ஞாயிறு, 24 அக்டோபர், 2010

சித்தம் போக்கு

சித்தம் போக்கு
---------------------------
சித்தம் போக்கை
சிவம் போக்காய் மாற்றி
தத்தம் மதத்தின்
தன்மை பறை சாற்றி
எத்தனை முனிவர்
எத்தனை பாடல்
இருந்தும் உலகின்
இயற்கையில் செயற்கை
இருப்பதால் தானோ
இன்னமும் சித்தர்
வருகிறார் வாழ்கிறார்
--------------------------------------நாகேந்திர பாரதி

போன தலைமுறை

போன தலைமுறை
-----------------------------------
தொலைக் காட்சி பார்த்ததில்லை
தொலை பேசி கேட்டதில்லை
வருடத்துக்கு ஒருமுறை
திருவிழா தெருக்கூத்து
வயக்காட்டு வேலை பல
வாய்க்கால் மீன் குழம்பு
அயல் வீட்டுப் புரணியும்
அடுப்படியும் பொழுதுபோக்கு
வயதாகி நோய்ப்பட்டு
பாயப் படுக்கை படுத்திருந்து
புருஷனுக்கு முன்போ
பின்போ போன உயிர்
-------------------------------------------------நாகேந்திர பாரதி

சனி, 23 அக்டோபர், 2010

வழித் தடங்கள்

வழித் தடங்கள்
--------------------------
குளிரூட்டிய அறையின்
கண்ணாடிக்கு வெளியே
தலையில் துண்டோடு
காலில் செருப்பின்றி
வேக நடையோடு
விரைபவர் பார்த்து
கண்கள் பனிக்கும்
வழித் தடங்கள் என்றும்
அடியோடு அழிவதில்லை 
ஆழத்தில் ஒளிந்திருக்கும்
-----------------------------------------------------நாகேந்திர பாரதி

வியாழன், 21 அக்டோபர், 2010

தொடரும் 'போதும்'

தொடரும் 'போதும்'
----------------------------------
பார்த்துக் கொண்டு
இருந்தாலே போதும்
பேசிக் கொண்டு
இருந்தாலே போதும்
கேட்டுக் கொண்டு
இருந்தாலே போதும்
தொட்டுக் கொண்டு
இருந்தாலே போதும்
தொடர்ந்து கொண்டு
இருந்தாலே போதும்
------------------------------------------------நாகேந்திர பாரதி

புதன், 20 அக்டோபர், 2010

மண்ணு வாழ்க்கை

மண்ணு வாழ்க்கை
----------------------------------
மண்ணு வயலில்
உழுது அறுத்து
மண்ணு பானையில்
பொங்கி உண்டு
மண்ணு சாமியை
விழுந்து வணங்கி
மண்ணு குடிசையில்
படுத்து புரண்டு
மண்ணு குடத்தை
உடைத்துப் போவார்
------------------------------நாகேந்திர பாரதி

செவ்வாய், 19 அக்டோபர், 2010

வாசக எழுத்தாளன்

வாசக எழுத்தாளன்
-------------------------------------
வாசகனாக இருப்பதில் ஒரு
வசதி இருக்கிறது
எல்லா எழுத்தாளரையும்
ஏளனம் செய்யலாம்
இவரை விட நன்றாக
எழுதுவேன் எனலாம்
எழுதும் போது தான்
எங்கோ இடிக்கிறது
என்ன சொல்வார்களோ என்று
பயமாக   இருக்கிறது
----------------------------------------நாகேந்திர பாரதி

திங்கள், 18 அக்டோபர், 2010

மணல் கண்கள்

மணல் கண்கள்
------------------------------
வீடு கட்டக்
கொட்டிய மணல்
ஏறி விளையாட
காலெல்லாம் மணல்
மணல் குறைந்து
தரையில் ததும்ப
கிச்சு கிச்சு தாம்பாளம்
கையெல்லாம் மணல்
கட்டிடம் முடிய
மணலும் மறைய
விளையாட்டை இழந்து
கண்ணெல்லாம் மணல்
----------------------------------------நாகேந்திர பாரதி

ஞாயிறு, 17 அக்டோபர், 2010

லிபர்டி போனது

லிபர்டி போனது
----------------------------
நியூ யார்க்கிற்கு   லிபர்டி சிலை
கோடம்பாக்கத்திற்கு லிபர்டி தியேட்டர்
ஆட்டோவிடம் சொல்ல
அடையாளச் சின்னம்
பஸ் நிறுத்தத்திற்கு
பல வருடப் பெயர்
பழைய படம் பார்க்க
பழைய தியேட்டர்
தட்டிக்கு உள்ளே
தலை நீட்டி அழுகிறது
------------------------------------------------நாகேந்திர பாரதி

கன்னா பின்னா கனவு

கன்னா பின்னா கனவு
---------------------------------------
குருக்கள் மாத்திரை  கொடுக்கிறார்
கோவில் ஆஸ்பத்திரி ஆகிறது
மரத்தில் ஏறி வந்து
தரையை அடைதல்
கண்மாயில் முங்கி
எழுந்தால் கடல்
குருவி கத்தி விட்டு
புலியாக மாறுகிறது
கன்னா பின்னா கனவு முடிகிறது
காலை விடிகிறது
------------------------------------------------------நாகேந்திர பாரதி

வெள்ளி, 15 அக்டோபர், 2010

கிராமத்து விருந்து

கிராமத்து விருந்து
-----------------------------------
வயக்காட்டில் வெளையாடும்
வெள்ளாட்டுக் குட்டிகளும்
குப்பை மேட்டைக் கிளறும்
கோழிக் குஞ்சுகளும்
கண்மாயில் துள்ளும்
கெண்டை மீன்களும்
விருந்தாளி வந்தால்
வேறிடம் சேரும்
வெத்தலை பாக்கோடு
வயிற்றிலே வேகும்
---------------------------------------நாகேந்திர பாரதி

காத்திருக்கும் காலம்

காத்திருக்கும் காலம்
----------------------------------
கதவுகள் திறந்து மூடும்
மனிதர்கள் உள்ளே வெளியே
சன்னல்கள் திறந்து மூடும்
வெளிச்சம் உள்ளே வெளியே
கோடை, வசந்தம்
குளிர், மழை
பகல், இரவு,
சூரியன், சந்திரன்
காத்திருக்கும் காலம்
காதலன், காதலி
-----------------------------------------------நாகேந்திர பாரதி

வியாழன், 14 அக்டோபர், 2010

மனைவி தாசன்

மனைவி தாசன்
-------------------------
அகமும் புறமும்
அறிந்த காரணத்தால்
அடுப்படி காதல்படி
அழகாய்ப்   படிப்பதால்
வரும்படிக் குள்ளே
வாழ்க்கை நடத்துவதால்
உறவின் நட்பின்
ஒற்றுமை காப்பதால் 
அழுதால் அழுது
சிரித்தால் சிரிப்பதால் 
மனைவியின் தாசனாய்
இருப்பதில் மகிழ்ச்சியே
-----------------------------------------------------------நாகேந்திர பாரதி

முதலும் முடிவும்

முதலும் முடிவும்
---------------------------------
பார்வையில் காதலைச்
சுட்டிக் காட்டி
பழக்கத்தில் பண்பினைத்
தொட்டுக் காட்டி
சிரிப்பினில் உள்ளத்தைக்
கட்டிப் போட்டு
அழுகையில்   உயிரினைச்   
 சுட்டுப் போட்டு
பிரிகையில் கண்ணீரில்
விட்டுப் போனாள்
-------------------------------------------நாகேந்திர பாரதி

திங்கள், 11 அக்டோபர், 2010

நதியின் பயணம்

நதியின் பயணம்
-------------------------------
கல்லும் மண்ணும்
கலந்து இறங்கி 
ஆற்றுப் படித்துறையில்
அலம்பும் நீராகி
கோவில் படித்துறையில்
கும்பிடும் நீராகி
கடலில் கலந்து
உப்பு நீராகி
உயரப் பறக்கும்
நதியின் பயணம்
-------------------------------------------------

ஞாயிறு, 10 அக்டோபர், 2010

மதம் தாண்டிய உள்ளம்

மதம் தாண்டிய உள்ளம்
------------------------------------------------
அப்துல் கலாமின்
அறிவு வெள்ளம்
எரிக் கிளாப்டனின்
இசை வெள்ளம்
தேசிகாச் சாரியாரின்
யோக வெள்ளம்
முத்தமிழ்க் கலைஞரின்
தமிழ் வெள்ளம்
மதம் தாண்டிய
மனித உள்ளம்
---------------------------------------நாகேந்திர பாரதி

வெள்ளி, 8 அக்டோபர், 2010

காதலும் கண்வலியும்

காதலும் கண்வலியும்
----------------------------------------
எப்போ வருமென்று
எவருக்கும் தெரியாது
வந்த பின்னாலே
வலிப்பது நிற்காது
கண்கள் இருக்கும்
காரணத்தால் வருவது
பார்த்த உடனேயே
பற்றிக் கொள்வது
காதலும் கண் வலியும்
கஷ்டப் படுத்துவது
-----------------------------------------------நாகேந்திர பாரதி

காதல் மறக்கட்டும்

காதல் மறக்கட்டும்
----------------------------------
உன்னைப் பிரிந்ததனால்
உலகை விட்டு விட்டேன்
என்னை   மறந்து விடு
ஏக்கம் இறக்கி விடு
குடும்பம் அழைக்கிறது
குழந்தை   அணைக்கிறது
கடமை நடக்கட்டும்
காதல் மறக்கட்டும்
என்றேனும் ஓர் நாள்
இயற்கை அழைத்து வரும்
அப்போது சேரலாம்
அது வரை காத்திருப்பேன்
-----------------------------------------------------------நாகேந்திர பாரதி

புதன், 6 அக்டோபர், 2010

மழைக் கோலம்

மழைக் கோலம்
-----------------------------
எந்தச் செருப்புப் போட்டாலும்
பேண்ட்டிலே   பொட்டு
எந்தக் குடை பிடித்தாலும்
சட்டையில்   கொட்டு 
எந்த ஓரம் ஒதுங்கினாலும்
சகதி நீர் பட்டு
எந்தப் பஸ்ஸில் ஏறினாலும்
இருக்கையில் சொட்டு
மழைக் கோலத்தில் வந்தாலே
மனைவியிடம்   திட்டு
----------------------------------------------------------நாகேந்திர பாரதி

பாப்பாப் பூ

பாப்பாப் பூ
---------------------
பஞ்சு உடலும்
பிஞ்சு விரலும்
குஞ்சு வாயும்
குறும்புச் சிரிப்பும் 
உதைக்கும் காலும்
உருளும் தலையும்
வீசும் கையும்
விக்கலும் தும்மலும்
பாப்பாப் பூவின்
பருவ வளர்ச்சி
-----------------------------------------------நாகேந்திர பாரதி

காதல் கணக்கு

காதல் கணக்கு
-------------------------------
அழகிய டீச்சரிடம்
ஆரம்பக் காதல்
அரட்டை பெண்ணிடம்
அடுத்த காதல்
பேசிப் பழகிப்
பிறந்த காதல்
பிரிந்து அழுது
பிசைந்த காதல்
மறந்து மணந்து
மனைவி காதல்
------------------------------------------நாகேந்திர பாரதி

செவ்வாய், 5 அக்டோபர், 2010

வேறு வேறு உலகம்

வேறு வேறு உலகம்
-------------------------------------
கன மழை பெய்து
கல்லூரி மூடினா சந்தோஷம்
கலாட்டா நடந்து
கல்லூரி மூடினா சந்தோஷம்
மாணவர் தேர்தல்
கல்லூரி மூடினா சந்தோஷம்
மறு தேதி இன்றி
கல்லூரி   மூடினா சந்தோஷம்
வந்தால் சம்பளம்
வராட்ட கெடையாது சந்தோஷம்
--------------------------------------------------நாகேந்திர பாரதி

திங்கள், 4 அக்டோபர், 2010

விளையாட்டுக் கோபம்

விளையாட்டுக் கோபம்
--------------------------------------------
கோலிக் குண்டு  விளையாட்டு
கிடையாதாம்
கிட்டிப் புள்ளு விளையாட்டு
கிடையாதாம்
ஆடு புலி ஆட்டம்
கிடையாதாம்
பல்லாங்  குழி கூடக் 
கிடையாதாம்
காமன் வெல்த் போட்டியிலே
கலந்துக்கலை
------------------------------------------நாகேந்திர பாரதி,

ஞாயிறு, 3 அக்டோபர், 2010

பால்வெளி உலகம்

பால்வெளி உலகம்
-------------------------------------
நடிகர் படத்திற்கு
பால் அபிஷேகம்
கடவுள் படத்திற்கு
பால் அபிஷேகம்
அரசியல்வாதி    படத்திற்கு
பால் அபிஷேகம்
சாமியார் படத்திற்கு
பால் அபிஷேகம்
பால் வெளி உலகில்
பாழ் வெளி வீடுகளில் 
பசியோடு பிஞ்சுகள்
------------------------------------------நாகேந்திர பாரதி

சனி, 2 அக்டோபர், 2010

மின் வண்டி உறவு

மின் வண்டி உறவு
-----------------------------------
ஓர சீட்டு கிடைக்கலைன்னா
'உம'முன்னு இருக்கும்
பேசப் பேச மாறும்
பிரச்னையும் ஆகும்
அரசியலும் சினிமாவும்
அலசி ஆராயும்
சண்டையும் வரும்
சமாதானமும் வரும்
இறங்கிப் போகும்போது
என்னமோ மாதிரி இருக்கும்
-----------------------------------------------------நாகேந்திர பாரதி

வெள்ளி, 1 அக்டோபர், 2010

மாறாத கிராமம்

மாறாத கிராமம் 
----------------------------------
நம்ம ஊரு கண்மாய்
நாறிப் போயித் தொறுக்கும்
வானம் பாத்த வயலு
வறண்டு போயிக் கிடக்கும்
முளைக் கொட்டுத் திண்ணை
முனை முறிஞ்சி சறுக்கும்
திண்ணைப் பேச்சு அரசியல்
தெரு முழுக்க நடக்கும்
திரும்பும் போது ஏனோ
மனசு கெடந்து கனக்கும்
---------------------------------------------------------நாகேந்திர பாரதி