தீர்ப்பு - சிறுகதை
-------------------------------
'வித்யா, பத்தாவது வந்தாச்சு , இனிமே பாடங்கள் எல்லாம் ஒழுங்கா படிச்சு , நீட் பரீட்சையில் தேறி டாக்டர் ஆகுறதுக்கு வேண்டிய விஷயங்கள்லே கவனம் வைக்கணும்.'
' பிரெண்ட் அரட்டை, டிவி சீரியல், கம்பியூட்டர் கேம்ஸ் எல்லாம் தள்ளி வைச்சுட்டுப் படிக்கணும்' என்ற அம்மாவின் அறிவுரையை வழக்கம் போல் அலக்ஷியமாக ஒதுக்கித் தள்ளிவிட்டு, ஸ்டார் ப்ளஸ்ஸில் வரும் கிரைம் த்ரில்லரைப் பார்க்கச் , சேனலை மாற்றினாள் வித்யா.
'எப்பப் பாரு , கொலை, கொள்ளை, துப்பறியுறது , கோர்ட் ஸீன், இதெல்லாம் பார்த்து ஏண்டி குழம்பணும், எவ்வளவு குடும்பக் கதை சீரியல் வருது , அதைப் பார்த்து வாழ்க்கைன்னா என்னன்னு புரியறதை விட்டுட்டு, ஏண்டி இப்படி'
'ஆமா, குடும்பக் கதை பார்த்து , மாமியார் கூட எப்படி சண்டை போடுறது, புருஷனை எப்படி தனிக்குடித்தனம் கூட்டிட்டுப் போறது இத்யாதி எல்லாம் கத்துக்கணுமாக்கும்'
' போன வருஷம், அப்படிப் பார்த்துதானே , பக்கத்து வீட்டுக் கோமளம்
புருஷனை விட்டுட்டு எவனையோ இழுத்துட்டு ஓடிப் போனா, இந்தக் கதையெல்லாம் இங்கே விடாதேம்மா, எனக்குத் தெரியும்,
I know ' என்று அம்மாவைக் கத்தரித்து விட்டு டிவியில் வந்த கோர்ட் சீனில் மூழ்கினாள்.
'என்னமா வாதாடுறா , ஒவ்வொரு பாயிண்டும், அந்தப் பெண்ணைக் கெடுத்தவனுக்கு மரண தண்டனை கொடுக்கிற அளவு எப்படி வைக்கிறா, ஜட்ஜ் எவ்வளவு பெருமையோடு அந்த இளம் பெண் வக்கீலைப் பார்க்கிறார், அவரு வேலை ஈஸியாய் போச்சுல்லே, இந்த மாதிரி அயோக்கியர்களை ஒழிச்சுக் கட்ட இப்படி வக்கீல்கள் தான் தேவை ' என்று உள்ளுக்குள் நினைத்துக்கொண்டே ரசித்துப் பார்த்துக் கொண்டிருந்தாள்,
அப்போதுதான் வேலை முடிந்து வீட்டுக்குள் ராஜா வர , ' இப்படிச் செல்லம் கொடுத்துத்தான் கெடுத்து வச்சிருக்கீங்க, உங்க பெண்ணரசியை, அதோட பிரெண்ட்ஸ் எல்லாம் நீட்டுக்கு இப்பவே டியூஷன் போக ஆரம்பிச்சாச்சு, இது தன்னோட வாழ்க்கைக்குப் பின்னாலே என்ன தேவைன்னு ஒண்ணும் யோசிக்காம , டிவியில் வர டயலாக்குக்கு கை தட்டிக்கிட்டு கொட்டம் அடிக்குது, நீங்க ஒண்ணுமே சொல்லுறது இல்லே' என்று குற்றம் சாட்டும் அம்மாவுக்கு ' ஸ்டாப் , ஒரு வசனம் விட்டுப் போச்சு, உள்ளே போம்மா ' என்று விரட்டினாள் மகள்.
ராணியை அழைத்துக்கொண்டு மகளின் ரூமுக்குள் சென்ற ராஜா, ' ஒரு விஷயம் புரிஞ்சுக்க ராணி , இந்தக் காலக் குழந்தைகளுக்கு நம்மை விட உலகத்தைப் பற்றி நல்லாவே தெரியும், இந்தப் பத்தாவது முதல் யூனிட் டெஸ்டில் அவதானே பஸ்ட், இந்த டாக்டர் படிப்புன்னு நீ அடிக்கடி சொல்றது அவளுக்குப் பிடிக்கலே , விட்டுடு, இன்னும் ரெண்டு வருஷம் இருக்கு, அதற்குள் எவ்வளவோ மாற்றங்கள், சமுதாயத்திலும் , அவளிடமும் ' என்றவன் அங்கே சுவரில் வித்யா வரைந்து மாட்டி இருந்த அந்தப் படத்தைக் காட்டினான்.
' இவர் யார் தெரிகிறதா , அமெரிக்காவில் பெண்கள் உரிமைக்காகவும் , முன்னேற்றத்திற்காகவும் பல வழக்குகள் எடுத்து வாதாடி ஜெயித்துக் கொடுத்து அங்கு உச்ச நீதிமன்ற நீதிபதி வரை உயர்ந்து , பெண்களுக்குத் தீங்கு இழைப்பவர்களுக்கு எமனாக விளங்கி ' notorious R B G ' என்று பெயர் எடுத்த 'ரூத் பேடர் கின்ஸ்பேர்க் ', அவரோட படத்தை இங்கே வரைஞ்சிருக்கா, அங்கே கிரிமினல் சீரியல் , புரியுதா,' என்றவன் தொடர்ந்தார்.
' உடனே குடுகுடுன்னு ஓடிப் போயி , லாயருக்கு படிக்கறதும் நல்ல பியூச்சர் தாண்டி ' ன்னு உசுப்பேத்தி விடாதே, அடுத்த வருஷம், இந்த இடத்திலே அன்னை தெரசா படத்தை வரைஞ்சு மாட்டுனாலும் மாட்டுவா, அவ போக்குக்கு விட்டுடு, பிளஸ் டூ முடிச்சுட்டு , நம்ம கிட்டே கேக்க வந்தா, அந்த நேரத்தைப் பொறுத்து நமக்குத் தெரிஞ்சதைச் சொல்லலாம் , she knows ' என்றவனைப் பார்த்து ' சரியான தீர்ப்பு , நீ என் ராசாடா ' என்று கொஞ்சியபடி கட்டிப் பிடிக்க வந்தவளைத் தடுத்து ' ம்ஹூம், இந்த மூட் இங்கே வரக் கூடாது , இது அவ ரூம், இங்கே வேணாம் ' என்று செல்லமாகச் சொன்னான் ராணியின் ராசா .
------------நாகேந்திர பாரதி
My Poems/Stories in Tamil and English
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக