நூலக ஆசான்
(படம் வரைந்தவர்: உஷா பாரதி க்கு நன்றி)
------------
உத்திரகோசமங்கை உறவுகள் - 3
-------
'தம்பி, நாளைக்கு காலையிலே எட்டு மணிக்கே வந்திரு,புது புஸ்தகம் எல்லாம் வருது. எல்லாத்தையும் ரெஜிஸ்டரில் எழுதி , நம்பர் ஒட்டி , அலமாரியில் பிரிச்சு அடுக்கணும். சரியா'
லைப்ரரி சார் சொல்லச் சொல்ல அவனுக்கும் 'எப்படா நாளை விடியும் என்றிருந்தது. ஒவ்வொரு ஆறுமாதத்திற்கு ஒரு முறை அந்த மாவட்ட கிளை நூலகத்தில் வந்து இறங்கும் வண்ண வண்ண அட்டைப்படங்களோடு , பலவித வாசங்களோடு புதிது புதியதாய் எத்தனை புத்தகங்கள்.
அவற்றின் வாசனைகளை முகர்ந்து அனுபவித்தபடி , அதன் வழுவழு பக்கங்களையும் சிலவற்றின் சுரசுர பக்கங்களையும் தடவிப்பார்த்து அனுபவித்துவிட்டு, கதை, கட்டுரை, கவிதை, ஆங்கிலம் , தமிழ் என்று பிரித்து எழுதி நம்பர் போட்டு ரெஜிஸ்டரில் எழுதி , அந்தந்த அலமாரிகளில் அடுக்கி வைத்து அதை அழகு பார்ப்பது ஒரு மகிழ்ச்சி .
இடை இடையே லைப்ரரியன் சார் வரவழைத்துக் கொடுக்கும் , காஃபி , டீ, பிஸ்கட் , பஜ்ஜி தனி ருசி
அது தவிர , அந்த எழுத்தாளர்களின் முன்னுரையை ஒருமுறை வேகமாகப் படித்து விட்டு அதில் சிலவற்றைத் தேர்ந்தெடுத்துக் கொண்டு வந்து அப்பத்தாவிடம் படித்துக் காண்பிப்பதால் கிடைக்கும் சந்தோசம் இன்னொரு விதம்.
பள்ளி நேரம் போக , நண்பர்களுடன் சண்டை , விளையாட்டு , படிப்பு நேரம் போக , வீட்டு வேலைகள் ( கிழக்கு தெரு உத்தண்டி வீட்டில் அப்போதே கறந்த பால் வாங்கி வருவது, வடக்குத் தெரு ராமு பிள்ளை கடையில் காய்கறி கருவேப்பிலையோடு கடலை மிட்டாயும் சேர்த்து வாங்கி வருவது, அப்பாவோடு ரைஸ் மில் சென்று நெல் அரைத்து தவிடு, உமி , அரிசி என்று தனித் தனியாகப் பிரிந்து வருவதை வேடிக்கை பார்த்து கூடவே சேர்ந்து பைகளில் எடுத்து வருவது என்று எத்தனையோ வேலைகள் ) நேரம் போக , மீதி இருக்கும் நேரம் எல்லாம் அந்த லைப்ரரிதானே கதி.
அன்றன்றே வரும் விகடன் , குமுதம், கல்கி , ராணி துக்ளக் , கண்ணன், கோகுலம், கலைக்கதிர் , அமுதசுரபி, கலைமகள் , பேசும்படம் , பொம்மை என்று சிலவற்றில் படம் பார்த்தும் ,சிலவற்றைப் படித்தும் , கதை, கவிதை, ஓவியம் , கட்டுரைகளில் ஆர்வம் ஏற்பட்டு , தானும் எழுதியும் வரைந்தும் பார்த்துத் திரிந்து கொண்டிருந்த காலம்.
ஈர்த்த எழுத்துக்கள் கல்கி , நா பார்த்தசாரதி, லட்சுமி, வாண்டுமாமா,நாடோடி , மேதாவி, ரங்கராஜு , அப்துல் ரஹீம், பாரதிதாசன், திருவள்ளுவர், இளங்கோ அடிகள், கம்பர் என்று எத்தனை இமயங்கள். இவர்களை அடையாளம் காட்டி படிக்க வைத்த அந்த நூலகர் என்றும் நினைவில் நிற்கிறார்.
பொன்னியின் செல்வனில் வந்தியத்தேவன் , இளைய பிராட்டி உரையாடல்கள்
பொன்விலங்கில் சத்யமூர்த்தி மோஹினி உரையாடல்கள்
மிதிலா விலாஸில் தேவகி , ஈஸ்வரன் உரையாடல்கள்
அந்தக் கதாபாத்திரங்களுக்கு உயிர் கொடுத்த மணியம், கோபுலு, விஜயா படங்கள்.
இந்த லைப்பரரியில் இருந்த புத்தகங்கள் பெரும்பாலும் குறைந்த படங்களோடு புதிதாக அச்சில் வந்த புத்தகங்கள் .
அனைத்தும் அதிகம் கவர்ந்தன.
லைப்ரரி புத்தகங்களில் அப்துல் ரஹீம் அவர்களின் சுய முன்னேற்றக் கட்டுரைகளில் தெரிந்த பல பிரபலங்களின் வரலாற்றுக் குறிப்புகள்
பாரதிதாசனின் ' இருக்கின்றாள் என்பதனால் இருக்கின்றேன் ' என்ற குடும்ப விளக்கு மற்றும் தமிழ்ப் பற்று தெறிக்கும் கவிதைகள்
ரா பி சேதுப்பிள்ளையின் ' ஊரும் பேரும் ' கட்டுரைகளில் தெரிந்த இயல்பான எதுகை மோனை
வாண்டு மாமா வின் ' மரகதச் சிலை ' வண்ணக் கதை தொடங்கி எத்தனை சித்திரக் கதைகள்
துக்ளக் சோவின் கிண்டல் எழுத்து , ஆனந்த விகடன் தொடர்கதைகள், தினத்தந்தியின் ' கன்னித்தீவு ' ' புதுப்பெண் பொன்னி, அடங்காத அங்கமுத்து '
ரங்கராஜு வின் ராஜாம்பாள், ராஜேந்திரன், மோஹன சுந்தரம் என்று திருவல்லிக்கேணியில் துப்பறியும் கோவிந்தன் .
கல்கியின் , பொன்னியின் செல்வன், சிவகாமியின் சபதம் , பார்த்திபன் கனவு
லக்ஷ்மியின் மிதிலா விலாஸ்( சௌபாக்கியம் , தர்மாம்பாள், முதல் அத்தியாய கோபுலு படம் மறக்க முடியுமா, சிவகங்கை தாத்தா வீட்டு லைப்ரரியில் பின்னால் பார்த்தது ) சூர்யகாந்தம்,
நா பார்த்தசாரதியின் குறிஞ்சி மலர், பொன் விலங்கு , மணிபல்லவம்
எஸ் ஏ பியின் காதலெனும் தீவினிலே
சோவின் கோவாடீஸ்
மேதாவி மர்மக்கதைகளின் அத்தியாயத் திகில் தலைப்புக்கள்
நாடோடியின் கதைகளில் வரும் 'சரசுவின் ' நகைச்சுவை
தமிழ்வாணனின் சங்கர்லால் , வஹாப், தேநீர்
தேவனின் துப்பறியும் சாம்பு (பின்னால் சிவகங்கை வக்கீல் தாத்தா வீட்டில் பத்திரிகையில் இருந்து பைண்ட் எடுத்து வைத்த புத்தகத்தில் இன்னும் கண் முன் . தேவனின் துப்பறியும் சாம்பு சித்திரக் கதையாக )
ஓவியர்கள் வினு ( கல்கியில் , கயல் விழி ) , மாயா ( இதய வீணை சுந்தரம் பீச்சில் அமர்ந்திருக்கும் காட்சி ) இன்னும் பல ஓவியர்கள் .
இன்னும் சொல்லிக் கொண்டே போகலாம்
இதற்கு நடுவில் நண்பர்கள் சிலர் ரகசியமாகப் பகிர்ந்து கொண்ட ' வாலிபம்', ' சரோஜாதேவி ' புத்தகங்களையும் தாண்டி நல்ல வாசிப்பு ரசனையின் பக்கம் திருப்பியவர்.
அந்த நல்ல ரசனைக்குத் தீனி போட்டு , தீனி போட்டு அதைப் பார்த்து ரசித்தும் , பாராட்டியும் இருந்த அந்த லைப்ரரியன் சார் நூலக ஆசான்தானே.
-----------நாகேந்திர பாரதி .
My Poems/Stories/Articles in Tamil and English

கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக