திங்கள், 8 ஏப்ரல், 2024

உஷா தீபன் சிறுகதை மதிப்புரை - கதை புதிது நிகழ்வு

 உஷா தீபன்  சிறுகதை மதிப்புரை - கதை புதிது நிகழ்வு 

---------------------------------------------------------

 நன்றி அழகிய  சங்கர். 'எதிர்பார்ப்புகள் 'உஷா தீபன் அவர்களின் 'எதிர்பார்ப்புகள்' சிறுகதை.  இந்த எதிர்பார்ப்புகள் சிறுகதையை நான் எப்படி சொல்லப் போகிறேன் என்ற எதிர்பார்ப்பும் அழகியசிங்கருக்கும் , இந்தக் கதையைப் படித்தவர்கட்கும் இருக்கலாம். கொஞ்சம் தடுமாறினாலும் வார்த்தைகள் வசம் இழந்து  போகக்கூடிய வாய்ப்பு உள்ள கதையை  கம்பியின் மேல் நடப்பது போல  மிகவும் கவனமாக எழுதியுள்ளார் ஆசிரியர். 


நாம் பலரும் கடந்து வந்த   இளமையின் எதிர்பார்ப்புகளை நாம்  உணரும்படி எழுதியுள்ளார் உஷா தீபன்.    அந்த உணர்வுகளைப்  பிரதிபலிக்கும் போது  அதன் உக்கிரத்துக்கு ஏற்றாற்  போல்  அவர் சில வார்த்தைகளைப்  போட்டு இருப்பது இந்த கதைக்கு அவசியமான ஒன்றாகவே தோன்றுகிறது.  அந்த தம்பதியர் உடலுறவு கொள்ளும் காட்சிகளை எல்லாம்  ஆபாசமாக போய்விடாமல்  அதை ஒரு அழகு உணர்ச்சியோடும் அதே நேரத்தில்  அந்த உறவுகளின் வேகத்தை நமக்கு உணர்த்தும் வகையிலும் வார்த்தைகளை அளந்து போட்டு இருக்கிறார் .


 மதுரையில் நடக்கக்கூடிய கதை . திருப்பரங்குன்றம் கோச்சடை என்று பல ஊர்களின் பெயர்கள் வருகின்றன  நகரில் இருக்கக்கூடிய ஒரு  இடத்திலே  ஷிப்ட் முறையில் வேலை பார்க்கின்ற மனைவியை தினசரி இரவு சென்று அழைத்து வருகின்றான்  கணவன் . அந்த மாலை நேரத்திலே அவன் இருக்கும் வீட்டு மாடியில் இருந்து  அவன் பார்க்கின்ற சில காட்சிகள்  அவனுடைய உணர்ச்சி வேகத்தைத்  தூண்டுவதை மிகவும் அருமையாக எழுத்தில் வடித்துள்ளார் ஆசிரியர் .


 ஒரு கிழட்டு கழுதையின்  உணர்வுகளையும்,   அங்கே தெரிகின்ற அந்த வைகை ஆற்றின்  மணல்மேடுகளில் நடக்கின்ற சில நிகழ்வுகளையும் ,  அத்தனைக்கும் மேலாக  ஜன்னல் கம்பிகளில் வரக்கூடிய சில வாசங்களையும் கூட  அவர் அந்த உறவின் நிகழ்ச்சியோடு ஒன்று படுத்திச்  சொல்லும் பொழுது  இளமைக் காலத்தில்  நடக்கின்ற பல நிகழ்வுகளை அவர் அப்படியே பிரதிபலித்து இருப்பதாகவே தோன்றுகிறது.


  இதை கணவன் மனைவி என்ற  உறவோடு  ஒத்துப் போகும் படி எழுதி இருப்பதால் இதில் அந்த  காமத்தின் வேகம் தான் தெரிகிறது ஒழிய ஆபாசம் தெரிவதாக தோன்றவில்லை.   அவர்களுக்கு, அந்தத்  தம்பதிகளுக்கு  குழந்தை  இல்லை .திருமணமாகி  இரண்டு வருடங்களுக்கு மேல் ஆகிவிட்டன  .அந்த எதிர்பார்ப்போடு அவர்கள் நடத்துகின்ற உறவுகள்  ,அந்த உறவின் முடிவிலே ஏற்படுகின்ற திருப்தியற்ற  நிலை,அவர்கள் மருத்துவரிடம் சென்று அதற்கு எடுக்கக்கூடிய  சிகிச்சைகள் , இதற்கு அவர்களின் உறவினர்களிடம் கூட அந்த மனைவி சில விஷயங்களை சொல்லுவது,  அது தொடர்பாக அந்த தம்பதிகளுக்குள் ஏற்படும் ஊடல்  .


பிறகு  இருவரும் ஒருவரை  ஒருவர் புரிந்து கொண்டு அதற்கேற்றாற்  போல் நடந்து கொள்கின்ற நிகழ்வுகள்  இவை அனைத்துமே அந்த  தம்பதியரின் மண  வாழ்க்கையின்  அந்த உணர்ச்சிகரமான இளமைக் கால நிகழ்வுகளை  அப்படியே எடுத்துக்காட்டுகின்றன..  குழந்தை வேண்டும் என்ற ஏக்கம் அந்தப் பெண்ணுக்கு . இவனுக்கும்தான். ஆனால் அதையும் தாண்டி இவனுடைய அதீதமான காம  உணர்வுகள்  இவனைப்  பிடித்து ஆட்டி வைக்கின்றன  என்பதையும்  அவர் அழகாக விவரித்து இருக்கிறார் .


இந்த கதையில்  ‘எதிர்பார்ப்புகள்’ என்ற தலைப்புக்கு ஏற்றாற் போல்  ' குழந்தை வேண்டும் 'என்கின்ற அவர்களுடைய எதிர்பார்ப்பு , அந்த எதிர்பார்ப்புக்காக அவர்கள்  நடத்துகின்ற உறவில் ஒருவருக்கொருவர் ஏற்படுகின்ற எதிர்பார்ப்பு, அது நிறைவேறாத நிலையில் அவர்களுக்கு ஏற்படுகின்ற மன உளைச்சல்  இவற்றோடு  வேறு சில நிகழ்வுகளையும் இணைத்துக்  காட்டுகிறார்  .


அந்தப் பெண்ணின் அலுவலகத்தில் இருக்கக்கூடிய மற்றொரு பெண்ணின் வாழ்க்கை.  அதை அவள் மிகவும் சாதாரணமாக எடுத்துக்கொண்டு  நடக்கக் கூடிய நிகழ்வு ,அது மற்றவருக்கு ஏற்படுத்துகின்ற மன உணர்வுகள் , இவற்றையெல்லாம் அந்த இளமை உணர்வுகளோடு  அந்த பெண்கள் எடுத்துக் கொள்கின்ற நிகழ்வுகளை எல்லாம்  அப்படியே எழுத்தில் வடிக்கின்றார்.


  இப்பொழுது இறுதிக்காட்சி.  இவன்  அவளை வழக்கம்போல் அழைத்து  வருவதற்காக  இரவு நேரத்திலே ஸ்கூட்டரில் ஏறி பல கிலோமீட்டர் தாண்டி அந்த அலுவலகத்துக்கு சென்று வாசலில் காத்திருக்கிறான். இதுபோன்று பலர் அந்த ஷிப்ட் முடிந்து வருகின்ற தங்கள் மனைவிமார்களை அழைத்துச் செல்வதற்காகக்  காத்திருக்கிறார்கள்.  இவள் வரவில்லை .நீண்ட நேரம் கழித்து அவள் வருகிறாள். கையில் பேக்  இல்லை. வந்து சொல்கிறாள் .' நான் சொன்னேனே, ஞாபகம் இல்லையா, என்று. 'அடுத்த ஷிப்ட் நான் இருந்து பார்க்க போகிறேன்'  என்று சொல்லிச் செல்கிறாள். 


 இதற்கு முன்பெல்லாம் அவள் அங்கே தங்குவதற்கு விருப்பப்படாமல் இருந்தவள் .இப்பொழுது 'அடுத்த ஷிப்ட் இருந்து வருகிறேன்' என்று சொல்லும் பொழுது  அவளுடைய எதிர்பார்ப்பிலே ஏதோ ஏமாற்றம் இருப்பதால் இவனுடன் வருவதற்கு அவள் இப்போது  விரும்பவில்லையா என்ற  ஒரு எண்ணமும் வாசகர்களுக்கு எழுகிறது.


  இதே நேரத்தில் இவனுடைய எதிர்பார்ப்பு நிறைவேறாத கோபத்தில்  வெறுப்புடன் திரும்பி வருகிறான். அவன் வெறுப்புடன் ஸ்கூட்டரை உதைத்துத்  திரும்புகிறான் . அந்த வேகத்தையும் அவர் எழுத்தில் வடிக்கிறார் 

அவன் திரும்பும் நிலையில் எனக்கு இந்த செல்வம் பட டி எம் எஸ் பாட்டு சிவாஜி நடிப்பில் வந்தது ஞாபகம் வந்தது . 

'ஒன்றா இரண்டா எடுத்துச் சொல்ல, உள்ள உணர்ச்சியை வார்த்தையில் வடித்துச் சொல்ல, ஒன்றா இரண்டா எடுத்துச் சொல்ல ' என்ற பாடல் வரிகள் ஞாபகம் வந்தன..

திரும்பி வந்தவன் மாடிக்கு செல்லாமல்  அங்கே மணல்மேட்டுக்குச் செல்வதாக  முடிக்கிறார்  .அவன் எதிர்பார்ப்பு என்ன என்ற கேள்வி நம் மனதில் எழுகிறது.


  ஏற்கனவே மணல்மேட்டில் நிகழ்ந்த நிகழ்வுகளை எல்லாம்  அந்த இளமை நிகழ்வுகளை எல்லாம் முன்பாகவே நமக்கு எடுத்துச் சொல்லி இருப்பதால் , அவன் அங்கு எதற்காக செல்கிறான் என்று நம்மால் ஓரளவு யூகிக்க  முடிகிறது.  அவன் எதிர்பார்ப்பு அங்கே நிறைவேறுமா, அதனால் அவன் வாழ்க்கை திசை மாறுமா,  இல்லை அவன் திரும்பி வந்து விடுவானா ,வழக்கம்போல் அவன் மனைவியுடன் உள்ள அந்த வேகமான உறவு  தொடருமா ,அவர்களுக்குக்  குழந்தை உருவாகுமா, என்ற பல கேள்விகளை நம் மனதில் எழுப்பி விட்டு கதையை  முடிக்கிறார் உஷா தீபன்  அவர்கள் .


.  நான்  முதலிலேயே சொன்னது  போல் கம்பியில் நடக்கக்கூடிய கதை .கொஞ்சம் இங்கும் அங்கும் சிதறி  வார்த்தைகளைக்  கொட்டி விட்டால் மாறிவிடக் கூடிய கதை .  நாயகன் நாயகி இடையே இருக்கக்கூடிய அந்த உறவுகளின் வேகத்தை மட்டும் அதற்குரிய வேகமான வார்த்தைகள் மூலம் விளக்கி,  மற்ற நிகழ்வுகளை எல்லாம் நமது ஊகத்திற்கு விட்டு, அந்த இளம் பருவத்துத்   தம்பதிகளின் இளமை உணர்வுகளை  பிரதிபலிக்கும் வகையில் கதை எழுதி  , நாமும் கடந்து வந்த இளம் பருவ வேகப் பாதையை, மோகப் பாதையை    , அந்த உணர்வுகளின் எழுத்துக்களோடு நமக்குக் காட்டுகிறார். 


அதே சமயம் ,  இந்த கதையின் ஜீவனான   குழந்தைப் பேறுக்கு ஏங்கும் அந்தத்  தம்பதிகளின் ஆசையும் கதையின் அடிநாதமாக இருப்பதையும் நாம் உணர முடிகிறது . ஒரு காலத்தில் ' நியூ வேவ் ' என்ற பாணியில் பல கதைகள் பத்திரிகைகளில் வெளிவந்தன. அவற்றில் ஒன்றாகவும் இதை எடுத்துக் கொள்ளலாம் என்று தோன்றுகிறது.  நன்றி


------------------நாகேந்திர பாரதி


My Poems/Stories in Tamil and English 


கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

பசி- சிறுகதை

 பசி- சிறுகதை  -------------------- விட்டு வைத்திருக்கிறார்கள் குட்டி விழட்டும் என்று. தாய்ப் பாசம் கொஞ்சம் குட்டிக்குக் கிடைத்த பிறகு , அரி...