சனி, 15 மார்ச், 2025

சிறுகதை மதிப்புரை - 'கதை புதிது ' நிகழ்வு

 சிறுகதை மதிப்புரை - 'கதை புதிது ' நிகழ்வு 

------------------------------------------

நன்றி அழகியசிங்கர் . வணக்கம் நண்பர்களே 

மூத்த எழுத்தாளர் நரசையா ஐயா அவர்கட்கு வணக்கத்துடன் ஆரம்பிக்கிறேன் .அவர்களின் ' ஒருத்தி மகன் ' சிறுகதை .

மார்ச் 2003  ஆனந்த விகடன் இதழில் வெளிவந்த சிறுகதை  

'எல்லாவற்றையும் கடந்த ஆத்மாவுக்குத் தந்தை, தந்தையாக இருப்பதில்லை; தாய் தாயாக இருப்பதில்லை; அது எல்லாமே கடந்த நிலையாகி விடுகிறது.’ என்ற உபநிஷத் வரியோடு ஆரம்பிக்கும்  கதை  அதை விளங்க வைக்கும் வகையில் விரிகிறது ஒரு வாழ்க்கையாக .

தந்தை யாரென்று தெரியாது வருந்தும்   ஒருவன் . தந்தை யாரென்று தெரிந்தும்    அதை வெறுக்கும் இன்னொருவன். இவர்களின் வருத்தத்தையும் வெறுப்பையும் போக்கும்   போதி மரமாக     ஒரு முதியோர் இல்லம். இவற்றை இணைத்துப் பின்னப்பட்டுள்ள கதையில் வருகின்ற உபநிஷக் கிளைக்கதைகள் பலவற்றின் மூலம் நம் முன்னோர்கள் எக்காலத்திற்கும் பொருந்தும் எத்தனையோ விஷயங்களை  எப்போதோ சொல்லி வைத்து விட்டார்கள் என்பதையும் நமக்கு உணர வைக்கிறார் ஆசிரியர். 


ஒருத்தி மகனாக வளர்ந்தவன் அவன். ஒரு ஜோடியின் மகனாக அல்ல. அவன் தாய் இறந்தபின்பும் அவ்வாறே அறியப்படுகிறான். தான் படும் சிரமங்களை அவன் உணரும் போதே அவன் தாய் உயிருடன் இருந்தபோது எத்தனை சிரமங்களை அனுபவித்து இருப்பாள் என்று அவனால் உணர முடிகிறது . அவனுக்கு ஆறுதலாக அவன் நண்பன். அவன் கதை வேறு மாதிரி. அவன் சொல்கிறான். 

 ”நீ வருந்துவது உனக்குத் தந்தை யாரெனத் தெரியவில்லை என்று! நான் வருந்துவதோ, தந்தை இன்னாரெனத் தெரிந்ததால் மட்டுமல்ல; எல்லோராலும் ‘அவர் பையன்’ என்று கூறப்படும்போது.” நண்பனின் தந்தை குடிகாரன். 


அந்த நண்பனுக்கு இவன் ஆறுதல் சொல்கிறான் ஒரு உபநிஷக் கதை மூலம் . அது அஷ்டாவக்கிரன் கதை. அவன் கருவில் இருக்கும்போதே ,  அருளோடு இருந்து , தந்தையின் தவறான மந்திர உச்சரிப்பால், வருந்தி உடல் கோணி அஷ்ட கோணலோடு பிறந்தாலும் தன் அறிவுத்திறமையால் அஷ்டாவக்கிரக் கீதையை உலகுக்கு அருளியவன். அதே போன்று நீயும் உன்னை ஆக்கிக் கொள்ளலாம்’ என்று அந்த குடிகாரத் தந்தையின் மகனுக்கு தான் ஆறுதல் சொல்லியதை நினைத்துக்கொள்ளும் நேரம், தந்தை யாரென்றே தெரியாத  தான் என்ன நினைத்துக் கொள்வது என்று வருந்தும் அவன் கேள்விக்குப் பதில் ஒரு முதியோர் இல்லத்தில் கிடைக்கிறது . 


அங்கே இறந்து போன ஒரு முதியவருக்கு கடைசி அனுஷ்டானங்கள் செய்ய முடியாத ஒரு சூழ்நிலை. அவரது மகன்கள் அயல்நாட்டில். அந்த இல்லத்திற்கு பணம் மட்டும் அனுப்பிக் கொண்டு. எப்போதாவது வந்து பார்த்துக் கொண்டு. அவர் இறந்த தகவல் தெரிந்ததும்  'வர இயலாது , நீங்களே எல்லாம் பார்த்துக் கொள்ளுங்கள் . பணம் அனுப்பி விடுகிறோம் ' என்ற பதில் அவர்களிடம் இருந்து. இந்த நேரத்தில் இவனும் இவன் நண்பனும் அங்கே போய்ச் சேர்கிறார்கள். 


தந்தை  யார் என்று தெரியாத  நாயகனுக்குத் தானே அந்த முதியவருக்கு  இறுதிச் சடங்குகள் செய்ய ஆசை. ஆனால் அது சரியா , தவறா என்ற குழப்பம். எவரை வேண்டுமானாலும் தாயாக ஏற்றுக் கொள்ளலாம் . ஆனால் தந்தையாக ஏற்றுக் கொள்ளலாமா என்ற குழப்பம் .

இப்பொழுது வருகிறது இன்னொரு உபநிஷக் கதை.  அந்த முதியோர் இல்லத்தில் இருக்கும் இன்னொரு முதியவர் மூலம். 


அது சண்டோக்ய உபநிஷத்தில் வரும் கதை.


ஒரு பையன் தனது தாயிடம் வேதங்கள் படிக்கவிருக்கும் விருப்பத்தைத் தெரிவித்தான். தாயார் சொன்னார்: ‘மகனே, நான் திருமணம் செய்து கொள்ளவில்லை. நான் ஒதுக்கப்பட்டவளாகவே இருந்துள்ளேன். நான் பல இல்லங்களுக்கு வேலை செய்து கொண்டிருந்தேன். உன் தந்தை யாரென நான் அறியேன். என் பெயர் ஜபலா. உனக்கு சத்யகாமா என்று பெயர்’ என்றாளாம்! ஒரு முனிவரிடம் சென்று வேதம் கற்றுக்கொள்ள தனக்குள்ள ஆசையை சத்யகாமா தெரிவித்த போது முனிவர் அவனது பெற்றோரைப் பற்றிக் கேட்டார். அவனோ சிறிதும் சங்கோஜமின்றி தாயார் சொன்னதைச் சொன்னான். கேட்ட முனிவர், ‘இவ்வளவு தைரியமாக உண்மையைச் சொன்ன நீதான் உண்மையில் உத்தமன்! உயர்குலத்தோன்’ என்று கூறி வேதங்கள் கற்றுத் தந்தார்!’. என்று அந்தக் கதை முடிகிறது . 


தொடர்கிறது அவர் பேச்சு . ஞாக்யவல்கியர் என்ற ஒரு மகா முனிவர். அவர் பிரஹதாரண்ய உபநிஷத்தில் கூறுகிறார்:

‘ஆத்மா… பசி, தாகம், துக்கம், அதிருப்தி எல்லா வற்றையும் கடந்தது. அது முதுமை, சாவு இவற்றையும் கடந்தது. அந்த நிலையில் ஒரு தந்தை தாய் பெற்றோராக இருப்பதில்லை. வேதங்கள்கூட வேதங்களாக அந்நிலையில் இருக்காது!

எல்லாவற்றையும் கடந்து நிற்கும் நிலை அது !

அந்நிலையை அடைந்த ஒருவனுக்கு துக்கமும் ஆனந்தமும் ஒன்றுதான்!' 


என்று அவர் சொல்லிப்போக இவன் மனது தெளிவு பெறுகிறது. அந்த நண்பன் சொன்னான். “உன் முகத்தில் உறுதி தெரிகிறது. இனி சமூகம் என்ன நினைத்தால் என்ன என்பதால் நீ இதைச் செய்வதாகத்தான் எல்லோரும் நினைப்பார்கள். ஆனால், நீ உனது மன ஆறுதலுக்காகவே இதைச் செய்கிறாய் என்பதும் இதைச் செய்வதால் ஒரு இறந்தவரின் உடலை மிகவும் மரியாதையுடன் அனுப்பிவிட்டதால் நீ அடையும் சந்தோஷமும் அவர்களுக்குப் புரியாது!’


இதற்குப் பதில் நாயகனிடம் இருந்து இவ்வாறு வருகிறது .

“புரிய வேண்டாம். அச்சமூகம் புரிந்து கொள்ள வேண்டும் என்ற நிர்ப்பந்தமும் இனி எனக்கில்லை!” என்று கூறிவிட்டுக் கர்மானுஷ்டானங்களை இவன் முடித்துவிட்டுத் திரும்புகையில் அந்த ஆசிரமக் காப்பாளர் தனது கண்களைத் துடைத்துக்

கொண்டார்! என்று முடிகிறது கதை. 


நுணுக்கமான மன உணர்வுகளைச்  சிறப்பாக விவரித்து, சிலர் வாழ்க்கையின் சங்கடங்கள் சிலவற்றை அப்படியே கதையில் கொண்டு வந்து அதற்கு வேதங்களின் விளக்கம் மூலம் முடிவும் கொடுத்து எழுதப்பட்டுள்ள சிறப்பான சிறுகதை. 


'ஒருத்தி மகன்'  சிறுகதை ஆசிரியர் மூத்த எழுத்தாளர் நரசையா அவர்களுக்கு நன்றி  கலந்த வணக்கம் . 

அழகியசிங்கர் அளித்த வாய்ப்புக்கு நன்றி வணக்கம். 


----------------நாகேந்திர பாரதி 


My Poems/Stories in Tamil and English 


கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

சிறுகதை மதிப்புரை - 'கதை புதிது ' நிகழ்வு

 சிறுகதை மதிப்புரை - 'கதை புதிது ' நிகழ்வு  ------------------------------------------ நன்றி அழகியசிங்கர் . வணக்கம் நண்பர்களே  மூத்த...