சிறுகதை மதிப்புரை - கதை புதிது நிகழ்வு
-------------------------
நன்றி அழகியசிங்கர். வணக்கம் நண்பர்களே
பொதுவாக அழகியசிங்கர் ஒரு சிறுகதையை அவரே தேர்ந்தெடுத்துக் கொடுத்து அதைப் பற்றிய விமர்சனம் செய்யச் சொல்வார். மிகவும் எளிதாக இருந்தது. இந்த முறை அவர் ஒரு எழுத்தாளர் பெயர் மட்டும் சொல்லி அவரின் எந்தக் கதையையேனும் எடுத்துப் பேசச் சொல்லி விட்டார்.
பள்ளிப்பருவத்தோடு நாவல், கதை எல்லாம் படிக்கும் பழக்கம் எல்லாம் குறைந்து போய் பத்திரிகை மட்டும் படித்து வரும் எனக்கு இது கொஞ்சம் சிரமமான காரியம்தான்.
எனக்குக் கிடைத்த எழுத்தாளர் பெயர் சுஜாதா. சுஜாதாவின் கதைகள் சில படித்து இருந்தாலும், கதை புதிதுவில் சொல்வதற்கென்று அவரின் சிறந்த சிறுகதையை , எப்படித் தேர்ந்தெடுப்பது . எங்கள் வீட்டிலே தொடர்ந்து நாவல், கதை படித்து வரும் பழக்கம் உள்ள எனது மனைவி உஷா பாரதி அவர்களிடம் கேட்டவுடன் அவர்கள் உடனே சொன்ன சிறுகதை பெயர். சுஜாதா அவர்களின் ' நகரம் '. இன்டர்நெட்டில் தேடிப் பார்த்ததும் சிறுகதைகள் டாட் காம்மில் கிடைத்தது இந்தச் சிறுகதை. எஸ்ரா அவர்கள் தேர்ந்தெடுத்த சிறந்த சிறுகதைகள் 100 என்ற தொகுப்பில் இருந்து.
வழக்கம் போல் சுஜாதா அவர்களின் விறுவிறுப்பான நடையில் சமுதாயக் கண்ணோட்டத்தோடு எழுதப்பட்ட சிறந்த சிறுகதை. கதை நடக்கும் இடம் எங்கள் மதுரை என்பதும் சிறப்பு அம்சம். காய்ச்சல் அதிகமான நிலையில் தன் மகளைக் கிராமத்தில் இருந்து மதுரை பெரியாஸ்பத்திரிக்கு கூட்டி வந்திருக்கும் ஒரு தாயின் கண்ணீர்க் கதை. அந்த ஆஸ்பத்திரி ஊழியர்கள் அவளைப் படுத்தும் பாட்டில் அந்தத் தாய் வெறுத்துப் போய் 'வெள்ளைக்கட்டி போட்டு விபூதி மந்திரித்து விடலாம் ' என்று கிராமத்துக்கே திரும்பும் கதை.
கதையின் முதல் இரண்டு பாராக்களில் என் போன்ற மதுரைக்காரர்களுக்கு மதுரையைக் கண் முன் கொண்டு வரும் காட்சிகள்
சுவர்களில் ஓரடி உயர எழுத்துக்களில் விளம்பரங்கள் விதவிதமாக ஒன்றி வாழ்ந்தன. நிஜாம் லேடி புகையிலை , ஆர்.கே.கட்பாடிகள் -எச்சரிக்கை! புரட்சி தீ! சுவிசேஷக் கூட்டங்கள் – ஹாஜி மூசா ஜவுளிக்கடை (ஜவுளிக்கடல் ) – 30 .9 -1973 அன்று கடவுளை நம்பாதவர்கள் சுமக்கப் போகும் தீச்சட்டிகள்.
எழுபதுகளில் மதுரைக் கல்லூரியில் படித்துக் கொண்டு இருந்த எனக்கு கண் முன் மதுரை தெரிந்தது. தொடர்வதும் மதுரைக் காட்சி .
எப்போதும் போல “பைப்” அருகே குடங்கள், மனிதர்களுக்காக வரிசைத் தவம் இருந்தன . சின்னப் பையன்கள் ‘டெடன்னஸ்” கவலை இன்றி மண்ணில் விளையாடிக் கொண்டிருந்தார்கள். பாண்டியன் போக்குவரத்துக் கழக பஸ்கள் தேசியம் கலந்த டீசல் புகை பரப்பிக் கொண்டிருந்தன . விரைப்பான கால்சராய் சட்டை அணிந்த ப்ரோடீன் போதா போலீஸ்காரர்கள் இங்கிட்டும் அங்கிட்டும் செல்லும் வாகன- மானிட போக்குவரத்தைக் கட்டுப்படுத்தி கொண்டுஇருந்தார்கள் .நகரின் மனித இயக்கம் ஒருவிதப் ப்ரோவ்னியான் இயக்கம் போல இருந்தது . கதர் சட்டை அணிந்த மெல்லிய அதிக நீளமில்லாத ஊர்வலம் ஓன்று, சாலையின் இடதுபுறத்தில் அரசாங்கத்தை விலைவாசி உயர்வுக்காக திட்டிக்கொண்டே ஊர்ந்தது. செருப்பில்லாத டப்பாக்கட்டு ஜனங்கள். மீனாட்சி கோயிலின் ஸ்தம்பித்த கோபுரங்கள் , வற்றிய வைகை , பாலம் .. மதுரை !
நீர் மூலக்கூறுகளின் ஓட்டத்தை ஆராய்ந்து ஐன்ஸ்ட்டின் தந்த ப்ரோவ்னியான் இயக்கத்தை ஒரு உவமையாக இங்கே நகரின் மனித இயக்கத்திற்கு ஒப்பிடும் சுஜாதா அவர்களின் ப்ரோவ்னியான் இயக்கம் -அறிவியல் உவமை அருமை. அத்துடன், இங்கிட்டும் அங்கிட்டும் , டப்பாக்கட்டு ஜனங்கள் என்று மதுரையைக் காட்சிப்படுத்தும் வித்தை சுஜாதா அவர்களுக்கே உரித்தான ஒன்று.
நகரத்தைக் காட்டி விட்டார். நகர மக்களைக் காட்டி விட்டார். அடுத்து வருகிறது ஆஸ்பத்திரி. மதுரை பெரியாஸ்பத்திரி. நம்மை அழ வைக்கப் போகிறது.
வள்ளியம்மாள் தன் மகள் பாப்பாத்தியுடன் மதுரை பெரியாஸ்பத்திரியில் ஓ.பி டிப்பாட்மேண்டின் காரிடாரில் காத்திருந்தாள். முதல் தினம் பாப்பாத்திக்கு சுரம். கிராம ப்ரைமரி ஹெல்த் சென்டரில் காட்டியதில் அந்த டாக்டர் பயங்காட்டிவிட்டார். “உடனே பெரிய ஆஸ்பத்திரிக்கு எடுத்துகிட்டு போ’ என்றார் அதிகாலை பஸ் ஏறி ….
பாப்பாத்தி ஸ்ட்ரெச்சரில் கிடந்தாள். அவளைச் சூழ்ந்து ஆறு டாக்டர்கள் இருந்தார்கள். பாப்பாத்திக்குப் பன்னிரண்டு வயது இருக்கும். இரண்டு மூக்கும் குத்தப்பட்டு ஏழைக் கண்ணாடிக் கற்கள் ஆஸ்பத்திரி வெளிச்சத்தில் பளிச்சிட்டன. நெற்றியில் விபூதிக் கீற்று . மார்பு வரை போர்த்தப்பட்டுத் தெரிந்த கைகள் குச்சியாய் இருந்தன. பாப்பாத்தி சுரத் தூக்கத்தில் இருந்தாள். வாய் திறந்திருந்தது.
அந்தப் பெண்ணின் உருவமும் தெரிகிறது. அவளின் உடல் நிலையும் புரிகிறது . மருத்துவக் கல்லூரி மாணவர்களோடு அங்கே ஒரு சீனியர் மருத்துவருக்கு அவள் நோயின் கொடூரம் புரிகிறது. அது மூளையையும் , முதுகுத் தண்டையும் தாக்கும் ஒரு கொடூர நோயின் வெளிப்பாடான காய்ச்சல்.
“acute case of meningitis . notice this . ' என்று மாணவர்களிடம் விவரித்து விட்டு , அங்கிருக்கும் மருத்துவமனை அலுவலர்களிடம் மாலை தானே வந்து அந்த பெண்ணைக் கவனிப்பதாகவும் அதுவரை அவளை வார்டில் சேர்க்கவும் சொல்லிவிட்டு தனது கல்லூரி வேலைக்கு விரைகிறார். நோயின் தீவிரம் உணர்ந்தும் அப்படிச் சொல்லிவிட்டு விரையும் அந்த மருத்துவரின் மேல் நமக்கு வருத்தம் வருகிறது. இந்த முதல் காட்சியைத் தொடர்ந்து, வரும் நிகழ்ச்சிகளில் வெளிப்படும் ,அந்த மருத்துவமனை ஊழியர்களின் பொறுப்பற்ற செயல்கள், வாசிப்பவருக்கு, அந்த வருத்தத்தைக் கோபமாக மாற்ற வைக்கிறது, சுஜாதா அவர்களின் இயல்பான எழுத்தின் வேகமும் வீரியமும். நீங்கள் படிக்கும் போது அதை உணர்வீர்கள்.
ஆங்கிலம் புரியாத அந்தக் கிராமத்துத் தாயிடம் , ஆங்கிலத்தில் ,குழப்பும் ஊழியர்கள். மகளை வார்டில் சேர்க்க அவள் படும் பாடு, பேஷண்ட் யார் என்று கேட்பதும், அவள் கொடுக்கும் சீட்டைக் கால் கண்ணால் பார்ப்பதும், 38 ஆம் நம்பர் ரூமுக்குப் போ என்று சொல்வதும், ‘மகளைத் தனியா விட்டுட்டு வந்திருக்கோம்’ என்ற தவிப்பில் அவள் அலைவதும் , மருந்து நெடியி லும் , பசி மயக்கத்திலும் தலை சுற்றுவதும், இத்தியாதி நடைமுறைகள் முடிந்து அவள் சென்று வார்டு சேர்க்கும் இடத்தில், ‘இப்போ காலி இல்லே , நாளைக்கு காலையிலே வா’ என்று அலட்சியப்படுத்துவதும் , அந்தப் பெரிய ஆஸ்பத்திரியில் இடம் மாறிப் போய் வெளியே வந்து திரும்ப உள்ளே நுழைய போராடுவது மாக அந்தத் தாயின் தவிப்பும் துக்கமும் சுஜாதா அவர்களின் எழுத்தால் நம்மையும் தாக்குகிறது. இடையே ஆஸ்பத்திரியில் டாக்டர்கள், நர்ஸுகள், போலீஸ்காரர்கள், காபி டம்ளர்காரர்கள், என்று அந்த ஆஸ்பத்திரியையையே வள்ளியம்மாளுடன் சேர்ந்து நாமும் சுற்றி வருகிறோம்.
இந்த நடைமுறைகளுக்கு பயந்தும், வெறுத்தும் , ‘நாளைக்கு காலை வரை என்ன செய்வது’ என்ற பயத்தோடு பாப்பாத்தியைத் தூக்கிக் கொண்டு வள்ளியம்மாள் வெளியேறும் காட்சி .
'தன் மகள் பாப்பாத்தியை அள்ளி அணைத்துக் கொண்டு மார்பின் மேல் சார்த்திக் கொண்டு, தலை தோளில் சாய, கைகால்கள் தொங்க, ஆஸ்பத்திரியை விட்டு வெளியே வந்தாள். மஞ்சள் நிற சைக்கிள் ரிக்சாவில் ஏறிக் கொண்டாள். அவனை பஸ் ஸ்டாண்டுக்குப் போகச் சொன்னாள்.'
அங்கே ஆஸ்பத்திரியில் அந்த சீனியர் டாக்டர் திரும்பி வந்து தேடுகிறார். இடமில்லை என்பதால் மறுநாள் காலை அவர்களை வரச் சொல்லியிருப்பதாக சொல்லப்பட . கோபம் கொண்டு அவர் கத்துகிறார். "வாட் நான்சென்ஸ்! நாளைக்கு காலை ஏழரை மணியா! அதுக்குள்ள அந்த பொண்ணு செத்துப் போயிடும்யா! " என்று கத்த அந்த ஊழியர்கள் ஓபி வார்டில் அவளைத் தேடுகிறார்கள்.
இங்கே வள்ளியம்மாள் .
“வெறும் சுரம்தானே ? பேசாமல் மூனாண்டிப் பட்டிக்கே போயி விடலாம்.வைத்தியரிடம் காட்டிவிடலாம். கிராம ஆஸ்பத்திரிக்கு போக வேண்டாம். அந்த டாக்டர் தான் பயங்காட்டி மதுரைக்கு விரட்டினார். சரியாக போயிவிடும். வெள்ளைக்கட்டி போட்டு விபூதி மந்திரித்து விடலாம்.” சைக்கிள் ரிக் ஷா பஸ் நிலையத்தை நோக்கிச் சென்று கொண்டிருந்தது. வள்ளியம்மாள், “பாப்பாத்திக்குச் சரியாய் போனால் வைத்தீஸ்வரன் கோயிலுக்கு இரண்டு கை நிறைய காசு காணிக்கையாக அளிக்கிறேன்’ என்று வேண்டி கொண்டாள்.
நகரத்தில் ஒரு 'நரகத்தைக் ' காட்டி
முடிகிறது கதை. வாசகர் முடிவே கதையின் முடிவு. வைத்தீஸ்வரன் கோயிலுக்கு வள்ளியம்மாள் செல்வாள் என்ற நம்பிக்கையே நமது முடிவு .
மனிதாபிமானம் இல்லாத மனிதர்களின் நடவடிக்கைகளால், பறிபோகும் ஏழைகளின் உயிர்கள் எத்தனை என்ற எண்ணத்தை அழுத்தமாக விதைக்கும் சிறுகதை. எழுபதுகளில் இருந்த இந்த நிலை இப்போது மாறியுள்ளதா என்பதும் கேள்விக்குறிதான்.
சுஜாதா அவர்கள் அன்று பார்த்த ஆஸ்பத்திரி நிகழ்வுகளே இந்தச் சிறுகதையாக மாறியுள்ளது என்பதும் இது ஒரு மிகச் சிறந்த கதையாக தேசிய அங்கீகாரம் பெற்றது என்பதும் பல இந்திய மொழிகளில் மொழிபெயர்க்கப்பட்டு பாராட்டப்பட்ட கதையும்கூட என்பதும் கூடுதல் தகவல்கள், கூகிள் ஆண்டவர் துணையால் .
நன்றி, வணக்கம் .
-------------நாகேந்திர பாரதி
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக