ஞாயிறு, 18 ஆகஸ்ட், 2024

சாவித்ரி - சிறுகதை

 சாவித்ரி - சிறுகதை 

---------------

வைத்த பூ வாடவில்லை. கட்டிய சேலை கசங்கவில்லை. . அன்று மாலை சேகருடன் சேர்ந்து நின்று கொண்டு, வந்த நண்பர்களை வரவேற்றுக் கொண்டு ,அவன் காதோடு சொல்லும் ஜோக்குகளுக்கு சிரித்துக் கொண்டு, திருமண வரவேற்பு மேடையில் நின்ற நினைவு அழியவில்லை. இதோ மருத்துவமனையின்அவசர வார்டின் வாசலில் அமர்ந்து முழங்காலில் கவிழ்ந்த முகத்தில் வழியும் கண்ணீர் ஓயவில்லை .


ஒரு மணி நேரத்தில் என்னவெல்லாம் நடந்து விட்டன.சிரித்துச் சிரித்துப் பேசிக் கொண்டிருந்தவன் திடீரென்று நெஞ்சை பிடித்து விழுந்தவன் நினைவு இழக்க, என்னவென்று புரியாமல் அனைவரும் தடுமாறிய நேரத்தில் அவள் தான் அவனை எடுத்து மடியில் கிடத்தி , ஆம்புலன்ஸ் என்று அலற, இதோ அந்த ஆஸ்பத்திரியில் உள்ளே உயிருக்குப் போராடிய நிலையில் அவன் மருத்துவர்களின் கவனிப்பில் , ஓரத்தில் ஓடும் மானிட்டரில் லேசாக வளைந்து நெளிந்த அந்தக் கோடு இப்போது அமைதி அடைந்து நேர் கோடாய். மார்பில் கருவிகளும் மருத்துவர்களும் கொடுக்கும் அழுத்தம் அந்தக் கோட்டை உயிர் பெறச் செய்யவில்லை .


இவள் எதிரே அருவமாய் நிற்கிறான் சேகர். ' மன்னித்து விடு சாவித்ரி , நாம் சேர்ந்து வாழக் கொடுத்து வைக்கவில்லை, சென்று வருகிறேன் . ' இந்தக் குரல் அவளுக்குக் கேட்குமா . அவள் நினைவெல்லாம் அவனோடு பழகிய அந்த நாட்களில் . அவன் நடத்தி வந்த அந்தக் காபி ரெஸ்டாரண்டில் அவர்களின் சந்திப்பு. அவள் தோழிகள் இந்த இடத்தின் காபியின் மகிமையைப் பற்றிச் சொன்ன வருணனைகள் , காபி ப்ரியையான இவள் ஆவலைத் தூண்டி விட சென்றிருந்தாள் அன்று மாலை. .


உள்ளே நுழைந்தவுடன் வந்த அந்த வாசனை, உயர்தரக் காபிக்கொட்டை வறுபடும் வாசனை, அத்துடன், மெல்லிய வெளிச்சத்தில் சேர்ந்தே ஒலித்த சுசீலாவின் மென்குரலில் பழைய சினிமாப் பாடல் ' தண்ணிலவு தேன் இறைக்க ' என்று ஒரு இன்ப அனுபவத்தை இழைக்க ஆரம்பித்தது. இனி இங்கு தான் , 'மாலை நேரக் காபி ' என்று அவள் முடிவெடுத்த நேரம் அவன் குரல் . ' நல் வரவு அனைவர்க்கும் ' . சிரித்த முகத்துடன் சேகர் .


இவன் தங்களுடன் கல்லூரியில் படித்த அதே சேகரா . 'சேகர்' என்றதும் அவள் தோழிகள் ஒரே குரலில் ' ஆமாம் , அதே சேகர் தான், நம்முடன் படித்த அதே சேகர் தான். நாம் எல்லாம் படித்து முடித்து வேலைக்கு அலைந்து கொண்டு இருந்த போது , இவன் சுய தொழில் ஆர்வத்தில் , இந்த காபி ரெஸ்டாரண்ட் ஆரம்பித்து , இன்று சென்னையின் முக்கிய தொழில் அதிபர். காபி சம்பந்தப்பட்ட ஆராய்ச்சிகள் அத்தனையும் முடித்து, உலகின் சிறந்த காபிக் கொட்டைகளை இறக்குமதி செய்து , அவனுக்கு மட்டுமே தெரிந்த முறையில் அதைப் பக்குவப்படுத்தி சுவையான காபித் தூள் தயார் செய்து ஏற்றுமதி செய்வது மட்டும் அல்லாமல், அந்த காபித்தூளின் ரகசியம் தெரிந்தவன் என்ற முறையில் சேர்க்க வேண்டியதைச் சேர்க்கின்ற முறையில் சேர்த்து இங்கு கிடைக்கும் காபியின் ருசி சென்னையில் எங்குமே கிடைக்காது என்று எங்களுக்கு நமது வாயாடி வரலக்ஷ்மி மூலம் நேற்று தான் தெரிய வந்தது. உனக்கு சர்ப்ரைஸ் ஆக இருக்கட்டும் என்று விபரம் சொல்லாமல் அழைத்து வந்தோம். '


'பெரிய தொழில் அதிபர் ஆனாலும் மாலையில் இங்கு வந்து தானே கஸ்டமர்களுக்கு காபி கலந்து கொடுப்பதில் அவனுக்கு ஒரு இன்பம்.'


'என்னடி அப்படியே சேகரைப் பார்த்துக்கிட்டே நிக்கிறே , அங்கே போய் உட்காரலாம் ' என்றவுடன் திடுக்கிட்டுச் சுதாரித்தவள், சற்று வெட்கத்துடன் அவர்களுடன் சேர்ந்து சென்று வீதியைக் கண்ணாடி வழி பார்க்கும் அந்த இடத்தின் மென்மையான சோபாவில் சென்று அமர்ந்தாள்.


கல்லூரியில் அவனுடன் சேர்ந்து பாடிய இசை நிகழ்ச்சிகள் நினைவுக்கு வந்தன. 'இவன் எஸ் பி பி , இவள் பி சுசீலா ' என்று தோழிகள் உசுப்பி விட்ட ஞாபகம் வந்தது. அது கடந்த காலம். இளமை உணர்வுகள் துள்ளி எழுந்தாலும், அவன் நெருங்கி நெருங்கி வந்தாலும் , குடும்பச் சூழ்நிலையில் படிப்பு, வேலை என்ற எதிர்கால நினைவுகளோடு அத்தனை உணர்வுகளையும் ஒதுக்கித்தள்ளி அவள் நாட்களை ஓட்டிய காலம்.


எல்லாம் மறந்து , ஒரு அயல் நாட்டு நிறுவனத்தில் உயர் பதவியில் இப்போது . பெற்றோர் பார்க்கும் வரன்களை எல்லாம் மறுத்து விட்டு, நிறுவனத்தின் முன்னேற்றமே குறிக்கோளாய் , உழைப்பு உழைப்பு. என்று வாழ்க்கை இதோ அந்தப் பழைய உணர்வுகளை உசுப்பி விட அவன் மறுபடியும் அவள் எதிரே.


' நமது பழைய நண்பர்களுக்காக நானே தயார் செய்த ஸ்பெஷல் காபி ' என்றபடி தட்டில் ஏந்தி வந்த ஐந்து வண்ணமயக் கோப்பைகளை அவர்கள் முன் ஒவ்வொன்றாய் எடுத்து வைத்தான். அத்தனையிலும் மேலே 'இதய சின்னம் ' ததும்பியது. 'எங்களை எல்லாம் ஞாபகம் வைத்திருப்பதற்கு மிக்க நன்றி சேகர் ' என்ற சுமித்ராவிடம் ' எப்படி மறக்க முடியும், அதுவும் இந்த 'பி சுசீலா' மேடத்தை ' என்றவன் இவளைப் பார்த்த பார்வையில் தெரிந்தது என்ன .


கல்லூரி விழாக்களின் ஜோடிப் பாடல்களின் நினைப்பா. அல்லது வேறு எதுவுமா .குழப்பம் இவளுக்குள் . ஒரு சிரிப்பை உதிர்த்து ' தேங்க்ஸ் சேகர் ' என்றாள் . 'உங்கள் அலுவலகம் எல்லாம், இங்கே நுங்கம்பாக்கத்தில் பக்கத்தில் தான்' என்று சுமித்ரா ஏற்கனவே சொல்லி விட்டார்கள், இனி மாலை நேரம், இங்கு தான் உங்கள் காபி நேரம், அரட்டை நேரம் ' என்று மென்மையாகச் சிரித்தான். 'ஸ்யூர் ' என்ற சுமித்ராவை முறைத்தாள் சாவித்ரி. '


'எனக்கு வேலை ..' என்று இழுத்தவளை , ' காபியைச் சாப்பிடுங்கள் ' என்று சொல்லி விட்டு மற்ற கஸ்டமர்களைக் கவனிக்கச் சென்று விட்டான் சேகர். அங்கும் இங்கும் அவன் சுறுசுறுப்பாய்ச் செயல்படும் விதமும், வேகமும் , அவனின் சிரிப்பும் , இவள் மனதை அலைக்கழித்தன .காபியை அருந்த ஆரம்பித்தவுடன் தெரிந்தது. இவளுக்கு இனிப்பு கொஞ்சம் அதிகம் வேண்டும். அது அளவோடு இருந்தது .


அந்தக் கப்போடு எழுந்தவளை , 'இங்கேயே இருக்குடி , இன்னும் கொஞ்சம் போட்டுக்க ' என்றவர்களிடம் ' இல்லே, இனிமே , தினசரி வரணும் இல்லையா, அவன் கிட்டேயே சொல்லிட்டு வந்துடறேன் ' என்று சென்றவளை நமட்டுச் சிரிப்போடு அனுப்பி வைத்தனர் தோழிகள்.


அவன் இருக்கும் அந்த காபி கவுண்டர் பக்கம் சென்றவள், 'எனக்கு எப்பவும் கொஞ்சம் இனிப்பு அதிகம் இருக்கணும் ' என்று கப்பை நீட்டினாள் . ஒரு சிறிய கப்பை எடுத்து , இவளின் பெரிய கப்பில் இருந்து ஒரு பக்கம் சிறிது ஊற்றி சுவைத்துப் பார்த்தவன் ' சாரி ' என்று சொல்லி விட்டு , அவளது கப்பின் அடுத்த முனையில் இருந்து கொஞ்சம் ஊற்றி சுவைத்துப் பார்த்தவன் மிகவும் மெதுவாகச் சொன்னான்.


' இது இன்னும் கொஞ்சம் இனிப்பு கூடுதலா இருக்கே எப்படி' என்றவன் ,' ஓ , இந்தப் பக்கம் நீங்க இதழ் வைத்து சுவைத்த பக்கமா ' என்று அப்பாவி போல் சொல்லிவிட்டுத் திரும்பி , புதியதாக மற்றும் ஒரு பெரிய கப்பில் ஆவி பறக்க அவளுக்குத் தேவையான இனிப்பின் அளவோடு காபி கலந்து , மேலே அந்த இதயம் சின்னத்தை வரைந்து கொடுத்தான் .


அவன் சொல்லி விட்டு உடனே திரும்பி விட்டானே , இவளின் சிவந்த முகத்தைப் பார்க்காமல் , அந்தக் கூடுதல் சிவப்பு கோபத்தாலா , நாணத்தாலா , குழப்பத்தாலா , அந்த வார்த்தைகள் இன்னும் அவள் காதுகளில் . 'இந்தப் பக்கம் இன்னும் கொஞ்சம் இனிப்பு கூடுதலா இருக்கே எப்படி, , ஓ , இந்தப் பக்கம் நீங்க இதழ் வைத்து சுவைத்த பக்கமா '. ஒன்றுமே பேசாமல், காபிக் கோப்பையோடு வந்து அமர்ந்தவள் மனதில் ' எவ்வளவு தைரியம் இவனுக்கு ' என்ற எண்ணத்தோடு கூடவே ' எவ்வளவு உரிமை இவனுக்கு ' என்ற எண்ணமும் சேர்ந்து வந்து ஆக்கிரமித்தது .


இருவரின் கல்லூரிக் கனவுகளின் இடைவெளி குறைந்து இப்போது நெருங்குகின்றனவா. விடை பெறும்போது ' அடிக்கடி வாருங்கள் ' என்று அனைவரிடமும் சொல்லி விட்டு ' இவளிடம் திரும்பி ' ப்ளீஸ் ' என்று அவன் கொடுத்த அழுத்தத்தில் இருந்த அந்த வேண்டுதல் அவளுக்குப் பிடித்து இருந்தது .


இப்படித் தொடர்ந்தது தான் ,இன்று மாலை இருவரின் பெற்றோரின் சம்மதத்துடன் திருமண ரிசப்ஷனில் முடிந்தது . அவன் வாழ்வும் முடிந்தது திடீரென்று . இப்போது அருவமாய் நிற்கும் அவன் வார்த்தைகள் அவள் காதுகளில் விழாதுதான் . இருந்தும் மறுபடி சொன்னான். 'மன்னித்து விடு சாவித்ரி , நாம் சேர்ந்து வாழக் கொடுத்து வைக்கவில்லை, சென்று வருகிறேன்'.


நிமிர்ந்தாள் . அலறினாள். ' முடியாது , என்னை விட்டு நீ போக முடியாது , ஒரு முறை கல்லூரியில் விட்டுச் சென்றாய், அது போதும். இப்போது வந்து விட்டாய். இனி மேல் உன்னை விட மாட்டேன், விட மாட்டேன் ' என்று எழுந்து நின்று அவள் கத்திய அலறலில் , அங்கிருந்த அனைவரும் இவள் பக்கம் ஓடி வர, அவளின் கண்களில் கனன்ற அந்த பார்வையின் உக்கிரம் அந்த அருவத்தை அழுத்திச் சென்று உள்ளே கிடக்கும் சேகரின் உருவத்தில் சேர்க்க, அந்த உருவம் துள்ளியது. மானிடரின் நேர்கோடுகள், நெளிந்து வளைந்து செல்ல ஆரம்பித்தன. அவள் சாவித்ரி .


----------------------------------நாகேந்திர பாரதி


My Poems/Stories in Tamil and English 


கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

ஒத்தைப் பனை மரம் - கவிதை

ஒத்தைப் பனை மரம் - கவிதை  ------------------------- கள்ளு இறக்கிய காலத்தில் காத்துக் கிடந்தவர் பல பேர் கதிர் அறுத்த காலத்தில் கஞ்சி குடித்தவ...