அசோகமித்திரன் பரிசுக் கதைகள் மதிப்புரை - நவீன விருட்சம் நிகழ்வு
--------------------
நன்றி அழகியசிங்கர். வணக்கம் நண்பர்களே .
ஒரு நாள் ஒரே மூச்சா 24 சிறுகதைகளையும் (191 பக்கம் ) படிச்சாச்சு . அவ்வளவு விறுவிறுப்பு. ஒவ்வொன்றும் ஒரு விதம். ஒவ்வொரு எழுத்தாளரின் மாறுபட்ட பார்வைகளில் விரியும் கதைகளுக்குள் தொடர்ச்சியாய்ப் போய் வரும்போது வாழ்க்கை பற்றிய நம் பார்வைகளும் விரியும் என்பதை உணர முடிந்தது . போட்டிக்கு வந்த 153 கதைகளையும் அழகியசிங்கரே படிச்சு தேர்ந்தெடுத்த கதைகள் ஆச்சே . அனைத்தும் சிறப்பு .
தன் கதைகளை பற்றி அசோகமித்திரன் இப்படி எழுதுகிறார்.
'என்னுடைய கதைகள் வாழக்கையில் இருக்கிறதுதான். அதுல வர பாத்திரங்களை , ஏதோ ஒரு சமயத்திலே சந்திச்சிருக்கேன். நான் எழுதும் எழுத்து எல்லாமே அந்தப் பாத்திரங்களுக்கு நான் செலுத்துகிற ஒரு அஞ்சலிதான். என் படைப்பு எதை எடுத்துக் பார்த்தாலும் அது, அதில் வரும் மூலமாதிரிக்கு என்னுடைய அஞ்சலி, மரியாதை இல்லாவிட்டால் வாழ்த்து..'
இந்தத் தொகுப்பில் உள்ள கதைகளில் உள்ள பாத்திரங்களும் அந்த எழுத்தாளர்கள் ஏதோ ஒரு சமயத்தில் சந்தித்திருக்கும்
பாத்திரங்கள்தான் . ஏன், நாமும் கூடத்தான் சந்தித்திருப்போம்.
இந்த பதினைந்து நிமிடத்தில் , எனக்குத் தெரிந்த வரை , ஒவ்வொரு கதையின் ஜீவனை மட்டும் இங்கே சுட்டிக் காட்டுகிறேன். கதையின் பாதி புரியலாம். மீதியும் புரிய, முழுக் கதையையும் நீங்களே படித்து அனுபவியுங்கள் .
முதல் பரிசு பெற்ற முதல் கதை. மாலா மாதவன் அவர்களின் 'இனி மௌனமில்லை ' .படித்து முடித்தவுடன் நமக்கு மௌனம் தான். கண்களில் கண்ணீர்தான். உடல் இயங்க மறுத்து உயிர் பிரியத் துடிக்கும், ஒரு அம்மாவின் கடைசி நேரத்தில்,மகனின் ஒரு பிரிய பேச்சைக் கேட்டுப் பிரிகிறது உயிர். இனி மௌனமில்லை.
இரண்டாவது பரிசு பெற்ற கதை. என் நாகராஜன் அவர்களின் 'ஐநூற்றைம்பது ரூபாய் '. பசியை அனுபவித்தவர்களுக்கு , இந்த நாயகனின் பசியும் புரியும். அவன் அனுப்பும் ஐநூற்றைம்பது ரூபாயும் புரியும் . புரிந்தது .
மூன்றாவது பரிசு பெற்ற கதை. ரமேஷ் கல்யாண் அவர்களின் 'என்னவோவாக என்பது ' . அடித்தட்டு மக்களின் அவஸ்தைகளையும் அபிலாஷைகளையும் அனுதாபத்தோடு அணுக முடித்தவர்களுக்கு என்னவோவாகத்தான் இருக்கும்.
அடுத்து சிறப்புக் கதைகளாக அழகியசிங்கர் பிரசுரத்திற்காகக் தேர்ந்தெடுத்தவை .
முதலாவது சிறப்புக் கதை .எஸ் கோபாலகிருஷ்ணன் அவர்களின் 'கிணற்றுப் பூனை ' . 'வாடிய பயிரைக் கண்ட போதெல்லாம் கண்ட போதெல்லாம் வாடினேன் ' என்ற வள்ளலார் வாக்குப் போல் ' வாடிய உயிர் கண்டு ' வாடிய நாயகனின் மனநிலையை இயல்பு நிலை கலந்து எடுத்துக் காட்டி உள்ளார் ஆசிரியர்.
இரண்டாவது சிறப்புக் கதை .ஆர். வெங்கடேஷ் அவர்களின் 'மரணமடைந்தவனின் நண்பன் ' . நமக்குத் தெரிந்தவர் என்று மற்றவர் நினைத்திருக்கும் ஒருவரைப் பற்றி நமக்கு எவ்வளவு தெரியும் என்பது நமக்குத்தான் தெரியும் . உண்மைதானே .
மூன்றாவது சிறப்புக் கதை. ரகுராமன் அவர்களின் ' மறு ஜென்மம் ' . மரணம் எப்படி இருக்கும் என்பதை உயிரோடு இருக்கும்போதே நம்மை அனுபவிக்க வைக்கிறார் ஆசிரியர் இந்தக் கதையில் .
நான்காவது சிறப்புக் கதை . எம் எஸ் ஸ்ரீலக்ஷ்மி அவர்களின் 'விரயங்கள் '
வேலைக்குச் செல்லும் பெற்றோர் தம் குழந்தையைப் பார்த்துக் கொள்ள வைக்கக் கூடிய பணிப்பெண்களை பற்றி எச்சரிக்கை செய்யும் இயல்பான கதை .
ஐந்தாவது சிறப்புக் கதை . எஸ்ஸார்சி அவர்களின் 'பிரம்ம முடிச்சு' . 'கடவுள் அமைத்து வைத்த மேடை, இணைக்கும் கல்யாண மாலை ' என்ற கண்ணதாசன் வரிகளுக்கு களம் அமைத்துக் கொடுக்கும் கதை .
ஆறாவது சிறப்புக் கதை . நித்யா அவர்களின் ' விளிம்பு ' . விளிம்பு நிலை மனிதர்களின் வாழ்க்கையில் ஒவ்வொரு நாளுமே ஏதாவது திருப்பம்தான். அதில் பெரும்பாலும் துன்பம் தான்.
ஏழாவது சிறப்புக் கதை . துரை. அறிவழகன் அவர்களின் 'தோதகத்தி . காரைக்குடி நகரத்துச் செட்டியார்கள் வாழ்க்கையில் அன்று முதல் இன்று வரை பயணம் செய்யும் அனுபவம் கொடுக்கும் கதை .
எட்டாவது சிறப்புக் கதை . சுபாகர் அவர்களின் ' சிலுவைகள் ' . நாயகன் சுமக்கும் சிலுவைகளின் தியாகம் தெரியாதவரால் அவன் ரத்தம் சிந்தும் நிலை .
ஒன்பதாவது சிறப்புக் கதை . ஜெ. பாஸ்கரன் அவர்களின் ' வடக்கத்தியான் ' . இளமையும் சூழ்நிலையும் சுற்றும் வலைகளில் மாட்டிக் கொண்டு தவிப்போரில் வடக்கு யார். தெற்கு யார். எல்லாம் மனிதர்கள்.
பத்தாவது சிறப்புக் கதை. இந்திர நீலன் சுரேஷ் அவர்களின் ' நிழற் கூத்து ' . தெருக்கூத்துக் கலைஞன் ஒருவனின் வாழ்க்கையில் , நகரத் தெருவே அவன் கூத்துக் களமாகி அவனின் கண்ணீர் மழையில் முடிகிறது .
பதினொன்றாவது சிறப்புக் கதை. ஆர் வத்சலா அவர்களின் ' ஒரு அம்மாவின் உண்மை ' . கதையில் வரும் அந்த அம்மாவிற்கு ' பொய்மையும் வாய்மை இடத்தே , புரை தீர்ந்த நன்மை பயக்கும் பொழுது ' என்ற திருக்குறள் பிடித்திருக்கும் உண்மை , கதையின் நாயகிக்குப் புரிய நீண்ட நாட்கள் ஆகின்றன.
பன்னிரெண்டாவது சிறப்புக் கதை . சாரதி அவர்களின் 'சுவாசம் ' . காபி வாசமே சுவாசமாக இருந்த ஒரு அத்தையின் வாழ்க்கையின் இறந்த காலம் ஒரு இருண்ட காலம் . அதையும் தாண்டி அவள் குடும்பத்திற்கே வெளிச்சம் கொடுப்பது நிகழ் காலம்.
பதின்மூன்றாவது சிறப்புக் கதை. குட்டீஸ் பாபு அவர்களின் 'தவணை வியாபாரத்தில் அவள் ' . தவணை வியாபாரி ஒருவன் சிவப்பு விளக்குப் பகுதியில் தடுமாறும் நேரம் எல்லாம் , அவனைக் காப்பாற்றுவது அவன் மனைவியின் நினைவு மட்டும் அல்ல, இன்னும் ஒரு ஏக்கம்தான் என்பதை எடுத்துச் சொல்லும் கதை .
பதினான்காம் சிறப்புக் கதை . அபுல் கலாம் ஆசாத் அவர்களின் ' ஒரு கதவு மூடப்பட்டால் ' . ஆம் இன்னொரு கதவு திறக்கிறது , அந்த உடற்பயிற்சி மோக ராணுவ வீரரின் இதயக் கோளாறின் பின் , அவருக்குப் பிடித்த கதவுதான், அதுவும்.
பதினைந்தாம் சிறப்புக் கதை. பஷீர் அவர்களின் ' மகனுடன் ஒரு நாள் ' . ஒரு தந்தையின் பிள்ளைப் பாசம் உருகி ஓடுகிறது கதையில் , ஆற்று நீரின் மீனாக .
பதினாறாம் சிறப்புக் கதை .லதா ரகுநாதன் அவர்களின் ' செல்லமே .. ' ஐந்தறிவு உயிரிலும் , அன்பு ஆறாவது அறிவாக ஓடிக்கொண்டு இருக்கிறது என்பதை உணர்த்தும் கதை.
பதினேழாம் சிறப்புக் கதை. ச. ஆனந்தகுமார் அவர்களின் ' நிறம் மாறும் முகங்கள் ' .சில ரகசியங்கள் வெளிப்படும்போது முகமும் மாறலாம். உயிரும் போகலாம். '
பதினெட்டாம் சிறப்புக் கதை. புலியூர் அனந்து என்ற புனைபெயரில் எழுதும் கிருபானந்தன் அவர்களின் 'அவனைப் போய்க் கேட்டேன் பாரு ' . 'மாத்தி யோசிக்கும்' இந்த மாசிலாமணி கதையில் அறிவுச் சுவையோடு , நகைச்சுவையும் கலந்து வருகிறது .
பதினொன்பதாம் சிறப்புக் கதை .ரேவதி பாலு அவர்களின் ' அசட்டு மனிதர்கள் ' . கணவன் மனைவி உறவில் எப்போதும் மனைவியே விட்டுக் கொடுத்து குடும்ப நன்மைக்காக விரிசலைப் பெரிதாக்க விரும்பாத அந்தப் பெண் 'அசடு ' என்று கணவனைச் சொல்லி விட்டு தன்னைச் சமாதானப் படுத்திக் கொள்ளும் வார்த்தையில் ஒளிந்திருப்பது, சிரிப்பா, அழுகையா .
இருபதாவது சிறப்புக் கதை . ராஜாமணி ஹரிஹரன் அவர்களின் ' பொய்மையும் வாய்மை இடத்த .. ' . திரைகடல் ஓடித் திரவியம் தேடப் போனவர்களின் கண்ணீர்க் கதை. தெரிந்தபின் கதை ஆசிரியருக்கும் துபாயில் வேறு எங்கும் சுற்றத் தோன்றாதுதான் .
இருபத்து ஒன்றாவது கதை. அழகியசிங்கர் அவர்களின் 'சீதாலட்சுமி அடுக்ககம் ' . அடுக்ககத்தைப் பராமரிக்கும், அஸோஸியேஷன் நண்பருக்குச் சொல்லாமல் குடிவைத்தது ஒரு அகத்தின் உரிமையாளரின் குற்றம்தான். அதற்காக அங்கலாய்க்கும் நாயகனின் நிலைக்கு காரணம் வயதாகவும் இருக்கலாம் தான்.
இருபத்து நான்கு கதைகளும் இருபத்து நான்கு விதமான நிகழ்ச்சிகள். நெகிழ்ச்சிகள் . தொடர்ந்து படித்ததால் அந்த உணர்வுகள் மாறி மாறி வந்து மனதை அலைக்கழித்தன.கடைசியில் அழகியசிங்கரின் கதையைப் படித்ததும் ஒரு ஆசுவாசம் ஏற்பட்டது. எல்லாம் வயசுக் கோளாறு. எழுபது வயதான வயசுக் கோளாறு. அப்படித்தான் இருக்கும் என்று முடிவு கட்ட முடிந்தது .
ஆனாலும் கதைகள் காட்டிய காட்சிகள். அதில் தெரிந்த இன்பங்கள், துன்பங்கள், இளமைகள். முதுமைகள் நம்மை வேறு ஒரு உலகத்திற்கு இட்டுச் சென்று , இப்படியெல்லாம் இருக்கிறது வாழ்க்கை என்ற எண்ணத்தை உருவாக்கி விட்டு நம்மை இந்த உலகத்திற்கு இழுத்து வரும் போது, நாம் வாழும் வாழ்க்கையின் உண்மைகள் புரிந்து நம்மை அமைதிப் படுத்தத்தான் செய்கின்றன.
அதற்கு இது போன்ற சிறுகதைகள் உதவுகின்றன. அந்த வகையில் இவற்றை எழுதிய எழுத்தாளர்களுக்கும், பெரு முயற்சியோடு நூறு கதைகளுக்கும் மேல் படித்து இவற்றைத் தேர்ந்தெடுத்துத் தொகுத்த அழகியசிங்கருக்கும் நன்றியும் வாழ்த்தும். வணக்கம்
--------------நாகேந்திர பாரதி