வெள்ளி, 26 நவம்பர், 2010

மனிதரின் நிறங்கள்

மனிதரின் நிறங்கள்
-----------------------------------
காலிடுக்கில் பைகளை அமுக்கிக் கொண்டு
வெறித்த பார்வையுடன் ஒருவர்
ஜன்னலோரம்    சாய்ந்து கொண்டு
தூங்கும் பாவனையில் ஒருவர்
கைகளை அகல விரித்துக் கொண்டு
சீட்டை ஆக்ரமித்துக் கொண்டு ஒருவர்
இவர்களில் யாரிடம்  கேட்பது
வயதான பெற்றோருக்காக
மேல் இரண்டு பெர்த்தை 
மாற்றிக் கொள்ள முடியுமா என்று
----------------------------------------------------------------------நாகேந்திர பாரதி

வியாழன், 25 நவம்பர், 2010

ரத்த சரித்திரம்

ரத்த சரித்திரம் 
-------------------------------
தண்ணீரைக் குடித்தால்
ரத்தம் தரம் ஆகும்
சுருக்கமாய்ச் சாப்பிட்டால்
ரத்தம் சுறுசுறுப் பாகும்
வேகமாய் நடந்தால்
ரத்தம் விருத்தி ஆகும்
அமைதியாய் அமர்ந்தால்
ரத்தம் அன்பு ஆகும்
செலவே இல்லாத
ஆரோக்கிய   வழி
தெரிந்தும் செய்யாத
உடலில்   வலி
-----------------------------------நாகேந்திர பாரதி

புதன், 24 நவம்பர், 2010

வாய்ப் பாடு

வாய்ப் பாடு
------------------------
எத்தனை பாடங்கள்
படித்தோம் பள்ளியில்
ஆங்கிலம் தமிழ்
அறிவியல்   கணிதம்
வரலாறு புவியியல்
வணிகம் என்று
கேள்விகளும் மறந்தன
பதில்களும் மறந்தன
வாழ்க்கைப் பாடத்தில்
வாய்தான் வெல்லுது
------------------------------------------------------நாகேந்திர பாரதி

செவ்வாய், 23 நவம்பர், 2010

தமிழ் ஆசிரியர்

தமிழ் ஆசிரியர்
---------------------------
முப்பது  வருடத்துக்கு
முன்பு பார்த்தது
ஆரம்பப் பள்ளி
தமிழ் ஆசிரியர்
வேட்டி சட்டைதான்
வெண்ணீறு நெற்றிதான்
தமிழ் வெள்ளம்தான்
தலை நிமிர்ந்த நடைதான்
கூனல் முதுகோடு
பொக்கை வாயோடு
இப்போது பார்க்கும்போது
என்னமோ செய்கிறது
---------------------------------------------நாகேந்திர பாரதி

திங்கள், 22 நவம்பர், 2010

காதல் கணக்கு

காதல் கணக்கு
-------------------------
காதல் தோல்வியாம்
கடவுளைத் திட்டுவார்
தாடி வளர்ப்பார்
போதையில் மூழ்குவார்
பாதையில் கிடப்பார்
நண்பனும் இருப்பான்
நடத்திப்   போவான்
விசாரித்துப்  பார்த்ததில்
ஒன்பதாம் காதலாம்
ஒருதலைக் காதலாம்
---------------------------------------------நாகேந்திர பாரதி

ஞாயிறு, 21 நவம்பர், 2010

மனக் கணக்கு

மனக் கணக்கு
-------------------------
பழைய சோறும்
பட்ட மிளகாயுமா
பச்சைத்   தண்ணியும்
வரக்    காப்பியுமா
குடிசை வீடும்
களிமண் தரையுமா
எல்லாம்   இருப்பது
வெளியில் தானே
மனசு நினைத்தால்
மகிழ்ச்சி உள்ளே
---------------------------------------------நாகேந்திர பாரதி

சனி, 20 நவம்பர், 2010

பங்குச் சந்தைக் காதல்

பங்குச் சந்தைக் காதல்
------------------------------------------
சிரிப்பில் ஆரம்பித்து
அழுகையில் முடிவதால்
ஒரு நாள் ஏறுவதால்
மறுநாள் இறங்குவதால்
நினைத்து நினைத்து
தூக்கம் போவதால்
விட்டுப் பிரிந்தாலும்
விடாமல் வதைப்பதால் 
பங்குச் சந்தையும்
காதலும் ஒன்றே
-------------------------------------------நாகேந்திர பாரதி

வெள்ளி, 19 நவம்பர், 2010

சமையல் சவால்

சமையல் சவால்
--------------------------
பெரிசாக சமையல் பத்தி
பேச வந்துட்டாங்க
தண்ணியிலே அரிசி போட்டு
கொதிக்க வச்சா சாதம்
உப்பு புளி மிளகாயோடு
பருப்பு சேத்தா சாம்பார்
மசாலாவைத் தடவி விட்டு
வேக வச்சா வெஞ்சனம்
செஞ்சு பாத்தோம் சமையல்
களியாச்சு சாதம்
கருப்பாச்சு சாம்பார்
கரிஞ்சு போச்சு காய்கறி
----------------------------------------------------------நாகேந்திர பாரதி

இறந்து போனவர்கள்

இறந்து போனவர்கள்
----------------------------------------
அவர்   இறந்து விட்டாராம்
இவர் சொன்னார்
கேட்க மறந்து போச்சு
வயதாகி இறந்தாரா
நோய் வாய்ப்பட்டா
காரணம் தேவையில்லை
தெரியாத சில பேரில்
ஒருவர் இறந்து விட்டார்
இன்னொரு நாளில்
இன்னொருவர் இறக்கலாம்
வேறொருவர் சொல்லலாம்
----------------------------------------------------நாகேந்திர பாரதி

வியாழன், 18 நவம்பர், 2010

நடுநிசி நிழல்கள்

நடுநிசி நிழல்கள்
----------------------------
அதிகாலை ஐந்து மணிக்கே
சில பேர் எழுந்து   விடுகிறார்கள்
நடக்கிறார்கள், ஓடுகிறார்கள்
குளிக்கிறார்கள், பாடுகிறார்கள்
கோலம் போடுகிறார்கள்
சமையல் செய்கிறார்கள்
பேப்பர் படிக்கிறார்கள்
காபி குடிக்கிறார்கள்
நமக்கென்னமோ இவர்கள் 
நடுநிசி நிழல்கள்
-----------------------------------------------நாகேந்திர பாரதி

அனாதைக் கேள்விகள்

அனாதைக் கேள்விகள்
------------------------------------------
ஞாயிற்றுக் கிழமை காலை
ஸ்டேஷனில்  கூட்டமே இல்லை
என்னையும் அவர்களையும் தவிர
அந்தக் குழந்தையின்
கேள்வியோ கேள்விகள்
அம்மா தலை ஆட்டுகிறார்
அப்பா புத்தகம் படிக்கிறார்
கேள்விகட்கு பதிலில்லை
அவை எல்லாம் அனாதைகளாய்
பிளாட்பாரத்தில் அலைகின்றன
----------------------------------------------------நாகேந்திர பாரதி

புதன், 17 நவம்பர், 2010

இருளும் ஒளியும்

இருளும் ஒளியும்
-------------------------------
மரங்களின் சலசலப்பு
தண்ணீரின் கலகலப்பு
பூக்களின் பளபளப்பு
பூச்சிகளின் முணுமுணுப்பு
கல்லும் முள்ளும்
கலந்து குத்தும்
நடுக்கும் குளிரில்
நடந்து பார்த்தால்
பிடிக்கும் காட்டின்
இருளும் ஒளியும்
------------------------------------------------நாகேந்திர பாரதி

செவ்வாய், 16 நவம்பர், 2010

ஞாயிற்றுக் கிழமைகள்

ஞாயிற்றுக் கிழமைகள்
--------------------------------------
ஞாயிறு வந்தெழுப்பும்
ஞாயிற்றுக் கிழமைகள்
வேண்டாத குளியல்
விருப்பத் தேநீர்
சோபாவில் தோய்ந்து
டிவியை மேய்ந்து
மதியம் வந்தால்
மட்டனும் சிக்கனும்
மாலையில் சலிப்பு
மறு நாள் திங்கள்
------------------------------------நாகேந்திர பாரதி
 

பிரிவில் இன்பம்

பிரிவில் இன்பம்
--------------------------------
எத்தனை வருடங்கள்
எவ்வளவு கண்ணீர்
உறக்கமில்லா இரவுகள்
உணர்ச்சியில்லா நாட்கள்
மறுபடியும் ரோஜா
காட்டியது முகத்தை
அதே வாசம்
அதே நேசம்
பிரிந்து கூடுவதில்
பேரின்பம் உண்டு
-------------------------------------------நாகேந்திர பாரதி

ஞாயிறு, 14 நவம்பர், 2010

இசையின் இயக்கம்

இசையின் இயக்கம்
----------------------------------
எலும்பிலும் நரம்பிலும்
இறங்கிப்   பாயும்
இதயமும் மூளையும்
இளகச் செய்யும்
சிரிக்கவும் வைக்கும்
அழவும்  வைக்கும்
உணர்வின் உச்சியில்
ஏற்றி வைக்கும்
இறைவனைப் போலவே
இசையும் இயக்கும்
------------------------------------------நாகேந்திர பாரதி

உள்ளே வெளியே

உள்ளே வெளியே
------------------------------
பசி வாய்கள்
ஓட்டலின் உள்ளே
பசிக் கரங்கள்
ஓட்டலின் வெளியே
தங்கக் காணிக்கை
கடவுளின் காலடியில்
சில்லறைக் காசுகள்
பிச்சைக் காரனுக்கு
உள்ளே சுயநலம்
வெளியே பொதுநலம்
-----------------------------------------------------நாகேந்திர பாரதி

சனி, 13 நவம்பர், 2010

நேரங் காலம்

நேரங்  காலம்
----------------------
உனக்கு மட்டும் இல்லை
அடிக்கு அடி தோல்வி
இரவில் வர எண்ணும்
சூரியனுக்கும் தோல்வி
கோடையில் மலர எண்ணும்
செடிகளுக்கும் தோல்வி
மழையில் பறக்க எண்ணும்
பறவைகட்கும் தோல்வி
நேரம் வரும் பார்த்திரு
காலை வரும் காத்திரு
---------------------------------------------------நாகேந்திர பாரதி

மரக் கதவு

மரக் கதவு
----------------------
மரக் கதவில் தொத்திக் கொண்டு
முன்னும் பின்னும் ஆட்டம்
'கதவை ஆட்டாதே, சண்டை வரும்'
அம்மா குரலில் அதட்டல்
முதுகில் அடிக்கும் அப்பா
கட்டிக் கொள்ளும் அம்மா
சண்டை வரத்தான் செய்தது
அம்மாவுக்கும் அப்பாவுக்கும்
கதவு மட்டும் ஜாலியாக
ஆடிக் கொண்டு இருந்தது
-----------------------------------------------------------நாகேந்திர பாரதி

வெள்ளி, 12 நவம்பர், 2010

கண்ணீரே ஆழம்

கண்ணீரே ஆழம்
---------------------------
சொல்லாத காதலில்
சுவைக்கும் தருணங்கள்
பார்வையே போதும் 
பேச்சு வெகு தூரம்
புன்னகை ஒரு முறை
கனவினில் பல முறை
பிரிந்து பின் கூடினால்
பேதங்கள் ஓடிடும்
சிரிப்பெல்லாம்    ஓரம்
கண்ணீரே   ஆழம்
---------------------------------------நாகேந்திர பாரதி

பின்னோட்டம்

பின்னோட்டம்
----------------------
அது ஒரு காலம்
அவை சில இடங்கள்
பழைய சாமான்களின்
மச்சு ஓர அறைகள்
மாடியைத் தொட்டிடும்
மாமரக் கிளைகள்
வவ்வால் புழுக்கை
வழுக்கும் கோபுரம்
இப்போது விளையாடும்
இன்பம் எவர்க்கோ
---------------------------------------------- நாகேந்திர பாரதி

ஆத்ம அணுக்கள்

ஆத்ம அணுக்கள்
-----------------------------------
உயிரின் அணுக்கள்
ஒன்றாய்க் கூடி
உடலாய் மாறி
உள்ளே அமரும்
மனதின் அணுக்கள்
அனுபவம் திரட்டி
உள்ளே மலரும்
ஆத்ம அணுக்கள்
அறிவாய் ஆகி
உள்ளே ஒளிரும்
-----------------------------------------------------நாகேந்திர பாரதி

வியாழன், 11 நவம்பர், 2010

சுதந்திர வாசம்

சுதந்திர வாசம்
-----------------------
கண்ணாடிக் கதவின் பின்
கண் கவர் பட்சணங்கள்
காக்கிச் சட்டைக் காவலாளி
மீசையும் குறுந்தடியும்
வாடிக்கை யாளர்களை
வரவேற்க வழி திறக்க
இனிப்பு வாசமெல்லாம்
வெளியேறும் இயல்பாக
சுதந்திர சுவாசத்தில்
வயதான பிச்சைக்காரன்
----------------------------------------------------நாகேந்திர பாரதி

புதன், 10 நவம்பர், 2010

பொருந்தாத புத்திமதி

பொருந்தாத புத்திமதி
----------------------------------------
'மறந்து விடு
மகிழ்ச்சியாய்  இரு'
எப்படி மறப்பது
அழுதா, உறங்கியா
எங்கே மறப்பது
கடற்கரையிலா, பூங்காவிலா
எதை மறப்பது
இதழ்களையா, கண்களையா
என்ன மறப்பது
காதலையா, வாழ்க்கையையா
யாரை மறப்பது
உன்னையா, என்னையா
----------------------------------------நாகேந்திர பாரதி

செவ்வாய், 9 நவம்பர், 2010

இலையுதிர் காலம்

இலையுதிர் காலம்
----------------------------------
முற்றிய விரல்களில்
தெறிக்கும் நரம்புகள்
உதிரும் இலைகளாய்
உணரும் நடுக்கம்
உலர்ந்த உதடுகளில்
ஒட்டியும் ஒட்டாத
தேநீர் கோப்பையில்
ததும்பும் சோகம்
கால ஓட்டத்தில்
கரைந்த உறவுகள்
-----------------------------------------நாகேந்திர பாரதி

வெள்ளி, 5 நவம்பர், 2010

தீப வலி

தீப வலி
-----------------
பட்டாசு வெடிக்கும் போதும்
மத்தாப்பு தெறிக்கும் போதும்
தீக்குச்சி உரசும் போதும்
நெருப்பு பறக்கும் போதும்
காகிதம் விரித்து வைத்து
மருந்தை உருட்டி வைத்து
உருவம் பலவும் செய்து
உலர்த்தி உறையும் போட்ட
விரல்கள் இடுக்கில் வந்த
வீக்கம் வலியாய்க் குத்தும்
----------------------------------------------------நாகேந்திர பாரதி

புதன், 3 நவம்பர், 2010

ஆளில்லா ரயில்வே கேட்

ஆளில்லா ரயில்வே கேட்
--------------------------------------------
நாளுக்கு ஒரு முறை
நிற்கும் பேசஞ்சர் வண்டி

நிற்பதற்கு முன்பே ஏறி

புறப்பட்ட பின்பு குதிக்கும்
நிலக்கடலை  , முறுக்கு
தேநீர் வாண்டுகள்

ஏக்கப் பெருமூச்சு விட்டு
ரெயில் கிளம்பும்போது
மறுநாளுக்காய்   காத்திருக்கும்
ஆளில்லா ரெயில்வே கேட்
--------------------------------------------------------நாகேந்திர பாரதி

செவ்வாய், 2 நவம்பர், 2010

பயித்தியக் காரி

பயித்தியக்  காரி
--------------------------
எதோ ஒரு வரவேற்பில்
எதிரும் புதிருமாய்
சந்தித்த போது
தாடியை முறைத்து விட்டு
எரிச்சல் முகத்தோடு
ஒதுங்கிப் போனாள்
கண்ணில் ததும்பிய
ஈரத்தை மட்டும்
ஒதுக்க   முடியாத
பயித்தியக் காரி
---------------------------------நாகேந்திர பாரதி

குப்பை மண்ணு

குப்பை மண்ணு
-------------------------------
கண்ணு படக்
கூடா தென்றும்
கருப்பு அண்டக்
கூடா தென்றும்
'மண்ணு' என்று
பேரு வைப்பார்
'குப்பை' என்று
பேரு வைப்பார்
குப்பை மேடு
வளர்ந்த பின்பு
கோபுரமாய்
ஆன பின்பு
குப்பையாக மண்ணாக
பெற்றோரை மதித்திடுவார்
--------------------------------நாகேந்திர பாரதி

இயற்கையில் நிறைந்தவர்

இயற்கையில் நிறைந்தவர்
--------------------------------------------------
நிலவினில் தெரிவது
அப்பத்தா முகம்
மலையினில் தெறிப்பது
அம்மாச்சி முகம்
மேகத்தில் ஒளிவது
மாமாவின் முகம்
காற்றினில் நெளிவது
அப்பாவின் முகம்
இறந்தவர் என்றும்
மறைந்தவர் அல்லர்
இயற்கையில் கலந்து
நிறைந்தவர் ஆவர்
-------------------------------------------நாகேந்திர பாரதி