திங்கள், 31 மே, 2010

வரவு செலவு

வரவு செலவு 
--------------------------
பொருள் செலவு
சோர்வு வரவு மதுவால்
இருள் செலவு
சோர்வு வரவு மாதுவால்
அருள் செலவு
சோர்வு வரவு சூதால்
குரல்    செலவு
சோர்வு வரவு வாதால்
கூட்டிக் கழித்தும்
குறையா வரவு சோர்வே
-------------------------------------------------நாகேந்திர பாரதி

வெள்ளி, 28 மே, 2010

காத்து வாக்கில்

காத்து வாக்கில்
------------------------------
வேப்ப மரக்
காத்தில் குளிர்ந்து
விசிறி மட்டைக்
காத்தில் வேர்த்து
மொட்டை மாடிக்
காத்தில் நடந்து
மின் விசிறிக்
காத்தில் கிடந்து
காலா காலமாய்க்
காத்துக்கு ஏங்குவோம்
----------------------------------------நாகேந்திர பாரதி

புதன், 26 மே, 2010

திசை மாறிய பயணங்கள்

திசை மாறிய பயணங்கள்      (பாக்யா  வார இதழ் - 25/06/2010)
-------------------------------------------
நாம் போக விரும்பிய பஸ்
கூட்டம் இல்லாமல்
ஐந்தே  நிமிடங்களில்
எதிர் திசையில்
நாம் போக வேண்டிய பஸ்
தொங்கும் கூட்டத்தோடு
அரை மணிக்கு அப்புறம்
நம் திசையில்
போக வேண்டிய திசையும்
மாறிப் போய் விட்டதா
வாழ்க்கையைப் போல
------------------------------------------------நாகேந்திர பாரதி

வியாழன், 20 மே, 2010

ஈரும் பேனும்

ஈரும் பேனும்
-----------------------
பெரிசுக்கு தலை அரிச்சா
பேத்திக்கு அழைப்பு வரும்
சீப்பாலே அழுத்தி
சிக்கெடுத்தா ஒரு சத்தம்
ஈருவளி இழுத்து
நெரிச்சா ஒரு சத்தம்
நடுவகிடு அமுக்கி
நசுக்கினா ஒரு சத்தம்
ஈரும் பேனும் பாக்க
இல்லை பாட்டி இப்போ
-----------------------------------------------------நாகேந்திர பாரதி

புதன், 19 மே, 2010

பழைய படகு

பழைய படகு
--------------------------
மழையில் ஆடும்
மனசுப் படகு
பழைய வீட்டுத்
திண்ணையைத் தேடும்
பழைய சோத்துப்
பானையைப் பாடும்
பழைய சொந்தக்
கூட்டத்தில் கூடும்
பழைய நெனைப்பில்
ஆடும் ஓடும்
---------------------------------------நாகேந்திர பாரதி

வெள்ளி, 14 மே, 2010

கருவக் காட்டுக் கதை

கருவக்  காட்டுக்  கதை
-----------------------------------------
காத்தாடி சுத்த
முள்ளைக் கொடுக்கும்
காத்தாடக் கொஞ்சம்
 நிழலும் கொடுக்கும்
ஒதுங்கி உட்கார
மறைவைக் கொடுக்கும்
உருவி விளையாட
பூவும் கொடுக்கும்
காஞ்சு போனதும்
கரியைக் கொடுக்கும்
---------------------------------------நாகேந்திர பாரதி

புதன், 12 மே, 2010

தயார் ஆன தாயார்

தயார் ஆன தாயார்
------------------------------
இட்லி, புளி சாதம்
கட்டி ஆச்சு
தண்ணி, காபிக்கு
பாட்டில் ஆச்சு
வெயிலோ, மழையோ
குடையும் ஆச்சு
அஞ்சு மணிக்கு
அலாரம் ஆச்சு
எல்கேஜி க்யூவுக்கு 
தயார் ஆச்சு
--------------------------------------நாகேந்திர பாரதி

 

உயிர் வழி

உயிர் வழி
------------------
தொட்டிலில் தொடங்கி
தரையினில் தவழ்ந்து
கட்டிலில் மயங்கி
காட்டினில் உறங்கி
சுட்டிடும் நெருப்பில்
சுருங்கிய உடலில்
ஒட்டியே இருந்து
ஓடிய உயிரே
வந்தது எவ்வழி
போனது எங்கே
------------------------------------------நாகேந்திர பாரதி

திங்கள், 10 மே, 2010

கரை தாண்டிய கடல்

கரை தாண்டிய கடல்
--------------------------------------
கடலுக்குள் பூகம்பம்
கரையெங்கும்  சடலங்கள்
உடலுக்கும் உயிருக்கும்
அலைகின்ற ஆன்மாக்கள்
கடலுக்குள் நுழைந்திட்டு
கரைகின்ற தருணங்கள்
சுடருக்கு இருட்டான
சுனாமி சூறாவளி
இடருக்கு அழிவுண்டா
இருட்டுக்கு ஒளியுண்டா
-----------------------------------------------------நாகேந்திர பாரதி

சனி, 8 மே, 2010

தீர்க்க முடியாத கடன்

தீர்க்க  முடியாத  கடன்
-------------------------------------
சீரான சிறு வயிறு
செங்குத்தாய் ஏறி வரும்
நேரான நடை கொஞ்சம்
நெளிந்தபடி மாறி வரும்
நீரான கூட்டுக்குள்
வேரான உடல் வளர்ப்பாள்  
பாராளும் உயிர் ஒன்றை
பத்திரமாய்க் காத்திடுவாள்
போறாது ஒரு ஜென்மம்
பெற்றவளின் கடன் தீர்க்க
------------------------------------------------நாகேந்திர பாரதி

வியாழன், 6 மே, 2010

எல்லாம் தெரிஞ்ச ஏகாம்பரேச்வரி

எல்லாம் தெரிஞ்ச ஏகாம்பரேச்வரி
---------------------------------------------------------
சமையல் தெரியுமாம்
சங்கீதம் தெரியுமாம்
நடனம் தெரியுமாம்
நட்டுவாங்கம் தெரியுமாம்
பின்னல் தெரியுமாம்
பேசத் தெரியுமாம்
மருத்துவம் தெரியுமாம்
மண்ணாங்கட்டி தெரியுமாம்
படிச்சுத் தெரியுமாம்
பண்ணத் தெரியாதாம்
-----------------------------------------------நாகேந்திர பாரதி

புதன், 5 மே, 2010

மறுத்து விட்ட காலம்

மறுத்து  விட்ட காலம்
------------------------------------------
'விளையாட வாப்பா ' என்ற போது
விரட்டி அனுப்பினாய்
விளையாட நினைக்கும் போது பிள்ளை
வேலைக்குச் சென்று விட்டான்
'கடைக்குப் போகணுங்க' என்ற போது
கத்தி அனுப்பினாய்
கடைக்குப் போக நினைக்கும் போது மனைவி
கால் வலியில் படுத்து விட்டாள்
'பணம் அனுப்புடா' என்ற போது
பதுங்கி ஒதுங்கினாய்
பணம் அனுப்ப நினைக்கும் போது அய்யா
பாடையிலே போய் விட்டார்
'வாடா அரட்டைக்கு' என்ற போது
வலிந்து விலக்கினாய்
அரட்டை அடிக்க  நினைக்கும் போது நண்பர்
அயலூர் வாசி ஆகி விட்டார்
அவர்கள் உன்னை நினைத்த போது
நீ அவர்களை மறுத்தாய்
அவர்களை நீ நினைக்கும் போது
காலம் உன்னை மறுத்து விட்டது
---------------------------------------------------------------------------நாகேந்திர பாரதி


 

ஞாயிறு, 2 மே, 2010

சாக்கு போக்குகள்

சாக்கு போக்குகள்
----------------------------------
மீனைக் கேட்டவர்க்கு
மீனைக் கொடுத்தாராம்
கருவாடு கேட்டவர்க்கு
கருவாடு கொடுத்தாராம்
அவனவன் விருப்பத்திற்கு
அழுகியதும் கொடுத்தாராம்
பாத்து வாங்குவது
பாமரன் பாடாம்
சம்பாதிக்கும் முறையில்
சாக்கு போக்குகள்
-----------------------------------------------------நாகேந்திர பாரதி

சனி, 1 மே, 2010

தன் கூட்டம் தான் கூட்டம்

தன் கூட்டம்  தான் கூட்டம்
----------------------------------------------------
கோயிலுக்குப் போனால்
கொள்ளாத கூட்டமாம்
திரைப்படம் போனால்
தெருவெல்லாம் கூட்டமாம்
கடைத்தெரு போனால்
கசகச கூட்டமாம்
கடற்கரை போனால்
கசமுசா கூட்டமாம்
தன குடும்பம் போவதால்
தான் கூட்டம்     ஆவதாம்
---------------------------------------------------------நாகேந்திர பாரதி