திருநீற்று ஓதுவார் -அவனும் அவர்களும் - 1
------------------------------
திருஉத்திரகோசமங்கை கோயிலின் வடக்கு வாசல் பக்கம் வெளி வரும்போது அங்கே திண்ணையில் படுத்திருந்தவர் மெதுவாக எழுந்து தடியை ஊன்றியபடி நடந்து செல்வதைப் பார்த்தான் . நெற்றி, நெஞ்சு கைகள் முழுக்க பட்டை பட்டையாக பூசப்பட்ட திருநீறு அவரை அவனுக்கு அடையாளம் காட்டியது .
அருகில் நெருங்கிச் சென்று , 'ஐயா , ஓதுவார் ஐயா ' என்றவுடன் திடுக்கிட்டுத் திரும்பியவர் , 'யாரு ' என்று கண்களை இடுக்கிப் பார்த்தார். ' ஐயா , நான் கோயில் பழைய பேஷ்கார் நடராஜ பிள்ளை பேரன் ' . என்றதும், 'ஓ அவரா, மறக்க முடியாதுப்பா உன் தாத்தாவை எல்லாம் , என்னை எப்படி கண்டுபிடிச்ச, அப்ப எப்படி இருந்தேன், இப்ப எலும்பும் தோலும் தான் ' . ஐயா உங்க திருநீறை வச்சுதான் கண்டுபிடிச்சேன் .'
'ஆமா அதுதானே அப்பவும் இப்பவும் என் அடையாளம் ' என்றவரிடம் சிறிது நேரம் பேசி அவரை அவரது வீடு வரை சென்று விட்டுவிட்டு பஸ்ஸில் திரும்பும்போது மனதிற்குள் ஒலித்தது அவரது கணீர் குரல் .
'மந்திரமாவது நீறு
வானவர் மேலது நீறு
சுந்தரமாவது நீறு
துதிக்கப் படுவது நீறு
தந்திரமாவது நீறு
சமயத்தி லுள்ளது நீறு
செந்துவர் வாயுமை பங்கன்
திருஆல வாயான் திருநீறே! '
நெஞ்சுவரை தூக்கிக் கட்டப்பட்ட நாலு முழ வேட்டியோடு ,அவரது கட்டுமஸ்தான உடம்பெங்கும் பூசப்பட்ட திருநீறோடு, தனது கணீர்க் குரல் எடுத்து ஓதுவார் ஸ்வாமிகள் இந்தப் பாடலைப் பாடுவதைக் கேட்பதற்கே கூடியிருக்கும் கூட்டம்.
எல்லாப் பூஜைகளுக்கு முன்னும், நடுவில் அலங்காரத்திற்குத் திரையிடப்படும்போதும் மக்களை இசையெனும் இன்ப வெள்ளத்தில் மயக்கி மகிழ்ச்சியோடு காத்திருக்க வைக்கும் மகத்தான இசை வாணர் அவர்.
'ஏன் தாத்தா , இம்புட்டுத் திருநீறு பூசியிருக்காரு இவரு ' என்ற கேள்விக்கு தாத்தா சொல்லிய ஞானசம்பந்தர் திருநீற்றுப் பதிகம் பாடிய வரலாறும், கூன் பாண்டியனின் வெப்ப நோய் தீர்ந்த வரலாறும் திருநீற்று மகிமையை எடுத்துச் சொல்ல அதன் மருத்துவ குணமும் தெரிய வந்தது.
அப்போதெல்லாம், வீட்டில் எல்லாவற்றுக்கும் திருநீறே மருந்து. தேள் கடிக்குத் திருநீறு குழைத்துப் பூசுவது.வயிற்று வலிக்கு திருநீற்று பசை வயிற்றின் மேல். காலையில் குளித்து முடித்து விட்டு வந்தவுடன் நெற்றியில் திருநீறைப் பூசிவிட்டு , வாயில் கொஞ்சம் திருநீறை வைத்து விடுவது . காரணங்கள் புரிய ஆரம்பித்த வயது .
தொடரும் நாதஸ்வர, தவில் இசை என்று இசையும் பக்தியும் கலந்த கோயில் நிகழ்வுகளில் எல்லாம் பிரதானமாகத் தெரிந்தவர் அந்த ஓதுவார் ஸ்வாமிகள். பிறகு திருவிழாக் காலங்களில் சாமியும் அம்மனும் தெரு உலா வரும்போது ஓதுவார் ஐயா பாடிக்கொண்டு போக அதற்குத் தலை ஆட்டிக்கொண்டு எங்கள் தாத்தா நடந்து சென்ற காட்சியும் கண் முன்னே வந்து போனது .
அங்கே அம்மனுக்கும் சாமிக்கும் , எத்தனை வித அபிஷேகங்கள், எத்தனை வித தீப ஆராதனைகள். இந்த அபிஷேக ஆராதனைகளால், கோயிலின் உள்ளே உள்ள காற்று மண்டலத்தில் ஏற்படும் அதிர்வலைகள் உருவாக்கும் ஆரோக்கிய விஷயங்களை பற்றி பின்னால் தான் தெரிந்து கொண்டோம் .
அப்போதெல்லாம் கோயிலுக்குள் ஆவலுடன் அவன் எதிர்பார்த்த தருணம் , ஓதுவாரின் இசையும் , பிரசாதம் கொடுக்கும் தருணமும் தான். . பரிசாரகர்கள் பக்தியுடன் சமைத்த பிரசாதங்களை சாமிக்கும் அம்மனுக்கும் , அர்ச்சகர்கள் மூடியும் திறந்தும் ரகசியமாகக் காண்பித்து விட்டு , சுற்றுப் பிரகாரம் சுற்றி விட்டு வருவார்கள் .
நாம் பொறுமையோடு காத்திருக்கும் நேரத்தில் ஓதுவார் அய்யாவின் தேவார திருவாசகப் பாடல்கள்தான் நம் பசியை மறக்க வைக்கும் இசை அமுதம் . அதற்குப் பிறகு கிடைக்கும் அந்தப் பிரசாதங்கள் சில சமயம் ,சுண்டல் , சில சமயம், சர்க்கரை சாதம், சில சமயம் தயிர் சாதம் என்று அவற்றின் ருசி இப்போதும் நாவில் எச்சில் ஊற வைக்கிறது . அதோடு சேர்த்து ஓதுவார் ஸ்வாமிகளின் நினைவும் தான். நாவில் தேவார இசையை ஊற வைக்கும் .
———நாகேந்திர பாரதி
குறிப்பு : இன்னும் தொடரும் திருஉத்திரகோசமங்கை நினைவுகள். அவர்களின் நினைவுகள் . அந்த நினைவுகளை இப்படி நெடுந்தொடராய் எழுத நினைத்ததன் காரணம் முதலில் சில வருடங்களுக்கு முன்பு நமது இரா. முருகன் சார் அவர்கள் எழுதிய 'ரெட்டைத்தெரு ' சிவகங்கை பற்றிய இளம்பிராயக் கட்டுரைகள். நானும் சிவகங்கையில் பி யு சி படித்த நினைவுகளைக் கிளப்பி விட அப்போது நான் கதை புதிது குழுவில் எழுதிய மதிப்புரையில் ' திருஉத்திரகோசமங்கை ' பற்றி எழுத வேண்டும் என்று எழுதியது. தொடர்ந்து சமீபத்தில் , ரம்யா வாசுதேவன் அவர்கள் கலை புதிது குழுவில் எழுதிய ' அவளும் நானும் ' தொடர் அந்தப் பழைய ஆசையை மறுபடி உசுப்பி விட்டது . . நான் பார்த்த, பழகிய பலர் இதில் வருவார்கள் . இந்த ' அவனும் அவர்களும் ' தொடரில் . . நன்றி.
------------நாகேந்திர பாரதி
My Poems/Stories/Articles in Tamil and English

கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக