புதன், 28 செப்டம்பர், 2011

மூங்கில் பாய்

மூங்கில் பாய்
---------------------------
மூங்கில் பாயில்
முடங்கிக் கிடக்கும்
மூச்சைத் துறந்து
அடங்கிக் கிடக்கும்
பார்த்தது சிரித்தது
பேசியது பழகியது
தொட்டது துவண்டது
வளர்ந்தது வாழ்ந்தது
எல்லாம் மறந்து
இறந்து கிடக்கும்
--------------------------------------------நாகேந்திர பாரதி

திங்கள், 12 செப்டம்பர், 2011

தாலாட்டும் அதட்டல்

தாலாட்டும் அதட்டல்
-----------------------------------------------
'என்னடா தம்பி
இன்னுமா எந்திரிக்கலை'
உசுப்பும் அப்பத்தாவின்
உரிமைக் குரலில்
அந்தக் காலத் தாலாட்டு
அமுங்கிக் கிடப்பதால்
இழுத்துப் போர்த்திக் கொண்டு
இன்னமும் தூங்குவோம்
---------------------------------------------------நாகேந்திர பாரதி

ஞாயிறு, 11 செப்டம்பர், 2011

விலகலும் பிரிதலும்

விலகலும் பிரிதலும்

---------------------------------------

விலகி இருப்பதும்

பிரிந்து இருப்பதும்

வேறு வேறு

வித்தியாசம் உண்டு

விலகி இருப்பது

உடலும் மனமும்

பிரிந்து இருப்பது

உடல்கள் மட்டுமே

சேரும் நேரம்

நேரும் , ஆறும்

------------------------------நாகேந்திர பாரதி

பாவாடைப் பருவம்

பாவாடைப் பருவம்
-------------------------------------
குளந்தங் கரையும்
குடமும் கூத்துமாய்
பள்ளிக் கூடமும்
பாடமும் பரீட்சையுமாய்
பல்லாங் குழியும்
பாட்டும் சிரிப்புமாய்
பாவாடைப் பருவம்
பறந்து ஓடும்
சேலைப் பருவத்தில்
சிந்தனை மாறும்
---------------------------------நாகேந்திர பாரதி

சனி, 10 செப்டம்பர், 2011

நகர் மனம்

நகர் மனம்
--------------------
ஒவ்வொரு நகருக்கும்
மனமொன்று உண்டு
சென்னைக்கு மெரீனா
கோவைக்கு சிறுவாணி
மதுரைக்கு மல்லிகை
முகவைக்கு வெய்யில்
திருச்சிக்கு காவிரி
தஞ்சைக்கு நஞ்சை
ஒவ்வொரு மனத்துள்ளும்
மணமொன்றும் உண்டு
-------------------------------------நாகேந்திர பாரதி

வெள்ளி, 9 செப்டம்பர், 2011

அழகோ அழகு

அழகோ அழகு
---------------------------
கையைக் கையை ஆட்டி
நடப்பது ஒரு அழகு
காலைக் காலைத் தூக்கி
ஓடுவது ஒரு அழகு
தூக்கச் சொல்லிக் கையைத்
தூக்குவது ஒரு அழகு
ஏக்கத் தோடு பார்த்து
எம்புவது ஒரு அழகு
கோபத் தோடு முடியைப்
பிய்ப்பது ஒரு அழகு
பாசத் தோடு முத்தம்
பொழிவது ஒரு அழகு
----------------------------------------நாகேந்திர பாரதி

திங்கள், 5 செப்டம்பர், 2011

பழைய கண்ணீர்

பழைய கண்ணீர்

-----------------------------------

பழைய ஊரில் நடக்கும் போதும்

பழைய கோயிலைச் சுற்றும் போதும்

பழைய கண்மாயில் குளிக்கும் போதும்

பழைய நண்பர் கூடும் போதும்

பழைய துணையைப் பார்க்கும் போதும்

பழைய பாட்டைக் கேட்கும் போதும்

பழைய சோறு உண்ணும் போதும்

பழைய நினைப்பு வந்து விடும்

பழைய கண்ணீர் தந்து விடும்

----------------------------------------------------நாகேந்திர பாரதி