சனி, 29 நவம்பர், 2014

ஆற்றின் போக்கு

ஆற்றின் போக்கு 
----------------------------
பாதி நாரும்
பாதிப் பூவுமாக

ஆடிப்  போகிறது
ஆற்றில் மாலை 

வரவேற்பு மாலையா 
வழியனுப்பு மாலையா 

ஏதேதோ நினைவுகளை 
எழுப்பிப் போகிறது  

சொன்னால் மட்டும் 
புரியவா போகிறது 

ஆற்றின் போக்கு 
அதன் போக்கு 
-------------------------நாகேந்திர பாரதி 

வெள்ளி, 28 நவம்பர், 2014

வாரக் கடைசி

வாரக் கடைசி 
--------------------------
பனிரெண்டு மணி வரை 
படுக்கை வாசம் 

காலையும் மதியமும் 
கலந்த சாப்பாடு 

ஆறு மணி வரை 
அடுத்த தூக்‌கம் 

அதுக்கு அப்புறம்தான் 
ஆட்டமும் பாட்டமும் 

விடியப் போறப்போ 
தூங்கப் போகணும் 
----------------------------நாகேந்திர பாரதி 

செவ்வாய், 25 நவம்பர், 2014

காதல் பொறுப்பு

காதல் பொறுப்பு 
---------------------------
காதல் என்பது 
வெறும் விருப்பம் அல்ல 
பெரும் பொறுப்பு 

பேசும் நேரம் எல்லாம் 
பிரியம் இழைய வேண்டும் 

தனிமை கேட்கும் போது 
தள்ளி நிற்க வேண்டும் 

கண்ணீர் வடியும் போது 
கன்னம் துடைக்க வேண்டும் 

உள்ளம் சொல்லுவதை 
உடனே அறிய வேண்டும் 

சொல்லில் மட்டும் அல்ல 
செயலில் காதல் வேண்டும் 
------------------------------------நாகேந்திர பாரதி

சனி, 22 நவம்பர், 2014

விதவைக் கிழவி

விதவைக் கிழவி 
---------------------------
சொந்தக்காரர் வீட்டுக்கே 
வேலைக்காரியாய் வந்தவள் 

வயதின் திருப்பங்களை 
வலியோடு கடந்தவள் 

சமையலும் குழந்தை வளர்ப்புமே 
கதியாகக் கிடந்தவள் 

வளர்த்து மணமாக்கி 
வழியனுப்பி வைத்ததெல்லாம் 

கொள்ளி வைக்கக் கூட 
வாராத குழந்தைகள் 
----------------------------------நாகேந்திர பாரதி 

வெள்ளி, 21 நவம்பர், 2014

காலை வணக்கம்

காலை வணக்கம் 
------------------------------
சீக்கிரம் எழுந்திருப்பதில் - சில 
சிரமங்கள் இருக்கின்றன

கனவைக் கலைக்க வேண்டும் 
போர்வையைப் போக்க வேண்டும் 

இங்கும் அங்குமாக 
புரண்டு படுக்க வேண்டும் 

சோம்பல் முறிக்க வேண்டும் 
கண்ணை விழிக்க வேண்டும் 

எல்லாவற்றிற்கும் மேலாக 
எழுந்திருக்க வேண்டும் 
---------------------------------நாகேந்திர பாரதி 

வியாழன், 20 நவம்பர், 2014

ஆற்றுப் படுகை

ஆற்றுப் படுகை 
--------------------------
ஆற்றுப் படுகை - ஒரு 
அடையாளச் சின்னம் 

அங்கங்கே ஊற்றாக
உட்கார்ந்து இருக்கும் ஆறு 

தண்ணீரும் தாவரமும் 
போட்டு வைத்த கோலங்கள் 

காற்றாலும் கால்களாலும் 
கலைந்து போயிருக்கும் 

மறுபடியும் தண்ணீர் 
ஓடி வரும் போது 

ஆற்றுப் படுகை 
ஆறாக மாறி விடும் 
-----------------------------நாகேந்திர பாரதி 

மண்ணும் விண்ணும்

மண்ணும் விண்ணும் 
--------------------------------------
மண்ணைத் தாய் என்போம் 
விண்ணைத் தந்தை என்போம் 

மண்ணுக்கும் விண்ணுக்கும் 
மகவை மனிதர் என்போம் 

விண்ணில் இருந்து வந்து 
மண்ணில் வாழ்ந்து விட்டு 

விண்ணுக்குத் திரும்புகின்ற 
தண்ணீர் வாழ்க்கையிலே 

உயிர்கள் செழிக்க வைப்போம் 
ஓடிக் கடல் அடைவோம் 
---------------------------நாகேந்திர பாரதி 

தெப்பக் குளம்

தெப்பக் குளம்  -நன்றி குங்குமம் இதழ் 20/07/2015
--------------------------------------------------------------------------
ஒவ்வொரு கோயிலின் 
தெப்பக்குளப்  படிக்கட்டுகளில் 

ஏதோ ஒரு கதை 
ஓடிக்  கொண்டு இருக்கிறது 

கடவுளைப் பற்றியிருந்தால் 
காட்சி கொடுத்தது 

முனிவரைப் பற்றியிருந்தால் 
முக்தி அடைந்தது 

காதலரைப் பற்றியிருந்தால் 
கடைசிச் சந்திப்பு 
-------------------------------நாகேந்திர பாரதி 

புதன், 19 நவம்பர், 2014

அறுவடைத் திருவிழா

அறுவடைத் திருவிழா
------------------------------------
அடிச்சுத் தூத்தி 
நெல்லைப் பிரிக்கையிலே 

வைக்கோல் படப்பு 
வாகா எழும்பையிலே 

ஏறிக் குதிக்க 
இறங்கி மிதிக்க 

அவிச்ச பயறும் 
வறுத்த கடலையும்

அதக்கிக் கடிக்க 
அறுவடைத் திருவிழா 
--------------------------------நாகேந்திர பாரதி 

செவ்வாய், 18 நவம்பர், 2014

முத்தப் போராட்டம்

முத்தப் போராட்டம் 
---------------------------------
சந்து முத்தமா 
சந்தி முத்தமா 

அன்பு முத்தமா 
ஆசை முத்தமா 

கன்ன முத்தமா 
உதட்டு முத்தமா  

காதல் முத்தமா 
காம முத்தமா 

உணவுப் போராட்டம் 
ஓயாத நாட்டில் 

முத்தப் போராட்டம் 
முக்கிய முயற்சிதான் 
-------------------------நாகேந்திர பாரதி 

திங்கள், 17 நவம்பர், 2014

இருளும் ஒளியும்

இருளும் ஒளியும் 
-------------------------------
வெளியிருட்டுப் போக்குதற்கு 
வெண்மையொளி  பாய்ச்சி விட்டால் 

காற்று வெளியில் இருட்டு 
கரைந்து போய் விடும் 

உள்ளிருட்டுப் போக்குதற்கு 
உண்மையொளி பாய்ச்சுகையில் 

ஒவ்வொருவர் வாழ்க்கையிலே 
ஒட்டியுள்ள அழுக்கெல்லாம் 

கனத்த இருட்டாகி 
கஷ்டப் படுத்தி விடும் 

தொடர்ந்து பாய்ச்சி வந்தால் 
துன்பிருட்டுக்  கரைந்து விடும் 
இன்ப ஒளி நிறைந்து விடும் 
--------------------------------நாகேந்திர பாரதி 

ஞாயிறு, 16 நவம்பர், 2014

இசையின் இயக்கம்

இசையின் இயக்கம் 
----------------------------------
ஆர்ப்பரிக்கும் இசைக்கு 
ஆட்டம் போடும் மனது 

அமைதியான இசைக்கு 
அடங்கிப் போகும் மனது 

இசைக்கு ஏற்றபடி 
இயங்குகின்ற மனத்தை 

மனத்துக்கு  ஏற்றபடி 
இசையால் மயக்கி 

ஆட்டமும் போடலாம் 
அமைதியும் காணலாம் 
----------------------------------நாகேந்திர பாரதி 

சனி, 15 நவம்பர், 2014

முயற்சி திருவினை

முயற்சி திருவினை 
---------------------------------
சொல்லுக்குள் சுவையிருந்தால் 
சுவருக்கும் காது வரும் 

பழக்கத்தில் பணிவிருந்தால் 
பக்கத்தில் உலகம் வரும் 

உள்ளத்தில் உரமிருந்தால் 
உடலுக்கும் உறுதி வரும் 

எண்ணத்தில் தெளிவிருந்தால் 
இயக்கத்தில் வலிவு வரும் 

விட்டுவிடா  முயற்சிக்கு 
வெற்றியென்றும் தேடி வரும் 
-------------------------------நாகேந்திர பாரதி
 

வெள்ளி, 14 நவம்பர், 2014

அறுந்த பட்டம்

அறுந்த பட்டம் 
-------------------------------
அறுந்த பட்டத்தை 
அலைக்கழிக்கும் காற்று 

அங்குமிங்கும் தள்ளி 
ஏதோ ஒரு மரத்தின் 

இருண்ட கிளைக்குள் 
குத்திவிட்டுப் போகும் 

காக்கைகள் கொத்திய 
காகிதக் குப்பை 

கீழே விழுந்து 
வானம் பார்க்கும்
------------------------------நாகேந்திர பாரதி 

புதன், 12 நவம்பர், 2014

டூரிங் டாக்கீஸ்

டூரிங் டாக்கீஸ்
--------------------------
குவித்து வைத்த 
மணல்மேல் அமர்ந்து 

சுருட்டுப் புகை 
வாசம் முகர்ந்து 

பழுப்புத் திரை 
பல்லி பார்த்து 

பாட்டை நிறுத்தி 
படத்தைப் போட 

அழுது சிரித்து 
ஆட்டம் போட்டு 

மூன்று இடைவேளை 
முறுக்கு சாப்பிட்டு

காட்சி முடியும் 
கனவு முடியாது 
--------------------------நாகேந்திர பாரதி 
 

செவ்வாய், 11 நவம்பர், 2014

வாயும் வயிறும்

வாயும் வயிறும் 
----------------------------
வயிறு உப்பி வாயுத் தொல்லைக்கு  
வைத்தியரிடம் போனால் 

எல்லாத்தையும் கேட்டுப்புட்டு 
ஏளனமாய்ச் சொன்னார் 

காலை மாலை ரெண்டு வேளை 
கண்டபடி  தண்ணீர் 

நாள் முழுக்க நாலு வேளை  
நாக்குச் சப்பி சாப்பிட்டதால் 

வந்த திந்தத்  தொந்தியாம் 
வாயுத் தொல்லை  இல்லையாம் 
---------------------------------நாகேந்திர பாரதி

வயதான வசதி

வயதான வசதி 
---------------------------
வயதான வர்க்கு 
வாய்க்கும் வசதிகள் 

வங்கிக் கணக்கில் 
கூடுதல் வட்டி 

கல்யாண வரவேற்பில் 
கூடுதல் கவனிப்பு 

கோயில் நெரிசலில் 
கூடுதல் வரிசை 

வீட்டில் மட்டும் 
குறையும் பேச்சு 
--------------------------நாகேந்திர பாரதி 

சனி, 8 நவம்பர், 2014

கிராமத்து உயிர்

கிராமத்து உயிர் 
---------------------------
மருத்துவர் இல்லா 
கிராமத்து உலகில் 

காய்ச்சல் வந்தா 
பட்டினி மருந்து 

வயித்தாலை வந்தா 
தண்ணி மருந்து 

போனது போகும் 
பொழச்சது மிஞ்சும் 

மில்லிலும் வயலிலும் 
மிச்சத்தை நடத்தும் 
----------------------------நாகேந்திர பாரதி 

மனக் குளம்

மனக் குளம் 
-----------------------
தெளிவான தண்ணீரில் 
தெறித்து  ஓடும் சில்லு 

அலையாடும் தண்ணீரில் 
ஆழத்தில் சில்லு 

தெளிவான மனத்திலே
தெறித்து ஓடும் துன்பம் 

அலையாடும் மனத்திலே
ஆழத்தில் துன்பம் 

மனக் குளத்திலே 
சில்லு விளையாட்டு  
-------------------------------நாகேந்திர பாரதி 

வெள்ளி, 7 நவம்பர், 2014

வீரப் பெண் தலைமுறை

வீரப் பெண் தலைமுறை
-----------------------------------------
சொல்லாத கனவுகளோடு 
இந்நாட்டுப் பெண்கள் 

சொல்லிவிட்ட நனவுகளோடு 
மேல்நாட்டுப் பெண்கள் 

கனவுகளை நனவுகளை 
கண்களுக்குள் புதைத்துவிட்டு 

காணாமல் போனது  
பழைய தலைமுறை 

வெளிப்படுத்தி வாழ்வது  
வீரப் பெண் தலைமுறை 
-------------------------------நாகேந்திர பாரதி 

வியாழன், 6 நவம்பர், 2014

பாட்டுப் புத்தகம்

பாட்டுப் புத்தகம் 
-----------------------------
அந்தக் காலப் பாட்டுப் புத்தகம் 
அஞ்சே  பைசாதான் 

பெட்டிக் கடை டீக் கடை 
கம்பியிலே தொங்கும் 

அட்டைப்படம் பார்த்தாலே 
வாங்கச் சொல்லித் தூண்டும் 

பாட்டெல்லாம் படித்தவுடன் 
பாடிப் பார்க்கத் தோன்றும் 

பாதிக் கதை உள்ளிருக்கும் 
மீதி வெள்ளித் திரையிலாம் 

படித்தவுடன் சினிமாவைப் 
பார்க்கச் சொல்லித் தூண்டும் 
----------------------------------நாகேந்திர பாரதி 

புதன், 5 நவம்பர், 2014

ஜோல்னாப் பை

ஜோல்னாப் பை 
---------------------------
ஜோல்னாப் பையில் 
ஒரு சவுகரியம் இருக்கிறது 

தோளில் உறுத்தாத 
துணி வால் 

விருட்டென்று எடுக்க 
வசதியான வாய் 

அறிவுஜீவி என்ற 
அடையாளம் வேறு 

தாடி மட்டும்தான் 
வளர மாட்டேங்கிறது
----------------------------நாகேந்திர பாரதி 
 

செவ்வாய், 4 நவம்பர், 2014

குடும்பப் பாசம்

குடும்பப் பாசம் 
--------------------------
பக்கத்தில் இருக்கச் சொல்லும் 
பாப்பாவின் குரலுக்கு 

பாதுகாப்பும் பரிவும் 
பரிசாகக் கொடுத்திருந்தால் 

பக்கத்தில் இருக்கச் சொல்லும் 
வயதான காலத்தில் 

பாதுகாப்பும் கிடைத்து விடும் 
பரிவும் கிடைத்து விடும் 

கொடுத்து வாங்குவதே 
குடும்பப் பாசம் 
--------------------------நாகேந்திர பாரதி 
 

ஞாயிறு, 2 நவம்பர், 2014

காலப் போக்கு

காலப் போக்கு 
--------------------------
பறந்து திரிந்து 
பழக்கப்பட்ட பட்டம் 

அறுந்து விழுந்து 
மின்சாரக் கம்பியில் 

நடந்து திரிந்து 
பழக்கப்பட்ட செருப்பு 

தேய்ந்து பிய்ந்து 
தெருவோரக் குப்பையில் 

மேலும் கீழும் 
நாளும் பொழுதும் 
-------------------------நாகேந்திர பாரதி 

சனி, 1 நவம்பர், 2014

மொழி பெயர்ப்பு

மொழி பெயர்ப்பு 
------------------------------
வார்த்தை இல்லாத மொழி 
அவளின் பார்வை

முன்னுக்குப் பின் முரண் 
அவளின் பேச்சு 

நீரில் தோன்றும் குமிழி 
அவளின் கோபம் 

குழந்தைப் பெண்ணின் குமுறல்
அவளின் அழுகை 

மொழி பெயர்த்துப் பார்த்தால் 
அவளின் காதல் 
-------------------------------நாகேந்திர பாரதி 

மழைக் காலம்

மழைக் காலம் 
---------------------------
மழைக் காலம் 
முன்ன மாதிரி இல்லை 

அப்போ தெல்லாம் 
மழை பெய்தால்

தும்மல் வராது 
சளி பிடிக்காது  

இத்தனை வருஷத்தில் 
எப்படித்தான் இப்படி 

மழைக் காலம் 
மாறிப் போச்சுதோ 
-----------------------நாகேந்திர பாரதி