'ஆரிரரோ ' சிறுகதை மதிப்புரை- கதை புதிது நிகழ்வு
---------------------------
நன்றி அழகியசிங்கர் , வணக்கம் நண்பர்களே
சுந்தரபாண்டியன் அவர்களின் ' ஆரிராரோ ' சிறுகதை
'மலடி' என்று சொந்தங்களால் அவமானப் படுத்தப்படும் ஒரு பெண் எடுத்த முடிவைச் சூசகமாகக் காட்டி 'ஆரிராரோ ' என்று அவள் தன் பெண்ணை தாலாட்டுவதோடு முடியும் கதை.
ஆரம்பமே அட்டகாசம். அந்த ஊரின் காலை நேரத்தின் வர்ணனையோடு கதையும் ஆரம்பிக்கிறது . நாயகி சொர்ணம் பெண் குழந்தை பெற்று தாயாரின் வீட்டில் இருக்கிறாள் . அங்கே அவள் பாட்டியும் அத்தையும் விடியக் கருக்கலிலேயே எழுந்து, பின்புறக் களத்துக் கிணத்தில் நீர் சேந்தி, அண்டாக்களையும் குடங்களையும் நிரப்பி , முற்றம் தெளித்து பெருக்கி , கோலம் போட்டு நிமிர்வதற்கும் , சொர்ணம் தூங்கி விழிக்கவும் சரியாக இருந்தது . குழந்தை தொட்டிலில் தூங்கிக் கொண்டிருக்கிறாள் . வயிறு பசித்தால் மட்டும் தாங்க மாட்டாள் . இந்த இடத்தில் குழந்தையை ' வயிற்றுக் கள்ளி ' அதாவது பசி தாங்க மாட்டாள் என்று வட்டார வழக்குப் பேச்சில் சொல்லும்போதே கதையின் சஸ்பென்ஸும் ஆரம்பித்து விடுகிறது .
இப்போது குழந்தை பெற்றவளைப் பார்க்க வரும் சித்தியின் பேச்சு , அவளை சொர்ணத்தின் அம்மா வரவேற்பது என்று வரும் உரையாடல்களில் , கிராமத்துப் பழக்க வழக்கங்கள், பேச்சுக்கள் வந்து விழுகின்றன அழகாக.
அந்தச் சித்தி அவள் அக்காவிடம், சொர்ணத்தின் அம்மாவிடம் ' ஆமாக்கா இப்பதான் மொத க் காருக்கு வந்தேன் , சுகமாயிருக்கியா , இனிமே சுகத்துக்கென்ன , கட்டிப் பொண்ணு வந்துட்டா , கட்வுள் இப்பதான் கண்ணைத் தொறந்திருக்காரு '
ஒரு வருஷமா , ரெண்டு வருஷமா, பத்து வருஷமா இல்லாம போச்சே ,பாக்காத கோயிலா , பிடிக்காத டாக்டரா , கடுக்கற ஜோசியன் கரெக்ட்டாதான் சொல்லி இருக்கான் , சொர்ணம் வயித்தில சொக்கத் தங்கம் வரத்தான் செய்யும்னு '
குழந்தை அழவே சொர்ணத்திடம் கொடுத்தாள் சித்தி .
'ஆவு ஆவு ன்னு பறக்குது வயித்துக் கள்ளி ' , அவ அப்பனை மாதிரி '
சொர்ணம் சொல்லி முடிக்கும் முன்னே அவள் கணவன் ஆறுமுகம் அங்கே வருகிறான் . ' என்னடி , காலையிலேயே என்னைத் திட்டுறே , நானென்ன வயித்துக் கள்ளனா '
'நான் உங்களையா சொன்னேன் '
பின்ன அவ அப்பன்னா வேற யாரு '
சொர்ணம் தலை குனிந்தாள் என்ற வரிகளில் கதையின் சஸ்பென்ஸ் லேசாக அவிழ்கிறது .
இப்போது அவள் கணவனைப் பற்றிய விபரங்கள். சென்னையில் தனியார் கம்பெனியில் கேஷியர் உத்தியோகம் . அவன் நண்பர்களுக்கு எல்லாம் கல்யாணம் ஆகி ஒரு வருஷத்தில் குழந்தை பிறந்து விட இவர்களுக்கு மணம் ஆகி பத்து வருடங்கள் ஆகியும் குழந்தை பிறக்காததால் பத்து வருஷத்திலே அவளை அவன் படுத்திய பாடு . 'கடவுளுக்கு கண் இருந்தா கலங்கிப் போவாருன்னு ' சொர்ணத்தோட அப்பா சொல்ற அளவுக்கு கொடுமை .
பெரம்பூரில் சிறிய வீடு . தண்ணீர்க் கஷ்டம். என்று அந்த நடுத்தரக் குடும்ப வாழ்க்கையைச் சுருக்கமாகச் சொல்லிவிட்டு முக்கியக் கருவுக்கு , ஆம் கரு வராத கருவுக்கு ‘ உடனே வந்து விடுகிறார் ஆசிரியர். மூணு வருஷமா குழந்தை வரல்லே. உடனேயே ' சொர்ணத்தோட மாமியாரோட வார்த்தை , அவள் சம்பந்தியமா கிட்டே இப்படி .
'என்ன செய்வீங்களையோ , ஏது செய்வீங்களோ , எனக்கு பேரப்பிள்ளை வேணும் ' சொர்ணத்தின் மனதில் ஆழமாகப் பதிந்த வார்த்தைகள் இவை என்பது நமக்கு கதையின் முடிவில் தான் புரியப் போகிறது .
தொடர்வது சொர்ணத்தின் பெற்றோர் எடுக்கும் முயற்சிகள் .
முதலில் முப்பந்தரம் இசக்கியம்மனுக்குப் பொங்கல்
அடுத்தமுறை திருவனந்தபுரம் டாக்டர் பாலகிருஷ்ணன் . அவர் சொல்வது. ' இவளிடம் எந்த மிஸ்டேக்கும் இல்லை, அவ புருஷனைக் கூட்டிட்டு வாங்க . ' அவள் புருஷன் அதற்கு மறுக்க , சொர்ணத்துக்கும் மாமியாருக்கும் வாய்ச்சண்டை இப்படி.
‘நீ மலடு , உன் பெரியம்மா பெண்ணுக்கு குழந்தை இல்லே, அந்த வம்சம்தானே நீ ' என்று குத்த பதிலுக்கு சொர்ணம் ' பெரியம்மா மகளுக்கு குத்தம் இல்லே அந்த அத்தானுக்குத்தான் குறை ன்னு டாக்டர் சொல்லிட்டாரு '
அப்ப என் மகன் மலடனா
ஒங்க புள்ளைய அனுப்பி சோதிச்சுப் பாருங்க , எனக்கு மட்டும் குழந்தை ஆசை இல்லையா என்ன '
என்று தொடர்ந்த சண்டையில் முடிவில் அவள் கணவன் , நாகர்கோவில் டாக்டர் நடேசனிடம் பார்க்கச் சொல்ல , அவர் ஏற்கனவே இவர்கள் சொல்லி வைத்திருந்த படி , அவள் கணவனுக்கு இன்னொரு கல்யாணம் பண்ணிப் பார்க்கச் சொல்ல , சொர்ணத்தின் பெற்றோர் தவித்துப் போய், மற்றும் ஒரு டாக்டரிடம் , மாதம் ஒருமுறை நாகர்கோயில் விஜயம் செய்யும் , டாக்டர் முத்துகாளியைப் பார்க்க, சொர்ணத்தையும் அவள் கணவன் ஆறுமுகத்தையும் அனுப்ப , அவர் கொடுத்த ஏராள மாத்திரைகளை வாங்கிக் கொண்டு கணிசமான பணத்தையும் கொடுத்து விட்டு திரும்புகின்றனர்.
இந்த இடத்தில குழந்தைப் பேறுக்குத் தவிக்கும் தம்பதிகளை வைத்து எத்தனை மருத்துவர்கள், எத்தனை மருத்துவமனைகள் தொழில் நடத்துகின்றன என்ற காட்சியை நாம் தொலைக்காட்சிப் பெட்டியிலே பார்ப்பது எல்லாம் ஞாபகம் வரும்படி , அந்த சமுதாய பிரச்னையை நம் கண் முன் கொண்டு வந்து காட்டுகிறார் ஆசிரியர்.
அந்தப் பெண் சொர்ணத்தின் மேல் நமக்கு அனுதாபம் ஏற்படும் படி கதையைக் கொண்டு செல்கிறார் ஆசிரியர்.
அடுத்து வருவது கிளைமாக்ஸ் சீன்
சாத்தான்குளம் கோயிலுக்குப் பொங்கல் வைக்கச் செல்கிறது சொர்ணத்தின் குடும்பம். வண்டியை ஓட்டி வருபவன் முத்துப் பாண்டி. சொர்ணத்தின் அத்தை பையன். அரைக் கிறுக்கு, அநாதை. சொர்ணத்தின் வீட்டில் வளர்ந்தவன். எவ்வளவு வேண்டுமானாலும் சாப்பிடுவான். உடல் வாட்ட சாட்டமாக தேர்த் தடிகளைப் போல.
அவர்கள் அனைவரும் சாத்தாங்கோயிலில் பொங்கல் இட்டு பாயாசம் வைத்து , சாப்பிட்டு அன்று இரவு அங்கேயே தங்கி விட்டு , மறுநாள்
காலை திரும்புகிறார்கள். சொர்ணத்தின் முகத்தில் சாத்தாவின் அருள் கிட்டியது போல தனிக் களை.
சில நாட்கள் கழித்து, சொர்ணத்தின் அம்மா, வாயெல்லாம் பல்லாக வருவோர் போவோரிடம் எல்லாம் சொல்வது ' சொர்ணம் குளிக்காம இருக்காளாம், எழுத்து வந்திருச்சு '.
தொடர்வது சந்தோஷ நிகழ்வுகள்.டாக்டர் முத்துக்காளியின் மருந்துதான் காரணம் என்று அம்மா சொல்ல , சாத்தாவின் செயல்தான் என்று அப்பா சொல்ல , சொர்ணம் புருஷனைக் கடைக்கண்ணால் பார்க்க , அவன் ஆண்மை நிரூபிக்கப் பட்ட மகிழ்வில் இரண்டும் தான் என்று சொல்கிறான். வளைகாப்பு , குழந்தை பிறப்பு என்று அந்தக் குடும்ப நிகழ்வுகளை எல்லாம் ஆசிரியர் அந்த தெக்கத்திப் பழக்கங்களோடு அழகாக விவரிக்கிறார். கதையில் படியுங்கள் .
குடுமபம் அனைவரும் சேர்ந்து இருந்து சாப்பிட்டு முடிக்க , பின்கூடத்தில் சாத்தாங்கோயிலுக்கு வண்டி ஓட்டி வந்த முத்துப் பாண்டி, சொர்ணத்தின் அத்தை பையன் , அரைக்கிறுக்கு வயிறு புடைக்க மூன்றாவது முறையாக சாப்பிட்டுக் கொண்டு இருந்தான். சொர்ணம் குழந்தைக்கு 'ஆராரோ ,ஆரிராரோ ' என்று அர்த்தத்தோடு தாலாட்டினாள். குழந்தை மீனு பாட்டின் அர்த்தம் தெரியாமலே தூங்கிப் போனாள். முத்துப்பாண்டி பெரிதாக ஏப்பம் விட்டான். நல்லவேளை குழந்தை விழிக்கவில்லை . அவள் கணவன் ஆறுமுகத்திற்கும் தூக்கம் கண்களை சுழற்றியது .
கதையின் கடைசியில் வருகின்ற அந்த ' அர்த்தம் ' என்ற வார்த்தையிலும், ஆரம்பத்தில் வந்த 'வயிற்றுக் கள்ளி ' என்ற வார்த்தையிலும் கதையின் முழு அர்த்தமும் நமக்குப் புரியும்படி கதையை முடிக்கிறார் ஆசிரியர்.
'பொம்பள மனசு ஆழம் ' என்ற சினிமாப் பாடலும் நினைவுக்கு வந்தது . அதோட சேர்ந்தே இக்காலத்தின் குழந்தைப் பேறு மருத்துவனைகளின் செயல்களும் , செயற்கைக் கருத்தரிப்பின் விபரங்களும் அக்காலத்தில் குழந்தைப் பேறு இல்லாமல் கொடுமைப்படுத்தப்பட்டுப் பத்து வருடங்களாகச் சொர்ணத்தின் மனம் பட்ட பாடும் சேர்ந்தே நினைவுக்கு வந்தன. படிக்கும்போது உங்களுக்கும் இவை அனைத்தும் நினைவுக்கு வரலாம். ஆசிரியருக்கும் அழகியசிங்கருக்கும், கேட்ட அனைவருக்கு நன்றி. வணக்கம்.
----------------நாகேந்திர பாரதி
My Poems/Stories/Articles in Tamil and English
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக