வெள்ளி, 30 ஜனவரி, 2026

எத்தனை முகங்கள் - சிறுகதை

 எத்தனை முகங்கள் - சிறுகதை 

-------------

எப்படி இருந்தால் என்ன. அவள் அவள்தான் . அவளும் பெண்தான். வீட்டில் ஒரு முகமும் , வெளி இடங்களில் வேறு முகங்களும் காட்டத் தெரிந்தாலும் , உள்ளுக்குள் இருப்பது ஒரு முகம் தானே. அது தானே அவள் உண்மை முகம்.


தூங்கி எழுந்ததும் அவன் மனது தெளிவாக இருந்தது. இன்னும் எத்தனை நேரத்திற்கு இது இப்படி என்று தெரியாது என்று நினைத்தபோது சிரிப்புதான் வந்தது . அதற்குள் அவளிடம் பேசி விட வேண்டும். ஏன் நேற்று அப்படி .


என்ன நடந்தது நேற்று. வழக்கம் போல் தான். ஆனால் பவுர்ணமியாய் இருந்த அவள் முகம் இருண்டு அமாவாசையாய் ஆனது எப்படி. .அவன் இருப்பது , குடியில் மூழ்குவோரைத் திருத்தும் மனநல மையம். அவள் தினசரி இரவு அங்கு வந்து ஒவ்வொருவரிடமும் தனித்தனியே அவர்கள் மனம் அறிந்து சிறிது நேரம் பேசி மாற்றம் கொண்டு வர முயற்சிக்கும் ஒரு பொது நல சேவகி. அவள் வேலை பார்ப்பது ஒரு அயல்நாட்டு நிறுவனத்தின் பொது மேலாளராக. இரண்டு குழந்தைகளின் தாய். கணவனும் அரசாங்க அலுவலகத்தில் உயர் அதிகாரி . இந்த சேவை அவள் விரும்பி ஏற்றுக் கொண்ட ஒரு பொது நல சேவை .


அவளின் பரிவான பேச்சுக்கும், கனிவான முகத்திற்கும் காத்துக் கிடக்கும் குடி நோயாளிகள் பல பேர். அவளின் அன்பான பேச்சில் ஒரு தாயின் ஆதரவைக் கண்டு , திருந்திய வாழ்வு பெற்றுத் திரும்பிய பலர் ,அந்த மையத்திற்கு மனைவி குழந்தையோடு வந்து நன்றி சொல்லிச் சென்றதை அவன் பார்த்துக் கொண்டு தான் இருக்கிறான். ஒரு விதத்தில் குடி நோயாளிகள் மன நோயாளிகள்தானே . அந்தக் கருகிய திரியைக் கண்டு பிடித்துத் திருகி விட்டு ஏற்றி விட்டால் தீபம் எரியத் தொடங்கி விடும்தானே.


அவனை அவன் பெற்றோர் கொண்டு வந்து விட்டுச் சென்று ஒரு மாதம் ஆகிறது . அவனது படிப்பில் அவர்களின் தீவீர கண்டிப்பும் கண்காணிப்பும் தான் அவனை இந்தப் பழக்கத்தில் கொண்டுவந்து சேர்த்ததை அவர்கள் உணரவில்லை.அவள் உணர்ந்து விட்டாள் முதல் முயற்சிப் பேச்சிலேயே. இரவு நேரத்தில் உடலை முறுக்கி அவன் குடிக்கு ஏங்கித் துடிக்கும் போது வரும் அவளின் ஆழ்நிலைப் பேச்சுக்கள் அவனை உள்ளே உள்ளே இழுத்துச் சென்று அவனை அமைதிப்படுத்தித் தூங்கப் செய்யும். அவள் செல்வாள்.


அன்றும் அப்படித்தான். ஆனால் அன்று அவன் உள் மனதிற்குள் அவனை அவள் அழைத்துச் செல்ல, அவன் பேசும்போது வந்த வார்த்தைகள். ‘ உமா டீச்சர் ,I need you , நீங்கள் எனக்கு வேண்டும் ‘ . இந்த வார்த்தைகள் தந்த அதிர்ச்சியில் அவள் தடுமாறியது அவளின் இன்னொரு முகத்தை இழுத்து வர கடுமையான வார்த்தைகள் அவளிடம் இருந்து . ‘ரமேஷ் , எழுந்திரு ‘ . விழித்த அவன் கண்டது அவளின் கோப முகம். அதிர்ந்தவனிடம் , ஒரு நிமிடம் தன் நிலை உணர்ந்து சமாளித்த அவள் அவனைத் தூக்க நிலைக்குக் கொண்டு சென்று விட்டு, கிளம்பினாள்.


மறுநாளும் வந்தாள் தெளிவான முகத்தோடு. அவனின் குடிநிலை மட்டும் அல்ல, அவன் வயதின் அந்தக் குழப்ப நிலையையும் தன் முயற்சியால் மாற்ற முடியும் என்ற நம்பிக்கையோடு. அவளின் சேவையின் சவால்கள் அவளை உற்சாகப் படுத்துவது அவளின் இன்னொரு முகம்

-----------நாகேந்திர பாரதி


My Poems/Stories/Articles in Tamil and English 


கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

எத்தனை முகங்கள் - சிறுகதை

 எத்தனை முகங்கள் - சிறுகதை  ------------- எப்படி இருந்தால் என்ன. அவள் அவள்தான் . அவளும் பெண்தான். வீட்டில் ஒரு முகமும் , வெளி இடங்களில் வேறு...