ஞாயிறு, 19 பிப்ரவரி, 2012

பொம்மை உலகம்

பொம்மை உலகம்
-----------------------------------
குழந்தையின் உலகத்தில்
நாமெல்லாம் பொம்மைகளே
குளிக்க வைக்க ஒரு பொம்மை
சோறு ஊட்ட ஒரு பொம்மை
சேர்ந்து ஆட ஒரு பொம்மை
வெளியில் போக ஒரு பொம்மை
பாட்டுப் பாட ஒரு பொம்மை
தூங்க வைக்க ஒரு பொம்மை
பொம்மைகள் விட்டுப்போனால்
பிடிக்காது குழந்தைக்கு
---------------------------------------நாகேந்திர பாரதி

புதன், 15 பிப்ரவரி, 2012

புத்தக அலமாரி

புத்தக அலமாரி
------------------------------
விரும்புகின்ற புத்தகத்தை
விலை கொடுத்து வாங்கும்
படிப்பதற்கு நேரமின்றி
படுக்கையிலே தூங்கும்
பார்க்கின்ற போதெல்லாம்
படபடத்து ஏங்கும்
வீடு மாற்றும் போதினிலே
வீசைக்கு விற்கும்
அடுத்த வீட்டினிலும்
அலமாரி நிரம்பும்
-------------------------------------நாகேந்திர பாரதி

காதல் இயற்கை

காதல் இயற்கை
-----------------------------------
வார்த்தைகள் இன்றி
வாய் பேசி வைக்கும்
சத்தங்கள் இன்றி
செவி கேட்டு வைக்கும்
வெளிச்சமே இன்றி
கண் பார்த்து வைக்கும்
தொடுதலே இன்றி
உடல் புரிந்து வைக்கும்
இயற்கையை மாற்றும்
இன்பமே காதல்
-------------------------நாகேந்திர பாரதி

செவ்வாய், 14 பிப்ரவரி, 2012

உயர்ந்த காதல்

உயர்ந்த காதல்
---------------------------------
உடலைத் தாண்டிய
மயக்கங்கள் உண்டு
உணர்வில் ஊறிய
உள்ளங்கள் உண்டு
இரவைத் தாண்டிய
ஏக்கங்கள் உண்டு
உறவில் சிறந்த
உணர்ச்சிகள் உண்டு
உலகில் உயர்ந்த
காதலில் உண்டு
-----------------------------நாகேந்திர பாரதி

நல்லோர் நூல்

நல்லோர் நூல்
-------------------------
ஊருக்கு ஏற்றாற்போல்
உடைகளை மாற்றிக்கொண்டு
ஆளுக்கு ஏற்றாற்போல்
அரட்டையை அடித்துக்கொண்டு
பொய்யான சிரிப்புகளை
பொலபொலென்று உதிர்த்துக்கொண்டு
நடமாடும் மனிதர்களின்
தோலுரித்துக் காட்டுதற்கு
நமக்கென்றும் துணையுண்டு
நல்லோரின் நூல்கள்
----------------------------------நாகேந்திர பாரதி

ஞாயிறு, 12 பிப்ரவரி, 2012

உழைப்பின் உயர்வு

உழைப்பின் உயர்வு
--------------------------------
சுத்தமான உறவும்
சுற்றுப்புற நட்பும்
குடிசையில் பிறந்தவரை
கோபுரத்தில் ஏற்றி வைக்கும்

பரம்பரையைச் சொல்லிக்கொண்டு
பரிகசித்துத் திரிபவர்
மாளிகையில் பிறந்தாலும்
மண்சட்டி ஏந்த வைக்கும்

பிறப்பில் உயர்வில்லை
பேருழைப்பே உயர்வு தரும்
--------------------------------------நாகேந்திர பாரதி

வியாழன், 9 பிப்ரவரி, 2012

குழந்தை உண(ர்)வு

குழந்தை உண(ர்)வு
------------------------------
அரிசி, கடலை
பாசிப் பயறு
கம்பு, கேப்பை
ஜவ்வரிசி
பார்லி, பாதாம்
முந்திரிப் பருப்பு
பாத்துப் பாத்து
சேத்து எடுத்து
அரைச்சுக் கலக்கி
ஆக்கிக் கொடுத்து
சத்து உணவுன்னு
சாப்பிடச் சொன்னா
முறைச்சுப் பாத்திட்டு
முழுங்கி வைக்கும்
--------------------------------------------நாகேந்திர பாரதி

சனி, 4 பிப்ரவரி, 2012

சுமையும் சுவையும்

சுமையும் சுவையும்
------------------------------------
பார்ப்பது ஒரு சுகம்
பிரிவது ஒரு சோகம்
பார்ப்பதும் பிரிவதும்
பழகிப் போகும்
பார்ப்பது மீண்டும்
பிரிவதற்காக
பிரிவது மீண்டும்
பார்ப்பதற்காக
சோகத்தின் சுமையும்
சுகத்தின் சுவையும்
பாகத்தைப் பிரித்து
பாடத்தை நடத்தும்
---------------------------------நாகேந்திர பாரதி

வெள்ளி, 3 பிப்ரவரி, 2012

சமையல் சந்தேகம்

சமையல் சந்தேகம்
--------------------------------------
நாம் பால் காய்ச்சும்போது மட்டும் ஏன்
பொங்கி வழிந்து அடுப்பு அணைகிறது
நாம் காய் வெட்டும்போது மட்டும் ஏன்
விரல் பட்டு ரத்தம் வழிகிறது
நாம் கிழங்கு வறுக்கும்போது மட்டும் ஏன்
காய்ந்து கறுத்து தீய்ந்து போகிறது
நாம் குழம்பு வைக்கும்போது மட்டும் ஏன்
உப்பும் புளிப்பும் உறைப்பும் கூடுகிறது
நாம் சமையல் செய்யும்போது மட்டும் ஏன்
சமையல் அறைக்கு கோபம் வருகிறது
----------------------------------------------நாகேந்திர பாரதி

புதன், 1 பிப்ரவரி, 2012

மோட்டலின் ஏக்கம்

மோட்டலின் ஏக்கம்
---------------------------------------------
கண்டக்டரின் குரலோடு
கானா பாட்டும் உசுப்பும்
கால் மணி நேரம் நிக்கும்
காப்பி கீப்பி குடிக்கலாம்
கடலை மிட்டாய் முறுக்கோடு
கருப்பு கிளாஸ் காப்பி டீ
இறங்கி ஏறி மறுபடியும்
இருட்டுக்குள் பயணம்
இரைச்சல் குறைந்து விட்ட
ஏக்கத்தில் மோட்டல்
------------------------------------நாகேந்திர பாரதி