சிறுகதை மதிப்புரை - கதை புதிது நிகழ்வு
-------------
நன்றி அழகியசிங்கர் , வணக்கம் நண்பர்களே . வணக்கம் ரகோத்தமன் சார்
நண்பர் ரகோத்தமன் அவர்களின் ' ஓட்டம் சிறுகதை. கதையின் தலைப்பு மட்டும் அல்ல. கதையும் படிக்கப் படிக்க ஓட்டம் தான். அதுவும் பைக்கில் ஏறி சாலையில், பாலத்தில் , சந்தில், ரெயிலில் ஓட்டம். அத்துடன் சேர்ந்து ஓடும் மன ஓட்டம். சினிமா என்ற சிங்கத்தின் மேல் உள்ள ஆசையால் கிராமம் விட்டு நகரம் வந்து , இங்கே மனிதப் புலிகளிட மும் கரடிகளிடமும் மாட்டிக்கொண்டு முழித்துக் கொண்டு, இருந்தாலும் அதற்காகக் கவலைப்படாமல், பேய்களிடமும் பிசாசுகளிடமும் கூட மாட்டிக்கொண்டாலும் பரவாயில்லை, தன் எழுத் துத் திறமையால், சினிமா என்ற சிங்கத்தின் பிடரி பிடித்து ஏறி இயக்குனராக அமர்ந்து விடலாம் என்ற நம்பிக்கையில் ஓடிக்கொண்டிருக்கும் ஒருவனைப் பற்றிய கதை.
எத்தனையோ பிரபல இயக்குனர்கள், இப்படி ஊரை விட்டு வந்து சினிமாத் துறையில் உலகப் புகழ் பெற்றுள்ள வரலாறு நம்மில் பலருக்குத் தெரியும். அவனுக்கும் தெரிந்திருக்கிறது. அந்த ஆசை. மாடும் மனையுமாய் வாழ்ந்த கிராம வாழ்வை விட்டு இங்கே ஹோட்டலில் சர்வராய் இன்னும் பல கிடைத்த வேலைகள் எல்லாம் பார்த்துக் கொண்டு ஓடிக் கொண்டு இருக்கிறான். தன் நோக்கம் நோக்கி.
கதையின் நடுவில் ஆசிரியர் விடுகின்ற சில வாக்கியங்கள் அந்தந்தக் கதாபாத்திரங்களின் நிலைமையை நமக்கு நச்சென்று விளக்குகின்றன.
உதாரணத்திற்கு ஒன்றிரெண்டு
'இருவேளை உணவுடன். சோத்துக்குச்,சொன்னது வேலை என்பார்கள்.' இந்த வாக்கியம் காட்டி விடுகிறது நாயகன் நிலைமையை.
'அவர் ஒரு முதலை வாய்க்குள்ள தலைய விட்டுருக்கிற சங்கடத்த அனுபவிச்சிக்கிட்டு இருக்காரு. அவரோட நாற்காலியின் வெளிப்பாடும் அப்படிதான் இருக்கும் '
இது காட்டி விடுகிறது உதவி கிடைக்கும் என்று நம்பிப் போகப் போகின்ற , அந்த இயக்குனரின் நிலையை.
அவரவர்க்கு அவரவர் பிரச்னை. இதற்கு நடுவில் தான் அவர்கள் மற்றவர்க்கு உதவும் மனநிலைக்கு வருவது .
இதற்கு நடுவில் கதையின் ஓட்டத்திற்கு மிகவும் உதவி செய்வது அவர் காட்டுகின்ற அந்தக் காட்சிகளும் அதற்குரிய வர்ணனைகளும்.
உதாரணத்திற்கு ஒன்றிரெண்டு .
'புலி நன்றாகவே இருசக்கர வாகனத்தை செலுத்தியது. அசாத்தியமாக வளைவில் வளைந்து சென்ற லாகவத்தில் வேகம் அதன் பிடியில் இருப்பது தெரிந்தது. தைரியமாக பின் அமர்ந்து செல்லலாம்.
புலி மீண்டும் ஓர் ஐந்து விநாடிகள் சிவப்பில் தேங்கி நகர்ந்தது.
சிறிது தூரம் தள்ளினேன். உயிர் கொண்டது இஞ்சின். சில நொடிகளில் பறக்க ஆரம்பித்தது புலி. புலி வளைவில் சரிந்து கொண்டே பேசியது'
புலி என்று உருவகப்படுத்தப்படும் நண்பரின் பைக்கில் நாயகனோடு சேர்ந்து நம்மையும் சேர்ந்து பயணம் செய்ய வைக்கும் வருணனைகள்.
அடுத்து, அந்த டான்ஸ் டைரக்டர் இருக்கின்ற வீடு இருக்கின்ற இடம்.
'சிறிது நேரத்தில் ஒரு முட்டுச் சந்து போன்ற தெருவில் நுழைந்தது. அதன் இறுதிக்குச் சென்றதும் முட்டுச் சந்தாக இல்லாமல், இடப்புறம் குறுகிய தெருவாக நீண்டது. அக்குறுகிய தெரு 200 அடிக்குள்ளாகவே தன்னை அகலப்படுத்திக் கொண்டு விரிந்தது. அவ்விரிவின் இறுதியில் கருங்கல் சுற்றுச் சுவர் எழுப்பப்பட்டிருந்த வீட்டின் கேட்டின் முன்னால் புலி வாகனத்தை ஓரங்கட்டியது. பெரிய கேட்தான். பக்கத்தில் ஆள் நுழைந்து செல்ல ஒரு சிறிய கேட். சிறிய கேட்டின் வலப்பக்கத்துச் சுவரில் ‘காவிலி சுந்தரம்மா பவனம்’ என்று பொறிக்கப் பட்டிருந்தது.
இடப்பக்கச் சுவரில் ‘காவிலி ரெங்கய்யா’ என்ற பெயருக்கு கீழ் டான்ஸ் டைரக்டர் என்று ஆங்கிலத்தில் வடிக்கப்பட்டிருந்தது.
சிறிய கேட்டைத் தள்ளிக் கொண்டு உள்ளே நுழைந்தோம்.'
அந்த வீட்டையும் அது இருக்கின்ற இடத்தையும் அப்படியே நம் கண் முன்னே கொண்டு வந்து விடுகிறார் ஆசிரியர்.
இப்படி காட்சிப்படுத்தும் வருணனைகளும் , உருவகப்படுத்தும் மனிதர்களும், உணர்ச்சிப்படுத்தும் நாயகனின் மனநிலையும் சேர்ந்து நம்மைக் கதையோடு ஒன்ற வைத்து விடுகின்றன.
அவன் வீட்டில் இருந்து அவன் தங்கை பணம் கேட்டுப் பேசுவது, இவர் ஒருவரிடம் கடன் வாங்கி மற்றவரின் கடனை வாங்கி அடைத்துக் கொண்டு இருக்கின்ற வாழ்க்கையும் கலந்து நாயகன் மேல் ஒரு பரிதாப உணர்வையும் ஏற்படுத்தி விடுகின்றன.
இறுதியில் கதை இவ்வாறு முடிகிறது .
வீரய்யா, கரடி., தங்கை, புலி என்று மாறி மாறி காட்சிகள் எந்த விஷயத்தை முதலில் அணுகுவது? மனதில் சுமை அழுத்திற்று. ரயிலோ அந்த நெரிசலைச் சுமந்துகொண்டு, தாளம் தப்பாமல் ஓடிக்கொண்டிருந்தது. எந்த மனித இரைச்சலையும் பொருட்படுத்தாமல்.
பைக்கின் ஓட்டத்தில் தொடங்கி ரயிலின் ஓட்டத்தில் முடியும் நாயகனின் மன ஓட்டம்
நாயகன் மேல் இரக்க உணர்வை ஏற்படுத்தி அவன் வாழ்வில் வசந்தம் மலர நம் மனம் விரும்புகிறது
கதையைப் படித்தவுடன், கண்ணதாசனின் இந்த வரிகளை ப் பாடி நாயகனுக்கு நம்பிக்கை அளிக்க வேண்டும் என்ற மனநிலை நமக்கு வருகிறது.
'வாழ்க்கை என்றால் ஆயிரம் இருக்கும் , வாசல் தோறும் வேதனை இருக்கும். வந்த துன்பம் எதுவென்றாலும் வாடி நின்றால் ஓடுவதில்லை , எதையும் தாங்கும் இதயம் இருந்தால் இறுதி வரைக்கும் அமைதி இருக்கும் '
என்று கூறி நாயகனின் திரைப்பட இயக்குனர் கனவு பலிக்க வாழ்த்துகிறோம்.
பைக்கில் அழைத்துச் செல்லும் புலி நண்பனுக்கே பைக் வாங்கிக் கொடுக்க நினைக்கும் அந்த நாயகனின் நல்ல உள்ளம் கொடை உள்ளம் , இந்தக் கதையை எனக்குப் படிக்கக் கொடுத்த அழகியசிங்கருக்கும் அவன் கதையைப் படித்து வாழ்த்திய நமக்கும் பரிசுகள் அளிக்க நினைக்கும் என்ற நம்பிக்கையோடு , கதை ஆசிரியர் ரகோத்தமன் அவர்களுக்கும் , மதிப்புரை பேச வாய்ப்பளித்த அழகியசிங்கருக்கும்
நன்றி கூறி முடிக்கிறேன். நன்றி. வணக்கம்.
----------- நாகேந்திர பாரதி
My Poems/Stories in Tamil and English
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக