புதன், 7 ஜனவரி, 2026

வழியனுப்புதல் -2025 - கவிதை

 வழியனுப்புதல் -2025   - கவிதை 

——-------

( கவிதை வனம் குழுவில் ) 

வழக்கம் போல் நீயும்

வந்தாய் போகிறாய்


ஒவ்வொரு நாளிலும்

பிறந்தாய் இறந்தாய்


உருளும் காலத்தின்

ஓட்டம் தானே நீ


வழியனுப்பும் வரவேற்பும்

தேவையா உனக்கு


உன் வழியில் நீ

எம் வழியில் யாம்


——நாகேந்திர பாரதி


My Poems/Stories/Articles in Tamil and English   


காகிதக் கப்பல் - கவிதை

 காகிதக் கப்பல் - கவிதை 

-----------

(கவிதை வனம் குழுவில் ) 


பிஞ்சு விரல்களின்

வளைவுக் கலை ஒன்று


ஓடும் நீரின்

உணர்வைப் புரிந்தபடி


வளைந்தும் நெளிந்தும்

செல்லும் பாதையில்


கல்லும் முள்ளும்

இடறும் நேரம்


கண்ணீர் விடுகின்ற

காகிதக் கிழிசலின்


உணர்வைப் புரிந்து

உருகும் குழந்தை


வாழ்க்கை ஓட்டத்தில்

கலக்கும் போது


காகிதக் கப்பலை

நினைத்துப் பார்க்கும்


காலம் வராமல்

கடவுள் காக்கட்டும்


——நாகேந்திர பாரதி


My Poems/Stories/Articles in Tamil and English


இல்லத் தலைமை - கவிதை

 இல்லத் தலைமை - கவிதை 

----------------

(கவிதை வனம் குழுவில் ) 


இல்லத் தலைமை

இருவர்க்கும் பொதுவென்போம்


மையல் அறையிலும்

சமையல் அறையிலும்


குழந்தை வளர்ப்பிலும்

பெரியோர் பொறுப்பிலும்


வீட்டுப் பணியிலும்

நாட்டுப் பணியிலும்


இருவர் பங்கும்

இணையாய் இருந்திட்டால்


வீடும் சிறக்கும்

நாடும் செழிக்கும்


----------------நாகேந்திர பாரதி


My Poems/Stories/Articles in Tamil and English 


நிதி மேலாண்மை - கவிதை

 நிதி மேலாண்மை - கவிதை 

---------------------

( கவிதை வனம் குழுவில் ) 


பணம் மட்டுமா நிதி

பாதுகாக்கவும் பகிர்ந்து வாழவும்


பாசமும் நிதிதான்

பண்பும் நிதிதான்


அன்பும் நிதிதான்

ஆற்றலும் நிதிதான்


அத்தனை நிதியையும்

ஆவலாய்ச் சேர்ப்போம்


சேர்த்ததைக் கொடுத்து

வாழ்வதே மேலாண்மை

---------------நாகேந்திர பாரதி


My Poems/Stories/Articles in Tamil and English 


நரை கூடும் காதல்-கவிதை

 நரை கூடும் காதல்-கவிதை 

-------------------

(கவிதை வனம் குழுவில் ) 


கண்ணோரம் நெளிகின்ற கோடுகளில்

காதலின் வரிகளின் கவிதை


இதழ்களில் உலர்ந்திட்ட ஈரத்தில்

காதலின் சொற்களின் பக்குவம்


கால்களின் மெதுவான நடையிலோ

காதலின் அமைதியின் கவர்ச்சி


கைகளில் புடைத்திட்ட நரம்புகளில்

காதலின் ரத்தத்தின் ஓட்டம்


கூந்தலில் கலந்திட்ட வெண்மையில்

காதலின் கூடிய தூய்மை


-----------------நாகேந்திரபாரதி


My Poems/Stories/Articles in Tamil and English 


தெரு விளக்கு - கவிதை

 தெரு விளக்கு - கவிதை 

----------------

( கவிதை வனம் குழுவில் ) 


பாதைக்கு மட்டும் அல்ல

படிப்புக்கும் வெளிச்சம் நான்


என் அடியில் படித்தவர்கள்

எத்தனை பேர் உச்சியிலே


ஓரத்தில் இருந்தாலும்

உதவிக்கு நான் உண்டு


இருட்டுக்கும் திருட்டுக்கும்

என்றுமே எதிரி நான்


மின்சார உயிர் ஊட்டிக்

காப்பதுவோ உம் பொறுப்பு


--------------------நாகேந்திர பாரதி


My Poems/Stories/Articles in Tamil and English   


திங்கள், 22 டிசம்பர், 2025

துளிர் - கவிதை

 துளிர் - கவிதை 

-----------

(கவிதை  வனம் குழுவில் ) 


துளிர்த்த விதையும்

செடியாய் மாறி


மரமும் ஆகிக்

கனியைக் கொடுக்கும்


கனியைப் கொடுத்துக்

களைத்த பின்னே


மரமும் விறகாய்

மாறிப் போகும்


துளிர்த்த பயிரும்

சாய்ந்த பின்னே


அறுத்துப் போட்டு

உதிர்த்த நெல்லைப்


பிரிந்த வைக்கோல்

மாட்டின் உணவு


சக்கை ஆனபின்

சாவே இயற்கை


வாழ்க்கைத் துளிரும்

வளர்ந்து சாயும்


இயற்கை நியதியை

ஏற்று வாழ்வோம்


------------------நாகேந்திர பாரதி

 

My Poems/Stories/Articles in Tamil and English


தோள் கொடுக்கும் தோழமை - கவிதை

 தோள் கொடுக்கும் தோழமை - கவிதை 

-----------------

(கவிதை  வனம் குழுவில் ) 


பள்ளியில் இருந்தே

பழகி வந்ததால்


நல்லதும் கெட்டதும்

நடத்திப் பார்த்ததால்


சிரிப்பும் அழுகையும்

சேர்ந்து செய்ததால்


பரிசும் உதையும்

பங்கு போட்டதால்


அவனை நானும்

என்னை நானும்


ஒன்றாய் நினைத்து

உறவு கொண்டதால்


வருடம் ஆனாலும்

வயது போனாலும்


தோள் கொடுப்பான்

தோழன் என்றும்


--------------நாகேந்திர பாரதி


My Poems/Stories/Articles in Tamil and English


காலக் கண்ணாடி - கவிதை

 காலக் கண்ணாடி - கவிதை 

-------------------

(கவிதை  வனம் குழுவில் ) 


காலக் கண்ணாடியின்

கோலங்கள் பலவிதம்


இலக்கியக் கண்ணாடியில்

எழுத்தின் மாற்றம்


தலைமுறைக் கண்ணாடியில்

கலாச்சார மாற்றம்


அரசியல் கண்ணாடியில்

ஆட்சியின் மாற்றம்


மக்களும் சமூகமும்

மாறும் தோற்றத்தை


காலக் கண்ணாடி

காட்டும் விதத்திலே


வலியும் புரிகிறது

வழியும் தெரிகிறது


--------------------நாகேந்திர பாரதி

 

My Poems/Stories/Articles in Tamil and English 


மண் வாசனை - கவிதை

 மண் வாசனை - கவிதை 

——-

(கவிதை  வனம் குழுவில் ) 


விழுந்து புரண்ட

பிறந்த மண்


எழுந்து ஓடிய

பிறந்த மண்


உள்நாடும் வெளிநாடும்

உழைத்துக் களைத்து


திரும்பி வந்து

சேர்ந்த மண்


எரிப்பதோ புதைப்பதோ

இங்கேதான் என்று


வந்து சேர்ந்த

சொந்த ஊரின்


மண் வாசத்தில்

தாயின் பாசம்


———-நாகேந்திர பாரதி


My Poems/Stories/Articles in Tamil and English


மை சிந்தும் பேனா - கவிதை

 மை சிந்தும் பேனா - கவிதை 

--------------

(கவிதை  வனம் குழுவில் ) 


மை சிந்தும் பேனாவால்

கையில் தான் கறையாகும்


பொய் சிந்தும் பேனாவால்

மனம் எல்லாம் கறையாகும்


சமுதாயப் பொறுப்போடு

சிந்தித்து எழுதினால்


சிந்துகின்ற மையெல்லாம்

ஜீவனுள்ள எழுத்தாகும்


செந்தமிழின் துணையாலே

ஜெகமெல்லாம் சீராகும்


---------------நாகேந்திர பாரதி


My Poems/Stories/Articles in Tamil and English 


வழியனுப்புதல் -2025 - கவிதை

  வழியனுப்புதல் -2025   - கவிதை  ——------- ( கவிதை வனம் குழுவில் )  வழக்கம் போல் நீயும் வந்தாய் போகிறாய் ஒவ்வொரு நாளிலும் பிறந்தாய் இறந்தாய்...