புதன், 29 செப்டம்பர், 2010

எந்திர அவசரம்

எந்திர அவசரம்
-------------------------
முன்னால் போகும் வண்டி
வழி விடுவதில்லை
பின்னால் வரும் வண்டி
ஒலி குறைப்பதில்லை
என்னதான் அழுத்தினாலும்
எந்திர அவசரம்
இருபது மணி நேரத்தை
பத்து மணி நேரத்தில்
பார்க்க முடிவதில்லை
------------------------------------------------நாகேந்திர பாரதி

செவ்வாய், 28 செப்டம்பர், 2010

உலக தினங்கள்

உலக தினங்கள்
-----------------------------
செப்டம்பர்  இருபத்தாறு
உலக இருதய தினம்
செப்டம்பர் இருபத்தேழு
உலக சுற்றுலா தினம்
செப்டம்பர் இருபத்தெட்டு
உலக வெறிநாய் தினம்
ஒவ்வொரு நாளும்
உறைக்கிற தினம்
ஒவ்வொரு இரவும்
மறக்கிற மனம்
----------------------------------------------------------

திங்கள், 27 செப்டம்பர், 2010

மின்சாரக் கனவு

மின்சாரக் கனவு
----------------------------
நறுக்கிவிட்ட மரப்பட்டை
உயரத்தில் அடித்து வைத்து
நடுவினிலே ஒயர் வைத்து
மூடிவிட்டு திருகி விட்டு
வீட்டோர சிமெண்டு கம்ப
மின்சார வயர் இழுத்து
திண்ணைச் சுவர் பெட்டியிலே
திணித்து விட்டு உயர்த்தி விட
இருட்டுக்குள்  வெளிச்சம் வந்த
வீட்டுக்குள் வியந்ததெல்லாம்
மின்சாரம் போகின்ற
பொழுதினிலே நினைவு வரும்
-------------------------------------------------------------நாகேந்திர பாரதி

ஞாயிறு, 26 செப்டம்பர், 2010

க்யூவின் காலம்

க்யூவின் காலம்
--------------------------
பள்ளியில் இருப்பது
பத்தே பேர்தாண்டா
படிக்கச் சேத்துவிடு
பாசாக்கி விட்டுறேன்
வாத்தியார் சொல்லுக்காய்
சேர்த்து விட்ட பிள்ளை
வரிசையில் நிற்கிறான்
வாரிசைச் சேர்க்க
கூப்பிட்ட காலம் போய்
க்யூவின் காலம் ஆச்சு
-----------------------------------------------------நாகேந்திர பாரதி

சனி, 25 செப்டம்பர், 2010

முதுமை அமைதி

முதுமை அமைதி
--------------------------------
கோவில் சுற்றுப்
பிரகார நடை
கோவில்  கர்ப்பக்
கிரகத் தியானம்
கோவில் திருமடப்
பிரசாத உணவு
கோவில் கோபுர
வாசல் தூக்கம்
கோவில் கொடுக்கும்
முதுமை அமைதி
---------------------------------------நாகேந்திர பாரதி

இருபிறவித் திருநங்கையர்

இருபிறவித்  திருநங்கையர் 
-------------------------------------------
ஒரு நங்கை இரு நங்கை
உயரத்தில் இருக்கின்றார்
பல நங்கை பணத்திற்காய் 
பாதையிலே நிற்கின்றார்
திருநங்கை ஆக்கிவிட்டு
தெருவினிலே நிறுத்திவிட்டு
இருபிறவி ஆக்கிவிட்ட
இரக்கமில்லா இறைவா
மறுபிறவி வந்தால் தான்
மணக்குமா இவர் வாழ்வு
----------------------------------------நாகேந்திர பாரதி

புதன், 22 செப்டம்பர், 2010

மடி தேடும் நேரம்

மடி தேடும் நேரம்
------------------------------------
மலமும் ஜலமும்
மகவுக்கு எடுத்து
வளமும் வாழ்வும்
வாரிக் கொடுத்து
குலமும் தழைக்க
குடும்பம் ஆக்கி
மலமும் ஜலமும்
ஆகும் நேரம்
மகவின்   மடியை
மனமும் தேடும்
----------------------------------------------நாகேந்திர பாரதி

வியாழன், 16 செப்டம்பர், 2010

உறவும் பிரிவும்

உறவும் பிரிவும்
---------------------------------
அப்பா அம்மா
ஆன பின்தான்
அப்பா அம்மா
உறவு புரியும்
தாத்தா பாட்டி
ஆன பின்தான்
தாத்தா பாட்டி
உறவு புரியும்
உறவு புரிவதற்குள்
உயிர்கள் பறந்து விடும்
--------------------------------------------நாகேந்திர பாரதி 

சிலை மனிதர்கள்

சிலை மனிதர்கள்
-------------------------------------
மறைந்த நாளில்  பிறந்த நாளில்
மாலை மரியாதை
மறந்த நாட்கள் மற்ற நாட்கள்
மழையும் வெயில் வாதை
வாழும் போது முன்னாலே
வாய்க்கு வந்த பேச்சு
போகும் போது பின்னாலே
பூச் சொரிய லாச்சு
இருக்கும் போது ஏசுவது
இறந்த பிறகு பூஜிப்பது
-------------------------------------------------நாகேந்திர பாரதி

வெள்ளி, 10 செப்டம்பர், 2010

நேரமும் தூரமும்

நேரமும் தூரமும்
-----------------------------------
பட்டணத்துச் சாலையில்
பத்துக் கிலோ மீட்டர்
நெரிசலில் காரில்
நேரம் ஒரு மணி
ஒத்தையடிப் பாதையில்
ஓங்கி நடந்தாலும்
ஒரு மணி நேரம்
ஒரே தூரம்
காத்தும் சுத்தம்
காசும் மிச்சம்
---------------------------------------நாகேந்திர பாரதி

புதன், 8 செப்டம்பர், 2010

புகைப்படப் பாட்டி

புகைப்படப் பாட்டி
---------------------------
இருக்கின்ற காலத்தில்
எரிந்து விழுந்து விட்டு
போன பிறகு
பொண்டாட்டி படத்திற்கு
பூஜை போடுகிற
புருஷன் முகத்தின்
வேதனை விம்மலை
வேடிக்கை பார்த்தபடி
புன் சிரிப்போடு
புகைப்படத்தில்  பாட்டி
-----------------------------------------------------நாகேந்திர பாரதி

வெள்ளி, 3 செப்டம்பர், 2010

வயலும் வாழ்வும்

வயலும் வாழ்வும்
--------------------------------
தூக்குச் சட்டியில் சோறும்
தோளில் தொங்கும் பையுமாய்
அரை மணி நடந்து
அடுத்த ஊரில் படித்து
பத்தாம் கிளாஸ் முடித்து
பர்ஸ்ட்     கிளாஸ் வாங்கி
மேலே படிச்சு ஒண்ணும்
கிழிக்க வேணாமின்னு
வயல் தண்ணியிலே உழறப்போ  
வாத்தியார் முகம் தெரியுது 
-------------------------------------------------------நாகேந்திர பாரதி

வியாழன், 2 செப்டம்பர், 2010

வீட்டுக்குள் விநியோகம்

வீட்டுக்குள் விநியோகம்
----------------------------------------------
வீணாய்ப் போகும் தானியம்
விநியோகம் ஏழைகட்கு
உச்ச நீதிமன்ற உத்தரவு
உற்சாகம் எல்லோர்க்கும் 
வீட்டுக்குள் பிரிஜ்ஜுக்குள்
வீணாகும் தின்பண்டம் 
அடைத்து வைத்த காரணத்தால்
அழுகிப் போகும் பழங்கள்
கொறிக்கத் தேடும் பெரிசுகட்கு
கொடுத்து விட்டால் புண்ணியமே
-----------------------------------------------------நாகேந்திர பாரதி