க்களங்களில் செஞ்சிலுவைச் சங்கத்தின் மூலம் உதவி செய்யப் போகும் ஐ நா சபை நிறுவனத்தின் உறுப்பினராய் இருக்கும் நமக்கு , உயிர் எப்போது போகும் என்று தெரியாதுதான். இன்னொரு பெண்ணின் வாழ்வை நிச்சயம் அலங்கோலமாக்க மாட்டேன். ஆனால் அவள் நினைவை விலக்க முடியவில்லையே ' என்று உருகினான்.
'எத்தனை பெண்களை நாம் அனுபவித்து இருக்கிறோம் . எத்தனை நாடுகளில் . அவர்களிடம் இல்லாத ஒன்றை இவளிடம் என்ன கண்டாய் . '
'தெரியலைடா . அந்தக் கண்கள், கொஞ்சம் செருகிய நிலையில் ,ஏதோ சொல்வது போல் , என்னிடம் மட்டும் ஏதோ சொல்வது போல் ஒரு உணர்வு '.
'உன்னை அந்த இடத்திற்குக் கூட்டிச் சென்று இருக்கக் கூடாது நான் '
'ஆம், ஏன் கூட்டிச் சென்றாய் அங்கே. எப்போது உயிர் போகும் என்று தெரியாத நிலையில் , நம் களியாட்டங்களை வழக்கம் போல் தொடர்ந்து இருக்கலாமே . நாம் விடுமுறையில் உள்ளூரில் இருக்கும் போதும் , நாம் செல்வது பப்புகளும் , பொது மகளிர் இடங்களும் தானே. கோயிலுக்கு ஏன் கூட்டிச் சென்றாய் '
'அது என்னமோ தெரியலே மாலன். நாம் இருவரும் அநாதை விடுதியில் படித்து இந்த அமைப்பில் சேரும் வரை , நம் எண்ணம் எல்லாம் 'இருக்கின்ற வரை வாழ்வை அனுபவிப்பதாய் தானே இருந்தது'. இப்போது நாற்பது வயதிற்கு மேல், கொஞ்சம், அந்தப் பக்கத்தையும் ' அமைதி, புனிதம் ' என்றெல்லாம் பேசிக் கொள்கிறார்களே ' அந்தப் பக்கத்தையும் பார்க்கலாம் என்று தோன்றியது. சும்மா ஒரு மாறுதலுக்கு. நீ இப்படி மாட்டிக் கொள்வாய் என்று தெரிந்திருந்தால் , நிச்சயம் அங்கே கூட்டிப் போய் இருக்க மாட்டேன் '
' அது என்னமோ தெரியலேடா. அனாதையாய் வளர்ந்த எனக்கு, அந்தப் பெண்ணின் முகத்தில் தெரிந்த அமைதி , அம்மா என்று ஒருத்தி, கூட இருந்து வளர்த்திருந்தால் , இப்படித்தான் இருந்திருப்பாளோ என்று தோன்றியது சுந்தர். நாம் பார்த்த எத்தனையோ பெண்களைப் போன்ற நிறமும் உடல் வாகும் தான் அவளுக்கு. இருந்தாலும், அந்த முகம். கொஞ்சம் குறும்பும் , அன்பும் கலந்த அந்த முகத்தில் தெரிந்த ஒரு தெய்வீக அமைதி. என்னமோ செய்யுதுடா '
'ஒண்ணும் வேணாம், அவள் கூடவே இருக்கணும் . அது போதும் னு தோணுதேடா . இது என்னடா '
லேசாகச் சிரித்த சுந்தர் சொன்னான். 'அது வேற ஒண்ணும் இல்லைடா , நாம் அடிக்கடி கிண்டல் பண்ணி பேசிக்கிட்டு இருப்போமே , அந்தக் காதல் ங்கிற வியாதி . இதை எப்படி யாவது குணப்படுத்திடணும். இல்லேன்னா ரெம்ப கஷ்டம். ஒரு வேலை கூட உருப்படியாய்ப் பார்க்க முடியாது . நாளைக்கு நாம் போகப் போகிற இடம் தெரியும் இல்ல. '
'பாலஸ்தீனம். அந்தப் போர் முனையில் நாம் போய்ச் செய்யப் போகும் சேவையில் கவனம் வை. நம்மால் உயிர் பெறப் போகும் குழந்தைகள் , முதியவர் இவர்களை நினைத்துப் பார். , இங்கு மட்டும் அல்ல, இஸ்ரேல் சென்றும் நாம் காப்பாற்றிய உயிர்கள் எத்தனை . நாடுகளின் பகைமைக்குள் மாட்டிக்கொண்டு தத்தளிக்கும் அந்த மக்களின் சேவை தானே நம் குறிக்கோள். '
சுந்தரின் ஆவேசப் பேச்சில் ஐக்கியமான மாலனின் மனம் கொஞ்சம் கொஞ்சமாக விடுபடுவதை உணர முடிந்தது. அடுத்த சில நாட்களில் பாலஸ்தீனத்தில், ஒரு ஆஸ்பத்திரியில் மாட்டிக் கொண்டு தவித்த , பலரைக் காப்பாற்றி , எல்லை வரை எடுத்துச் சென்றபோதுதான் அது நிகழ்ந்தது ,
ஐ நா சபையின் வாகனத்தில் ஏற்றி விடும் போது அங்கே வந்து விழுந்த குண்டு தெறித்த சிதறல்களில் பலத்த காயத்தோடு அரை மயக்கத்தில் மயங்கிக் கிடந்த அவனை, ஸ்ட்ரெச்சரில் ஏற்றி எடுத்துச் செல்லும் , மற்றுமொரு பிரிவு ,செஞ்சிலுவைச் சங்கப் 'பெண்ணின் கண்கள் ' அதே கண்கள் ' . 'அம்மா' என்றபடி மயங்கினான் மாலன்.
----------------------நாகேந்திர பாரதி
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக