புதன், 19 ஜூன், 2024

உடைந்த கடிகாரம் - குறுங்கதை

 உடைந்த கடிகாரம் - குறுங்கதை

-----------------------------------


வானத்தில் பறக்க நினைக்கும் மகளுக்கும் , வலியத் தன் கருத்தைத் திணிக்கும் தந்தைக்கும் இடையே நடக்கும் போராட்டம் தொடர்ந்து கொண்டு தான் இருக்கிறது. அவர் கண்களை மறைக்கும் கண்ணாடியில் கூட கடிகாரங்கள் தோன்றுவதைக் கவனித்துக் கொண்டு தான் இருக்கிறாள் மகள் . நேர மேலாண்மையில் நெருப்பு அவர். அது போல் அவரின் பாதி உதடுகள் உச்சரிப்பதைப் புரிந்து பார்த்து நடந்து கொண்டால் தப்பித்தாள் அவள். இல்லையென்றால் தண்டனை தான்.


அவள் பின்னல் முடிச்சில் ஒன்று பிரிந்து இருந்ததைப் பார்த்து ஒரு நாள் முழுவதும் பேசவில்லை அவர். ஒழுங்கும் நேரமும் கொஞ்சம் தவறினாலும் அவர் காட்டும் கடுமையும் கொடுமை தான். தாங்கிக் கொண்டுதான் இருக்கிறாள் அவள் . அவரின் அன்பின் அளவும் தெரியும் அவளுக்கு என்பதால். தாயை இழந்த அவள் எங்கும் தவறி விடக் கூடாது என்ற கண்டிப்பில் ஒரு கருணையும் கலந்து இருப்பதும் புரியும் அவளுக்கு. ஆனால் பலூன் போல் சுதந்திரமாகப் பறக்க விரும்பும் அவள் ஆசைகளை , ஒரு சின்னக் குண்டூசியால் குத்தி உடைத்து விடும் கண்டிப்பு அது என்பதை எப்படி அவருக்குப் புரிய வைப்பது.


ஒரு நாள் இருவரும் கோயிலுக்குச் சென்ற தருணம் அது. அங்கே பல குழந்தைகள் ஓடி விளையாடிக் கொண்டு இருந்தனர் . தாறுமாறாகத் திரியும் அவை வாகனங்களின் வேகத்தைப் புரிந்து கொள்ளாமல் வீதியின் குறுக்கே ஓடி விளையாடியதை ஒழுங்கு படுத்த முடியாமல் தவிக்கும் தாய்மார்களைக் கவனித்தனர் இருவரும். ஒரு தாய் ஒரு குழந்தையை அடித்து இழுத்துச் சென்றாள். அழுதபடி சென்றது அது. இன்னுமொரு தாய் ஒரு குழந்தையை அணைத்து முத்தமிட்டு அமைதிப்படுத்தி இழுத்துச் சென்றாள். அது சிரித்தபடி சென்றது தாயோடு .


திரும்பிப் பார்த்த மகள் தந்தையின் கண்ணாடியில் ஒட்டியிருந்த உருவகக் கடிகாரம் உடைவதைக் கவனித்தாள் . அவள் மனம் லேசாகிப் பலூனாகிப் பறக்க ஆரம்பித்தது. தனது பின்னலின் ஒரு முனையைப் பிரித்து விட்டுச் சிரித்தாள். அவரும் சிரித்தார் .


-------------------------நாகேந்திர பாரதி


My Poems/Stories in Tamil and English 


தலைமுறை - குறுங்கவிதை

 தலைமுறை - குறுங்கவிதை 

---------------------

புன்னை மரம் ஒன்று

பூக்களை உதிர்த்து விட்டுப்

புன்னகை புரிகிறது


------------------நாகேந்திர பாரதி


My Poems/Stories in Tamil and English 


வெள்ளி, 14 ஜூன், 2024

பசி- சிறுகதை

 பசி- சிறுகதை 

--------------------


விட்டு வைத்திருக்கிறார்கள் குட்டி விழட்டும் என்று. தாய்ப் பாசம் கொஞ்சம் குட்டிக்குக் கிடைத்த பிறகு , அரிவாள் விழும் அந்த ஆட்டின் கழுத்தில் . அதற்கும் தெரியும் மனிதர்களின் நினைப்பு. இருந்தாலும் , ஏதோ ஒரு நம்பிக்கையை அசை போட்டுக்கொண்டு படுத்துக் கிடந்தது.


போன முறை கூட்டத்தோடு சேர்ந்து ஒவ்வொரு ஊராகப் போய் நிலங்களுக்கு உரமாக ஆட்டுப்புழுக்கைகளை கொடுத்து அடைந்து கிடந்த காலத்தில் நிகழ்ந்து அது. இப்போது குட்டியாக வயிற்றுக்குள் உருண்டு கொண்டு கிடக்கிறது . விதை விதைத்த கிடாவோ வேறு ஊர் போயாச்சு. இங்கே திரும்பி வந்து ஆடு மேய்க்கும் சொந்தக்காரன் வீட்டில் அடைந்து கிடக்கிறது .


சுற்றும் முற்றும் பார்த்தது. அந்தக் கிராமத்தின் தெறிக்கும் வெயிலில் தீப்பற்றாமல் அமைதி காக்கும் கூரை வீடுகள் தான் சுற்றிலும். எங்கோ தூரத்தில் ஒலிக்கும் ரெயில் சப்தம் . லேசாக ' மே ' என்று கனைத்து பசியை உணர்த்தியது. உள்ளே படுத்திருந்த கிழவன் முனகியபடி எழுந்திருந்தான். மகன் கிடை போடும் வேலைகள் முடிந்து ஆடுகளை ஓட்டிக்கொண்டு ஊருக்குத் திரும்பும் வரை , இது போன்ற புள்ளைத்தாய்ச்சி ஆடுகளையும் , வயதான ஆடுகளையும் பொறுப்பாகப் பார்த்துக் கொள்ள வேண்டும். ஏதாவது ஓடி விட்டால் பிள்ளை வந்து விளாசி விடுவான் வார்த்தையால்தான். பையன் மேல் கொஞ்சம் பயம் தான் கிழவனுக்கு.


என்னதான் வளர்த்து ஆளாக்கி விட்டாலும் . இப்ப வயதானபின் அவனை நம்பித்தானே கஞ்சித் தண்ணி. கிழவி போனபிறகு இன்னும் பயம். கடைசி காலத்திலே , ஆடுகளை ஓட்டிட்டுப் போற மாதிரி தன்னையும் எங்காவது ஓட்டிப் போயி அம்போன்னு விட்டுட்டு வந்துடுவானோ என்று. போன தடவை முக்குத் தெரு முனியன், தன்னோட அப்பனை இப்படித்தான் கூட்டிட்டுப் போனான். திரும்புறப்ப அவன் மட்டும் தான் வந்தான். அந்தக் கிராமத்து வழக்கம் தான்.


சில நகரங்கள்லே , பெருசுகளை காசியிலே கொண்டு போயி கழட்டி விட்டுட்டு வர்ற மாதிரி , பட்டிக்காட்டிலே இப்படி ஒரு பழக்கமும் நடைமுறை. காரணம் யாருக்குத் தெரியும். நல்லாத்தான் வளர்த்தாங்க புள்ளைங்களை. அதுக பெரிசான பிறகு, அதுகளோட வயித்துப்பாட்டுக்குத் தான் பாத்துக்க வேண்டியதா இருக்கு . வேலை பார்க்காத வயசானவங்க எல்லாம் ஒரு சுமையா ஆயிடுறாங்க . அதுகளோட பசியைத் தீர்க்கறது ஒரு பெரிய பொறுப்பாத் தெரியறது .


அந்தக் காலத்திலே வேற மாதிரி இருந்ததை யோசிச்சுப் பார்த்தான் கிழவன். குழந்தைகளை வளர்த்து பீ மூத்திரம் எடுத்து பார்த்துக்கிட்டாலும், வயசான பிறகு அதுகளுக்கு இதெல்லாம் எடுக்கிறது ஒரு அருவெறுப்பாய்த்தான் ஆயிடுறது . இழுத்துகிட்டு கிடந்த அவன் அப்பனை எண்ணை தேச்சு விட்டு குளிப்பாட்டி அனுப்பி வைச்ச ஞாபகம் வந்துச்சு. கிழவனுக்கு. இப்போ எங்கேயோ கொண்டு போயி விட்டுட்டு வர மாதிரி , இப்படி ஒரு நடைமுறை எப்படியோ வந்துடுத்து இந்தக் கிராமத்திலே.


அதுவும் பெரும்பாலும் கிழவி இல்லாத கிழவனையோ , அல்லது கிழவன் இல்லாத கிழவியையோ தான் இப்படி. ரெண்டும் சேர்ந்தும் இருக்கிற வரைக்கும் ஒண்ணை ஒண்ணு பார்த்துக்கிட்டு ஒப்பேத்திடுங்க வாழ்க்கையை. ஒண்ணு போயிட்டாலும் மத்தவங்க பாடு அதோ கதி தான். லேசான சலிப்புடனும் ,முதுமையின் களைப்புடனும் எழுந்து வந்தான்.


தனக்கு வேப்பிலை கொண்டு வந்து போடுற கிழவனைப் பரிதாபமாகப் பார்த்தது அந்தச் சினை ஆடு . அதுக்கும் தெரியும் . வெளியூர் போன இடங்களில் இப்படி விட்டுட்டு வந்தவங்களை எல்லாம் பார்த்து வந்தது தானே. சொந்த பந்தங்களையே இப்படி நடத்துற இந்த மனுஷங்க, 'கறிக்காகவும் , குட்டிகளுக்காகவும் காசுக்காக வளர்க்கிற தன் மேலேயா பரிதாப்படுவாங்க' என்று ஒரு முறை யோசித்த படி தன் பசி போக்க, இலைகளை அசை போட்டு மெல்ல ஆரம்பித்தது. யோசித்துப் பார்த்தால் , தான் உட்பட எல்லோருக்கும் பசி. நமக்குத் தாவரத்தின் மேல் பசி. அவங்களுக்கு நம்ம மேலேயே பசி .


பசி போக ஆரம்பித்ததும் தப்பிப்பது பற்றியும் யோசனை செய்ய ஆரம்பித்தது ஆடு .


-----------------------------நாகேந்திர பாரதி


My Poems/Stories in Tamil and English 


தீப்பொறி ஆசைகள்-கவிதை

 தீப்பொறி ஆசைகள்-கவிதை 

-----------------------------------

விழுந்து எழுந்தபின் தெரிகிறது

மண்ணின் மணம்

அடித்து ஓய்ந்தபின் தெரிகிறது

வலியின் ருசி

அழுது முடித்தபின் தெரிகிறது

சோகத்தின் சுவை

ஒவ்வொரு தோல்வியும் ஊதுகிறது

நெருப்பின் பொறியை

தீப்பொறி ஆசைகள் தெறிக்கும் போது

எங்கும் வெற்றியே

------------------நாகேந்திர பாரதி


My Poems/Stories in Tamil and English 


இயற்கையே இறைவன் - கவிதை

 இயற்கையே இறைவன் - கவிதை 

------------------------------------------

இயற்கையின் நிறங்கள் எத்தனையோ

வானமும் பூமியும்

வகைப் படுத்தி அளிக்கும்

இயற்கையின் நிறங்கள் எத்தனையோ


இயற்கையின் மணங்கள் எத்தனையோ

பூவும் காற்றும்

புரிய வைத்து அளிக்கும்

இயற்கையின் மணங்கள் எத்தனையோ


இயற்கையின் கொடைகள் எத்தனையோ

மேகமும் விதையும்

மேம்படுத்தி அளிக்கும்

இயற்கையின் கொடைகள் எத்தனையோ


இயற்கையே இறைவன்

இன்பமும் துன்பமும்

எல்லாம் கடந்தவன்

இயற்கையே இறைவன்


------------------நாகேந்திர பாரதி


 My Poems/Stories in Tamil and English 


ஓடோடி உழைத்து - கவிதை

 ஓடோடி உழைத்து - கவிதை 

-----------------------------------

ஓடோடி உழைத்து 

ஓடாகிப் போவதெல்லாம் 


வீட்டுக்கும் நாட்டுக்கும் 

வெளிச்சம் தருவதற்கே 


தந்த வெளிச்சத்தின் 

தயவில் குளிர் காய்ந்து 


சும்மா இருக்கின்ற 

சோம்பேறிக் கூட்டத்தின்  


சொகுசைக் குலைத்து 

சுறுசுறுப்பாய் ஆக்குதற்கு 


விரட்டி வேலை வாங்கும் 

வித்தையும் கற்றால் தான் 


ஓடோடி உழைத்ததின் 

உண்மைப் பலன் கிட்டும் 


------------------நாகேந்திர பாரதி 


My Poems/Stories in Tamil and English

  

உடைந்த கடிகாரம் - குறுங்கதை

 உடைந்த கடிகாரம் - குறுங்கதை ----------------------------------- வானத்தில் பறக்க நினைக்கும் மகளுக்கும் , வலியத் தன் கருத்தைத் திணிக்கும் தந்...