ஒரு கப் காப்பி - சிறுகதை
---------------------------
' கோமளம் , ஒரு கப் காப்பி கிடைக்குமா .'' கேட்டு அரை மணி நேரம் ஆச்சும்மா '
' அவ்வளவு அவசரம்னா, போயி போட்டுக்க வேண்டியதுதானே . குமார் ஆபீஸ் கிளம்பிட்டு இருக்கான். அவனுக்கு டிபன் பண்ணிக்கிட்டு இருக்குறது தெரியலையா, காது தான் போச்சு . கண்ணும் அவிஞ்சு போச்சா ' .
அவர் ஒன்றும் பேசவில்லை.
அப்போதுதான் ரூமின் உள்ளிருந்து ஹாலுக்கு வந்துகொண்டு இருந்த குமார் கேட்டான்.
'என்ன வேணுமாம் கிழத்துக்கு '
'ம். காப்பி , குடிச்சுட்டு ஆபீஸ் போகணுமாம். ரெம்ப அவசரமாம். கேட்டு அரை மணி ஆச்சுதாம். ஆபீஸ் போனப்போ இது படுத்தின பாடு கொஞ்சமா, நஞ்சமா. மறக்க முடியுமா, கொஞ்ச நேரம் நம்மை நிம்மதியா இருக்க விட்டுச்சா, அப்பா, என்ன ஆக்ரோஷம் பேச்சிலே, ஆபீசுக்குப் போற நேரத்திலே கொஞ்சம் லேட்டா ஆனாலும் , கத்துன கத்து,'
' உன்னை மட்டுமாம்மா படுத்துச்சு , என்னை ஒரு நாளாவது ஸ்கூல் கூட்டிட்டுப் போயிருக்கா, எல்லாம் அம்மா பாத்துக்குவா, ஆபீஸ் ஆபீஸ் . என் கல்லூரிக்கு ஏதோ லோன் போட்டு பீஸ் கட்டிச் சேர்த்து விட்டதோடு சரி, ஒரு நாளாவது 'என்ன படிக்கிறே, எதுவும் வேணுமா ' ன்னு ஒரு வார்த்தை கேட்டுருக்கா . நானாப் படிச்சு , வேலை தேடி சேர்ற சமயம், சரியா இதுக்கும் ஆபீஸ் வேலைக் காலம் முடிய, ஏதோ நான் வேலைக்குப் போறதால குடும்பம் நடக்குது.'
' இதிலே காபிக்கு அரை மணி நேரம் ஆச்சா, இன்னிக்கு கிழத்திற்குக் காபி கொடுக்காதேம்மா. அது என்ன பழக்கம். ரெண்டு மணி நேரத்திற்கு ஒரு தடவை காபி . அதுதான் அந்தக் காலத்திலே ஆபிஸில் அடிக்கடி குடிச்ச பழக்கம், இனிமே நிறுத்திடு. காலையிலே ஒரு கப் கொட்டிக்கிடுச்சுல்ல . போதும் , '
'எனக்கு டிபன் பாக்ஸ் ரெடியா, இப்பவே கால் மணி நேரம் லேட்டு. பஸ் பிடிச்சுப் போக எப்படியும் ஒரு மணி நேரம் ஆகும். இது மாதிரி அங்கே ஒரு மேனேஜர் கிழம் ஸ்ட்ரிக்ட் . என்ன திட்டு திட்டப் போகுதோ' என்று கிளம்பினான் .
அடுத்த நொடி , ரூமுக்குள் இருக்கும் டி வி முன்னால் போய் உட்கார்ந்து விட்டாள் கோமளம். 'இந்நேரம் சீரியல் ஆரம்பிச்சிருக்கும். பாவம். அந்த மாமியார் மருமகள் கிட்டே படுற பாட்டைப் பார்த்து அழணும் . ' உள்ளே ஓடினாள்.
அஞ்சு வருஷத்திற்கு முன்னால் , ஒரு ஞாயிற்றுக் கிழமை அந்தப் பிரம்மாண்டமான கடைக்குப் போய், கோமளம் ஆசையாய்ப் பார்த்துக் கேட்ட அந்த டிஜிட்டல் கலர் டி வி யை வாங்கிக் கொடுத்த ஞாபகம் வந்தது. 'இவருக்கு அந்த டி வியும் கிடையாது. காபியும் இப்ப கிடைக்காது' .
அவருக்குத் தெரிந்தாலும் சில கேள்விகளை அவ்வப்போது அவரே உள்ளுக்குள் கேட்டுக் கொண்டு பதிலும் சொல்லிக் கொண்டு அமைதியாக இருப்பது ஒரு தினசரிப் பழக்கம் ஆகிவிட்டது அவருக்கு .
'வீட்டுக்கு வேண்டியது எல்லாம் வாங்கிக் கொடுத்துக் கொண்டு தானே இருந்தோம். அப்புறம் ஏன் இந்த வெறுப்பு அவர்களிடம். அவர் வேலை பார்த்துக் கொண்டு இருந்தவரை ஒரு வார்த்தை எதிர்த்துப் பேசாதவர்கள் இப்போது ஏன் இப்படி . '
'தனக்கு வேலை இல்லாததாலா , நோய் வாய்ப்பட்டு விட்டதாலா,' . பலமுறை தனக்குத் தானே கேட்டுக் கொண்டு பதிலும் தெரிந்தவர் தான் அவர். 'வேலை வேலை ' என்று திரிந்த காலத்தில், கோமளத்திடமோ , குமாரிடமோ ஒரு வார்த்தை அவர் பிரியமாய்ப் பேசியது இல்லை. '
புரிந்தது அவருக்கு. 'எல்லாம் வாங்கிப் போட்டால் போதுமா, கூட இருந்து பேச வேண்டாமா. வெளியே அடிக்கடி கூட்டிப் போக வேண்டாமா, லீவ் நாட்களிலும், நண்பர்களோடு வெளியே திரிந்த நேரமே அதிகம். எல்லாம் உள்ளே இறுகிப் போய்க் கிடந்தது இப்போது இளகி வெளியே எரிமலைக் குழம்பாக கக்குகிறது . புரிகிறது. ஆனால் காலம் கடந்து போனதும் புரிகிறது .
குமாரின் வேதனை புரிகிறது. ஆனால் கோமளம் , அவளும் எப்படி மறந்து போனாள், அதற்கும் முந்திய ஒரு இளமைக் காலத்தை .
அவருக்கு அடிக்கடி இருமல் வந்து படுத்தும் போது அவரை ஆஸ்பத்திரிக்கு கூட்டிச் செல்ல எவ்வளவு அலுத்துக் கொள்கிறான் குமார். அவன் சிறுவயதில் சளி, இருமலில் அடிக்கடி அவதிப்பட்டு இரவில் மூச்சு விடச் சிரமப் பட்ட போதெல்லாம், அவனைத் தோளில் தூக்கிப் போட்டுக் கொண்டு, டாக்டர் நண்பரின் வீட்டுக்குச் சென்று அவரைத் தொந்தரவு செய்து அவர் ஒரு ஊசி போட்டவுடன் அவன் மூச்சு சரியாக அவர் அடைந்த நிம்மதி. அவனுக்கு ஞாபகம் இருக்காது. ஆனால் கோமளம். அவளுக்குத் தெரியுமே. அவளுமா மறந்து விட்டாள்.
பின்னால் வந்த அவசர வேலைக் காலத்திற்கும் முன்னால் ஒரு காலம் இருந்ததே அது கோமளத்திற்கு மறந்து போய் இருக்கலாம் . அவருக்கு மறக்க வில்லை.மறக்காது .
அதுதான் அவருக்கு இப்போது எப்போதும் நினைவில் வந்து . அந்த நாற்காலியில் அமர்ந்து இருக்கும் அவர் எண்ணங்களில் வந்து தாலாட்டும்.
அப்போது தான் அவருக்குக் கோமளத்துடன் திருமணம் ஆகி இருந்தது . அவர் ஒரு கிளார்க்தான். ஆபீசர் ஆவதற்கு முன்னால் இருந்த அமைதியான காலம். அவளோடு சேர்ந்து சென்ற சினிமாக்கள். கோயில்கள். பூங்காக்கள். ஒவ்வொன்றாக அவர் மனக்கண்ணில் வந்து தாலாட்டாக மாற , அப்படியே தூங்கி விடுவார். அந்த சன்னல் வழி வந்த காற்றும் , அந்த நாற்காலியின் சுகமும் தான் அவருக்குப் பகல் தூக்கத்தைக் கொடுத்துக் கொண்டு இருந்தன.
' சோறு வந்து கொட்டிக்கிறது தானே' என்ற குரலுக்கு விழித்து கைத்தடியை ஊன்றி எழுந்து உள்ளே போய் அடுப்படி சேரில் அமர்ந்து ஏற்கனவே தட்டில் போட்டு வைத்திருக்கும் சாதம். குழம்பு , காய் சாப்பிட்டு தட்டைக் கழுவி விட்டு, திரும்ப வந்து அதே நாற்காலியில் கனவுக் காலம். சேர்ந்து அமர்ந்து அவள் பரிமாறியதும், சில சமயம் ஊட்டி விட்டதும் கனவில் வந்து கண்கள் கலங்கும்.
அந்தப் ப்ரோமோஷனை அவர் ஒத்துக் கொண்டு இருக்கக் கூடாது. ஆபீசர் ஆனபின் சம்பளம் அதிகம் ஆகி, புது வீடு, டி வி , இன்னும் எத்தனையோ குடும்பத்திற்கு வேண்டியது எவ்வளவோ வாங்கி போட்டார். அவர் மட்டுமா அனுபவித்தார். அவர்களும் சேர்ந்து தானே.
ஆனால் அவர்களுடன் பேசிச் சிரித்த நேரம் போய், எப்போதும் வீட்டிலும் ஆபீஸ் நினைப்பே. அவர்களுடன் எரிந்து விழுந்த , கத்திய, ஒதுக்கிய நாட்கள் ஆரம்பித்தது அப்போது தான். அதைப் பற்றி யோசிக்கவே நேரம் இல்லாமல் போனதே. அந்த நினைவுகளின் அழுத்தம் தானே இப்போது அவர்களிடம் இருந்து வெளிப்பட்டுக் கொண்டு இருக்கிறது. மனதிற்குள்ளேயே அவர்களிடம் மன்னிப்புக் கேட்டுக் கொண்டு இருந்தவர் , ஒருநாள் , நாற்காலியில் சாய்ந்தபடியே இறந்து போனார்.
கோமளமும் குமாரும் . ' கிழம் போயிடுச்சு ' என்று தான் மனதில் நினைத்தபடி எல்லாக் காரியங்களையும் முடித்து விட்டனர். ஆனால் அந்த நாற்காலி அதே இடத்தில். அதை வேறு இடத்திற்கு மாற்றவும், அதை உபயோகப்படுத்தவும் அவர்கள் ஏனோ நினைக்கவில்லை. ஆனால் , அந்த ஓரச் சன்னலை மட்டும் சாத்தியே வைத்தனர். அவர் இருந்த காலத்தில் அது எப்போதும் திறந்தே இருந்தது .
சில வருடங்கள் ஆனபின் இப்போது கோமளத்திற்கு டி வி யில் உள்ள விருப்பம் போய் அந்த ஹாலில் வந்து அமர்ந்து அந்த நாற்காலியைப் பார்த்துக் கொண்டு இருக்கும் பழக்கம் வந்து விட்டது. மூலையில் அமர்ந்து அந்த நாற்காலியையே பார்த்துக் கொண்டு இருப்பாள் . அது லேசாக ஆடுவது போல் ஒரு பிரமை. அவர் அதில் அமர்ந்து இருந்த நாட்கள் உள்ளுக்குள் ஒரு நடுக்கத்தை ஏற்படுத்தியது .என்ன பாடு படுத்தினோம் அவரை , அவரின் கடைசி நாட்களில் .
குமார் கூட ஒரு நாள் கேட்டு விட்டான். ' ஏம்மா,இப்படி ஏதோ பறி கொடுத்த மாதிரி உட்கார்ந்து இருக்கே.' 'ஒண்ணுமில்லேடா ' என்ற படி முந்தானையால் , மூக்கைத் துடைத்தபடி போய் விடுவாள் கோமளம். இத்தனை வருடங்களுக்குப் பிறகு அவள் மனதிற்குள் திரும்பும் பழைய நினைப்பை அவன் புரிந்து கொள்வானா. 'வேலை வேலை' என்று பரபரப்பாகத் திரியும் அவனுக்கு நிச்சயம் புரியாது என்பது அவளுக்கு இப்போது புரிய ஆரம்பித்து இருக்கிறது .
ஒரு முறை, ஏதோ ஒரு நினைப்போடு எழுந்து , அந்த ஓரச் சன்னலைத் திறந்து வைத்து விட்டு ஹால் ஓரத்தில் அமர்ந்து பார்த்துக் கொண்டு இருந்தாள். அதன் வழி வந்த வெய்யிலின் மஞ்சள் வெளிச்சம் சுவரிலும், நாற்காலியிலும் , தரையிலும் பட்டுத் தெறித்தது. ஒரே மஞ்சள் ஒளி. , பக்கத்து வீட்டில் இருந்து ஹோலி அன்று வந்து விளையாடிய குழந்தைகளின் ஹோலி மஞ்சள் பொடி சுவற்றிலும் தரையிலும் ஒட்டி இருப்பதிலும் அந்த வெளிச்சம் தெறிக்க, குப்பென்று மஞ்சள் நிறம். சன்னல் ஓரம் வைத்திருந்த செடியில் பூத்திருந்த மஞ்சள் பூவும் சேர்ந்து கிளப்பி விட்ட ஞாபகம் .
'மஞ்சள் பூசிக் குளிச்சுட்டு நீ வர்ற ஒவ்வொரு நேரமும், உன்னை விழுந்து கும்பிடணும்னு ஏண்டி தோணுது ' என்ற அவரின் வார்த்தைகளில் கிறங்கி விழுந்த அந்தக் காலமும். அதைத் தொடர்ந்த நிகழ்வுகளும் கண்களில் தெரிந்தன. இப்போது சன்னல் வழி வந்த காற்று நாற்காலியைத் தாலாட்ட , அசைந்தது நாற்காலி.
'கோமு ஒரு கப் காபி கிடைக்குமாடி'
'இதோ ' என்றபடி எழுந்தவள் , அப்படியே தரையில் அமர்ந்து விம்மி விம்மி அழ ஆரம்பித்தாள் .
----------------------நாகேந்திர பாரதி
My Poems/Stories in Tamil and English
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக