திங்கள், 30 செப்டம்பர், 2013

முக மாற்றம்

முக மாற்றம் 
---------------------
வயதான முகத்தோடு 
அவரைப் பார்த்தபோது 

அவரின் வாலிப முகம் தான் 
கண்ணுக்குள் வருகிறது 

குறும்பும் சிரிப்பும் 
ஆட்டம் போட்ட 
அந்த முகம் எங்கே 

அவரும் அப்படியே 
நினைத்து இருக்கலாம் 
நம்மைப் பற்றி 
----------------------------------------நாகேந்திர பாரதி 

வெள்ளி, 27 செப்டம்பர், 2013

எண்ணங்களின் எண்ணிக்கை

எண்ணங்களின் எண்ணிக்கை 
--------------------------------------------------
படிக்கும் போது 
படரும் எண்ணம் - காதல் 
துடிக்கும் போது 
தொடரும் எண்ணம் - வேலை 
கிடைக்கும் போது 
கிளறும் எண்ணம் - மணம் 
முடிக்கும் போது 
மலரும் எண்ணம் - காலம் 
முடியும் போது 
முடியும் எண்ணம் 
-----------------------------------நாகேந்திர பாரதி 

இரவின் ராகங்கள்

இரவின் ராகங்கள் 
---------------------------
இரவின் மௌனத்தில் 
எத்தனை ராகங்கள் 

அசையும் மரத்தினில் 
ஆடும் ஒரு ராகம்

ஆகாய வெளியினில் 
ஓடும் ஒரு ராகம் 

படுத்த வீதியில் 
பாடும் ஒரு ராகம் 

பகலில் பறக்கும்  
இரவின் ராகங்கள் 
---------------------------நாகேந்திர பாரதி 

புதன், 25 செப்டம்பர், 2013

கனவுக் காட்சிகள்

கனவுக்  காட்சிகள் 
-------------------------------
நினைவுத் தீபத்தின் 
நிழல் இருட்டு

நெஞ்சில் கிடக்கும் 
ஆசைத் திரட்டு 

மலர முடியாமல் 
மயங்கும்  மொட்டு 

முடிந்து போகாத 
மூல வித்து 

கடந்து போகாமல் 
கண்ணுக்குள் குத்தும் 
---------------------------நாகேந்திர பாரதி 
 

ஞாயிறு, 22 செப்டம்பர், 2013

குழந்தை விளையாட்டு

குழந்தை விளையாட்டு 
----------------------------------------
குழந்தை விளையாட்டில் 
கூட ஒரு குழந்தையாய் 

கலந்து கொண்டாலோ 
கண்களில் சந்தோஷம் 

விலகிச் சென்றாலோ  
விம்மும்  கண்ணீர்

விளையாட்டை  வாழ்க்கையாய்  
விரும்பி ஆடட்டும் 

வாழ்க்கையும் விளையாட்டாய்
விளைந்து கூடட்டும் 
--------------------------------------நாகேந்திர பாரதி 

வெள்ளி, 20 செப்டம்பர், 2013

ஆண்டவன் கணக்கு

ஆண்டவன் கணக்கு 
------------------------------
ஒழுங்கா படிக்காட்டி
ஓட்டல் வேலைதான் 

நல்லாப் படிச்சாக்க 
நாடு வேறதான் 

ஒண்ணாப் பொறந்தாலும் 
ரெண்டு ரெண்டுதான் 

மண்ணாப் போறப்போ 
ரெண்டும் ஒண்ணுதான் 

அவனவன் தலையிலே 
ஆண்டவன் கணக்குத்தான் 
--------------------------------------நாகேந்திர பாரதி 

புதன், 18 செப்டம்பர், 2013

காக்கை நம்பிக்கை

காக்கை நம்பிக்கை
-----------------------------
சன்னலில் அமர்ந்து 
கரையும் காக்கை 

பிஸ்கெட் போடும்
பேத்தியைப் பார்க்கும் 

அப்பத்தாவோ பாட்டனாரோ 
அம்மாச்சியோ  தாத்தாவோ  

பிரியத்தோடு சாப்பிட்டு 
பறக்கும் பறவை 

கருணை நம்பிக்கைக்கு 
காரணங்கள் தேவையில்லை 
------------------------------------நாகேந்திர பாரதி
http://www.businesspoemsbynagendra.com 

சனி, 14 செப்டம்பர், 2013

நேற்று இன்று நாளை

நேற்று இன்று நாளை 
--------------------------------------
நேற்றைய காதல்
நடந்து வந்தது

இன்றைய காதல் 
ஓடிப் போவது 

நாளைய காதல் 
கூடிப்  பிரிவது 

நேற்றைய இன்றைய 
நாளைய காதலில் 

நெஞ்சில் நிறைவது 
நேற்றைய காதலே 
--------------------------நாகேந்திர பாரதி 

புதன், 11 செப்டம்பர், 2013

பைபாஸ் பாதை

பைபாஸ் பாதை
------------------------
சிற்றூரின் ஸ்பெஷலான 
பலகாரம் காணோம் 

சிரித்தோடும்  பள்ளிச் 
சிறுவர்களைக் காணோம் 

ஊருக்குள் ஓடுகின்ற
ஆற்றையும் காணோம் 

ஆற்றோராம் இருக்கின்ற 
கோயிலையும் காணோம் 

பைபாஸ் பாதையிலே 
பறந்தென்ன கண்டோம் 
--------------------------------------நாகேந்திர பாரதி
http://www.businesspoemsbynagendra.com/

செவ்வாய், 10 செப்டம்பர், 2013

உதிர்ந்த காதல்

உதிர்ந்த காதல்
----------------------
மரங்கள் உதிர்த்த 
மலர்களைப் போல

குயில்கள் உதிர்த்த 
குரல்களைப் போல

காதலை உதிர்த்து 
காணாமல் போனவள் 

மலரும் மரங்களும்
கூவும் குயில்களும் 

கூப்பிட்டு அழைத்தால் 
கூட வருவாளா 
-------------------------------நாகேந்திர பாரதி

திங்கள், 9 செப்டம்பர், 2013

காலப் போக்கு

காலப் போக்கு 
----------------------
கையால் உருட்டிய
களிமண் பிள்ளையாரும் 

சீதக் களபச் 
செந்தாமரைப் பூவும் 

அவலும் பொரியும் 
கொழுக்கட்டை மோதகமும்

இதமாய் இனித்த 
காலம் அப்போது

மதமாய் மாறிய 
காலம் இப்போது 
-----------------------------------நாகேந்திர பாரதி

வெள்ளி, 6 செப்டம்பர், 2013

இயற்கை உணவு

இயற்கை உணவு
-----------------------------
பழங்கள் சாப்பிட்டால் 
ரத்தம் சுத்தமாம் 

காய்கறிகள் சாப்பிட்டால் 
நரம்பு இரும்பாம் 

தானியங்கள் சாப்பிட்டால் 
எலும்பு வலுவாம் 

இயற்கை உணவில் 
இருக்கிறதாம் மருந்து

ஏழைக்கு உணவு 
எவ்விடத்தில் இருந்து
------------------------------------நாகேந்திர பாரதி

வியாழன், 5 செப்டம்பர், 2013

ஆசிரியர் தினம்

ஆசிரியர் தினம் 
--------------------------
சங்ககாலத் தமிழை 
மொழிபெயர்த்து ஊட்டியவர் 

ஆங்கில இலக்கணத்தின் 
அடிமுடியைக் காட்டியவர் 

அறிவியல் ஆர்வத்தை 
அடிப்படையில் தீட்டியவர்  

சமூகவியல் பாடத்தில் 
சமத்துவத்தை நாட்டியவர்  

எங்கிருந்தாலும் வாழ்க 
எங்களது ஆசிரியர் 
-----------------------------------நாகேந்திர பாரதி 

புதன், 4 செப்டம்பர், 2013

சென்னைப் பறவைகள்

சென்னைப் பறவைகள்
------------------------------------
சென்னைப் பறவைகளை 
எண்ணிப் பார்த்தால் 
ஏழோ எட்டோ 
எண்ணிக்கை வருகிறது
காக்கையும் புறாவும் 
மட்டுமே கண்களில்
மரங்களாம் வீடுகள் 
மறைந்து போனதால்
வெளியூர் தேடி 
விரைந்து போனதோ 
--------------------------------------நாகேந்திர பாரதி